About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 22 ஏப்ரல், 2019

மரபு மாறும் மரபணு

வர்ணங்கள் சாதிகள் பற்றி பழைய பதிவுகளில் விளக்கமாகப் பார்த்தோம். அதற்குள் தேர்தல் வந்திடவே இத்தலைப்புக்கு இடைக்கால ஓய்வு தந்தோம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு வகுப்பில் எனக்குப் பாடம் நடத்திய சில பேராசிரியர்களில் இருவர் செட்டியார் பிரிவினர். அதில் ஒருவர் அச்சு அசலான தென்னக நாட்டுக்கோட்டை நகரத்தார். கருத்த மேனி கூர் நாசி கொண்டு திருநீறு பூசிய துலங்கும் நெற்றியோடு பக்திப்பழமாக வருவார். இன்னொருவர் சற்று குள்ளமான உருவம் மாநிறம் வட்டமான முகம். அவரைப் பார்த்தால் பர்மியர் முகச்சாயலே எனக்குத் தெரியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பர்மா மலேயா இலங்கை என தூரதேசம் போய் வியாபாரம் செய்த செட்டியார்கள் பலருண்டு. சிலர் அங்கே பர்மிய பெண்களை மணந்து குடும்பம் நடத்தியபின் ஊர் வந்து சேர்ந்தனர். அது போன்ற வம்சாவளியினர்தான் இவரும். ஒரு நூற்றாண்டில் மூன்று தலைமுறைகள் தாண்டியும் பர்மா முகச்சாயல் மாறாமல் dominant ஆக மரபணு இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அதுபோல் தில்லை நடராஜர் கோயிலில் இன்னொன்றும் எனக்கு வியப்பூட்டியது. ‘தில்லை மூவாயிரம்’ தீட்சிதர்களின் சந்ததியினரைக் காண்பேன். பார்க்க மிகவும் பின்தங்கிய வாழ்க்கைச் சூழலில் இருப்பதாக எனக்கு அப்போது எண்ணத் தோன்றியது. ‘தில்லைப் பெண் எல்லைத் தாண்டாள்’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது, தீட்சிதர்கள் தங்கள் நான்கு கோத்திர குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வார்கள். வெளியூருக்குப் போய் வெளியே பெண் எடுப்பதில்லை. ஏன்? சிவ மரபணு விட்டுப் போகாமல் இருக்கத்தான்.

சிவன் கயிலாயத்திலிருந்து அழைத்துவந்து குடியமர்த்திய மூவாயிரம் அந்தணர்கட்கு நான்கு வேதத்தை அருளி தீட்சைத் தந்ததால் ‘தீட்சிதர்’ குலத்தின் முன்னோராக சிவனே திகழ்கிறான். தற்காலத்தில் அக்குலத்தின் ஆண் வாரிசுகள் படித்து வெளியே வேலைக்குப் போவதும் வேறு பிரிவில் மணம் முடிப்பதும் நடக்கிறது. ஆகவே மரபணு கலப்பும் நிகழும்.

இவர்கள் ஃபோன் பேசும்தோ சந்திக்கும்போதோ 'ஹலோ/வணக்கம்' சொல்லாமல் ‘திருச்சிற்றம்பலம்’ என்றே சொல்கிறார்கள். இருந்தாலும் சிவன் தமக்கு தீட்சித்து வேதம் அருளியதை எக்காரணம் கொண்டும் அலட்சிய நிந்தனை செய்வதில்லை. பஞ்சாட்சரப்படி உள்ளே வேத சப்தம் முழங்கும். வெளியே அவர்களே திருமுறை ஓதுவர். இவ்வேத கோஷத்தைப் பற்றி அப்பர் சுவாமிகளே தன் பதிகங்களில் உயர்வாகப் போற்றியுள்ளார். ஆனால் அவ்வழக்கத்தை எப்படியேனும் குலைத்துவிட்டு தீட்சிதர்களை அப்பறப்படுத்த முற்போக்கு இயக்கங்கள் தீவிரம் காட்டுகிறது.

நாட்டு சாதி பசுமாடுகள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகளின் மரபணு மாறாமல் பாதுகாக்க வேண்டுமானால் தில்லைவாழ் தீட்சிதர்களைப்போல் கட்டுக்கோப்பாக கோத்திர விதிகளை கடைப்பிடிப்பதே சிறந்தது. அந்த வகையில் அவர்களுடைய மரபணுவின் நீண்டதொரு பயணம் என்னை பிரம்மிக்க வைக்கிறது.

படத்தில்: செட்டியார்கள், தீட்சிதர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக