About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 29 ஜனவரி, 2018

நடுநிலை வகித்த சொக்கன்!

திருவிளையாடற் புராணத்தில் ஐம்பத்திரண்டாவது படலமாக ஏழை ஆதி சைவரான தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் உள்ளது. மன்னன் செண்பக பாண்டியனின் மனதிலுள்ள ஐயத்தைப் போக்கும் ஒரு பாடலை தருமிக்கு சிவபெருமானே தந்து உதவி செய்கிறான். 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி...' என்ற பாடலை நாம் எல்லோருமே அறிவோம். மன்னன் அவனுக்கு ஆயிரம் பொன் பரிசு கொடுக்கும்போது அப்பாடலில் பிழையுள்ளது அதனால் பிழையுள்ள பாடலுக்கு பரிசு தர அனுமதிக்க மாட்டேன் என்று தலைமைப் புலவர் நக்கீரர் தடுத்துவிடுகிறார். இறுதியில் அப்பரிசு தருமிக்கே தரப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகுத்தறிவு மேடைப்பேச்சு ஒரு சமயம் ஒளிபரப்பானது. அதில் 'தகுதி இல்லாவிட்டாலும் பார்ப்பனன் தருமிக்கே பரிசு கிடைக்கிறது, இது என்ன நீதி?' என்று யாரோ ஒருவன் கிண்டல் பேசினான். எல்லோரும் அதற்கு கரகோஷம் எழுப்பினர்.
ஒரு பெரிய விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே பலரும் பேசினார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அது என்ன? தருமியும் பார்ப்பனன், நக்கீரரும் பார்ப்பனன். மன்னா பரிசு கொடு என்றவனும், பரிசைக் கொடுக்காதே என்றவனும் பார்ப்பனனே! பார்ப்பனர்களில் ஆறு விதம் என்று சங்கநூல்களும் திருக்குறளும் செப்புகிறது. வேள்வி செய்வோர், வேதம் ஓதுவோர், வேள்விகள் நடத்துவோர், சொல்லிக் கொடுப்போர், தானம் தருவோர், யாசிப்போர் என்பவரே அவர்கள்.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.” (குறள்-560)
மன்னர் அந்தணர் இடையர் வணிகர் பொற்கொல்லர் வேளாளர் என்று பல குலத்தினர் சங்கத்தில் பாடல் இயற்றியவர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் யாரும் சாதி/குலம் ஏதும் பார்க்கவில்லை, அதனால் பிழையுள்ள பாடல் அரங்கேற அனுமதிக்கவில்லை.
"நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்க வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து..."
என்ற பாடல் எப்படிப்பட்ட பெருமக்கள் சபையில் இருந்தனர் என்று உரைக்கிறது.
சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் தூது போவோரில் பிராமணர்களும் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் மேலே சொன்ன ஆறு தொழில் பிரிவு பிராமணர்கள் போக, வேள்விகள் செய்யாமல் வேறு தொழில் செய்தோர் ‘விராத்தியர்’ 'வேளா பார்ப்பனர்' என்ற பிரிவில் வருகிறார்கள்.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு பாடல்-24 முதல் நான்கு வரிகளில் இது பற்றிய ஒரு செய்தியைச் சொல்கிறது. முல்லைத் திணையில் ஆவூர் மூலங்கிழார் பாடல்தான் அது.
“வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன...”
வேள்வி செய்யாத சங்கு அறுக்கும் பிராமணர்களை நாம் இன்று பார்த்ததில்லை. சொல்லப்போனால் இன்று பெரும்வாரியான பிராமணர்கள் வேள்வி செய்யாமல் வேறு தொழில் செய்யும் வேளா பார்ப்பனர் பிரிவில்தான் வருகிறார்கள். நக்கீரர் இந்த பிரிவைச் சேர்ந்தவர். சங்கறுப்பதென் குலமே தம்பிராற்கேது குலம் பங்கமறச் சொன்னால் பழுதாமே சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல இரந்துண்டு வாழ்வதில்லை என்பது நக்கீரரின் தனிப்பாடல் திரட்டில் உள்ளது. நக்கீரர் தங்கவளை ஆபரணம் செய்யும் பொற்கொல்லர் ஆச்சாரி அல்ல.

அக்காலத்தில் விஸ்வகர்மா 'பஞ்சரிஷி கோத்ர' ஆச்சாரிகள் (ஐந்தொழில் கம்மாளர்கள்) வேதம் ஓதி, வேள்விகள் வளர்த்து, கற்பித்த ஆச்சாரியர்களாகவும்  இருந்தவர்கள்.  பௌர்ஷேய (எ) தேவ பிராமணர்கள் என்றழைக்கப்படும் இவர்கள் 'வேளா பார்ப்பனர்' பிரிவில் வருவதில்லை. ஆனால் ஒரு சில கட்டுரைகளில் நக்கீரர் பொற்கொல்லர்தான் என்றும் படித்துள்ளேன். வளை அறுக்கும்போது 'கீர் கீர்' என்ற ஒலி வந்ததாலும், அவர் நெற்றியில் 'த்ரிபுண்டர கந்தாக்ஷதை' குறி இருந்ததால் 'கீர் சந்தனம்' ஆனது என்றும், இதனால்தான் அவர் கீரர் என்று பெயர் பெற்றதாகக் காரணம் சொல்வோர் உண்டு. அப்படியென்றால் அக்காலத்தில் சங்கறுத்தவரை 'கம்மாளர்' என்று சங்கப்பாடலில் நேரடியாகவே குறிப்பிட்டிருப்பார்களே? அவரை அவ்வாறு எங்கும் இயம்பவில்லை. சங்கப்புலவரின் இயற்பெயர் யாமறியோம். அது ஈசனுக்கே தெரிந்த ரகசியம்.
ஆக, சங்கத்தில் சிவபெருமான் நடுநிலையோடுதான் அருள்பெறத் தகுதியானவனுக்கே பரிசு கிடைக்கச் செய்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக