சீன அதிபர் வருகைக்குப்பின் பல்லவன்- காஞ்சி- போதிதர்மர்- பட்டு- கடல்வழி- வர்த்தகம் என எல்லா அம்சங்களும் தூசி தட்டப்பட்டு உயிர்த்தெழுந்து விட்டன. இதுவரை சாதாரண சுற்றுலா தலமாக விளங்கிய தலம் இன்று உலக அளவில் பார்வையைப் பெற்றுள்ளது.
தொலைக்காட்சியில் நேற்று ஒரு நேர்காணல் பார்த்தேன். அதில் ‘போதி தர்மரை சீனாவில் பௌத்த பிக்குகள் போற்றுகிறார்கள். ஏன் தமிழகத்தில் பல்லவ இளவரசரை நாம் கொண்டாடவில்லை?’ என்று அவர் கேட்டார். புறக்கணித்தது இந்துக்களா பௌத்தர்களா? அதற்குச் சரியான விளக்கத்தை ஆன்மிகம் மற்றும் சித்தவியல் கண்ணோட்டத்தில் அவர் தரவில்லை. போதிதர்மரை ஏதோ இங்கே நாம் புறக்கணித்ததுபோல் சொன்னார். சன்மார்க்க இந்துக்கள் தினமும் காஞ்சி விஹாரத்திற்குப்போய் புத்தரையும் போதிதர்மரையும் போற்றுவதற்கு எந்த அவசியமுமில்லை. சைவமும் வைணவமும் தழைத்த ‘நகரேஷு காஞ்சியில்’ பௌத்தமும் வேரூன்றியது. அவையவை அதனதன் மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தது. காஞ்சியில் பல்லாயிரக்கணக்கான பிக்குகள் விஹாரத்தில் தங்கியுள்ளனர் என்று அன்றே யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பில் எழுதியிருந்தார்.
சீன நாகரிகம் பற்றிய நூலில் நான் படித்தபோது பௌத்த மார்க்கத்தின் உட்பிரிவான தாவோ மதம் நிறுவிய லவோசு மற்றும் குரு கன்பூசியஸ் பற்றி விளக்கம் உள்ளது. அந்த லவோசு @ போயாங் நம் சித்தர் போகர் தான் என்பதை அவர்கள் அறியார். லவோசு இதுவரை பதிமூன்று பிறவிகள் எடுத்ததாகச் சீன வரலாற்றுப் பக்கங்கள் சொல்கின்றன. ‘பரங்கியர் தேசத்தில் பன்னிரெண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்தேன்’ என்று போகர் சொன்னபோது அது கிமு 5ம் நூற்றாண்டு. பதிமூன்றாம் ஜெனனமாக போகர் அங்கே லாவோசுவாக இருக்கும்போதுதான் நாட்டைவிட்டே வெளியேறி சீனப்பெருஞ்சுவரைத் தாண்டி மேருவிற்கு நிரந்தரமாக வந்தார். இன்றும் அதே சீனராகாவே சமாதியில் உள்ளார். ஆனால் இந்த புத்தவர்ம பல்லவன் @ போதிதர்மர் இங்கிருந்து போனதே கிபி 5-6 நூற்றாண்டில்தான். பின்னாளில் சீனாவில் ஜென் தத்துவ ஞானியானார்.
இத்தனை உண்மைகள் தெரிந்தும் பழனியில் போகரை நாம் கொண்டாடுவதைப்போல் லாவோசுவைக் கொண்டாடுவதில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஆதிபுத்தரை கண்ட காலாங்கியின் சீடர் போகரை வேறு விதமாக நாம் பார்க்கவில்லை. அவர் தானேதான் நபி இயேசு என்று உரைத்தும் நாம் ஏற்பதற்கில்லை. ஏன்? நம்முடைய கலாச்சாரம் பண்பாடு சிவபக்தி சித்தநெறி அடிப்படையில் என்ன தகுமோ அதன்படிதான் வழிபடுகிறோம். இதில் ஒரு தவறுமில்லை. இங்கே புதிதாய் என் பதிவுகளைப் படிப்போர்க்கு நான் மேலே சொன்னது விளங்குமா என்பது தெரியவில்லை. தேவாரம் பாடியவர்களும் சமண/பௌத்த மதத்தை ஏற்கவில்லை. இதுபற்றிய குறிப்புகள் அதில் நிறைய உள்ளது.
திருமழிசையிலுள்ள மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் பிரதோஷ வேளையில் முன் எப்போதோ சென்றிருந்தேன். அங்கே பூஜைகள் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்வரை திரை மூடியிருந்தது. திரை விலகும்வரை அங்கே உத்தரத்திலும் இண்டுயிடுக்கு உயர் தூண்களிலும் என் பார்வையை மேயவிட்டுக் கொண்டிருந்தபோது. அங்கே மேலே பிள்ளையாருக்குப் பக்கத்தில் புத்தர் சிலைகள் இருந்ததைக் கண்டேன். அதற்கு யாரும் பிரத்யேகமாய் மஞ்சள் குங்குமம் பூசி வஸ்திரம் சாற்றி வழிபடவில்லை. புத்தர் சிற்பம் கருவறையில் மூலவராக இல்லாமல் அது அதுவாகவே உள்ளது. அவ்வளவுதான்! படத்தில் நீங்கள் பார்ப்பது காஞ்சியிலுள்ள பழமையான போதிதர்ம புத்த விஹாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக