தமிழில் பல நல்ல சொற்கள் இன்றைக்கு வழக்கொழிந்து போயின. அதுவாகவே ஒழிந்து போகவில்லை. பிற மொழிகளின் தலியீடு இல்லாமல் நாமே ஒழித்தோம். நம்முடைய தமிழ் எண்களின் பெயரும் அவ்வாறே.
தொல்காப்பியனார் காலம் முதலே 9 என்ற எண் ‘தொண்டு’ என்றுதான் வழங்கப்பட்டது. 90 = தொண்டு x பத்து = தொண்பது, 900 = தொண்டு x நூறு = தொண்ணூறு, 9000 = தொண்டு x ஆயிரம்= தொள்ளாயிரம், 90000 = தொண்ணூறு x ஆயிரம் = தொண்ணூறு ஆயிரம், என்றுதான் இருந்தது. காலப் போக்கில் அது திரிந்து உருமாறி வேறு வடிவம் பெற்று ஒரு தசம ஸ்தானம் நகர்ந்து போனது. பின்னாளில் புலவர்களும் மக்களும் அதை மாற்றிவிட்டு வழக்கொழிந்து போனது என்று சொல்லும் நிலை சாதாரணமாகி விட்டது. ஆங்கில முறையைப் பின்பற்றி உலாவரும் தமிழ் நாள்காட்டி என் கண்ணில் படவே தமிழ் எண்களின் பழைய சுவடுகள் கண்முன் வந்து போயின. இதைப் பயன்பாட்டில் வைத்தால் எப்படி வழக்கு ஒழியும்?
எழுதும்போது இக்காலத்தில் சந்தி இலக்கணம் அறவே தேவையில்லை. “சார், சந்தி மெய்யெழுத்தை எல்லாம் போட்டால் வேர்ட் ஸ்பேசிங் அதிகமாகிறது. நியூஸ் பேபர்லகூட அதை யாரும் இப்போ போடறதில்லை” என்ற நிலை ஆகிவிட்டது. சந்தி இலக்கணம் பின்பற்றாமல் எழுதினால் சொற்கள் அழகின்றி உதிரியாக அந்தரத்தில் தொங்குவதாகவே எனக்குத் தோன்றும். “உங்களோட சில தமிழ் சொற்கள் இப்போதைய ட்ரெண்டுக்கு ஒத்து வல்லை. அதை கொஞ்சம் சிம்பிளா மாத்தி அனுப்புங்க” என்று முன் எப்போதோ ஒரு முன்னணி வார இதழில் சொன்னார்கள். கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை. சந்தியைத் தவிர்த்து எழுதுவது இப்போது எனக்குப் பழகிவிட்டது. இப்பதிவிற்கு மட்டும் விதிவிலக்கு.
சந்தியைத் தீர்க்கமாக குணம் அறிந்து விருத்தி செய்யாது போனால் விரைவில் வழக்கொழியும். நாங்களும் ஒருகாலத்தில் இனிய தமிழில் பேசினோம் என்று சொல்லிக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக