ராஜராஜ சோழனைப் பற்றி இதுவரை ஒரேவிதமான பதிவு மீண்டுமீண்டும் முகநூலில் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் கோயில் மற்றும் அவனுடைய அயல்நாட்டு விஜயம் பற்றிதான் இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் சோழனின் நிர்வாகத் திறன் பற்றியும் பணியாளர்களுக்கு தகுதி நிலைப்படி எப்படி ஊதியம் நிர்ணயம் செய்தான் என்பதைப்பற்றி இங்கே சொல்கிறேன்.
பெரிய கோபுரத்தை ராஜராஜன் கட்டினான். உட்புற விமானம் அவனுடைய தளபதி பிரம்மராயனின் ஆணைப்படி எழுப்பப்பட்டது. ஒட்டு மொத்த பெரிய கோயிலின் நிர்வாகத்தை ஆதித்தன் சூரியன் (எ) தென்னவன் மூவேந்தவேலன் கவனித்தான். கிராமங்களில் வசூலான வரியை சோழன் இந்த கோயில் பராமரிப்பு செலவுக்கே கொடுத்தான். வரி விலக்குப் பெற்ற கிராமங்கள் எவை, எந்த ஊர்கள் பொன்னாக தானியமாக அரசுக்குக் கட்டவேண்டும் என்பதையும் கல்வெட்டில் பொறித்தான். பெரிய கோயிலுக்கு சேவை செய்வோர், கட்டட பணியாளர்கள், உழவர்கள், கலைஞர்கள், மயான காப்பாளர்கள் என்று பலர் வரி விலக்கு பெற்றவர்கள்.
ராஜராஜன் அங்குலவங்குலமா அளவீடு செய்து ஆவணபடுத்தினான். அவனைவிட இந்த land survey பணியை எந்த அரசனாலும் செய்திருக்க முடியாது. உற்பத்தியில் 1/6 (அதாவது 16.65%) வரியாக வாங்கினான். அவன் போட்ட கணக்குப்படி எப்போதுமே தஞ்சையில் மிக அதிகமாக நெல் மகசூல்தான் ஆகியது என்பதும் தெரிகிறது. கோயிலுக்கு கூடுதலாக தரவேண்டும் என்ற அவாவினால் விவசாயிகள் அதற்கேற்ப வளப்படுத்தி உழைத்தனர் என்பதும் தெரிகிறது. கிராமங்கள் 15000 கலம் நெல் அளித்துள்ளது.
பொன், வெள்ளி, வைரம், முத்து, நாணயங்கள் என்று என்னவெல்லாம் தானம் கொடுக்கப்பட்டதோ, அதெல்லாம் வரவு வைக்கப்பட்டு குறிக்கப்பட்டது. கொடுத்தவர் யார், வரி தவிர வேறு எதற்குக் கொடுத்தார் என்பதும், அதில் உடைந்த முத்துகள், சிறிது, பெரிது, தங்கப்பாளம், குந்துமணி, ரவை என்று ஒன்றையும் விடாமல் ஏட்டுக்கணகில் கொண்டு வந்தான். சிலையாக அளித்தால் அதன் அளவு வேலைப்பாடு, கர்க்கள் விவரங்கள் எல்லாமே இருந்தது.
சம்பள ஆவணத்தில் வேத பிராமணர் முதல் கோயிலைப் பெருக்குவோர் வரை பெற்ற ஊதியப் பட்டியலை வைத்துள்ளான். இதை மூன்று விதமாகப் பிரித்தான்.
1) பொது நிர்வாகம் (பொக்கிஷதாரர், கணக்கர், தணிக்கையாளர், கிடங்குவைப்பாளர் ...),
2) கலைஞர்கள் (வேதியர், அர்ச்சகர், பாடுபவர், இசை/நடன கலைஞர்கள் ...)
3) பொது ஊழியர்கள் (காப்பாளர், பெருக்குபவர்கள், தோட்டக்காரர், தையல்காரர், கைவினைஞர்கள், ஐந்தொழிலாளர்கள்..)
இவர்கள் அரசு பணியாளர்களாக வருகிறார்கள். இவர்கள் பணிக்கு சேரும்போது வைத்திருந்த சொத்து விவரம் மற்றும் உறவுக்காரர்களின் சொத்து விவரமும் செப்புப் பட்டய ரிஜிஸ்டரிலும், கல்வெட்டுகளிலும் உள்ளது. நிதி இலாக்கா தலைவர் அதிகப்படியான மாத ஊதியம் பெற்றார் (1600 காசுகள்), அக்கவுண்டன்ட் 600, நடனப் பெண்கள் 800, பாடகர்கள் 1200, வீணை வித்வான் 400, வேதம் ஓதுவோர்/ திருமுறை பாடுவோர் 1200, ஸ்தபதி ராஜராஜ பெருந்தச்சன் 1200, உபச்தபதி 600, அரசவை வண்ணான்/ நாவிதர்/தையல்காரர் 800, என ஊதியம் பெற்றார்கள். அதுபோக ஒவ்வொரு நிலைக்கும் இத்தனை அளவு குருணி/ கலம் நெல் தரப்பட்டது. கோயில் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 100 கலம் படியளந்தான். மற்றவர்களுக்கு இந்த நிதி மேலாளர் /அக்கவுண்டன்ட் ஊதியம் தரவேண்டும். ஆனால் தங்களுடைய ஊதியத்தை தாங்களே எடுக்க முடியாது. அதை அரண்மனையில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். இப்படியாக கெடுபிடிகள் /கிடுக்கிபிடி வழிகளைக் கடைப்பிடித்தான். குறைந்தபட்ச ஊதியம் 400 காசுகள் என்று வைத்திருந்தான். ராஜராஜன் காலத்தில் இருந்த 1 காசுக்கு மூன்று ஆடுகளை வாங்கலாம். இப்படிப்பார்த்தால் சோறுடைத்த சோழ நாட்டில் மக்கள் எல்லோருமே சுபிட்சமாகவே இருந்தது தெரிகிறது.
ஊழியர்கள் நிரந்தர /தற்காலிக பணியை ஏற்க விருப்பமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். நாட்டிய பெண்கள் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி, யோகியஸ்ராக இருந்து கலையை வளர்க்க வேண்டும் என்பது தகுதி. பணியில் இருக்கும்போது ஊழியர் இறந்தால் அவர் பணியை அவரது குடும்பத்தில் தகுதி பெற்ற ஒருவருக்கு வழங்கும் முறையும் இருந்தது. அப்பணிக்கு தகுதி இல்லாதிருந்தால் மாற்று பணி அளிக்கப்பட்டது.
கோயிலுக்கு மொத்தம் 125 செக்யூரிட்டி ஆட்கள் 800 காசுகள் சம்பளத்துடன், தஞ்சைக்குள் போய்வர வண்டிச்சத்தம் பணம் பெற்றனர். ராஜ்ஜியத்து மக்கள் அதிகப்படியான பொன், பொருள், சொத்துகள் இருந்தால் அதை கோவில் உபயோகத்திற்கு தந்து Term Deposit போல் பயன்படுத்தக்கொள்ள திட்டமும் வைத்திருந்தான். அதை தந்தவர்களுக்கு ஆண்டுக்கு 12.50% சதவிகித வட்டியும் தந்தான். அதன்பிறகு அதை உரியவரிடம் திருப்பித தந்தான். பாருங்கள் ராஜராஜனின் நிர்வாகத் திறன் வியக்கும்படி உள்ளது.
இது பற்றிய தன் கட்டுரைகளை எனக்குப் படிக்கக் கொடுத்தும், ஆர்வத்துடன் எனக்கு விளக்கிய தமழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் முனைவர் ஆர்.நாகசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நான் படித்ததை இப்பதிவில் சுருக்கமாகத் தந்தேன்.