அது 1975. வாரியார் சுவாமிகள், கவியரசு கண்ணதாசன் ஆகியோரை அடுத்து புலவர் கீரன் சொற்பொழிவுக்கு வந்தார். எண்ணெய் வைத்து அழுத்திப் படிந்து வாரிய தலை, விபூதி பட்டை, குங்குமம், தங்கச்சங்கிலி, ப்ரேஸ்லெட், பட்டுவேட்டி, தோளில் ஒரு தேங்காய்பூ டர்கி டவல் சகிதமாக வருவார். ஒரு கால் சற்றே விந்தி நடந்து வந்தார். என்னைத் தாண்டி இவர்கள் ஒவ்வொருவரும் போகும்போது முழுதும் scan செய்வேன்.
வந்து உட்கார்ந்ததுமே இறை வணக்கம் செய்வார். கணீர் குரல். அவருடைய தமிழ் எனக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சேவலும் மயிலும் படபடவென சிறகடித்தது போலிருந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் தனி வடிவம் தந்து, அழுத்திய உச்சரிப்பு, சரளமான வீச்சு, வார்த்தைகளுக்கு இடையே நிறுத்தற்குறிகள் (punctuation) கூட தெளிவாக யூகிக்க முடிந்தது. தங்கு தடையின்றி தமிழ் கொட்டும். ஒரு நிமிடத்தில் எத்தனை சொற்கள் வந்து விழுமோ தெரியாது. இவர் எப்படித்தான் மனப்பாடம் செய்வார்? என்று மலைத்தேன்.
கச்சியப்ப சிவாச்சாரியாரைப் பற்றி விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது கடகடகுடுகுடு என்று விடாமல் (கந்தபுராணம்) பாடலை வேகமாக ஒப்பித்துக் கொண்டிருந்தார். ஏதோ தகர சக்கரம் பற்றி விளக்கியவர், முருகனே சோழியைக் காட்டி இது சரியே என்று சொன்னதாக கீரன் அவர்கள் சொன்னார். அடிஎடுத்துக் கொடுத்த அவனே, சந்தேகத்தைத் தீர்த்தான் என்றார். ஆறு வயதில் அவ்வளவுதான் எனக்குப் புரிந்தது. அதன் விளக்கத்தைக் கீழே தருகிறேன்.
(வீரசோழியம் இலக்கணப்படி கந்த புராணத்தில் வரும் 'திகட சக்கரச் செம்முக' என்ற முதல் அடியானது, முருகன் பத்து கைகளுடன் விளங்குகிறான் என்பதைக் குறிக்கும். விளங்குகின்ற (திகழ்) + தசக்கரங்கள் (தசக்கரம்) என்பது 'திகட சக்கரம்' என்று புணரும் காரணத்தால் அதை கச்சியப்ப சிவாச்சாரியார் அப்படி எழுதினார். கந்த புராணம் அரங்கேற்றத்தின்போது இச்சொல் இலக்கணப்படி தவறு என்று அவையோர் சொல்ல, அப்போது முருகனே வந்து வீரசோழியம் இலக்கண நூல்படி இது சரியே என்று சொன்னான்.)
அன்று நான் தூங்கவில்லை என்றாலும் பிற்பாடு சாமி ஆடிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் காதில் வாங்கிக்கொண்டேன். அதனால் மனதில் பதிந்தது. அவருக்கு இறுதியில் இரண்டு பழச்சாறு பாட்டில்கள் பரிசாகத் தந்தனர். 'கோடைக் கேற்ற குளிர்பானம்' என்று சொல்லிச் சிரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக