ஊரில் எங்கள் தெருவில் தொண்ணூறு வயதைத் தாண்டிய ஒரு தாத்தா இருந்தார். கருத்த தேகத்தில் பளிச்சென நீறுபூசிய நெற்றியோடு கழுத்தில் ஒரு ருத்திராட்சத்துடன் அவர் எப்போதும் ஏதோ மந்திரங்களை மெளனமாக ஜெபிப்பதை நான் பால பருவத்தில் பார்த்துள்ளேன். திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் அவர் தூங்குவார். அவரைச் சுற்றி குழந்தைகள் வந்து உட்கார்ந்தால் விடுகதையும் பின்ன வாய்பாடும் கேட்டு அச்சுறுத்துவார். தவறாகச் சொன்னால் காதைத் திருகுவார். சரியாகச் சொன்னால் ஒரு கல்கண்டு தருவார்.
காவிரியில் குளித்து முடித்து காலையில் அவர் சிவப்பு வஸ்திரம் உடுத்தி தன்னிலை மறந்து பலகையில் உட்கார்ந்து பூசையிலோ ஜெபத்திலோ இருப்பார். அப்போது அவரை யாரும் தொட்டுவிடக் கூடாது. எனக்கு சிறு வயதில் இது வேடிக்கையாக இருக்கும். வேண்டுமென்றே அவர் முதுகில் காற்றை ஊதுவோம். அதைப் பார்த்த அவர் கிழத்தி "பசங்களா.. தாத்தா குளிச்சு முடிச்சு மடியா உக்காந்து ஜெபம் பண்றார். தொடக்கூடாது.. தொட்டா தீட்டாயிடும்" என்பார். இந்த கண்டிஷன் அவருடைய பெயரன் பெயர்த்திகளுக்கும் பொருந்தும். நம் சமுதாயத்தில் தீட்டு என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் பலவுண்டு. இங்கே பாட்டி குறிப்பிட்டது என்னவென்றால் நாங்கள் குளிக்காமல் உடைமாற்றாமல் விளையாடிவிட்டு சுத்தமின்றி அவரைத் தீண்டும்போது கிருமிகள் ஒட்டலாம். அதுபோக இன்னொரு பெரிய விஷயம் மின்காந்த ஆற்றலைப் பற்றியது.
நம் ஒவ்வொருவருக்கும் நம்மைச்சுற்றி ஒளிதேகமாக ஆரா உண்டு. அது ஜெபம் தபம் சக்திமூலம் பன்மடங்கு பெருகி தேகத்தைச் சுற்றி அகண்டு நிற்கும். அப்போது நாம் அவரைத் தொட்டால் அது மாசுபடும் அல்லது நம்மூலம் கடத்தப் பட்டு வீணாகும். இந்த மின்காந்த ஆற்றலை தன்னுள்ளே பெருக்கவும் அது பூமிக்கு கடத்தப்படாமல் இருக்கவும் அவர் பட்டு வஸ்திரம் அணிந்து பலகைமீது உட்காருவார். இந்த விளக்கம் அந்த வயதில் எங்களுக்குப் புரிய நியாயமில்லை. பிற்பாடு எந்நேரமும் அவர் மானசீக ஜெபத்தில் இருக்கவே அவரைத் தொட்டுப் பேசுவதை தவிர்த்தோம். மற்ற நேரங்களில் அங்கே மடி-தீட்டு என்ற கான்செப்டே இருக்காது.
செட்டியார் கவுண்டர் வீட்டு பிள்ளைகள் வந்து விளையாடினால் அவர்களது ஜோபியில் விரலைவிட்டு துழாவி எங்கேடா எனக்கு இலந்தபழம்? என்று வம்பு வளர்ப்பார். அவரே எங்களைக் கூப்பிட்டு தட்டிக்கொடுத்தாலோ காதைத் திருகினாலோதான் உண்டு. எனக்குத் தெரிந்து அவர் கோடி காயத்ரி மந்திரங்களை ஜெபித்து பழுக்க உருவேற்றியவர் என்று பின்னர் அறிந்து கொண்டேன். அவருடைய கண்கள் பளபளவென தகிக்கும், முகத்தில் தேஜஸ் ஒளிரும்.
இப்படியான ஆற்றல்மிகு ஒழுக்கத்தை அவர்கள் கடைப்பிடிக்க, சமுதாயத்தில் ஏனையவர்களும் பிராமணர்களைத் தொட்டுப்பேசுவதை பழகிக் கொள்ளவில்லை. காலப்போக்கில் அவர்கள் கடைப்பிடித்த நல்ல பழக்கமே பிற்பாடு பெரிய அளவில் ‘தீட்டு’ ‘தீண்டாமை’ என்ற பகுத்தறிவு கழகத்தாரின் குற்றப் பட்டியலில் இடம்பெற வழி வகுத்தது. இந்த வர்ணத்தினரை எதிர்க்க அவர்களுடைய கட்டுப்பாடுகளையே ஆயுதமாக எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தது. அந்த அறிவியல் காரணமே பிற்பாடு கிண்டல் கேலிக்குரிய விஷயமாகி அக்குலத்தினரை வெறுக்க ஆரம்பித்தனர்.
அவ்வீட்டிற்கு செட்டியார், கவுண்டர், கோனார், நாடார் என பிராமணர் அல்லாதோரும் வந்து போவதுண்டு. சூத்திரர்கள் எனப்படும் எல்லா வேலையாட்களும் வேண்டியபோது பணி செய்துவிட்டுப் போவார்கள். வீட்டில் மற்ற நபர்கள் எல்லோருமே பணியாட்களுக்கு உண்ண பண்டங்கள் தருவதோ, கொண்டுவரும் காய்கறிகள் வாங்கிக் கொள்வதையோ, வீட்டுக்கு வந்து நெய் காய்ச்சிக் கொடுப்பதையோ தடையின்றி ஏற்றனர். அந்த ஜெபதப பெரியவர் போன்றோர் மட்டும் எந்நேரமும் ஆச்சார சீலகர்கலாக இருந்தார்கள்.
இதெல்லாம்தான் ஒருவகையில் வடக்கைவிட தெற்கில் நம் தமிழகத்தில் ஆரோக்கிய ஒழுக்கத்தை மேம்படுத்தியது. வீட்டில் யாரும் எச்சில்படுத்தி குடிக்கக் கூடாது, பழத்தை வாயால் கடித்து உண்ணாமல் நறுக்கி உண்பது, யாரையும் தொட்டுத் தொட்டு உறவாடாமல் பேசுவது போன்றவை நம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. நாலுபேர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்னும்போது கலயத்தில் சுத்தம் வேண்டும். பழங்கள் உண்ணும்போது அங்கே வருவோருக்குப் பகிர்ந்து கொடுக்க நறுக்கி உண்ண வேண்டும் என்பார்கள். காரணங்களோடு செய்தது பிற்பாடு விதிப்பயனால் வினையாக முடிந்தது.
காலப்போக்கில் பிராமண வர்ணத்தின் நற்பழக்கத்தை சமூகத்தின் பிற உயர்சாதி வகுப்பினர் கைக்கொண்டு மற்ற சமூகத்தினரை சிறுமைப்படுத்த இன்றைக்கு தீண்டாமை, டீக்கடையில் தனி கிளாஸ், மற்றும் சாதிமறுப்பு கொள்கை அரசியலை நடத்துகின்றனர். கிராம சத்துணவு கூடத்தில் கீழ்சாதி பெண் சமைக்கக் கூடாது என்ற அளவுக்கு முற்றிப்போய் விட்டது.
தொடர்ந்து கொண்டிருந்த பலப்பல விஷயங்கள் காலப்போக்கில் தொடர்ந்த சந்ததிகளுக்கு ஏன்,எதற்கு, எதனால் என்று விளக்கங்கள் அறியாத காரணமும்,இடையில் ஊடுருவிய நாத்திகவாதங்களினாலும்,பணிநிமித்தமான இடம்,கால மாற்றங்களும்,ஒவ்வொரு பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணரமுடியாதவர்களாக,தொடரவும்முடியாதவர்களாக இருப்பது மிகவும் துர்ப்பாக்கிய நிலை.சிறிதுசிறிதாக பழைய பொக்கிஷங்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது (சொற்பொழிவு,சமயநூல்,இது போன்ற அறமும் ஆன்மிக கருத்துக்களை கட்டுரை வாயிலாக அறிந்துகொள்ள வழி பிறந்தள்ளதே மிகப் பெரிய வெற்றி)சக்கரம்சுழன்றுகொண்டேதான் இருக்கும் அல்லவா?
பதிலளிநீக்கு