About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 15 மார்ச், 2018

மூலிகை கீரைப்பொடி

கறிவேப்பிலை, முருங்கை, பொன்னாங்கண்ணி, கரிசாலை, ஆகியவற்றை ஒரு கைப்பிடி எடுத்து இலைகளையும் இளம்காம்பையும் உருவி ஒரு துணியில் பரப்பிப் போட்டு, அதை வெயிலில் வைத்து துணியால் மூடவும். சாயிந்திரதிற்குள் அது சருகு போல நன்கு காய்ந்து விடும். மிஞ்சிப்போனால் மறுநாள் வைக்கவும். மாடியில் வெயில் படுவதில்லை என்ற நிலை இருந்தால் வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். மிக்சி ஜாரில் இலையை அழுத்தி அழுத்தி வைத்து பொடியாக அரைக்கவும். இல்லாவிட்டால் லேசில் அரைபடாது.
1/2 கப் துவரம் பருப்பு+ 1/2 கப் உளுந்து+ 1/2 ஸ்பூன் மிளகு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து, அதை மிக்ஸியில் போட்டு இந்த இலைப்பொடியும் சேர்த்து, உப்பு போட்டு பொடியாக்கி டப்பாவில் மூடி வைக்கவும். தினம் காலையில் சாப்பாட்டின் போது ஒரு பிடி சுடு சாதத்தில் இந்த கீரைப்பொடி இரண்டு ஸ்பூன் போட்டு, உருக்கிய நெய் விட்டு பிசைந்து இரண்டு கவளம் சாப்பிடவும். அதன்பின் குழம்பு, ரசம், மோர் சாதம் உங்கள் விருப்பம்போல் உண்ணுங்கள். தினம் அத்தனை கீரையும் உண்ட சத்து கிடைக்கும். எங்கள் வீட்டில் அப்படித்தான் செய்கிறோம்.
இதில் கொத்துமல்லி சேர்த்தால் சுவை இருப்பதில்லை, அது பச்சை துவையலுக்குத்தான் சரிப்படும். தனியாக மிளகாய்ப்பொடியுடன் கொத்துமல்லி சேர்த்து பொடியாக்கி இட்லி/தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக உள்ளது. தினம் நெய் ஒரு ஸ்பூன் உருக்கி சாப்பிடுங்கள். அது LDL கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும். HDL நல்ல கொழுப்பை உயர்த்தும்.. நெய் வேண்டாம் என்றால் எள் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். இத்தனையும் செய்து உணவே மருந்தாக உட்கொண்டு வரும்போது மாமிசம் உண்டால், பாடுபட்டு உடலைப் பேணியது வீணாய் போகும். ஏன், மாமிசம் தின்னா குறைஞ்சா போகும்? என்று மல்லுக்கு நிற்போரும் உண்டு.
Image may contain: food

புதன், 14 மார்ச், 2018

மூலிகை சுகப்பிரசவம்

என் நண்பர் ஒருவர் தன் ஊரில் மலையேறும் பழக்கமுள்ளவர். அப்படி ஒரு சமயம் ஆவ்வூர் மலைவாசி ஒருவரின் துணையுடன் தெலுங்கானா அனந்தகிரி வனப்பகுதியைக் கடக்கும்போது அங்கே ஒரு காட்டுவாசி கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டு ஒரு பாறை அருகே தரையில் படுத்து விட்டாராம். அவள் அருகே சில பெரிய குரங்குகள் இங்குமங்கும் ஓடியுள்ளது. அச்சத்தால் இவர்கள் அவளருகே செல்ல முடியாமல் தூரத்தில் இருந்து நடப்பதைப் பார்த்துள்ளனர்.
சற்று நேரத்தில் ஒரு குரங்கு ஏதோ மூலிகைச் செடியைப் பறித்து வந்து இவளுடைய நாசியில் வைத்து தேய்த்தது, இலைகளை கடித்து கசக்கி கருப்பை வாயிலும் தேய்த்ததாம். வேறொன்றும் செய்யவில்லை. சற்று நேரத்தில் அவள் சுகமாய் பிரசவிக்க அக்குழந்தையை அப்படியே தன் புடவையில் கிடத்தி வைக்க சுமார் 1 மணி நேரத்திற்குள் தொப்புள்க்கொடி பலவீனப்பட்டு உதிர்ந்து விழுந்ததாம். நடப்பதை உணர்ந்துக் கொண்ட குரங்குகள் வேலை முடிந்ததும் இடத்தை விட்டு போய்விட்டதாம். அந்த சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முழுதுமாகக் கிடைத்து விட்டது. ஈனும்போது காட்டில் விலங்குகள் என்ன மருத்துவ முறைகள் எல்லாம் கையாள்கிறது என்பது நமக்கு புதிர்தான்.
இவர் அவளிடம் "எந்துக்கம்மா நெப்பி பொத்துலோ அடுவிகி ஓச்சி திரிகாவு? எவரும் தோடு ராலேதா? என்றுள்ளார். அதற்கு அப்பெண் 'கோத்திலூ பிரசவிஞ்சி பெட்டிந்திகா.. நாக்கெந்துக்கு பயம் சாமி..?"
(நண்பர்: "துணைக்கு யாருமில்லாம நீ ஏம்மா தனியா காட்டுப்பகுதில வலி எடுக்குற நேரத்துல வந்தே?" பெண்: "குரங்குங்க பிரசவம் பாத்திடுச்சு இல்ல.. எனக்கு என்ன பயம் சாமி?")
மலைவாசிகள் எப்படி ஆராக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா? நோய் எதிர்ப்பு சக்தி மிக உச்சத்தில் பெற்றுள்ளார்கள். அப்படியும் அவர்களுக்கு நோய்கள் தாக்குவதற்கு என்ன காரணம்? வேறென்ன.... மருந்து போட்டு பயிர்செய்த ரேஷன் அரிசி, தானியங்கள்தான்... ஊருக்குள் வந்து சந்தையில் சில உணவுப் பொருட்களை வாங்கிப்போகிறார்கள் அல்லவா? அதனால்தான் அவர்களுக்கு நோய் வருகிறது. இதைத்தாண்டி வேறு காரணங்கள் புலப்படவில்லை. என் நண்பர் தான் பார்த்ததை சொல்லிச்சொல்லி அதிசயப் படுவார்.

Image may contain: one or more people, people standing, twilight, ocean, sky, outdoor, water and nature

செவ்வாய், 13 மார்ச், 2018

பாரம் தாங்காது பூமி

அன்றாடம் சொல்லொண்ணா குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை இணையத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் பார்க்கிறோம். கலியுகம் எத்தனை கீழ்தரமாகும் என்று பீஷ்மர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. உடலால், வாக்கால், மனதால் மூன்று வகையான பாவங்களை மனிதன் செய்வான் என்கிறார். இனி காலம்போகும் போக்கில் நம்மால் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அனுசரித்து போக இயலுமா? பூமாதேவியால் இனியும் பாவச்சுமை தாங்க இயலாது என்று திருமாலிடம் வேதனைப் படுகிறாள்.
பல தீர்க்கதரிசன வாக்கியங்களின் சூட்சுமம்படி துர்முகி முதல் ஏவிளம்பி வருடம் வரை, இனி வரும் நாட்கள் கவலையளிப்பதாக பெருத்த பேரிடர்கள் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. முடிந்தவரை தர்மநெறி பின்பற்றி இருப்போர் தப்பிப்பார்கள், எஞ்சியோர் பூகம்ப நடுக்கத்திலும், ஊழி நீரிலும் காணாது போவது உறுதி. இறைவனை நோக்கி தியானிப்பது ஒன்றே தீர்வு. செய்த பாவங்களுக்கு கூலியும் தீர்ப்பும் ஏற்கும் மனோபாவம் எத்தனைபேருக்கு உண்டு? தீமையை உண்டாக்கும் கலி புருஷனை எதிர்க்க கல்கி அவதாரம் தன் ஆரம்பகட்ட பணிகளை துவங்குகிறார். விஷ்ணு மூலமாக சிவன் தன் பணியைச் செய்கிறார்.
`வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே'. -- திரு்ஞானசம்பந்தன்
உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த பிரளயக் காலத்தில், சிவபெருமான் 64 கலைகளை உடையாக உடுத்தி, பிரணவத்தை தோணியாக அமைத்து, பார்வதி தேவியுடன் அதில் ஏறினார். அப்போது அந்தத் தோணி 'சீர்காழி' வந்தது. எல்லா இடங்களும் அழிந்த நிலையில், இவ்விடம் மட்டும் அழியாமல் இருப்பதைக் கண்டு, இதுவே மூலத் தலம் என்று அம்பிகையிடம் கூறினார் ஈசன். மேலும் உமாதேவியுடன் இத்தலத்திலேயே தங்கினார். ஈசன் தோணியில் வந்ததால், 'தோணியப்பர்' ஆனார். (படம்: தோணியப்பர் - உமையம்மை)
வீட்டிற்கு ஒரு தோணி வைத்துக் கொள்ள வேண்டிய தருணம் வரும் போல! அதுசரி, தோணி கொடுத்து துடுப்பை மறைத்து வைத்தால்? எல்லாம் ஈசன் செயல்! 'கல்கி போட்ஸ்' கம்பனி ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா? ஹஹஹாஹ்...
Image may contain: one or more people

சக்திவேல் முருகனுக்கு... அரோகரா!

சிக்கலில் முருகன் சக்திவேல் வாங்கி
சூரனை மூன்று தலங்களில் போரிட்டு
திருப்போரூர் பரங்குன்றம் செந்தூரென
விண்ணில் நிலத்தில் கடலில் தாக்கி
திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்து
சூர சம்ஹாரனாக வெற்றியைச் சூடி
பாராட்டிய இந்திரன் வாக்களித்தபடி
பரங்குன்றில் தெய்வானையை மணந்து
ஈசனும் சக்தியும் நந்தியும் விளையாட
ஈரேழு உலகமும் போற்றுமே கந்தசஷ்டி.

கனவில் ஒரு கோவிலின் சுவற்றில் செதுக்கப்பட்ட பாடல்களை வாய்விட்டுப் படிக்கிறேன், அப்போது 'வடுக செந்தூர் வேலாரே' என்று ஈற்றடியோடு ஒரு பாடல் முடிகிறது. அதற்குப்பின் தான் முதன்முதலாக 2007ல் திருப்போரூர் கோவிலுக்கு சென்றேன். இது திருசெந்தூருக்கு இணையான கோவிலாகும். கருவறை முன்பு நின்று முருகனின் மேனியை தொடும் தூரத்தில் நின்று கண் இமைக்காமல் பார்த்து தரிசித்தேன்.
சூரனுடன் விண்ணில் நின்று போரிடும்போது அம்புகள் தாக்கியதால், திருப்போரூர் முருகன் கோவிலில் உள்ள முருகனின் மேனியில் பள்ளம் மேடுமாக புள்ளி புள்ளியாக வடுக்கள் இருக்கும் என்ற விஷயம் அதுவரை எனக்குத் தெரியாமல் இருந்தது. போர் நடந்த அந்த ஊர்தான் 'போரூர்' (எ) 'திருப்போரூர்' ஆனது. சமீபத்தில் வடபழனியில் பாடல் புனைய வைத்த முருகன்,10 ஆண்டுகளுக்கு முன்பே பாடலின் ஈற்றடி உணர்த்தி கோவிலுக்கு வரவழைத்தான். சக்திவேல் முருகனுக்கு அரோகரா!

தமிழும் தாளக்கட்டும்

அது 1975. வாரியார் சுவாமிகள், கவியரசு கண்ணதாசன் ஆகியோரை அடுத்து புலவர் கீரன் சொற்பொழிவுக்கு வந்தார். எண்ணெய் வைத்து அழுத்திப் படிந்து வாரிய தலை, விபூதி பட்டை, குங்குமம், தங்கச்சங்கிலி, ப்ரேஸ்லெட், பட்டுவேட்டி, தோளில் ஒரு தேங்காய்பூ டர்கி டவல் சகிதமாக வருவார். ஒரு கால் சற்றே விந்தி நடந்து வந்தார். என்னைத் தாண்டி இவர்கள் ஒவ்வொருவரும் போகும்போது முழுதும் scan செய்வேன்.
வந்து உட்கார்ந்ததுமே இறை வணக்கம் செய்வார். கணீர் குரல். அவருடைய தமிழ் எனக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சேவலும் மயிலும் படபடவென சிறகடித்தது போலிருந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் தனி வடிவம் தந்து, அழுத்திய உச்சரிப்பு, சரளமான வீச்சு, வார்த்தைகளுக்கு இடையே நிறுத்தற்குறிகள் (punctuation) கூட தெளிவாக யூகிக்க முடிந்தது. தங்கு தடையின்றி தமிழ் கொட்டும். ஒரு நிமிடத்தில் எத்தனை சொற்கள் வந்து விழுமோ தெரியாது. இவர் எப்படித்தான் மனப்பாடம் செய்வார்? என்று மலைத்தேன்.
கச்சியப்ப சிவாச்சாரியாரைப் பற்றி விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது கடகடகுடுகுடு என்று விடாமல் (கந்தபுராணம்) பாடலை வேகமாக ஒப்பித்துக் கொண்டிருந்தார். ஏதோ தகர சக்கரம் பற்றி விளக்கியவர், முருகனே சோழியைக் காட்டி இது சரியே என்று சொன்னதாக கீரன் அவர்கள் சொன்னார். அடிஎடுத்துக் கொடுத்த அவனே, சந்தேகத்தைத் தீர்த்தான் என்றார். ஆறு வயதில் அவ்வளவுதான் எனக்குப் புரிந்தது. அதன் விளக்கத்தைக் கீழே தருகிறேன்.
(வீரசோழியம் இலக்கணப்படி கந்த புராணத்தில் வரும் 'திகட சக்கரச் செம்முக' என்ற முதல் அடியானது, முருகன் பத்து கைகளுடன் விளங்குகிறான் என்பதைக் குறிக்கும். விளங்குகின்ற (திகழ்) + தசக்கரங்கள் (தசக்கரம்) என்பது 'திகட சக்கரம்' என்று புணரும் காரணத்தால் அதை கச்சியப்ப சிவாச்சாரியார் அப்படி எழுதினார். கந்த புராணம் அரங்கேற்றத்தின்போது இச்சொல் இலக்கணப்படி தவறு என்று அவையோர் சொல்ல, அப்போது முருகனே வந்து வீரசோழியம் இலக்கண நூல்படி இது சரியே என்று சொன்னான்.)
அன்று நான் தூங்கவில்லை என்றாலும் பிற்பாடு சாமி ஆடிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் காதில் வாங்கிக்கொண்டேன். அதனால் மனதில் பதிந்தது. அவருக்கு இறுதியில் இரண்டு பழச்சாறு பாட்டில்கள் பரிசாகத் தந்தனர். 'கோடைக் கேற்ற குளிர்பானம்' என்று சொல்லிச் சிரித்தார்.


ஆதிகுடிகளின் தலைவன்

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். ஒரு முறை எங்கள் பகுதியிலுள்ள கோயிலுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவுக்கு வந்தார். உயரமான கனமான தேகம், கச்சம் வைத்து வேட்டி கட்டியிருந்தார், நெற்றி நிறைய உத்தூளனமாக பூசிய விபூதி. கழுத்தில் பெரிய ருத்திராட்ச மாலை, கெளரிசங்கர் சிவலிங்கம் போன்ற தங்கம்-வெள்ளி ஆபரணம். வெகு நிதானமாக நடந்து போன அவரிடம் ஜவ்வாது வாசனை விபூதி கமகமத்தது. கையில் ஒரு விபூதி சுருக்குப்பை மற்றும் துணிப்பையில் வேறு என்னென்னவோ இருந்தது.
அவர் அந்த வாரம் முழுதும் 'கந்த புராணம்' பற்றி நிகழ்த்தினார். ஈசனிடமிருந்து முருகன் தோன்றிய விதத்தையும், முருகனின் பெருமைகளையும் சூரனை எதிர்த்த குணத்தையும் சொல்லிக்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில்...
'முருகன் ஆதி குடிகளின் தலைவன்' 'அது எந்த குடி.. தெரியுமா? என்றார். அங்கே முன் வரிசையில் அமர்ந்திறந்த ஒரு சிறுமி, 'தாத்தா.. சாராயம்' என்றாள்.
'பாப்பா இங்கே வா' என்றார். 'உனக்கு இது எப்படித் தெரியும்?' என்றார். 'எங்க வூட்ல நைனா சொல்லி கேட்டுகிறோம்' என்றாள். அவர் அந்த சிறுமியை இரண்டு வினாடிகள் பார்த்தார், 'இந்தா வாங்கிக்கோ... இதை உங்க அப்பாகிட்ட கொடு... படிக்கச்சொல்லு' என்று சொல்லி, கையடக்கமான சிறிய கந்தபுராணம் -திருப்புகழ் புத்தகத்தைக் கொடுத்தார்.
'அசுரர்கள் விரும்பும் பானங்கள் பற்றி நினைவு படுத்தி இருக்கிறாள்' என்று தமாஷ் செய்தார். நேற்று நடந்ததுபோல் இன்னும் என் நினைவில் உள்ளது.
சமஸ்கிருதம் முறையாகப் பயின்றவர். பன்கலை வித்தகர், வீணை வித்வான். தீவிர முருக பக்தர். பாம்பன் சுவாமிகளே இவர் கனவில் வந்து தீட்சைக் கொடுத்தார். லண்டன் சென்று வரும்போது உடல்நலம் குன்றினார். நவம்பர் 1993ல் ஓரளவுக்கு உடல் தேறியபின் மும்பாயிலிருந்து சென்னைத் திரும்பினார். விமானத்தில் முன்வரிசையில் இவரும் பின் வரிசையில் இவருடன் வந்த தன் சகோதரர் மகனும் மருத்துவரும் இருந்தனர்.
'இப்போது திருத்தணிக்கு மேலே நாம் பறந்து கொண்டிருக்கிறோம்' என்று விமான ஒலி பெருக்கியில் அறிவிப்பு வந்தது. சற்று நேரத்தில் திருமுருக கிருபானந்த வாரியாரின் உயிர் பிரிந்தது.
"வான்வழி பறக்குங்கால் வாரியணைக்க
வயலூரான் காத்திருந்த நல்வேளையில்
தேன்வழி திருப்புகழ் கந்தர் அலங்காரம்
தினமோதி வீடுபேறெய்தினார் வாரியார்
."

Image result for வாரியார் சுவாமிகள் Image may contain: one or more people

வாக்குறுதியை மீறும் ஆன்மா

ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் பாலகனாக இருந்தபோது தன் தாய்க்கு கரு வளரும் 'பிண்டோற்பத்தி' நிலைகளை விளக்குகிறார்.
"இது நீர் குமிழி போலவே 5 நாட்கள் வரை இருக்கும். அதன்பின் 10 நாட்களில் கோழிமுட்டைப் போன்று இருந்து, இரு திங்களில் அது திடப் பிண்டம் நிலையை அடையும். முதலில் தலை உருவாகும், 2ம் மாதம் கை கால்கள், 3ம் மாதம் வயிறு, 4ம் மாதம் மற்ற அவயங்கள் உருவாகி, 5ம் மாதம் பாதமும் விரல்களும், 6ம் மாதம் கண், மூக்கு காது மற்றும் நவ-துவாரங்கள் உருவாகும்”.
“அந்த சதைப்பிண்டத்தில் 7ம் மாதம் தான் ஜீவன் (ஆன்மா) வந்து நுழையும். அதுமுதல் அந்த பிண்டம் தலைகீழாகத் திரும்பும். அது தாயின் உடல்சூடில் இருந்து காத்துக்கொள்ள ஒரு பாதுகாப்பு கவசத்தினுள் இருக்கும். 8-9ம் மாதத்தில் அந்த ஜீவன் தன்னுடைய முற்பிறப்புகளை நினைவு கூர்ந்து கொண்டு, அந்த பனிக்குடத்தினுள் அருவருக்கத்தக்க மூத்திரம் மலம் இருப்பதைப் பார்த்து மனம் வெதும்பும். முந்தய கர்மவினைனால் இப்படி நரகத்தில் வாழும்படி ஆகிவிட்டதே என்று தான் செய்த ஊழ்வினைக்காக ஏங்கி மன்னிப்பு கேட்கும். இந்த பிறவியிலாவது நற்குணத்தோடு வாழ்ந்து தர்ம சிந்தனை நெறியோடு வாழ்வேன் என்று உறுதியளிக்கும். இந்த கருவறை என்ற நரகத்திலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளும்.”
“ஆனால் கருவறைவிட்டு வெளியேவந்து பூமியை முதல் முறைத் தொட்டதும் இவவுலக ஆசைகளின் பிடியில் சிக்கிக்கொண்டு அந்த மாயையில் விழுந்து விடுகிறது. தன் பூர்வ ஜென்ம பாவங்களை மறந்து அறியாமை என்ற இருளில் நிலைக்கிறது”. தன்னால் தனிச்சையாக ஏதும் செய்துகொள்ள இயலாமல் தன் பெற்றோரின் துணையைத் தேடுகிறது. தன் தவிப்பு என்ன என்று சொல்ல முடியாது திண்டாடும். மெல்ல வளர்ந்து ஆளாகியாதும் இந்த மாயை என்னும் கிணற்றில் விழுந்திட, அச்சம்மிகுந்த கருவறையில் இறைவனுக்குச் செய்து தந்த வாக்குறுதியை மீறி அதே தவறுகளைச் செய்ய முற்படுகிறது. இந்த மரணம்-ஜனனம் சுழற்சி சக்கரம் போய்க்கொண்டே இருக்கும்.
வெகு சிலரே பிறப்பின் தாற்பரியம் அறிந்து தெய்வ பக்தி கொண்டு ஒரு குருவை நாடி, சமய தர்ம நெறிகளைப் படித்தறிந்து அதன்படி வாழ்கிறார்கள். அவர்கள்தான் எடுத்த அந்தப் பிறவியோடு ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு, இறந்தபின் மோட்சம் பெற்று இறைவனுடன் கலந்திடுவார்கள்”.
Image may contain: text

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!


*இலக்கம் #18. இது என் மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்து வீடு. சுமார் 120 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டது. இன்று எங்களுடையது இல்லை.
*அப்போது இந்த வெள்ளைச் சுவர் இருக்கவில்லை. உள்ளே பத்துக்கு பன்னிரண்டு அளவில் திண்ணை இருக்கும். காவடி எடுப்போர் தங்கி ஓய்வெடுத்த காலம் அது.
*வீட்டினுள் ஐந்து படிகட்டுகள் ஏறியதும் உள்ள 6 தூண்களும் பர்மா கருந்தேக்கு.
*சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் வந்த காவேரி வெள்ளப் பெருக்கில், இந்த வீடு பாதியளவுக்கு மூழ்கியதாம்.
*இந்த கிழக்குத் தெரு வழியே காந்திஜி தெரு முனையில் உள்ள SSV சங்கர வித்யாசாலை மைதானத்திற்கு உரையாற்றச் சென்றாராம்.
*வீட்டின் முன்னே சிறிய தெருவில் 'கொடுமுடி கோகிலம்' கே.பி.சுந்தராம்பாள் தன் வெள்ளை நிற ப்ளசர் காரில் வந்து இறங்குவார். ஒரு வண்டி நின்றாலே தெரு அடைத்துக்கொள்ளும்.
*நான் பிறந்த வீடு இலக்கம் #23 விற்கப்பட்டு இன்று 'திருநீலகண்டர் சத்திரம்' என்ற பெயர் தாங்கி நிற்கிறது.
*மூதாதையர் வீட்டில் தலைமுறைகள் வசிப்பதும் அவரவர் பலாபலன் பொறுத்தே அமையும்.
*அக்கரையில் குலதெய்வம் மகாமாரியம்மன் கோயில் கொண்டுள்ளாள்.
*காலங்கள் ஓடினாலும் நம்முடைய ஆன்மா பிறந்த மண்ணையே சுற்றிவரும்.
* எத்தனை ஜெனன பூர்வீகங்கள்; எத்தனை வீடுகள், எத்தனை குலங்களில் எத்தனை உறவுகள்! நம் ஆன்மா வாழ்ந்த இடங்கள் எண்ணிலடங்காது. அதனால் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
பூர்வீக ஊரில் வாழ்ந்த உங்கள் ஒவ்வொருவர் நினைவுகளும் இதைத் தட்டி எழுப்பும்.

மூட்டு வலி சிரப் / குளிகை


முழங்கால், இடுப்பு, தோள் பட்டை, என்று அனேக பகுதிகளில் மஜ்ஜை தேய்மானம் ஆவதால் மூட்டு வலி வருகிறது. முதுமை வரும்போது எண்ணெய் பசை குறைவதால் மூட்டில் மஜ்ஜை இறுகிவிடும். இதற்கு ஒரு சிரப் செய்முறைதான் இது.
சம அளவு (5-6 ஸ்பூன்) கொண்ட வெள்ளரி விதை, எள்ளு, ஆளிவிதை கலவையை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதோடு, துண்டு துண்டான உலர்ந்த திராட்சை 5 ஸ்பூன், 2 ஸ்பூன் புரதம் (ஜெலட்டின் (அ) கடல்பாசி) கலந்து, அதில் 200 கிராம் தேன் கூட்டி, கலக்கி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். கடையில் விற்கும் ஜெலட்டின் அசைவம், அதனால் அதன் நிகரான (அகர்-அகர்) கடல்பாசி சேர்க்கலாம். இக்கலவை சிலருக்கு களி /லேகியம் போலவும் வரும். அது தப்பில்லை. சிறுநெல்லி அளவு உருட்டி உண்க.
தினம் காலை மதியம், உணவுக்கு முன் ஓரு ஸ்பூன் எடுத்து உட்கொண்டு வந்தால், எப்பேர்பட்ட மூட்டு வலியும் போய்விடும். ஜாய்ண்டுகளில் மஜ்ஜை பலம் பெறும், எலும்பு உராய்வு இருக்காது. உடல் பருமன் குறைத்துக் கொண்டால், இயல்பான உடல் எடையை மூட்டுகளின்மீது அழுத்தம் தருவது சமன்படும்.
இதை செய்வது நமக்கு சரிபடாது என்பவர்கள், அவ்வப்போது எள்ளுருண்டை, வெள்ளரி போட்டு சமைத்த கூட்டு, ஆளிவிதை (அ) பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, புரதம் உள்ள உளுத்தம் பருப்பு (அ) முட்டை உணவையும், சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலே இவை அனைத்தும் ஒரே கலவையில் உள்ளது. வராம் ஒருமுறையேனும் மூட்டுகளில் இளஞ்சூடு நல்லெண்ணெய் தேய்த்து சற்று வெயிலில் இருந்தபின் குளிக்கலாம்.

திருப்பாம்பரம்

திருப்பாம்புரம் - இறைவன்: பாம்புரநாதர், இறைவி: பிரமராம்பா
திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம்.
குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது. ஞானசம்பந்தன் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு நாக தீர்த்தம் விசேஷம்.
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
சில வருடங்களுக்குமுன் ஒரு பௌர்ணமி அன்று மிகப்பெரிய நாகம் ஒன்று கருவறையில் நுழைந்து, சிவலிங்கம் மீது தன் சட்டையை உரித்து , அதை மாலையாக சார்த்திவிட்டு சென்றுவிட்டதாம். மறுநாள் காலை கோயில் அர்ச்சகர் கதவை திறந்து பார்க்க அதிசயம் வெளிப்பட்டது. அங்கே கோயில் உள்ளே இன்றும் அந்த பாம்பு சட்டையை பிரேம் போட்டு வைத்துளார்கள். இதன் நீளம் சுமார் 8அடி இருக்கும். இறைவனின் கடல்போன்ற திருவிளையாடல்களில் இவையெல்லாம் சிறு துளிகாளாகவே நமக்கு தெரிகின்றன. ரகு-கேது பூஜைகளை மிக ஸ்ரத்தையுடன் செய்தார் குருக்கள் திரு.திலிப் குமார். (cell no not available). பரிகாரம் செய்ய கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். நாங்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சென்றோம்.
அடியேன் அக்கோயிலில் வரைந்த ஒரு பாடல்.
"வண்டுசேர் குழலியோடு நாதன்மேல்
வந்தமர் மாலைசாற்றும் அரவுகோன்
கண்டுகளித்த தரிசனத்தில் அக மகிழ
கலிமுழுதும் சிவனாகபூசை ஓங்குகவே."
திருவாரூர் மாவட்டம் என்றலே இசையும் பக்தியும் நம் நினைவில் வரும். திருஞானசம்பந்தன் பாடி அருளிய ஸ்தலமான இந்த திருப்பாம்புரம் ஊரில் பல இசை மேதைகள் வாழ்ந்துள்ளனர். சில காலங்கள்வரை காலஞ்சென்ற திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளை எல்லோரும் நாகஸ்வர சக்ரவர்திகளாக மங்காத புகழோடு திகழ்ந்துள்ளார்கள். அருகாமையில் ஆலத்தூர், மகராஜபுரம் ஊர்களும் இசை வளர்த்த காவிரி டெல்டா பகுதியில் வருகிறது. Auto goes from Peralam. Straight bus to Temple from Mayiladuthurai is at 5am.


வியாழன், 1 மார்ச், 2018

சமத்துவமா சாபமா?

சில ஆண்டுகளுக்கு முன் என் மாணவி ஒருவர் நைஜீரியாவிலிருந்து இங்கே வந்து சில மாதங்கள் தங்கி மேலாண்மை பட்டயப் படிப்பு படித்தார். கண்டம் விட்டு கண்டம் புலம் பெயர்ந்த அவரோடு பேசும்போது பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவருடைய கொள்ளு தாத்தா+பாட்டி எல்லாம் காந்தி காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்த நாயுடு குடும்பம். தாத்தா அங்கு ஒரு ஆப்பரிக்க பெண்ணை மணம் முடித்தார். அவர்களுக்கு பிறந்த மகள் அங்கு குடியேறிய ஒரு முதலியாரை மணந்தார். இவருடைய மகள் (என் மாணவி) ஒரு அமெரிக்கரை மணந்தார். இவர்களுடைய மகன் கல்லூரி படிக்கும்போதே ஒரு அரேபிய பெண்ணை மணந்தார். இதுதான் வம்சாவளி விவரம்.
தன் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு அந்தந்த ஜாதிக்கு/ தேசத்திற்குத் தகுந்த தோற்ற குணாதிசயங்கள் இல்லை என்று கூறினார். அதுபோல் புதுநோய்களும் வந்துள்ளது என்று அவருடைய தாத்தா சொல்லிவந்ததை சொன்னார். Alzheimer's disease, Parkinson, Diabetes, Autism, Paraphlegia,போன்ற பலதும் குடியேறியுள்ளதாம். ஆப்பரிக்கர், அமெரிக்கர், அரேபியர்.. இதில் எவருடைய மரபணு எப்படி மாறும் என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. மரபணுக்கள் dominant ஆக இல்லாதுபோனால் அச்சந்ததியினரில் நாயுடு, முதலியார் மரபணு அடிவாங்கிவிடும். 
அதுபோல் பாட்டன் பூட்டன் நாயுடுக்கள் வாழ்ந்த அளவுக்குக்கூட பிந்தைய சந்ததிக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுள் இருக்கவில்லை என்றார். அவர்கள் வாழ்ந்ததுபோல் இல்லாமல் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரை கையாளும் சூழலே உள்ளது என்றார். "இத் லுக்ஸ் கிரேத் அண்ட் பியூத்திபுல், பத் வி ஆர் ஸிக் வித் மல்தி எத்னிக் ஜீன்ஸ்" என்றார். It looks great and beautiful but we are sick with multiethnic genes. எனக்குத் தெரிந்து இவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ஒருமுறை சிகிச்சைக்காக போய்வந்தார்.
நம்மூரில் ஜல்லிக்கட்டின் போது மரபணு மாறிய காளைகளையும், கறவை மாடுகளையும் எதிர்த்தும், மரபணு மாற்றிய பயிர்களை எதிர்த்தும் கோஷம் போட்டு போராட்டம் நடத்தினோம். தெற்காசிய மனித வர்க்க மரபணு இக்காலத்தில் உருமாறி செயலிழந்து வருவதை சமத்துவம் என்று சொல்லி மகிழ்வதா? மனித சந்ததிகள் எந்த வீரிய மருந்துக்கும் வேலை செய்யாமல் செயலிழந்து வருவதை எண்ணி அச்சப்படுவதா? சமத்துவ புரட்சியாளர்கள் மரபியலாளர் கிரேகர் மெண்டலின் ஆய்வுகளைப் படித்திருந்தால் இதை ஒப்புக்கொள்வார்கள். நம் நாட்டில் கோத்திரம் அறிந்து சம்பந்தம் செய்வதை இன்றும் பின்பற்றி வருகிறார்கள் என்பது அறிவுபூர்வமான உண்மை. சாதிகள் என்ற கட்டமைப்பு இதன் காரணமாக கட்டுப்பாடோடு இருந்துவந்துள்ளதும் தெரிகிறது. திருமந்திரம் படித்தாலே மரபணு சூட்சுமம் விளங்கும். திருமூலர் எல்லாவற்றையும் சொல்லிவைத்துள்ளார். அதன் முக்கியத்துவம் புரியாமல் இன்றுள்ள வர்ணத்தை/சாதிகளை முற்போக்குவாதிகள் சாடுகிறார்கள்.
ஆனால் இன்று நம் சமுதாயத்தில் கலப்புமண போக்கு ஊடுருவி தாக்குதல் தந்து வருகிறது. காதல் என்னும் சமத்துவ ஆய்வுக் கூடத்தில் இது மன்மதனின் மரபணு சோதனையா? அல்லது கார்பரேட் கலாச்சாரத்தின் சீரழிவா என்று புரியவில்லை. அதுதான் விதி.