About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 3 ஏப்ரல், 2019

சுபிட்சம் பறிபோனது ஏன்?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிராமங்களில் இருந்த அக்ரஹாரங்கள் மெல்ல மறையத் தொடங்கின. இனியும் புரோஹிதம் ஜெபம் தபம் மற்றும் வேள்வி வளர்த்தல் சரிபடாது என்று கருதிய பல பிராமணர்கள் வேறு வேலை தேடிக்கொண்டு இடம் பெயர்ந்து போனார்கள். அதுவரை கட்டுக்கோப்பாக இருந்த ஊர் சிதற ஆரம்பித்தது. விற்கப்பட்ட அக்ரஹாரங்கள் இடிக்கப்பட்டு அங்கே புது கட்டடங்கள் வந்தன. இந்த காலகட்டத்திற்குள் பகுத்தறிவு கழகத்தின் வேதம்- வடமொழி- பிராமண எதிர்ப்பு உச்சக்கட்டத்திற்குப் போனது. தினம் பொழுது விடிந்து பொழுது போனால் அவர்களை இழிவாகப் பேசுவது, கோயில் சிலைகளை களவாடுவது, கோயிலுக்குள் செருப்பு மாலைப் போடுவது என்று பல வினோதங்கள் நடந்தேறியது.
நதிகளின் அருகே பிராமணர்கள் அமர்ந்து ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் சொல்லி, தவறாமல் அக்னிஹோத்ரம் (எ) ஹோமங்கள் செய்து ஊரில் இறைகாந்த அலைகளை உருவேற்றி பஞ்சபூதங்களை இயக்கத்திலும் வைத்திருந்தனர். அவர்களுடைய வர்ணத்தின் கடமையாகவே இதை செய்து வந்தனர். இவற்றை தவறாமல் செய்துவந்த ஊரில் மழை பொழிந்தது, நதிகள் பிரவாகித்தது, பயிர்கள் செழிப்பாக மகசூல் தந்தது, பெண்கள் கண்ணியத்துடன் இருந்தனர். பிற்பாடு கழகங்களின் அவதூறும் பொல்லாப்பும் இவர்களைப் பீடிக்க தங்களுடைய அடுத்த தலைமுறை வேலைக்குப் போகட்டும் என்று ஊக்குவித்து வெற்றி கண்டனர். இதன் காரணமாக அன்றாட அனுஷ்டானங்களை குறைத்துக் கொண்டும், நேரம் இருந்தால் இவற்றை செய்துக்கொண்டால் போதும், செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று அவர்களாகவே தங்கள் கடமைகளை கைவிட, பாவங்களையும் சம்பாத்தித்தனர். காலவோட்டத்தில் அதையும் மறந்துபோய் வேளா பார்ப்பனர்களாக பெயரளவில் உள்ளார்கள்.
ஊர் நலனை பிராமணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மற்ற வர்ணத்தார்கள் நினைத்தனர். முடிந்த போது அவர்களுக்கு பிக்ஷ அரிசியும் தட்சனையும் தந்து போற்றினர். ஆனால் அவர்கள் எல்லோரும் ஊரையே காலிசெய்து போகவும், பிராமண வர்ணம் என்று சொன்னாலே அவமானம் என்ற அளவுக்கு கழகங்கள் விரட்டி அடித்தது. அதன் விளைவுதான் இன்றைக்கு அதர்மங்கள் தலைவிரித்து ஆடுவதும், மழை பொய்த்துப் போவதும், விளைச்சல் இல்லாமல் போவதும், கோயில் களவாடப்படுவதும், நதிகள் வறண்டு கிடப்பதும், சமுதாய கற்பே களவுபோனதும் கண்கூடு. கோயில்களில் ஆதிசைவர்கள் /குருக்கள்/ புரோகிதர்கள் மட்டும் இன்றளவில் இவற்றை கடமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் செய்து வருகிறார்கள். மற்றவர்கள் கைவிட்டுவிட்டனர். இவர்கள் குலத்தொழிலை செய்யத்தவறினால் விளைவுகள் ராஜ்ஜியத்திற்கும் மக்களுக்கும் மிகுந்த கேடு என்பதை திருமூலர், அகத்தியர், திருவள்ளுவர் அன்றே சொல்லிவிட்டனர்.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.” (திருக்குறள்-560)
முருகனின் ஒருமுகம் இவர்கள் செய்யும் ஹோமத்தையும் ஓதும் வேதத்தையும் பார்க்கிறது என்று சங்கநூல் சொல்கிறது. எனக்குத் தெரிந்து இன்றைக்கு இதை எல்லாம் உலகோர் நன்மைக்காக யாரும் செய்வதாகத் தெரியவில்லை. முருகன் கருப்பா/ வெளுப்பா, உமையவளிடம் முளைப் பால் குடித்தானா இல்லையா? அவன் தமிழ் என்றால் சங்கநூல் அவனை வேதமுகன் எனச் சொல்வது பொய் என்று இவ்வாறாக ஆய்வுதான் நடக்கிறது.
கோயிலில் வேதியர்கள் பூசை நிமித்தமாகவோ கட்டளை தாரர்களுக்காகவோ இவற்றை செய்வித்து வைக்கிறார்கள். இவர்களை விரட்டிய பாவமும், இழிபழிக்கு ஆளாக்கிய விதமும் இன்றைய கஷ்ட நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது. இதன் விளைவாக காலவோட்டத்தில் கடமைகளை கைவிட்ட பிரமாணர்களே இன்று செய்யக்கூடாத செயல்களையும், மது குடித்தும் புலால் உண்டும், அதர்மமாக நடந்து கொள்வதை நானே காண்கிறேன்.
அவர்கள் ஆகாம்ய கர்மாவாக பாவத்தை இப்பிறவியில் சம்பாத்திதாலும், அவர்கள் தங்கள் கடமைகளை மறக்கச் செய்ததற்குக் காரணமானோர் மறுபிறவியில் பெருத்த இன்னலை சந்திப்பார்கள். அத்தகையோர் வேதியர்களாக, கோயில் பணிகளை ஏற்றுச் செய்யும் ஆச்சாரிகளாக, மற்றும் கோயிலுக்கு உடலுழைப்பு அளிக்கும் பின்னணிப் பணிகள் செய்யும் ஏதோவொரு விதத்தில் பிறவி எடுத்து பாவத்தை துடைக்க நேரிடும். பசுவையும் பிராமணனையும் துன்புறுத்தினால் அது பிரம்மனைக் கொன்ற பாவமாக ஏழேழு பிறவிகளுக்கும் துரத்தும். பிராமணர்கள் ஒழிந்தால் போதும் என்ற எண்ணமே இன்று மக்கள் மனத்தில் நிலவுகிறது. இப்படியொரு நிலையில் மீண்டும் சுபிட்சம் திரும்புமா? சந்தேகமே!
இனி சமுதாயம் அன்றாக இருக்க வேண்டும் என்று ஒப்புக்காக மனதளவில் நினைப்பது வீண். செய்ய வேண்டிய பணிகளை இனி யார் எடுத்துச் செய்வது? நாமேதான் சுயம் தேடலில் ஈடுபட்டு உயர்நிலையை எட்ட பாடுபட வேண்டும். நாம் நம்பிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் பரப்பிய அவதூறுபடி மற்ற வர்ணத்தார்களை பிராமணர்கள் அடக்கி ஆண்டார்களா? அப்படியே ஒருவேளை நடந்திருந்தால் அதற்கு யார் காரணம்? அப்பழி பிராமணனுக்கா தூண்டியவர்களுக்கா? அடுத்த பதிவில் மற்ற வர்ணத்தார்களின் வாழ்வு நிலையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Image may contain: house, sky and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக