நேற்றைய பதிவில் வர்ணங்கள் பற்றியும் ஜாதிகளின் பின்னலைப் பற்றியும் ஓரளவுக்கு விஸ்தாரமாகப் பார்த்தோம். அதில் ஒவ்வொரு வர்ணங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் மிளிர்ந்தனர் என்றும் அதில் சூத்திரனே சமூகத்தின் அச்சாணியாக உள்ளான் என்பதையும் பார்த்தோம். சூத்திரன் பிரிவில் யாரெல்லாம் வருவார்கள்? மற்ற மூன்று வர்ணத்தவர்களில் வராத ஏனைய தொழிலோரும் சமுதாய ஓட்டத்தில் வெவ்வேறு பணியில் ஈடுபடும் எல்லா பணியினரும் சூத்திரர்கள்தான். இன்றைக்கு நாம் செய்யும் தொழிலை வைத்து நாம் பிறந்த வர்ணத்தை யூகிக்க முடியாது.
வேதங்களின் தாயாக கருதப்படுபவள் காயத்திரி @ விஸ்வகர்மணி. மந்திரங்களின் உயர்வான காயத்ரி மந்திரம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது பிராமணர்களுக்கு மட்டும்தானா? இல்லை. மற்ற வர்ணங்களுக்கும் உண்டு ஆனால் காலப்போக்கில் தேய்ந்துபோய் இன்றைக்கு பிராமணர் வைசியர் ஷத்ரியர் கம்மாள ஆச்சாரிகள் மட்டுமே ஜெபிக்கின்றனர். மூத்த சித்தர்களான அகத்தியர் திருமூலர் காலாங்கி போகர் என நிறைமொழி மாந்தர்கள் அனைவரும் நுண் சிகை/ பூணூல்/ வேதம்/ ஹோமம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நிறையவே சொல்லிவிட்டனர்.
ஆன்மிகம் எல்லோருக்கும் பொதுதானே? பிறகு ஏன் சூத்திரர்களுக்கு வேதம் ஓதுவதும் காயத்ரி ஜெபித்தலும் கட்டாயமாக்கப் படவில்லை? அது மறுக்கப்பட்டது என்று சிலர் குற்றம் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சூரியனை மறைத்து வைப்பது என்பது அறியாமை. மறுக்கப்பட்டது என்பது காரணமல்ல! வேதம் ஓதுவதும், காயத்ரி மந்திரம் ஜெபிப்பதும் உடலிலும் மனதிலும் யோக நிலையிலும் நிறைய மாற்றங்களை விளைவிக்கும். பிராமணர்கள் உடல் உழைப்பு என்பதை அளவோடுதான் செய்தார்கள். கடுமையாக எதையும் மேற்கொள்ளவில்லை. ஏன்? வேதம் ஒதவும் மந்திரம் ஜெபிக்கவும் யோகசக்கர ஆற்றல் செயல்பட உடல் என்னும் வாகனத்தை அழற்சிக்கு உட்படுத்தவில்லை. ஆகவே அதிகப்படியான கொழுப்பு உணவுகள் அவசியப்படவில்லை. சாத்வ குணங்களை ஒத்த உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றினர். ஆனால் ஏனைய வர்ணங்கள் அப்படி இருக்க முடியாது. அதிகப்படியான கொழுப்பும் ஆற்றல் சக்தியும் தேவைப்பட்டது.
பண்டைய ரிஷிகள் குறைவாக உண்டு அதிகநேரம் அந்த உடல்சக்தி விரயம் ஆகாதவகையில் தவம் செய்து வாசியில் நிலைத்தனர். உடலுழைப்போ அதிக நடமாட்டமோ இருக்கவில்லை. காயத்ரி மந்திரம் லட்சம் உரு, கோடி உரு ஏற்றும்போது உடலில் வெப்பம் அதிகமாகும். அகத்தீயைப் பெருக்கும் அறிவொளியாம் சூரியனை மையமாக வைத்து ஜெபிக்கபடுவதால் இந்த வெப்பவினை ஏற்படுகிறது.
சரி.. சூத்திரர்கள் வேதம் ஓதுவதோ /காயத்ரி ஜெபிப்பதோ ஏன் கூடாது? அவர்களுடைய உடலுழைப்புக்கு இது நல்லதல்ல. இதில் அதிக கவனம் மேற்கொண்டால் அது அவர்களுடைய சரீர சக்திக்கு பின்னடைவுதான். அதனால் வேதம் ஓதுவதில் சப்தகோஷ நிலைகள் மாறும்போது ஆறாதார சக்கரங்களில் மாற்றங்கள் உண்டாக்குகிறது. பெண்கள் பொதுவாகவே வேதம் ஓதுவதோ, காயத்ரி ஜெபிப்பதோ, விஷ்ணு சஹஸ்ரநாமம் வாய்விட்டு பாராயணம் செய்வதோ கூடாது என்று வைத்திருந்தனர். ஏன்? பெண்ணடிமையா? இல்லை. அவர்களுடைய உடலமைப்புக்கு எதிர்மறை விளைவுகளை அதிகம் ஏற்படுத்தும் என்று அப்போதே விஞ்ஞான ரீதியில் கண்டு உரைத்தனர். மந்திர சப்த அதிர்வுகளால் கருப்பை, மூலாதாரம், மற்றும் சுரப்பிகள் பாதிப்பு உள்ளாகும் என்பதே உண்மை. விலக்கான பெண்கள் வில்வம், துளசி, கறிவேப்பிலை செடிக்கு அருகே சென்றாலே சுத்தமாகப் பட்டுபோய் விடுகிறதே. அதுபோல்தான்!
மாமிச உணவில் கொழுப்பு இருப்பதால் அது உடலை அதிக நேரம் உழைக்க ஈடுதரும். ஆனால் அவை எல்லாம் யோகசக்கர ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும். ஆகவே, இவர்களுக்கு ஜெபமும் மந்திரம் உரு ஏற்றுதலும் பயன் தராமல் போகும். அதனால் அவர்களுக்கு பலவீனம்தான் வரும். சூத்திர வேலைகள் செய்யும் நாம் இதை எல்லாம் கனம் மாறாமல் பாராயணம் செய்தால் உடலுழைப்புக்கு சக்தி இல்லாமல் போகும். மற்றபடி கடவுளை துதிக்கவோ, பதிகம் பாடவோ, பண் இசைக்கவோ எந்தத் தடையுமில்லை.
மேற்படி செயல்களை எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து செய்யும்படி ஆகிவிட்டது. ஜெபத்தில் கண்கள் மூடியே இருக்கும், மூச்சு சீராக இருக்கும், வாய் பேசாது, உடல் ஆசனமிட்டு இருக்கும், நடமாட்டமில்லை. ஆகவே உடலுக்கு அதிகப்படியாக பளு சுமத்தவில்லை. நாம் அறிந்த ரிஷிகள் அநேகரும் பிறப்பால் பிராமணர் அல்ல. வைசியர், ஷத்ரியர், சூத்திரர்களாக பிறந்து வளர்ந்து பிறகு ஒரு கட்டத்தில் அதை விடுத்து மேற்படி பிராமணத்துவ சாதகத்தில் ஈடுபட்டு, தம் ஆன்ம சக்தியையும் யோக சித்தியையும் மேல்நிலைக்கு உயர்த்திக் கொண்டனர். பிராமணர்கள் ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தை உரைத்த விஸ்வாமித்திரர் பிராமணரா?
ஆகவே, வேதமும் /மந்திரமும் மற்ற வர்ணத்தார்களுக்கு மறுக்கப்பட்டது என்ற கோட்பாடே தவறு. ஜெபம் செய்து வேள்விகள் வளர்த்து தபஸ்வியாக வேண்டும் என்றால் தன்னை மனத்தால் உடலால் அதற்கு தயார்படுத்திக் கொண்டு முயன்றால் யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம். ஆனால் அந்த வரணத்தின் அனுஷ்டானத்தைப் பின்பற்ற வேண்டிய கடமையும் உள்ளதே!
காஞ்சிபுரம் வட்டம் ஓரிக்கையில் மகாசுவாமி மணிமண்டபத்திற்குப் போகும் வழியில் வேத அத்யயன பள்ளியைப் பார்த்தேன். சொகுசு வாழ்க்கை நாம் வாழும் இக்காலத்தில் அந்தச் சிறார்கள் வேதம் படித்து உயர்வதில் நிறையவே ஆசைகளை தியாகம் செய்துள்ளார்கள் என்பதைப் உணர்ந்தேன். வேதம் கற்பதோடு மற்ற பள்ளிப் பாடங்களும் உண்டு. அங்கு தமிழை புறக்கணித்து விட்டார்களோ என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வேதம் stream ல் specialise செய்வது போக, விருப்பப் பாடங்களாக திருமுறைகள்/பிரபந்தங்களும் உண்டு.
ஆகவே, எந்த வர்ணமாக இருந்தாலும் ஓர் ஆன்மா அந்த பிரம்மத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் அது நிச்சயம் நடக்கும். குரு தேடி வந்து உபதேசம் செய்வார்! இப்பிறவியில் நடக்காமல் போனால் மறுபிறவியில் விட்ட இடத்திலிருந்து தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக