About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 9 அக்டோபர், 2019

டப்பா கார்

அது 78-79 வருடம் என்று நினைக்கிறன். என்னுடைய பெரிய அத்தை மைலாப்பூர் கச்சேரி சாலையில் வசித்தார்கள். அவருடைய கணவர் திரு.மீனாட்சி சுந்தரம் அப்போது காவல்துறை ஆணையராகப் பதவியில் இருந்தார். ஜூம்மா மசூதி பள்ளிவாசலுக்கு நேர் எதிர் வீடு. முன்பக்கமும் பின்பக்கமும் ஓடு வேய்ந்த பெரிய பங்களா. என் சிறுவயதில் கோடை விடுமுறையில் அங்கு வந்து தங்கியதுண்டு. மழையோ வெயிலோ வீட்டு வாசலில் பூட்டு-குடை ரிப்பேர் செய்யும் ஒரு கிழவனார் சிறிய டிரங்கு பெட்டியுடன் எப்போதும் அமர்ந்திருப்பார்.

ரோல்ஸ் ராய்ஸ் மாடல் வண்டியைப் பார்த்தாலே அதை 'டப்பா' கார் என்றுதான் என் சிறுவயதில் சொல்லி வந்தேன். கருத்த பச்சை நிறத்தில் உப்பலாக பழைய வண்டியாக இருந்ததுதான் அதற்குக் காரணம். அது விலை மதிப்பான வண்டி என்பது அப்போது எனக்குத் தெரியாது. 'இன்னுமா டப்பா கார் வெச்சிருக்கீங்க?' என்று நான் கேட்க, 'டேய், இது நல்ல ரோல்ஸ் ராய்ஸ் வண்டிடா' என்று அத்தை சொல்வார். கார்ஷெட்டில் டப்பா கார் இருக்க அதன் பின்பக்க சீட்டில் நான் கால்நீட்டிப் படுத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கைகள் பெரிதாக இருந்தது. இன்று அதுபோன்ற டப்பா கார்கள் வின்டேஜ் கார்ஸ் கண்காட்சியாக வருடா வருடம் ஒரு நாள் சாலையில் அணிவகுத்துச் செல்கின்றன.

நாயைக் குளிப்பாட்ட, தோட்டப்பணி செய்ய, கைத்துப்பாக்கியைத் துடைக்க, கார் சுத்தம் செய்ய, கடைக்குச் சென்றுவர, கார்ப்பரேஷன் தண்ணீரை ரிக்ஷாவில் பிளாஸ்டிக் குடங்களில் கொண்டுவர என்று வீட்டுவேலை உதவிக்கென ஒரு காவலர் ஆர்டர்லி பணியில் இருந்தார்.

அண்மையில் அவ்வழியே போகும்போது ஒலி பெருக்கியில் தொழுகை கேட்கவே, சட்டென திரும்பி எதிர்புறம் அந்த பங்களா இருக்கிறதா என்று பார்த்தேன். அது இருந்த சுவடே இல்லை. அவ்விடத்தில் சுமார் பத்து பிளாக்கு அடுக்குமாடி காவலர் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அப்போது என் பழைய நினைவுகள் வந்துபோயின.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக