சித்தர் பாடல்கள் எல்லாமே மறைப்புப் பொருளுடையது என்பதை பலமுறை நாம் பதிவுகளில் பார்த்துள்ளோம். ஆனால் இந்த நாத்திகவாதிகள் ஏதோ ஒரு பாடலை மேலோட்டமாகப் பொருள்கொண்டு “அதான் அவரே சொல்லிட்டாரே, அப்புறம் என்ன?” என்ற ரீதியில் விமர்சனம் செய்வதுதான் பெருங்கூத்து. சிவவாக்கியர் நாத்திகவாதிகளின் பழிச்சொல்லுக்கு ஆளானவர். அவர் எக்காரணத்துக்கேனும் சாபம் பெற்றாரா என்பதை போகரின் பெருநூல் காவியத்தைப் படித்தால்தான் தெரியும். இப்போது எனக்கு நினைவில்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், சிவ வாக்கியத்தில் சொல்லப்பட்ட பாடல்களை அப்படியே படிக்கும்போது அது முற்போக்குவாதிகளுக்காகவே எழுதப்பட்டதாகத் தெரியும். ஆனால் அதில்தான் சூட்சுமம் உள்ளது. எந்த சித்தரும் சிவனை நிந்தித்துப் பேசியதில்லை. புரிதல் இல்லாதபடியால் தவறாகப் புரிந்துகொண்ட எதையோ பரப்பினார்கள். ‘டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்துவிட்டு, திருட்டு ரயில் ஏறிவந்த’ கதையாகி விட்டது.
எப்படி திருவள்ளுவரின் குறள்கள் பலவற்றுக்கு தவறாகவே பொருள் படித்து நாம் படித்துத் தேர்ச்சியடைந்தோமோ, அதுபோல் ஆகிவிட்டது. அதனால்தான் ஒரு சித்தர் சொன்ன அதே கருத்தை/சொல்லாடல் முறையை இன்னொரு சித்தர் திறந்துபோட்டு விளக்கிவிடுவார். திருவள்ளுவர் பயன்படுத்திய பல சொற்களை/ சொற்றொடர்களை திருஞானசம்பந்தர் தன்னுடைய பதிகங்களில் ஐயமின்றி விளக்கிப் புரியவைத்தார். ஓ.. அப்போ வள்ளுவர் சொனது இதைத்தானா? என்று ஆச்சரியப்படுவோம்.
அதுபோல் சிவவாக்கியர் பயன்படுத்திய அதே சொல்லாடல் மற்றும் இலக்கண முறையை மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தில் சொல்லி விளங்க வைக்கிறார். அதாவது “அந்தப் பாடலை இந்த மாதிரி பதம் பிரித்து மறைப்பு நீக்கி பொருள் கொள்க” என்று சொல்லுமாறு செய்துள்ளார். அது என்ன?
மணிவாசகர் அருளிய திருவாசகத்தில் ‘போற்றியோ நமச்சி வாய' என்பதை, 'போற்றி ஓம் நமச்சிவாய' என்றுதான் நாம் பிரித்துப் படிக்கிறோம். அதே நடையில் சிவாவாக்கியப் பாடலைப் படித்தால், இதுகாறும் முற்போக்கு ஆசாமிகள் மெச்சிக்கொண்ட நட்டகல்லைப் பற்றிச் சொன்னது என்ன என்பதன் பொருள் விளங்க ‘ஏமாற்றுப் பேர்வழி’ என்று அவரைத் தூற்றுவார்கள். நட்ட கல்லும் பேசுமோ? என்றால் உடனே ‘அதெப்படி பேசும்? பேசாதே’ என்றுதான் அவர்கள் பதிலளிப்பார்கள். ஆனால் திருவாசகம் உணர்த்தியபடி பதம் பிரித்துப் படித்தால் ‘நட்ட கல்லும் பேசும் ஓ(ம்), நாதன் உள்ளிருக்கையில்’ என்று வெளிப்படும். நம் தேகத்தில் ஆறாதார சக்கரங்களின் வழியே ஹம்ச ஜெபம் பாயும்போது ஓங்காரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஸ்ரீவீரப்பிரம்மம் விளக்கிக் காட்டிய தருணத்தையும் முன்பே பார்த்தோம். மனம் செம்மையானாலே போதும், அவன் வந்து குடியேறுவான் என்பதை அகத்தியர் எளிமையாகச் சொன்னார்.
சித்தர்கள் எல்லோருமே அசாத்தியமாக இலக்கண விதிகளைக் கையாண்டு பாடல் இயற்றியது நமக்கு பிரம்மிப்பைத் தரும். பிறந்த அனைவருக்கும் மறுபிறப்பு என்பதே இல்லை என்று சிவவாக்கியர் சொன்னதாகக் கிளப்பி விட்டதை நாம் நம்முடைய நூலில் அவருடைய சில பாடல்கள் மூலமாக மறுத்ததையும், எப்படிப்பட்டவர்கள் பிறப்பதில்லை என்பதையும் பார்த்தோம்.
நட்ட கல்லும் பேசும் என்பதை சிவஞான சித்தியார் தன்னுடைய பாடலில் விரிவாகாகச் சொல்லியுள்ளார். ‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா...” என்று அபிராமி அந்தாதியில் சுப்ரமணிய பட்டர் பாடியதும் சிவஞான சித்தியார் சொன்னதை மெய்ப்பிக்கும். நம்பிக்கையோடு கள்ளமில்லாமல் மனதில் அவனை நினைத்து என்னவெல்லாம் நினைத்தாயோ அதெல்லாம் வெளிப்படும் என்பது அமாவாசை பௌர்ணமியான நிகழ்வுக்கு சாட்சி.
ஒரு சித்தர் சொன்னதை நாம் சரியாக விளங்கிக் கொண்டோமா இல்லையா என்பதை வேறு சித்தர் பாடல்களை வாசித்து வரும்போது எங்கேனும் வெளிச்சம் கிட்டிவிடும். அது எந்த நூலில் கிட்டும் என்பதையும் அவர்களே அருள் புரியவேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக