சமையல் செய்யாவிட்டால் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம். வங்கி வேலைநேரம் முடிந்தபின் பணம் எடுக்க ஏடிஎம் சென்று எடுக்கலாம்.தேசிய பண்டிகை ஞாயிறன்று வந்தால் மறுநாள் விடுமுறை அறிவிக்கலாம். தின்பண்டம் செய்ய முடியாவிட்டால் கடைசி நேரத்தில் கடையில் வாங்கிடலாம். பண்டிகைக்குப் புத்தாடை வாங்க ஜவுளிக் கடைக்குச் சென்றிடலாம். ஆனால் புதுத்துணி வாங்கி தைக்கக் கொடுத்துவிட்டு கெடு தேதிக்குக் காத்திருக்கும்போது அந்த தையல்காரரே இறந்துவிட்டால், ஐயோ பாவம்! துணி இன்னும் வெட்டப்படாமல் தைக்கப்படாமல் அப்படியே மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டால் டெலிவரிக்குக் காத்திருந்த வாடிக்கையாளர்கள் வேறெங்கும் கொடுத்து தைக்க அவகாசமின்றி ஏமாற்றம் அடைவார்கள்.
எங்கள் பகுதியில் இருந்த டெய்லர்க்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை அங்காடி வீதியெங்கும் அஞ்சலி சுவரொட்டியில் காணப்பட்டார். சிறிய கடையின் ஷட்டர் மூடியே இருந்தது. உடனே அவருடன் உரையாடிய நினைவுகள் ஓடியது. முன்னொரு சமயம் ஒரு மாலைப்பொழுதில் கடைக்குச் சென்றேன்.
நான்: "சார், இந்த பேன்ட் கொஞ்சம் டக் பிரிச்சு தைக்கணும்'
அவர்: "பழைய துணி எல்லாம் விளக்கு வைக்கிற நேரத்துல எடுக்க மாட்டேன்"
நான்: "இன்னைய பொழுதுக்கு மட்டும்தானா இல்ல எப்பவுமே தைக்கிறது இல்லையா?"
அவர்: "எப்பவுமே தைக்கமாட்டேன். வேற யார்கிட்டேயாவது கொடுங்க" என்று சொல்லிக்கொண்டே மேசைமீது விரித்திருந்த அளவு மார்கிங் செய்த பிளவுஸ் துணியை டர்...டர் என்று வெட்டிக்கொண்டு இருந்தார்.
நான்: "அச்சச்சோ.. விளக்கு வெச்ச நேரத்துல ஒரு நல்ல துணியை இப்படி அபசகுணமா கிழிச்சு வெட்றீன்களே.. சென்டிமென்ட் பேசுறீங்க.. இது மட்டும் பரவாயில்லையா?" என்று கலாய்த்தேன்.
துணி கத்தரிப்பதை நிறுத்தி விட்டு ஏறெடுத்து என்னை முறைத்தார்.
அவர்: "தைக்க மாட்டேன். பிரச்சனை பண்ணாம போங்க சார்' என்றார்.
தொழில் என்று வந்தபின் துணியில் புதிதென்ன பழையதென்ன? இதுபோல் நம்மைக் கடந்து போகும் கதாபாத்திரங்கள்தான் எத்தனை விதம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக