திருவாய்மொழி பாசுரங்களைப் பாட ஸ்ரீராமானுஜர் ஆவன செய்தார். குலோத்துங்கன்-1 காலத்து இரண்டு கல்வெட்டுகள் இதைப்பற்றி சொல்கிறது. குலோத்துங்கனின் 15ம் ஆண்டு ஆட்சியில் (கிபி 1075) அவனுடைய சேனாதிபதி கோட்டூர் வீரசோழ முனையதரையன் இதற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளது கல்வெட்டில் புலப்படுகிறது.
கோயில்களில் திருவாய்மொழியை பள்ளி எழுச்சியாக பாடுவதற்கென 50 கழஞ்சு பொன் கொடுத்தான். அரையர்கள் வசம் இதற்கான கொடை ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிகிறது. இவர்கள் தங்கள் பெயரின் இறுதியில் 'மன்னார்' என்று சூட்டிக்கொள்வது மரபு. இன்றும் சில கோயில்களில் அரையர் சேவை பிரசித்தமாக நடக்கிறது. முதலாம் குலோத்துங்கன் தன்னுடைய பூச நட்சத்திர நாளில் மாதாமாதம் சிறப்பு பூசைகள் செய்விக்க நன்கொடை தந்தான் என்று கல்வெட்டு கூறுகிறது. பட்டத்து அரசி குலோத்துங்க லோகமகாதேவி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நன்கொடைகள் செய்தாள்.
வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜரின் பெயர் ராஜேந்திர சோழன்-3 காலத்து (கிபி 1250) கல்வெட்டில்தான் 'ராமானுஜன் சுற்றுக்குலை' என குறிப்பிடபட்டுள்ளது. குலோத்துங்கன் காலத்தில் அரங்கனுக்கு 'அனந்தநாராயண சுவாமி' என்ற பெயரும் அதிகாரப்பூர்வமாக இருந்தது. திருவரங்கம் கோயில் 'ஸ்ரீகாரியம்' பொறுப்பில் நான்கு அதிகாரிகள் இருந்தனர். வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் சமாதிக்குப் போகும் காலத்தில் ஆட்சி புரிந்தது பராந்தகன்-1. அப்போது 'ஸ்ரீவைஷ்ணவ வாரியம்' என்ற ஒரு அமைப்பு கோயில் நிர்வாகத்தை கண்காணித்தது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகவேண்டிய 940 காசுகளை அக்காலத்திலேயே ஒருவன் கையாடல் செய்ததும் அவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததும் கல்வெட்டில் உள்ளது. ராஜராஜன் தஞ்சை பிரகதீஸ்வர கோயிலில் தன்னை நேரடியாகவே ஈடுபடுத்தியதைபோல், குலோத்துங்கன்-1 தன்னை ஸ்ரீரங்கம் கோயிலில் ஈடுபடுத்திகொண்டதும் தெரிகிறது. குலோத்துங்க சோழர் காலக் கல்வெட்டுகள் முசிறி அருகே அலகரை கோயிலிலும் நிறைய கண்டெடுக்கப்பட்டு அதன் விவரங்கள் ஆவணப்படுத்தபட்டது. (நன்றி: முனைவர் ஆர்.நாகசாமி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக