காலங்காலமாகவே பல விஷயங்கள் தவறான கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ளபட்டு அது வர்ணத்தார்களிடையே தீராப் பகையை விளைத்து விட்டது என்பதே உண்மை. நான் இங்கே தெளிவு படுத்தியதால் இதைப் படித்துவிட்டு உடனே தாங்கள் கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொண்டு விடுவார்கள் என்றும் கருத முடியாது. ஏன்? சிறுவயது முதலே ஆழ்மனதில் விதைத்து வளர்க்கப்பட்ட எண்ணங்கள் நன்கு வேரூன்றி வளர்ந்து விட்டதால் உடனே இவற்றை ஏற்பது கடினம்தான். அதுபோக அவரவர் வாழ்க்கையில் ஒவ்வொரு வர்ணத்தாரோடு தனக்கு ஏற்பட்ட மேன்மையான/ மோசமான அனுபவத்தைப் பொறுத்தும் இது அமையும்.
எல்லோருமே மனித ஜாதிதானே பிறகு ஏன் ஒருவர்மேல் ஒருவருக்கு அபிமானம் இல்லை? வெறுப்போரும் வெறுக்கப்படுவோரும் இருக்கிறார்களே. அது ஏன்? ஒரு வர்ணத்தின் நெறி முறை நமக்கு ஒவ்வாதபோது அதிலிருந்து சற்று விலகி விடுகிறோம். வணக்கம் / நலம் விசாரிப்பு என்ற அளவோடு நிறுத்திக் கொள்கிறோம். அவரவர் பழக்கங்கள், உணவு முறைகள், குணங்கள், வர்ண இயல்பு மற்றும் வேறுபட்ட விதிகள் எல்லாமே நமக்கு சற்றும் ஏற்புடையதாக இருக்காது. சன்மார்க்க மதத்தின் வர்ணங்களுக்குள்ளேயே ஒத்துப்போவது இல்லை என்னும்போது முஸ்லிம்-கிறிஸ்து மதத்தாரை நம் மக்கள் ஏற்பது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. தமிழ் சித்தர்களில் அநேக ஜாதியினர் இருந்தனர். இருந்தும் அவர்கள் பொதுவான சித்த மரபின்கீழ் வந்திடுவதால் பேதம் எழவில்லை. அதுபோல் நம்மிடையே வாழ்க்கை நெறிமுறைகளில் பேதம் உள்ளதால் அது ஏற்றுக்கொள்ளும் போக்கை உண்டாக்குவதில்லை.
ஆனால் நண்பர்கள் காதலர்கள் மற்றும் குடும்பங்களுக்கிடையே ஈர்ப்பும் ஏற்றுக்கொள்ளும் போக்கும் எப்போது ஏற்படுகிறது? இருவருடைய செயல்களில் பழக்கங்களில் எண்ணங்களில் அணுகுமுறையில் அலைவரிசை ஒற்றுமை நிலவும்போது ஏற்படுகிறது. அப்போது வர்ணமும் ஜாதியும் கண்முன் வந்து நிற்பதில்லை. இப்படித்தான் நாடுகளும் அதன் தலைவர்களும் ஒற்றுமை-வேற்றுமைப் படுகிறார்கள். ஆன்மிகத்தில் ‘தான் அவனாக வேண்டும்’ என்று சொல்லும்போது, நாம் அந்த சிவனாக மாறவேண்டும் என்றால் பிறப்பால் நாம் எந்த வர்ணமாக இருந்தாலும் அதனதன் இயல்பினை விடுத்து முதல் வர்ண இயல்புக்கு மாற்றிக் கொண்டால்தான் இறுதியில் அது வசப்படும். இது எப்போது அமையும்? உண்மையான ஆன்மிக சத்சங்கம் அதை அமைத்துக் கொடுக்கும். அதுவரை சமூகத்தில் அந்த ஜாதி அப்படி, இது இப்படி என்ற பேச்சுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அரசியல் கழகங்களும் ஊடகங்களும் தங்கள் பங்களிப்பைத் தரும்.
‘சீனா உயர்வான தேசம். சீனர்களைப்போல் உன்னதமான மக்களை மேருவின் தட்சிணத்திலும் காணமுடியாது’ என்று சித்தர் போகர் சொன்னார். இன்று அது நேர் எதிர்மாறாக உள்ளது. சுதந்திரம் முதலே பாகிஸ்தான் அராஜகமாக இருந்து வருகிறது. நாளையே அது இந்தியாவைவிட உன்னத நீதிநெறிகள் தவறாத தேசமாக மாறலாம். ஆனால் இதைப் படித்ததுமே ‘ஆமா.. மாறிட கீறிட போகுது..’ என்று நக்கலாக உங்கள் மனவோசை எழுகிறது, அல்லவா? ஏன்? நாம் இதுவரை அதன் தீய செயல்களையே பார்த்து விட்டதால் அது உண்மையாக மாறினாலும் நம்பி ஏற்கத் தயாராக இல்லை.
ஜாதிகள் வெவ்வேறாயினும் காதலர்கள் மட்டும் கைகோர்த்து நிற்க முடிகிறது. ஆனால் கனவுகளோடு அவர்களை வளர்த்த பெற்றோர்களுக்கு அதில் பேதம் உண்டு. ஏன்? மேற்கூறிய வர்ணங்களுக்கிடையே நிலவும் பல ஒத்துபோகாத நெறிமுறைகள்தான் காரணம். இரு குடும்பங்களிலுமே சொல்லி வைத்தாற்போல எல்லா அம்சங்களும் ஒத்துபோனால், அங்கே ஜாதி மறுப்பு என்று எதுவும் தலை தூக்குவதில்லை. அதற்குள் புகுந்த வீட்டில் கைக்கொள்ளும் பழக்கவழக்கங்கள், பக்தி நெறி, சமையல் பாங்கு, வீட்டை சுத்தமாக பராமரிக்கும் விதம், என எல்லாவற்றையும் அப்பெண் கற்றுக்கொண்டு விடுவாள்.
ஆனால் சாதியின் பெயரில் பேதம் காட்டுவது எப்போது வருகிறது? பெற்றோர் தம் மகனை நம்பி இருக்கும்போதும், அவனுடைய காதலி தம் குடும்பத்திற்கு சரிப்பட மாட்டாள் என்பதை பெண்ணின் குடும்பத்தின் போக்கையும் முறைகளையும் அறிந்தபின் முடிவுக்கு வந்திடுவார்கள். அதுபோக பொருளாதார நிலையும் எட்டிப் பார்க்கும். ஆகவே, ‘சமத்துவமாக இருங்கள்’ என்று வாயளவில் சொன்னாலும் அது மெய்யாக வேண்டுமானால் பல மாறுதல்களை அடிமட்டத்திலேயே உண்டாக்க வேண்டும். அரசு வெளியிடும் ஜாதிப் பட்டியல் பல பக்கங்களுக்குப் போகிறது. சாதிகளற்ற சமுதாயம் என்பது வராது.
மனம் ஒத்துப்போனால் காதலில் நான்கு வர்ணங்கள் அடிபட்டுப் போகும். ஆனால் அங்கே இருவரில் ஒருவர் தன் உணவு-உடை-வழிபாடு கலாச்சார இயல்புகளை இன்னொரு குடும்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு ஆகவேண்டும். அது சரிபடாதபோது தினம் ஒரு பிரச்சனை எழுந்து குடும்ப நிம்மதியே குலையும், ஜாதியின் பெயரால் பிரிவினையில் போய் முடியும். இன்னாருக்கு இன்னார் என்ற விதியின் விளையாட்டில் விளக்கங்கள் தரப்படுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக