நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். ஒரு முறை எங்கள் பகுதியிலுள்ள கோயிலுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவுக்கு வந்தார். உயரமான கனமான தேகம், கச்சம் வைத்து வேட்டி கட்டியிருந்தார், நெற்றி நிறைய உத்தூளனமாக பூசிய விபூதி. கழுத்தில் பெரிய ருத்திராட்ச மாலை, கெளரிசங்கர் சிவலிங்கம் போன்ற தங்கம்-வெள்ளி ஆபரணம். வெகு நிதானமாக நடந்து போன அவரிடம் ஜவ்வாது வாசனை விபூதி கமகமத்தது. கையில் ஒரு விபூதி சுருக்குப்பை மற்றும் துணிப்பையில் வேறு என்னென்னவோ இருந்தது.
அவர் அந்த வாரம் முழுதும் 'கந்த புராணம்' பற்றி நிகழ்த்தினார். ஈசனிடமிருந்து முருகன் தோன்றிய விதத்தையும், முருகனின் பெருமைகளையும் சூரனை எதிர்த்த குணத்தையும் சொல்லிக்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில்...
'முருகன் ஆதி குடிகளின் தலைவன்' 'அது எந்த குடி.. தெரியுமா? என்றார். அங்கே முன் வரிசையில் அமர்ந்திறந்த ஒரு சிறுமி, 'தாத்தா.. சாராயம்' என்றாள்.
'பாப்பா இங்கே வா' என்றார். 'உனக்கு இது எப்படித் தெரியும்?' என்றார். 'எங்க வூட்ல நைனா சொல்லி கேட்டுகிறோம்' என்றாள். அவர் அந்த சிறுமியை இரண்டு வினாடிகள் பார்த்தார், 'இந்தா வாங்கிக்கோ... இதை உங்க அப்பாகிட்ட கொடு... படிக்கச்சொல்லு' என்று சொல்லி, கையடக்கமான சிறிய கந்தபுராணம் -திருப்புகழ் புத்தகத்தைக் கொடுத்தார்.
'அசுரர்கள் விரும்பும் பானங்கள் பற்றி நினைவு படுத்தி இருக்கிறாள்' என்று தமாஷ் செய்தார். நேற்று நடந்ததுபோல் இன்னும் என் நினைவில் உள்ளது.
சமஸ்கிருதம் முறையாகப் பயின்றவர். பன்கலை வித்தகர், வீணை வித்வான். தீவிர முருக பக்தர். பாம்பன் சுவாமிகளே இவர் கனவில் வந்து தீட்சைக் கொடுத்தார். லண்டன் சென்று வரும்போது உடல்நலம் குன்றினார். நவம்பர் 1993ல் ஓரளவுக்கு உடல் தேறியபின் மும்பாயிலிருந்து சென்னைத் திரும்பினார். விமானத்தில் முன்வரிசையில் இவரும் பின் வரிசையில் இவருடன் வந்த தன் சகோதரர் மகனும் மருத்துவரும் இருந்தனர்.
'இப்போது திருத்தணிக்கு மேலே நாம் பறந்து கொண்டிருக்கிறோம்' என்று விமான ஒலி பெருக்கியில் அறிவிப்பு வந்தது. சற்று நேரத்தில் திருமுருக கிருபானந்த வாரியாரின் உயிர் பிரிந்தது.
"வான்வழி பறக்குங்கால் வாரியணைக்க
வயலூரான் காத்திருந்த நல்வேளையில்
தேன்வழி திருப்புகழ் கந்தர் அலங்காரம்
தினமோதி வீடுபேறெய்தினார் வாரியார்."
வயலூரான் காத்திருந்த நல்வேளையில்
தேன்வழி திருப்புகழ் கந்தர் அலங்காரம்
தினமோதி வீடுபேறெய்தினார் வாரியார்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக