About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

காரணம் தெரிய 27 வருடங்களானது!

நான் சொல்லும் இப்பதிவு சற்று ஆச்சரியமானதாக இருக்கும். அது 1992-93. கல்லூரி மாணவனாக இருந்தபோது நான் கண்ட கனவைப்பற்றிச் சொல்கிறேன்.
விடியற்காலை கனவில் நான் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னே நின்றுள்ளேன். அவர் பிரம்பு நாற்காலியில் கால் நீட்டி அமர்ந்துள்ளார். அவருக்கு முன்னே தரையில் பழைய டேப்ரிகார்டிங் நாடா சுற்றிக்கொண்டிருக்க அவரை BBCயின் ஒரு நிருபர் பேட்டி காண்கிறார். இந்த ஆங்கிலேயர் கேள்வி கேட்க அதற்குப் பெரியவர் வாய்திறந்து பதில் சொன்னாலும் அது எனக்குக் கேட்கவில்லை. வலது உள்ளங்கையைப் புருவத்தின்மீது குவித்து அதிக ஒளியால் கண்கள் கூசாமல் இருக்க மறைப்பாக வைத்துக்கொண்டு என்னையும் பார்த்தார். ஆனால் அவருடைய குரல் சற்றும் எனக்குக் கேட்கவில்லை. ஆங்கிலேயர்க்கும் கேட்கவில்லை. ஆனால் ஒலிப்பதிவு நாடா சற்றிக் கொண்டிருந்தது. எனக்கு ஒரே தவிப்பு! அவர் சொன்னது எனக்கு ஏற்புடையதாக இருந்து நமக்குக் கேட்கவில்லையோ என்று மன சஞ்சலம். இதுதான் நான் கண்ட கனவு.
அன்று சீக்கிரமே எழுந்து விட்டேன். வீட்டு வாயிலில் அன்றைய ஆங்கிலச் செய்தித்தாள் கிடந்ததை எடுத்து வந்து செய்தித்தாளை முழுதுமாக விரித்துப் பார்க்கும்போது, கீழே ஒரு கட்டம்போட்ட விளம்பரம் இருந்தது. “The Voice of Sankara” Audio release at Narada Gana Sabha என்று அதில் செய்தி இருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி. நாம் கண்ட அந்த பேட்டியின் ஒலிநாடாவோ என்று நினைத்தேன். பிறகு சமயம் கிடைக்கும்போது அதை வாங்கிக் கேட்கவேண்டும் என்று நினைத்து அப்படியே காலம் ஓடியது. பிற்பாடு ‘தெய்வத்தின் குரல்’ புத்தகம் ஒன்றிரண்டை நூலகத்தில் படித்தேன். முழுதுமாக ஆறு பாகங்கள் வாங்கவில்லை.
நேற்று எதேச்சையாக ஒரு மருத்துவரின் பேட்டியைக் கண்டேன். அவர் டாக்டர். பிஸ்வகுமார், நரம்பியல் நிபுணர். இந்திய இராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தவர். மகாசுவாமியின் உடல்நலம் சோதிக்க பிரத்தியேகமாக வரவழைக்கபட்டார். பரமாச்சாரியர்க்கு 97 வது வயதில் ஆரம்ப நிலை ஸ்ட்ரோக் வந்துள்ளதைக் கண்டறிந்து மருந்து கொடுக்கலானார். இது வெளிவட்டத்தில் யாருக்கும் தெரியாமலே இருந்தது. மூப்பின் காரணமாக உடல்நலம் சரியில்லை என்றே நம்பப்பட்டு வந்ததாம். அதன்பின் வாராவாரம் வியாழக்கிழமையில் இவர் சென்னையிலிருந்து காஞ்சி மடத்திற்குச் சென்று அவரைத்தொட்டுப் பார்த்துப் பரிசோதனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார். ஸ்ட்ரோக் வந்ததன் காரணமாக மகாசுவாமியின் குரல்வளை பாதித்திருந்ததால் அவர் தன் 98 முதல் 100வது வயதுவரை அதிகம் பேசாமல் மௌனம் காத்ததையும் டாக்டர் வெளிப்படுத்தினார். அவர் தன் கனகாபிஷேகத்திற்கு முன்பு அவசியம் இருந்தால் மட்டுமே பேசினாராம். 1994 ஆம் ஆண்டு நூறாவது வயதை பூர்த்தி செய்ய நான்கு மாதங்கள் இருக்கும்போது மார்கழி மாதத்தில் சித்தியடைந்தார்.
மஹாதேவ அம்சமாக இருந்தாலும் மனித சரீரத்தின் வினைப்பயனை அனுபவிக்க வேண்டியதுள்ளது என்பதற்கு இவர் உதாரணம். 1993ல் அவர் என் கனவில் பேச முற்பட்டும் அப்பேச்சு எதுவும் எனக்குக் கேட்காமல் போனதன் காரணத்தை இன்று 27 வருடங்கள் கழித்து அறியப்படுத்தினார்! இனி என் மனதில் நெருடல் இல்லை.
Image may contain: one or more people, people standing, beard, eyeglasses and closeup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக