About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 27 ஜனவரி, 2018

முனைவர் ஆர்.நாகசாமி

தமழ்நாடு தொல்லியல் துறையில் 1953-88 வரை பணிசெய்தார். அருங்காட்சியக பாதுகாவலாராக இருந்தபிறகு இத்துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல நூற்றாண்டுகளைக் கடந்தும் மாறுபட்ட சங்ககால தமிழ் கல்வெட்டுகளை ஆராய்ந்து படிப்பதில் வல்லவர் என்று epigarphy துறையில் இவர் பெயர் எடுத்தவர். பணியோய்வு பெற்ற பிறகும் இவர் புதியவர்களுக்கு வழிகாட்டி வந்தார்.
தொல்லியல் துறையில் இவர் ஆற்றிய சேவைக்காக அண்மையில் பத்மபூஷன் விருதுபெற்றார். இவருக்கு விருது கொடுத்தது தவறு என்று ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இவர் ஹிந்துத்வா கொள்கைகளை ஆதரித்து மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளார் என்ற விமர்சனம் வந்துள்ளது. அவரோடு இருமுறை நான் பேசியுள்ளேன். நான் 2013ல் சித்தநூல்கள் எழுதும்போது எனக்கு எழுந்த சில சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தீர்த்துக்கொண்டேன். தமிழுக்கு அப்படி என்ன இவர் விரோதமாக செயல்பட்டார் என்று குடைந்து பார்த்தேன். அவருக்கு எதிராக ஒரு தடயமும் கிடைக்கவில்லை!
திரு.நாகசாமியின் முக்கிய பங்களிப்பு என்ன என்று பட்டியலிடுகிறேன்:
1. தமிழ்நாட்டில் தொல்லியல்துறையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் மத்தியில் பரப்பியவர். அக்காலத்திலேயே தமிழ்நாட்டின் நினைவுச்சிங்களையும் கல்வெட்டுகள் சார்ந்த விஷயங்களையும் சிறு பாக்கெட் கையேடுகளாக 25 பைசா விலையில் கிடைக்கச் செய்தார்.
2. மாணவர்களையும் தொல்லியல் துறை வல்லுநர்களோடு இணைந்து அகழ்வாராய்ச்சிப் பணிசெய்யத தூண்டினார்.
3.தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கல்வெட்டுகளை உலகறியச்செய்தவர். கரூர், அழகன்குளம், கொற்கை ஆய்வுகளை செய்தவர். மதுரை நாயகர் அரண்மனையை பிரபலப்படுத்தியவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை அகழ்வாராய்ச்சி செய்தார்.
4.முதல்முறையாக கடலடியில் தொல்லியல் ஆராய்ச்சியை பூம்புகாரில் செய்தது இவருடைய தலைமையில்தான்.
5.கல்வெட்டியலில் முதுகலை பட்டயப்படிப்பை கொண்டுவந்தார்.
6.மலேசிய, கெனடா, சுவீடன், டென்மார்க் முதலிய நாடுகளுக்குச் சென்று இலக்கிய நாட்டிய நாடகங்களை வடிவமைத்தார்.
7.தேசிய அளவிலும் வெளிநாடுகளிலும் சோழ மன்னர்களின் பெருமைகளை கண்காட்சிகளாக நடத்தினார்.ஆண்டுதோறும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நடக்க வழிவகுத்தவர்.
8.தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 120 நூல்கள் எழுதியவர். இவருடைய தலைசிறந்த புத்தக தலைப்புகள் என்றால், 'Master pieces of South Indian Bronzes' 'சிவபக்தி' 'உத்திரமேரூர்' ஆகியவை.
9.தமிழகமெங்கும் சுமார் 12 அருங்காட்சியங்களை நிறுவினார். கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியவர். சேர மன்னர் கொல்லிப் புறை காசுகளைக் கண்டுபிடித்து சேர வரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தவர்.
10.பரபரப்பாக பேசப்பட்ட திருவாரூர் மாவட்டம் பத்தூர் நடராஜார் கோயில் சிலை வெளிநாட்டுக்கு கடத்தபட்டு அங்கே ArtGallery அருங்காட்சியத்தில் இருந்துள்ளது. அதைத் திரும்பப்பெற லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. வழக்கின் மனுதாரர் யார் தெரியுமா? இறைவி சிவகாமசுந்தரி. மனுதாக்கல் செய்தவர் அப்போதைய இந்திய தூதர் பி.சி.அலெக்சாந்தர். சிவகாமசுந்தரிக்காக லண்டன் நீதிமன்றத்தில் திரு.நாகசாமி அவர்களே நேரில்போய் ஆதாரப்பூர்வமாக வாதாடி வெற்றி பெற்றார். களவு போன சிலையை மீட்டார். லண்டன் பத்திரிகையில் இவ்வழக்குபற்றிய செய்தியில் 'The Judge of the London High Court, in his Judgement described Dr.Nagaswamy as an unequalled expert in his subject.' என்று போட்டிருந்தது.
10. திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் ஜம்பை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின் மூலம் அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருக்கும் “ஸதியபுதோ” மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டுத் தகடூரை எறிந்த தலைவன் கடையெழு வள்ளல்களுல் ஒருவரான அதியமானே என்ற உண்மையை 1981ல் நிறுவினார். அதுவரை “ஸதியபுதோ” யார்? என்பது தமிழக வரலாற்றில் புதிராகவே இருந்தது.
11. தொன்மையான தமிழ் எழுத்துக்களுக்கு "தமிழி” என்று பெயரிட்டவர் இவரே.
12. கலைமாமணி விருதுபெற்றவர்.
நான் அவரைத் தொடர்பு கொண்டபோது மும்பையில் ஒரு தொல்லியல் கருத்தரங்கில் பேசுவதற்காக அங்கே முகாமிட்டிருந்தார். 'ஐயா, உங்களுடன் பேசி பல சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டேன். நீங்கள் நல்ல பணி செய்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி' என்று நன்றி கூறினேன். 88 வயதான இவருக்கு இவ்விருது காலந்தாழ்த்தித் தரப்பட்டுள்ளது. சினிமாத்துறைக்கு உள்ள முக்கியத்துவம் இத்துறைக்கு இல்லை என்று தெரிகிறது.
ஐயா அவர்களுடைய செயலில் அணுகுமுறையில் RSS ஹிந்துத்வா கொள்கைகள் எங்கேனும் வந்துள்ளதா? படிப்பறிவில்லாத கீழ்த்தரமான கூட்டம் எதிர்ப்பதையும் பேசுவதையும் சன் தொலைக்காட்சியில் ஒரு செய்தியாகக் காட்டுகிறார்கள். இதை என்னவென்பது?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக