இன்று முகநூலில் சித்தர் தரிசனம் பற்றிய ஒரு பதிவை நான் காண நேர்ந்தது. "மறைந்த சித்தர்கள் தோன்றுவது மாயையே..." என்ற ரீதியில் ஆன்மிக பெரியவர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அஃதாவது :
'ஸ்தூலத்தை விட்டு பிரிந்து, இறைவனோடு இரண்டறக் கலந்து மறைந்த சித்தர்கள் மீண்டும் உடலோடு தோன்றுவதில்லை. அப்படி தோன்றுவது தன் மன மாயையே, நான் சித்தபுருஷரை கண்டேன் என்பது எப்படியெனின், அது தன் ஆழ்ந்த எண்ணத்தின் வாயிலாக உற்று நோக்கின் அது தன்னிடத்தே இருந்து வெளிப்படும் ஆவியின் மாயையே அத்தோற்றத்தை உருவாக்கி மீண்டும் அது தன்னிடத்தே மறைகிறது. நம் அறிவைக் கொண்டு ஸ்தூலத்தோடு வாழும் ஏனைய சித்தர்களை தவிர்த்து, கண்ணிற்கு புலப்படாத சித்தர்களை மனதின் மாயையால் தேடி அலைவது வினோதமான செயலாகும். கறந்த பால் முலை புகா,உதிர்ந்த காய் மரம் புகா, என்பது சித்தர் வாக்கு. -இறையருள்-" இதுதான் அந்தப் பதிவு.
சித்தர்கள் பலர் தேகம் அழியாமலிருக்க காயகற்பம் உண்டு இன்றளவும் சமாதியில் இருக்கின்றனர். எல்லா சித்தர்களும் உடலை துறந்துவிட்டனர் என்று கொள்வதற்கில்லை என்று போகரே உரைக்கிறார். ஏனையோர் தங்கள் பணி முடிந்ததும் மண்ணாகிப் போனாரே என்று விவரித்துள்ளார். ஈசனின் மலரடியைத் தழுவிய அவர்கள் அஷ்டசித்தியுடனே என்றென்றும் நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு மறுபிறப்பில்லை. இதைத்தான் சிவவாக்கியர் 'கரந்த பால் முலை புகா, மறுபிறப்பில்லை, இல்லையே ' என்று சொல்கிறார். அவர்கள் சம ஆதிநிலையில் சிவவுணர்வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஸ்தூல உடலோடு தோன்றி நமக்கு தரிசனம் தர அவர்கள் மறுபிறப்பு எடுக்க வேண்டியதே இல்லை. அவர்கள் முற்று பெற்ற சித்தர்கள்.
நமக்குள் இருந்து வெளிப்படும் நம் ஆவிதான் சித்தராக அங்கே வெளிப்படுகிறது என்றால் எந்த பிரயத்தனமும் இல்லாமல் அஷ்டசித்தி நமக்கு கைகூடிவிடுமே ! சுயம் அறிந்து நாமே பரபிரம்மமாகி பிரபஞ்சத்தில் ஐந்தொழில் நடத்திட முடியுமே! இது சித்தநெறிக்கு தகுமா? நாமே ஈசனாகி விட்டால் நாம் செய்யும் பாவங்கள் நம்மை அண்டாது. ஞாயம்தானே? ஆனால் அப்படியா நடக்கிறது? ஒரு பணி நிமித்தமாக ஒரு அலுவலகத்திற்கு செல்கிறோம். அங்கே Lift பொத்தானை அழுத்திவிட்டு காத்திருக்கிறோம். கதவு திறக்கிறது உள்ளே அகத்தியரும் ராகவேந்திரரும் நம்மை உள்ளே அழைக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். அது நாம்தானே என்று அலட்சியப்படுத்த முடியுமா? சற்றும் அவர்களிபற்றி சிந்திக்காத வேளையில் அவர்கள் நம்மோடு ஏன் வரவேண்டும்? அது நம்முடைய சாயா புருஷ தரிசனம் அல்லவே? நாம் அவர்களாக இருக்க நாம் ஏன் பொருள்தேடும் வாழ்க்கை வாழ்கிறோம்?
சந்திரரேகை நூலில் (பா-65) கோரக்கர் குண்டா பாறையில் படத்திலுள்ள மந்திரத்தை யாரொருவர் சந்திரகலையில் மூச்சை இருத்தி ஓதி, யந்திரத்தை தகட்டில் கீறி கையில் வைத்துகொண்டு ஜெபித்தாலும் தான் காட்சி தருவதாக கோரக்க சித்தர் சொல்லியுள்ளார். மூத்த சித்தர்களான அகத்தியர் திருமூலர் புஜண்டர் காலாங்கி போகர் கோரக்கர் போன்ற பலரும் தரிசனம் தருவதைப் பற்றி உரைத்துள்ளனர். மேலே ஐயா அவர்கள் கூற்றுப்படி பார்த்தல் "அத்தனை சித்தர்களும் என்னுள் இருக்கிறார்கள் என்பதால், நான் அவனாகி விட்டதால், நான் ஏன் சித்த தரிசனம் தேடிப்போக வேண்டும்? நானும் அவன் அந்தஸ்த்தில் இருக்கிறேன் தானே?" என்ற எண்ணம் நம்முள் எழும். நம் எல்லோருக்குள்ளும் சிவனே சீவனாய் இருப்பதால் நாமே சிவம் ஆகிவிட முடியுமா? எல்லோரும் 'அஹம் பிரம்மாஸ்மி' என்று சொல்லிட முடியுமா? அதை உணரவும் வெளிக்காட்டவும் ஒரு நிலை வேண்டும் அல்லவா?
கிருஷ்ணர் யசோதைக்கு தன்னுள் இருக்கும் அனைத்தையும் காட்டியது போல சகலமும் என்னுளே இருப்பதும் மெய், பலவிதமாய் வெளிப்புறத்தில் காண்பதும் மாயை. அகத்தில் உள்ள இந்த பரமவொளியை கண்ணுற்றால் புலப்படும். இது எல்லோருக்கும் தெரியுமா? நம் சிரசே கைலாசம், சுழுமுனையே மேருமலை. வாசியை உணரவைத்து அந்த நிலைக்கு இட்டுச் செல்வது பரபிரம்மத்தின் செயல். நம் ஆவிதான் வெளியே சித்தராக வெளிப்படுகிறது என்றால் நாம் அற்ப மனிதர்கள் அல்ல! நாம் எல்லோரும் அஷ்டசித்தி பெற்ற சித்தர்களே! சதுரகிரியை நாடிப்போகத் தேவையில்லை அல்லவா? இது உண்மை என்றால் நாம் வாழ்வது பாபங்கள் மண்டிக்கிடக்கும் கலியுகம் அல்ல. உயர்தர்மம் பேணும் கிருத யுகத்தில்.
- எஸ். சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக