About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தொடரும் குரு-சீடர் உறவு, பகுதி 1

இன்றைக்கு ஆயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 7- 8 ஆம் நூற்றாண்டில், சீனத்து போகருக்கு 15 முக்கிய சீடர்கள் இருந்தனர் என்றும் அக்குழுவில் அப்போது மிக இளம் வயதான அடியேனும் ஒருவன் என்பதை அறிந்து கொண்டேன். 

பழனிமலை அடிவாரம் அருகாமையில் 'பேக வனம்' என்றதொரு மாபெரும் மூலிகைக் காடு இருந்ததென்றும் அங்கே மூலிகையைப் பறிக்கவும் மருந்துகளை அரைக்கவும் போகர் என்னைப் பணித்தார். அச்சமயம் அருகே இருந்த கல் விழுந்து என் வலது கரத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுவிட்டது.

உடனே போகர் எனக்கு மருந்திட்டு தன் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என தன் பக்கத்திலேயே என்னையும் அமர வைத்துக்கொண்டார். எங்கே போனாலும் அவருடைய இடது கரம் என் வலது கையைப் பற்றியே இருக்குமாம். அப்போது முதல் அவருடைய செல்லக் குழந்தையாக ஆகிவிட்டேன் என்பதும் அறிந்தேன். இப்போதுள்ள என்னுடைய இந்த முகம்தான் அப்போதும் இருந்தது என்றும், தலைமுடி சடையாக முடியாமல் என் முதுகுவரை அவிழ்ந்து இருந்ததாம். அப்படி ஒரு வனம் போகருடைய பெருநூல் பாடல்களில் எங்கேனும் சொல்லப்பட்டுள்ளதா என்பது எனக்கு இப்போது நினைவில் இல்லை.

அதன்பிறகு நான் எடுக்கும் எல்லா மறு பிறவிகளிலும் என் வலது கரத்தில் காயம் ஏற்படுவதும், அந்நேரம் சிகிச்சையளித்து மருந்திட குரு போகர் அக்கணமே வந்து தோன்றுவதும் இன்றுவரை நடந்து வருகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். கையில் காயம் ஏற்பட்டு அது அவரால் குணமாவதும், அதன்பின் சித்த ஆன்மிக ஞானமானது ஓதாமலே என்னுள் வந்து இறங்கிவிடும் என்பதும் காலம் வரும்போது அதுவே வெளிப்படும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

தன்னுடைய எந்த நூலை நான் எழுத வேண்டும் என்று பணிக்கின்றாரோ, அதைத்தான் இதுவரை எழுதியதாகவும், அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை அவரே தீர்த்து வைத்து வழி காட்டுகிறார் என்பதையும் அறிந்துகொண்டேன். சித்த மரபில் நான் பூரண நிலையை அடைந்து உய்வு பெற பிறவிகள் தோறும் அவரே உறுதுணையாய் இருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்து போனேன். 

இதையெல்லாம் ஒரு மூத்த யோகி தன் அருட்பார்வை மூலம் திரையில் ஓடும் படங்களாகப் பார்த்துவிட்டுச் சொன்னார். ஆக பிறவாத நிலையை நம் ஆன்மா எட்டும்வரை விட்டகுறை பயனாக குரு- சீடர் உறவு பிறவிதோறும் தொடர்ந்து வருகிறது. எல்லாம் சிவசித்தம் 🕉️ 🙏 

-எஸ்.சந்திரசேகர்



சனி, 26 ஜூலை, 2025

அரசுப் பள்ளிக்கு எதற்காக?

படத்திலுள்ள செய்தி இன்று கண்ணில் பட்டது. இதைப்பற்றி விமர்சிப்பதா அல்லது பாராட்டிப் புகழ்வதா என்று எனக்குத் தெரியவில்லை. 

மாநிலத்திலுள்ள அரசுப்பள்ளிகளுக்கு நம் கல்வித்துறைதான் எல்லா வசதிகளையும் செய்யவேண்டும். அதற்கான செலவையும் ஏற்கவேண்டும். முன்னாள் மாணவர் பெருத்த நிதியைத் தருகிறார் என்றால் அவரே அப்பள்ளியைத் தத்தெடுத்து நடத்தலாம். இன்னும் சொல்லப்போனால் அவரே எளிமையாக ஒரு பள்ளியை நிறுவி மேல்நிலைவரை இலவசமாகக் கல்வியை வழங்க ஆவன செய்யலாம். முன்னாள் மாணவர்களும் ஊர் மக்களும் சேர்ந்து நிதி திரட்டி அரசுப்பள்ளி/ கல்லூரி வளர்ச்சிக்குத் தர வேண்டும் என்றால் பெயரில் ஏன் அரசு என்ற முன்னொட்டு வரவேண்டும்?

மாநிலங்களவை MP ஒவ்வொருவருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக The Member of Parliament Local Area Development Scheme (MPLADS) ஆண்டுதோறும் ₹5 கோடி வழங்கப்படுகிறது. அதிலிருந்து அரசுப் பள்ளிக்கூடத்திற்கான கட்டுமானம், விரிவாக்கம், நூலகம், அறிவியல் கூடம் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கும் அவ்வப்போது பரிந்துரை செய்து நிதியை வழங்கலாம். 

ஆனால் எவ்வித நிதியுதவி இல்லாமல் நம் கொள்ளுத் தாத்தா காலத்தில் தொடங்கிய எத்தனையோ தரமான நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் இன்று போதிய வசதிகள் இல்லாமல் மூடும் தருவாயில் இயங்கி வருவதைப் பார்க்கிறோம். ('பள்ளிக்கூடம்' திரைப்படம் நினைவுக்கு வருகிறது.) அதுபோன்ற தனியார் பள்ளிகளுக்கும் அதன் பழைய மாணவர்கள் தாராளமாக நிதியுதவி செய்ய முன்வர வேண்டும். புறக்கணிப்பது தவறு!

-எஸ்.சந்திரசேகர்

சனி, 19 ஜூலை, 2025

கதண்டு!

உங்களில் எத்தனை பேர் கதண்டைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. அது குளவி இனத்தை ஒத்ததாகவும் அதைவிட ஆபத்தானதும் ஆகும். இது கட்டும் கூடு மிகவும் அலாதியானது. பார்ப்பதற்கு அவை தேனீ போலவே இருக்கும். இதில் இரண்டு கதண்டுகள் மனிதனைக் கொட்டினால் அவ்வளவுதான்... தீவிர சிகிச்சையில் வைக்க வேண்டும்!

எண்ணிலடங்காத கதண்டுகள் நிறைந்த வனத்தில் சித்தர்கள் பலகாலம் தவம் செய்தது பற்றியும், சீனாவில் கதண்டு மகரிஷியின் ஆசிரமம் பற்றியும் அவர் தனக்கு உபதேசம் தந்தது பற்றியும் போகர் ஏழாயிரத்தில் விவரித்துள்ளார்.

மலைப்பாம்புகள், கதண்டுகள், ராட்சத வெட்டுக்கிளிகள், மற்றும் பல விஷ ஜந்துக்கள் பழனியில் போகர் சமாதியின் சுரங்கப்பாதையில் உள்ளன என்றும் அதன் காரணமாகவே சமாதி குகை வாயிலை நானூறு ஆண்டுகளுக்கு முன் அடைத்ததாக முன்னொரு சமயம் ஸ்ரீ புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்னிடம் பேசும்போது சொன்னார். 

-எஸ்.சந்திரசேகர்






புதன், 23 ஏப்ரல், 2025

தினத்தந்தி, புத்தக மதிப்புரை

உலகப் புத்தக நாளை முன்னிட்டு இன்று ஏப்ரல் 23, 2025 தினத்தந்தி நாளிதழில் வந்த 'ஞானம் தரும் சித்தர் பாடல்கள்' பற்றிய புத்தக மதிப்புரை.



வியாழன், 17 ஏப்ரல், 2025

மந்திரவொலியின் சக்தி!

 “கோயில் கும்பாபிஷேகம் நடக்கப்போகுது இல்ல, யாகசாலையில தினமும் மந்திரங்கள் சொல்லி பூஜை, வேதபாராயணம் நடக்குதாம்.. போய் உக்காந்து பார்த்துட்டு வாங்க” என்று கிராமத்துப் பெரியவர் தன் பேரன்களிடம் சொன்னார்.

“தாத்தா, போர் அடிக்கும்.. பந்தல் முழுக்க ஒரே புகையும் வெக்கையுமா இருக்கும். வேத மந்திரம் எதுவும் புரியாது... அங்கே போய் என்ன செய்ய?” என்று சிறுவர்கள் கேள்வி கேட்டனர்.

“கண்ணுங்களா, அதுல ரொம்ப பெரிய சூட்சுமம் இருக்கு. மந்திரம் புரியாட்டாலும் பரவால்ல. நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப அதைப்பத்தி நம்ம குருக்கள் ஐயாவோட பாட்டனாரு எங்களுக்கு ரகசியம் சொன்னாரு. அது என்னனு சொல்றேன்” என்று விளக்கினார்.

அதாகப்பட்டது, வேத மந்திரங்கள் எல்லாமே ஒவ்வொரு சந்த அளவில் ஏற்ற இறக்கத்துடன் சொல்லும்போது, ஒலி உச்சாடனங்கள் பலவித அதிர்வுகளை எழுப்புகிறது. அதையெல்லாம் உடல் கிரகித்துக்கொண்டு பல அதிர்வலைகளில் திசுக்களைச் சக்தியூட்டியும், நோய்வாய்ப்பட்ட ஆபத்தான திசுக்களை அழித்தும், ஒவ்வொரு ஆறாதாரச் சக்கர மண்டலங்களைச் சுற்றியுள்ள உறுப்புகளில் சக்தி அதிர்வுகளைத் தந்து புதிய திசுக்களை உற்பத்தியாக்கியும் நம் தேகத்தை வலுவாக்குகிறது. 

ரிஷிகள் நமக்களித்த வேதமந்திர உச்சாடனங்களை நம் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ குறைத்தோ இடைவெளி விட்டோ வேறு ஒலி மாற்றியோ சொல்ல விதியில்லை. வேதகோஷம் கேட்பதற்கே இப்படியான பலன் என்றால் ருத்திராட்சம் அணிந்து மந்திரங்களை ஓதுவார்க்குக் கிட்டும் பலன் அளப்பரியது. 


ஆரம்பகால வேத அத்தியயனம் பாடம் நடக்கும்போது மாணவர்கள் கைகளை உயர்த்தி இறக்கி இடம் வலம் அசைத்து ஓதும்போது கைவிரல்களின் கணுவைத் தொட்டு எண்ணிக்கை வைத்துகொள்வது குருகுல முறை. உச்சாடனத்தில் உதாத்த (மேல் நிலை), அநுதாத்த (கீழ்), ஸ்வரித (மத்திமம்), என அசைவுகள் உண்டு. வெவ்வேறு ஸ்தாயி ஸ்வர மாத்திரையில் ஆங்காங்கே இடைவிடாமல் சொல்லும்போது மூச்சுப் பயிற்சியால்  நுரையீரல் கொள்ளளவு மேம்படுவதோடு தேகத்திலுள்ள திசுக்கள் சிறிய நுண்ணணு பேட்டரி மின்கலம்போல் செயல்படும். உச்சந்தலையில் நுண் சிகையானது பிரபஞ்ச ஆற்றலைப் பெற்றுத்தரும். அதனால்தான் மெல்லிய சிறு குடுமிகூட இல்லாமல் கிராப் தலையுடன் வேத மந்திரம் சொல்ல, வேள்விச் சடங்கு நடத்த உட்காரக்கூடாது என்பார்கள்.

மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்கள் புத்துயிர் பெற, பாதம் கெண்டைக்கால் தொடை மார்பு தோள் தலை என அனைத்திலும் நம்மையறியாமலே இலகுவான உணர்வு மேலோங்கும். சித்தர்களும் சக்திவாய்ந்த பீஜங்களை அப்படியே தங்கள் அஷ்டக்ர்ம மந்திரங்களில் சொன்னது குறிப்பிடத்தக்கது. சித்த வைத்தியப்படி ஒரு மண்டலம் பத்தியத்துடன் மருந்து உண்டால் நோய்கள் குணமாகும். அதுபோல் இந்த வேதமந்திர கோஷத்தை ஒரு மண்டலம் (48 நாள்) அமர்ந்து காதுகொடுத்துக் கேட்டாலே நல்ல பலன் கிட்டும். 


சமஸ்கிருத மந்திரம் உசத்தி என்றால், தமிழ் மட்டும் குறைந்ததா? இல்லை! தமிழும் சக்தி வாய்ந்தது. சிவன் உயர்வானவன் என்றால் சக்தியும் அப்படித்தான்! தமிழில் மெல்லினம்/இடையினம் எழுத்துகள் முக்கியமானது. அவ்வொலிகளைக் கன்னாபின்னாவென மாற்றி உச்சரித்துச்சொல்லி வந்தால் ஆபத்தில் முடியும். தமிழ் மொழிதானே என்று அசட்டையாக இருக்கக்கூடாது. நாளடைவில் மரபணு கட்டமைப்பில் கோளாறு வரும், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். அந்தந்த ஒலி அதிர்வுகள் சம்பந்தப்பட்ட ஆறாதாரச்சக்கர உறுப்புகள் பலதும் நோய்வாய்ப்பட்டுப் பாதிக்கப்படுவது உறுதி. இக்காலத்தில் பலரும் இதை உணர்ந்து கொண்டதாய்த் தெரியவில்லை.

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

சங்கிலி ஜாலம்!

பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சங்கிலியை வெறும் கையாலேயே எப்படிப் பிடிக்க முடியும்? அது சாமி வந்திறங்கி நடத்தும் தெய்வச் செயல்; அல்லது ஏதோ மாயா ஜாலம் வித்தை மூலம் நடப்பது.

தன் குரு காலாங்கி நாதர் சொல்லித்தந்த சங்கிலி ஜாலம் பற்றி ஆறாம் காண்டத்தில் (பாடல் 154 - 156) போகர் விவரிக்கிறார். தவளை உடும்பு மற்றும் ஏதாவது ஒரு விலங்கின் கொழுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் கலந்து சிறு துளைகளிட்ட பானையில் ஊற்றிக்கொண்டு குழித்தைலம் சேகரித்து இறக்க வேண்டும்.

முழு உள்ளங்கை மற்றும் விரல்களிலும் இந்த நெய்யைச் பூசிக்கொண்டு அந்தச் சூடான சிவந்த சங்கிலியை வெறும் கைகளால் பிடித்துக்கொண்டு இழுத்து உருவினாலும், அக்கைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்று போகர் சொல்கிறார்.

காணொளியில் நான் பார்த்தது கோயில் வளாகத்தில் நடந்தது. சிவந்த சங்கிலி மேல் விபூதியைத் தெளித்தபின் பிடித்து உருவுகிறார். கையில் நெய் எதையும் பூசிக்கொள்ளவில்லை. ஆகவே தெய்வச் செயலாகப் பார்க்கவேண்டும். ஆனால் இச்செயலைப் பார்ப்பவர்கள் இது பலே உருட்டு சுருட்டு, மூடநம்பிக்கையின் உச்சம் என்று கிண்டலடிப்பார்கள். 

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 13 மார்ச், 2025

பெரும் பேறு!

வார்க்கவே பரிபூரண விநாயகர் பாதம்

   வினையகல வளமாகத் துணைபுரியும்

தீர்க்கமாய் உரைக்க அமர்ந்த பெரியவரே

  தோன்றி விளக்கிய இரெட்டியப்பட்டியரே

பார்க்கவே கருணையருள் கண்களுடன்

   பரம்பொருளாய் நிலைத்த சித்தபுருடரே

மார்க்கமாய் அருட்சட்டம் உபதேசித்தவரே

  மறுபிறவி அறுக்கும் ரகசியம் தந்தவரே


சேர்க்கவே நன்னெறி புண்ணியங்கள்

   சீர்மிகு அடியார்கள் வாழ்க்கையிலீட்ட

கோர்க்கவே மலர்களைக் கண்ணியாய்க்

   கடமையும் பக்தியும் இணைத்திருக்க

ஈர்க்கவே பாடல்களும் பரவசமேலோங்க

   இயம்பிடும் தத்துவமும் விண்ணப்பமும்

தீர்க்கவே சங்கடமகல விடியலில் நீராடி

   தியானிப்போம் ஆண்டவர் சரணத்தை!


-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 2 மார்ச், 2025

பயன்பட வேண்டும்!

படிக்கலைனாலும் வாங்கி வைக்கணுமா? எதற்கு? அது நாளடைவில் பொலிவிழந்து மக்கிய வாசம் வந்து தூசியில் கிடக்கும். நண்பர்களோ உறவினர்களோ வந்து வாசிக்கக் கேட்டால் உடனே அதை இரவல் கொடுக்கத் தயங்குவார்கள். ஏனென்றால் புத்தகங்கள் வெளிச்சுற்றுக்குப் போனால் திரும்பி வராது என்ற நம்பிக்கை. 😀

பணம் கொடுத்து வாங்கியது தனக்கும் பயன்படாமல் பிறர்க்கும் பயன் தராமல் ஒரு தலைமுறைக்குப் பூட்டியே இருப்பது விரயம். ஒவ்வொரு வீட்டிலும் "என்றாவது பின்னாடி தேவைப்படும்... இருக்கட்டும்.." என்று சொல்லியே பல உபகரணங்கள் பிசுக்குப் படிந்து சீண்டுவாரின்றிக் கிடக்கும். அப்படியொன்று இருப்பதே நாளடைவில் மறந்து போகும். 

புத்தகம் வாங்கப் போதிய வசதி இல்லாமல் ஏங்குபவர்கள் ஒருபுறம், பெருமைக்கு வாங்கி அதை வாசிக்காமல் பாதுகாப்பவர்கள் இன்னொருபுறம். இந்தப் போக்கை என்னவென்று சொல்ல? 

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது Ali Baba and the Forty Thieves கதை புத்தகம் வகுப்பு நூலக அடுக்கில் ஒன்றுதான் இருந்தது. அதை ஒவ்வொரு மாணவனும் இரண்டு நாள்வரை வைத்துக்கொண்டு வாசித்துவிட்டுத் தர அனுமதியுண்டு. முப்பது மாணவர்களின் கைகளில் புரண்டு இரண்டு மாதங்கள் கழித்து வரும்போது அதில் சோறு போட்டு ஒட்டிய பக்கங்கள், ஆங்காங்கே குறுக்கு நெடுக்காகத் துண்டுக்காகிதப் பிளாஸ்திரியுடன் டிங்கரிங் செய்யப்பட்டு அலங்கோலமாய் வரும். கடைசி பக்கத்தில் 'வண்ணானுக்கு பாக்கி 2.50, குப்புசாமி விலாசம், குழந்தையின் abcd கிறுக்கல்கள்' என சகலமும் இருக்கும். 😂 அதெல்லாம் ஒரு காலம்!

நல்ல நிலையில் பொருளோ புத்தகமோ பயன்படாமல் வெகுகாலமாக உங்களிடம் இருந்தால் யாருக்கேனும் கொடுத்து விடுவதே உத்தமம்.👌

-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சித்து விளையாட்டு

வடக்கே இருக்கும் தாஜ்மஹாலை, தெற்கே பழனியில் கலைக்கல்லூரியின் மைதானத்தில் இடம் மாற்றி வைத்து ஒரு சித்து விளையாட்டு நிகழ்த்திக் காட்டினால் எப்படி இருக்கும்? 😳 

1979இல் எம்ஜிஆர் ஆட்சி நடந்தபோது ஸ்ரீ மானூர் சுவாமிகளின் சீடரான தவத்திரு பழனி தங்கவேல் சுவாமிகள் இந்தவொரு விண்ணப்பத்தை வைத்தார். ஆனால் மத நல்லிணக்கம் குலையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அது வழிவகுக்கும் என்று இராம வீரப்பன் ஆலோசனையின் பேரில் சுவாமிகளுடைய இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த விபரத்தை எனக்கு 2004 ஆம் ஆண்டு அவருடைய துணைவியார் சொன்னார். ஐயா அவர்கள் கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகளைத் தன் வீட்டில் ஏழாண்டுகள் வைத்துப் பராமரித்தார்.

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

இராவண சம்காரம் ஆயிற்றா?

 முருகனை ஏற்கும் தமிழர்கள் சிலர் இராமனை ஏற்பதில்லை. இராமனோ/சேதுவோ எதுவுமே உண்மையில்லை என்று எல்லாம் தெரிந்ததுபோல் வாதிடுவார்கள். முருகனின் படைவீடுள்ள பழனியின் திண்டுக்கல் மாவட்டமானது இராமாவாதரம் உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது. எப்போது, எப்படி?

அது 1935-40 இடைப்பட்ட காலம். பழனி ஸ்ரீதங்கவேல் சுவாமிகள் சிறுவனாக இருந்தபோது தான் பார்த்ததை விவரிக்கிறார். தன் அப்பா பெருமாள்சாமி, தாத்தா கர்ணபெருமாள் ஆகியோருடன் இவர் புஷ்பத்தூர் அருகே ஒரு கிராமத்திற்குப் போய் வரும்போது அங்கே புகை வண்டிக்கான தண்டவாளம் அமைக்குப் பணிகள் நடைபெற்று வந்தன. இவர்கள் அங்கே கடக்கும்போது பணியில் ஈடுபட்டிருந்த மேஸ்த்ரி “ஐயா, இங்கே ஏதோ சதுரபலகை மாதிரி பெரிய கல்லு இருக்கு. அதுல பொக்கிஷம் இருக்குமோ.. பாண்டியன் காலத்துதா இருக்கும்போல” என்று சொல்லிக்கொண்டே அதை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். சுவாமிகளின் அப்பாவும் தாத்தாவும் உதவி செய்ய, கடப்பாரையைக் கொண்டு அதைச் சிரமப்பட்டு நகர்த்தி வைத்தனர்.

உள்ளிருந்து கமகம நறுமணப் புகை மேலே வீசியது. பள்ளம் உள்ளே எட்டிப்பார்த்த இவர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஒரு சித்தபுருஷர் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். தலைமுடி ஜடாமுடியாய் வளர்ந்து அவிழ்ந்து பரவிக்கிடக்க, கை நகங்கள் எல்லாம் வேர்கள்போல் வளர்ந்து பூமிக்குள் ஊடுருவிப் போயிருந்தது. அவருக்கு முன்னே இரண்டு தீபங்கள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன.

அது மதிய வேளை. சில நிமிடங்களில் வெய்யில் அவர்மீது பட்டதும் கண்களைத் திறந்து தலையைத் தூக்கிப் பார்த்துள்ளார். “என்ன இராவண சங்காரம் முடிந்துவிட்டதா?” என்று அவர் கேட்டுள்ளார். இவர்களுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்துள்ளனர். “சாமி, நீங்க என்ன கேக்கறீங்கனு விளங்கலை” என்று தாத்தா சொன்னார். “ஓஹோ, கலியுகம் பிறந்துட்டுதா” என்றார். யாரும் பதில் சொல்லாமல் திகைத்துப் பார்க்கும்போது, கைகளைக் கோர்த்து அவர் தியானத்தில் மீண்டும் கண்ணை மூடினார். மூன்று நிமிடத்திற்குப் பிறகு தீபங்கள் மறைந்தன, அதன்பின் மூன்று நிமிடத்தில் சித்தபுருஷரே மறைந்து போய்விட்டார்.

அவர் அமர்ந்திருந்த இடத்தில் விபூதியைப்போல் வெள்ளைவெளேர் என்று மணல் இருந்தது. தாத்தா செய்வதறியாது தன் மேல்துண்டைக் கழட்டி கீழே குனிந்து மணலை அள்ளி முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்களாம். மேஸ்திரி உட்பட மக்கள் பலரும் கைநிறைய எடுத்துக் கொண்டார்கள். வெள்ளிமணல் பழனி அருங்காட்சியத்தில் உள்ளதாம்.

இராவண சம்காரம் முடிந்துவிட்டதா என்று கேட்டதைப் பார்த்தால்... அவர் இராமாவதாரம் காலம் முதலே பல லட்சம் வருடங்களாக அங்கே சமாதியில் இருக்கும் சித்தபுருஷர் என்பது தெரிகிறது. இத்தனைக் காலங்கள் ஆகாரம்/தண்ணீர் இல்லாமல் அங்கே தவத்தில் இருக்க முடிந்தது என்பது உச்சநிலை. அவர்கள் ஜீவனை பிரம்மத்தில் வைத்து ஜீவகர்ப்ப யோகத்தில் இருந்துள்ளனர். இராமனின் தாய் கோசலை தன் மகனைக் காக்குமாறு முருகனை வேண்டிக்கொண்டு அனுப்பினாள் என்று வால்மீகி கூறுகிறார். ஆக இன்னும் பழனியின் சுற்றுவட்டார பகுதியில் சித்தபுருஷர்கள் யோகசமாதியில் இருக்கவும் சாத்தியமுண்டு. 

தங்கவேல் சுவாமிகள் சமாதியாகி இன்றைக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. “வருங்காலத்தில் உலகப்பிரசித்தமாகும் சித்த நூல்களை நீ எழுதப்போகிறாய். அதை எழுதத் தேவையான ஞானம் அதுவாக உன்னுள் வந்திறங்கும்” என்று அன்றே என்னைப்பற்றி அவர் சொன்னார்.  அதன்பின் பத்தாண்டுகள் கழித்து 2013இல் 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' விளக்கவுரை எழுதினேன். சுவாமிகளின் குருநாதர்தான் தவத்திரு மானூர் சுவாமிகள்.  

-எஸ்.சந்திரசேகர்