சித்தர்கள் தங்கள் பாடல்களில் ஒருவன் பாவங்கள் செய்யாது தவ நிலையில் பக்தியில் இலயிக்க வேண்டும் என்றும் , எந்த வம்பு-தும்புக்கும் போகக் கூடாது என்றும் சொல்கிறார்கள். அதுபோல் என்னென்ன செயல்கள் எல்லாம் பாவங்களில் வரும் என்ற ஒரு நீண்ட பட்டியலை போகர், கோரக்கர் முதலான சித்தர்கள் சொல்லியுள்ளார்கள்.
உங்கள் வளர்ச்சியில் யாரேனும் குறுக்கீடு செய்து உங்களை தாழ்த்த நினைப்பது, மேலதிகாரி உங்களை ஏய்ப்பது, உங்களுடைய உழைப்பை வேறு ஒருவர் தன்னுடையது என்பது, புறம்பேசுவது, உங்களுடைய பொருளை அபகரிக்க நினைப்பது, உங்களை அடிமையாக்கிட பல் வேலைகள் செய்வது, வசியப் படுத்தி அடிமையாக்குவது, வேண்டுமென்றே மாந்திரீகம் வைப்பது, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் குடும்பத்தை குலைக்க நினைப்பது, கீழ்த்தரமாக மனம் புண்பட கடிந்து பேசுவது, என்று பல தினுசான பாவங்கள் நீண்ட வரிசையில் போகிறது.
இதெல்லாம் ஒருவருக்கு ஊழ்வினைப் பயனாகவே ஒவ்வொரு பிறவியிலும் ஏதோ ரூபத்தில் துரத்துகிறது என்பதற்காக நடக்கும் அநீதிகளை பேசாமல் பார்த்துக் கொண்டு இருக்க இயலுமா? பதிலுக்கு நாம் நேர்முகமாக/மறைமுகமாக போராடி அவர்களை துவம்சம் செய்வது எந்த வகை பாவத்தைச் சேர்ந்ததாக இருக்கும்? ஒருவர் நமக்கு தீங்கு தராதவரை யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சித்தர்கள் கருதொழில் காண்டங்களில் சிறப்புறச் சொல்லியுள்ளனர். அப்படியும் மீறி செய்பவர்களை என்ன வகையில் எல்லாம் தாக்கி செயலிழக்க வைக்கலாம் என்பதையும் தகடு மந்திரம் இத்யாதி வழிகளை உபாயமாக சொல்லியுள்ளனர். அவர்கள் சொல்வதையும் நம்பாதோர் பலருண்டு.
'செய்வினையாவது செயப்பாட்டுவினையாவது... இதெல்லாம் போயி நம்பிகிட்டு..' என்று சிலருக்கு முற்போக்காக மூளைச்சலவை செய்துவிட்டு, பிற்பாடு அவர்களே அந்த அப்பிராணி நபர்களுக்கு கருதொழில் மூலம் நசுக்க முற்படுவதையும் பார்த்துள்ளேன். இது என்ன பிழைப்பு? இது போன்றவர்களை, ஸ்தம்பனம் மாரணம் பேதனம் ஆக்ரூஷணம் வித்வேடனம் உச்சாடனம் மூலம் தாக்கி படுக்க வைக்கமுடியும் என்பது பாடல்களில் தெளிவாக உரைத்துள்ளார்கள். ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் தாக்கீடு செயக்கூடாது. எதிர் தாக்குதல் தரும்போது எந்த சேதாரமும் நிகழாமலா இருக்கும்?
ஆக, அது மீண்டும் ஒரு பாவச்சுற்றுக்குள் ஒருவனை தள்ளிவிடும்... இப்படியாக பழிதீர்க்கும் பிறவிப் பயணங்கள் ஜோராக ஓடுகிறது... வீடுபேறு அடையும் வரை. எத்தனை தொல்லைகள் வந்தாலும் இறைவனின் பாதங்களைப் பற்றியபடி 'அபயம் தா' என்று சொல்லிக் கொண்டே இருப்பதும் ஒரு அளவுக்குமேல் முடுயுமா? எதிராளியை ஒரு கைபார்க்க மனம் கடுங்கோபத்தில் விழையும். இப்படி நிலை மறந்து பாவம் செய்வோமா என்பதும் ஈசனின் சோதனையாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஆசை, பொறாமை, கோபம், வெறி எல்லாம் கடந்து இறுதியில் 'தன்வினை பிறவினை எதிர்வினை' என்று எல்லா வினை வகைகளும் பாவ இலக்கணம் நடத்தும்.
இன்னும் சிலர் மறுபிறப்பு என்ற கான்செப்ட் இல்லை என்று வாதாடுவார்கள். அப்படி என்றால் நாம் பிறக்க வேண்டாமே! காரணமின்றி அல்லல்பட வேண்டாமே! மறு ஜென்மம் இல்லை என்றால் ஊழ்வினை, இம்மை மறுமை, வீடுபேறு என்று ஔவை, வள்ளுவர் மற்றும் பலர் சொன்னது அப்பட்டமான பொய் என ஆகுமே... தவறு செய்த அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கிறோம்... அதையே ஆன்மாவுக்கு ஈசன் கொடுத்தால் அதை ஏற்க முடிவதில்லை. அவனையே திட்டுகிறோம்.
அந்த ஜென்மத்தின் பாவச்செயல்களுக்கான தீர்க்கப்படாத எஞ்சிய தண்டனை அடுத்த பிறவிக்குப் போய் சேருவதுதான் இத்தனைக்கும் காரணம். 'ஆன்மாவுக்கான தண்டனை எல்லாவற்றையும் பைசல் பண்ணிக்கொண்டு உடலை போக்க வேண்டியதுதானே, அதற்குள் தர்ம தேவனுக்கு என்ன அவசரம்... எதற்கு மறுபிறப்பில் சொல்லொண்ணா வேதனை? நம்மை யாரும் துன்புறுத்தாமல், நமக்கு கேடு தராமலும் இருக்கவேண்டும். மீண்டும் ஒவ்வொரு சுற்றிலும் நாம் பழிதீர்க்காதவாறு நமக்கு சுற்றமும் நட்பும் வாய்க்க வேண்டும். இரு கை அடித்தல்தானே ஓசை வரும். நம்மை இம்சிக்காத துரோகம் செய்யாத தக்க சுற்றங்களையும் சகவாசங்களையும் அளிக்கவேண்டும். அது ஈசனின் பொறுப்பு! நாம் கலங்கிய ஓடையில் தெளிந்த நீர்போல் இருக்கமுடியாதுதான், ஆனால் அப்படி இருக்க அவனருளும், அப்படி தொல்லையில்லாதொரு பிறவி பிராப்தமும் வாய்க்கவேண்டும். கலியுகத்தில் பெரிய யாகமோ பூசைகளோ வேண்டாம், 'நாம ஜெபம்' செய்தாலே நற்கதி கிட்டும். மகான்கள் அருளிய மந்திரங்களை எப்போதும் சொல்லிக்கொண்டே உரு ஏற்றி நம் ஆன்ம பலத்தை வலிமையாக்கிட வேண்டும்.
போன பிறவியில் தவறு இழைத்து தீங்கு செய்தது இந்த உடல் இல்லைதான், ஆனால் அதனுள் இருந்த ஆன்ம லேசுப்பட்டது இல்லை அதனால் அதற்குத்தான் தண்டனை... இதன் காரணமாக அந்த ஆன்மா குடியிருக்கும் தற்போதைய தேகத்திற்கு இன்னல்கள் வருகிறது. இதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமறிந்து இப்பிறவியில் பழி- பாவம் செய்யாத நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் விருப்பபடியா ஆன்மாவிற்கு புது தேகம் கிடைக்கிறது? நடக்கும் எல்லாவற்றையும் ஈசன்தான் தீர்மானிக்கிறான். மனதால் உடலால் நாம் செய்யும் பாவங்கள் ஆன்மாவையே பற்றும். இவ்வான்மா பல லட்ச தேகங்களில் குடியிருந்தபின் அவை புதைந்தும் எரிந்தும் அழிந்ததைப் பார்த்த ஒரே சாட்சி. வீடுபேறு கிட்டும்வரை அதற்கு அலுப்பில்லை போல. தேகத்தை அதன் கருவியாக இயங்கவைத்து அது செய்யும் அக்கப்போர் கொஞ்சமில்லை! Every action has an equal and oppsite reaction - நியூட்டனின் 3ம் விதியின் படி, 'தீதும் நன்றும் பிறர்தர வாராது' என்பதால் காரணமின்றி துன்பமோ இன்பமோ வருவதில்லை. எல்லாம் நம் கர்மாவின் பிரதி பிம்பம்தான்.
ஆக, தெரிந்தோ தெரியாமலோ கலியுகத்தில் ஒரு சதவிகிதம் கூட பாவம் செய்யாமல் இருக்கமுடியும் என்றால் அவர் மனிதப் பிறவியே அல்ல. அப்படியே ஒரு மனிதன் இத்தனையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்கமுடியும் என்றால் அவன் தெய்வத்திற்கு சமம்.. வையத்துள் போற்றப்படுவார்!
எல்லோருள்ளும் அந்த சதாசிவம் 'பரப்பிரம்மமாக' இருக்கிறார் என்பதை எப்போதும் நினைக்காமல் செயல்படுவதே பாவங்களுக்கு வழிவகுக்கும். ஆகவே முடிந்தவரை தர்மநெறி கடைபிடிக்க முயலுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக