About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 27 ஏப்ரல், 2019

முற்போக்குவாதி என்ற பழிசுமந்து...

சித்தர் பாடல்கள் எல்லாமே மறைப்புப் பொருளுடையது என்பதை பலமுறை நாம் பதிவுகளில் பார்த்துள்ளோம். ஆனால் இந்த நாத்திகவாதிகள் ஏதோ ஒரு பாடலை மேலோட்டமாகப் பொருள்கொண்டு “அதான் அவரே சொல்லிட்டாரே, அப்புறம் என்ன?” என்ற ரீதியில் விமர்சனம் செய்வதுதான் பெருங்கூத்து. சிவவாக்கியர் நாத்திகவாதிகளின் பழிச்சொல்லுக்கு ஆளானவர். அவர் எக்காரணத்துக்கேனும் சாபம் பெற்றாரா என்பதை போகரின் பெருநூல் காவியத்தைப் படித்தால்தான் தெரியும். இப்போது எனக்கு நினைவில்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், சிவ வாக்கியத்தில் சொல்லப்பட்ட பாடல்களை அப்படியே படிக்கும்போது அது முற்போக்குவாதிகளுக்காகவே எழுதப்பட்டதாகத் தெரியும். ஆனால் அதில்தான் சூட்சுமம் உள்ளது. எந்த சித்தரும் சிவனை நிந்தித்துப் பேசியதில்லை. புரிதல் இல்லாதபடியால் தவறாகப் புரிந்துகொண்ட எதையோ பரப்பினார்கள். ‘டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்துவிட்டு, திருட்டு ரயில் ஏறிவந்த’ கதையாகி விட்டது.
எப்படி திருவள்ளுவரின் குறள்கள் பலவற்றுக்கு தவறாகவே பொருள் படித்து நாம் படித்துத் தேர்ச்சியடைந்தோமோ, அதுபோல் ஆகிவிட்டது. அதனால்தான் ஒரு சித்தர் சொன்ன அதே கருத்தை/சொல்லாடல் முறையை இன்னொரு சித்தர் திறந்துபோட்டு விளக்கிவிடுவார். திருவள்ளுவர் பயன்படுத்திய பல சொற்களை/ சொற்றொடர்களை திருஞானசம்பந்தர் தன்னுடைய பதிகங்களில் ஐயமின்றி விளக்கிப் புரியவைத்தார். ஓ.. அப்போ வள்ளுவர் சொனது இதைத்தானா? என்று ஆச்சரியப்படுவோம்.
அதுபோல் சிவவாக்கியர் பயன்படுத்திய அதே சொல்லாடல் மற்றும் இலக்கண முறையை மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தில் சொல்லி விளங்க வைக்கிறார். அதாவது “அந்தப் பாடலை இந்த மாதிரி பதம் பிரித்து மறைப்பு நீக்கி பொருள் கொள்க” என்று சொல்லுமாறு செய்துள்ளார். அது என்ன?
மணிவாசகர் அருளிய திருவாசகத்தில் ‘போற்றியோ நமச்சி வாய' என்பதை, 'போற்றி ஓம் நமச்சிவாய' என்றுதான் நாம் பிரித்துப் படிக்கிறோம். அதே நடையில் சிவாவாக்கியப் பாடலைப் படித்தால், இதுகாறும் முற்போக்கு ஆசாமிகள் மெச்சிக்கொண்ட நட்டகல்லைப் பற்றிச் சொன்னது என்ன என்பதன் பொருள் விளங்க ‘ஏமாற்றுப் பேர்வழி’ என்று அவரைத் தூற்றுவார்கள். நட்ட கல்லும் பேசுமோ? என்றால் உடனே ‘அதெப்படி பேசும்? பேசாதே’ என்றுதான் அவர்கள் பதிலளிப்பார்கள். ஆனால் திருவாசகம் உணர்த்தியபடி பதம் பிரித்துப் படித்தால் ‘நட்ட கல்லும் பேசும் ஓ(ம்), நாதன் உள்ளிருக்கையில்’ என்று வெளிப்படும். நம் தேகத்தில் ஆறாதார சக்கரங்களின் வழியே ஹம்ச ஜெபம் பாயும்போது ஓங்காரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஸ்ரீவீரப்பிரம்மம் விளக்கிக் காட்டிய தருணத்தையும் முன்பே பார்த்தோம். மனம் செம்மையானாலே போதும், அவன் வந்து குடியேறுவான் என்பதை அகத்தியர் எளிமையாகச் சொன்னார்.
சித்தர்கள் எல்லோருமே அசாத்தியமாக இலக்கண விதிகளைக் கையாண்டு பாடல் இயற்றியது நமக்கு பிரம்மிப்பைத் தரும். பிறந்த அனைவருக்கும் மறுபிறப்பு என்பதே இல்லை என்று சிவவாக்கியர் சொன்னதாகக் கிளப்பி விட்டதை நாம் நம்முடைய நூலில் அவருடைய சில பாடல்கள் மூலமாக மறுத்ததையும், எப்படிப்பட்டவர்கள் பிறப்பதில்லை என்பதையும் பார்த்தோம்.
நட்ட கல்லும் பேசும் என்பதை சிவஞான சித்தியார் தன்னுடைய பாடலில் விரிவாகாகச் சொல்லியுள்ளார். ‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா...” என்று அபிராமி அந்தாதியில் சுப்ரமணிய பட்டர் பாடியதும் சிவஞான சித்தியார் சொன்னதை மெய்ப்பிக்கும். நம்பிக்கையோடு கள்ளமில்லாமல் மனதில் அவனை நினைத்து என்னவெல்லாம் நினைத்தாயோ அதெல்லாம் வெளிப்படும் என்பது அமாவாசை பௌர்ணமியான நிகழ்வுக்கு சாட்சி.
ஒரு சித்தர் சொன்னதை நாம் சரியாக விளங்கிக் கொண்டோமா இல்லையா என்பதை வேறு சித்தர் பாடல்களை வாசித்து வரும்போது எங்கேனும் வெளிச்சம் கிட்டிவிடும். அது எந்த நூலில் கிட்டும் என்பதையும் அவர்களே அருள் புரியவேண்டும்!

No photo description available.

திங்கள், 22 ஏப்ரல், 2019

மரபு மாறும் மரபணு

வர்ணங்கள் சாதிகள் பற்றி பழைய பதிவுகளில் விளக்கமாகப் பார்த்தோம். அதற்குள் தேர்தல் வந்திடவே இத்தலைப்புக்கு இடைக்கால ஓய்வு தந்தோம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு வகுப்பில் எனக்குப் பாடம் நடத்திய சில பேராசிரியர்களில் இருவர் செட்டியார் பிரிவினர். அதில் ஒருவர் அச்சு அசலான தென்னக நாட்டுக்கோட்டை நகரத்தார். கருத்த மேனி கூர் நாசி கொண்டு திருநீறு பூசிய துலங்கும் நெற்றியோடு பக்திப்பழமாக வருவார். இன்னொருவர் சற்று குள்ளமான உருவம் மாநிறம் வட்டமான முகம். அவரைப் பார்த்தால் பர்மியர் முகச்சாயலே எனக்குத் தெரியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பர்மா மலேயா இலங்கை என தூரதேசம் போய் வியாபாரம் செய்த செட்டியார்கள் பலருண்டு. சிலர் அங்கே பர்மிய பெண்களை மணந்து குடும்பம் நடத்தியபின் ஊர் வந்து சேர்ந்தனர். அது போன்ற வம்சாவளியினர்தான் இவரும். ஒரு நூற்றாண்டில் மூன்று தலைமுறைகள் தாண்டியும் பர்மா முகச்சாயல் மாறாமல் dominant ஆக மரபணு இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அதுபோல் தில்லை நடராஜர் கோயிலில் இன்னொன்றும் எனக்கு வியப்பூட்டியது. ‘தில்லை மூவாயிரம்’ தீட்சிதர்களின் சந்ததியினரைக் காண்பேன். பார்க்க மிகவும் பின்தங்கிய வாழ்க்கைச் சூழலில் இருப்பதாக எனக்கு அப்போது எண்ணத் தோன்றியது. ‘தில்லைப் பெண் எல்லைத் தாண்டாள்’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது, தீட்சிதர்கள் தங்கள் நான்கு கோத்திர குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வார்கள். வெளியூருக்குப் போய் வெளியே பெண் எடுப்பதில்லை. ஏன்? சிவ மரபணு விட்டுப் போகாமல் இருக்கத்தான்.

சிவன் கயிலாயத்திலிருந்து அழைத்துவந்து குடியமர்த்திய மூவாயிரம் அந்தணர்கட்கு நான்கு வேதத்தை அருளி தீட்சைத் தந்ததால் ‘தீட்சிதர்’ குலத்தின் முன்னோராக சிவனே திகழ்கிறான். தற்காலத்தில் அக்குலத்தின் ஆண் வாரிசுகள் படித்து வெளியே வேலைக்குப் போவதும் வேறு பிரிவில் மணம் முடிப்பதும் நடக்கிறது. ஆகவே மரபணு கலப்பும் நிகழும்.

இவர்கள் ஃபோன் பேசும்தோ சந்திக்கும்போதோ 'ஹலோ/வணக்கம்' சொல்லாமல் ‘திருச்சிற்றம்பலம்’ என்றே சொல்கிறார்கள். இருந்தாலும் சிவன் தமக்கு தீட்சித்து வேதம் அருளியதை எக்காரணம் கொண்டும் அலட்சிய நிந்தனை செய்வதில்லை. பஞ்சாட்சரப்படி உள்ளே வேத சப்தம் முழங்கும். வெளியே அவர்களே திருமுறை ஓதுவர். இவ்வேத கோஷத்தைப் பற்றி அப்பர் சுவாமிகளே தன் பதிகங்களில் உயர்வாகப் போற்றியுள்ளார். ஆனால் அவ்வழக்கத்தை எப்படியேனும் குலைத்துவிட்டு தீட்சிதர்களை அப்பறப்படுத்த முற்போக்கு இயக்கங்கள் தீவிரம் காட்டுகிறது.

நாட்டு சாதி பசுமாடுகள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகளின் மரபணு மாறாமல் பாதுகாக்க வேண்டுமானால் தில்லைவாழ் தீட்சிதர்களைப்போல் கட்டுக்கோப்பாக கோத்திர விதிகளை கடைப்பிடிப்பதே சிறந்தது. அந்த வகையில் அவர்களுடைய மரபணுவின் நீண்டதொரு பயணம் என்னை பிரம்மிக்க வைக்கிறது.

படத்தில்: செட்டியார்கள், தீட்சிதர்கள்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தேர்தல் நடத்தை முஸ்தீபு

தேர்தல் முடிவுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியாகிவிடும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை என்ற பெயரில் இதுகாறும் இம்சை தந்தது ரொம்ப ஓவர்.

‘தாமரைப் பூவில் அமர்ந்தவளே ‘ என்ற பாடலை ஒலிபரப்பவும், ஆண்டாள் /அரங்கன் புறப்பாடு உற்சவத்தின்போது கோயில் உள் சுற்றுப் பிரகாரத்தில் வரையப்பட்ட தாமரைப்பூ கோலங்களை அழிக்க உத்தரவிட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவை எதிர்க்க முடியாமல் உள்ளூர் காவல் துறையும் பொது மக்களும் திண்டாடினர். ‘இது என்ன பைத்தியக்கார உத்தரவு?’ என்று கோலத்தை அழித்த காவலர்களே விமர்சித்தனர். தேர்தல்வரை அனைத்து கோயிலகளிலும் தாமரை மலர் மாலையை இறைவனுக்குச் சூட்டுவது விதிமுறையை மீறும் செயலாகும் என்று ஏனோ சொல்ல மறந்து விட்டனர்.

தேர்தல் ஆணையமானது தன் கண்காணிப்புக் குழுவிற்கான நடத்தை விதிமுறை கையேட்டை இந்து சமய சம்பிரதாய கோணத்திலிருந்து சற்று விளக்கமாக இனி மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இல்லாவிட்டால் தேர்தல் ஆணையமே கண்டனத்திற்கு உள்ளாகும். அதை எதிர்க்க ஆக்ரோஷ விதிமீறல் நிச்சயம் நடக்கும்.

மெழுகுவர்த்தி சின்னம் உள்ளதால் எல்லா தொகுதிகளிலுமுள்ள சர்ச்சுகளில் மெழுகுவர்த்தி ஏற்றுவதை ஏன் தடை செய்யவில்லை? கடைகளில் மாம்பழங்களின் விற்பனையை ஏன் தடுக்கவிலல்லை? பெரியவர்கள் தங்கள் கரத்தால் ஆசிர்வாதம் செய்வதை ஏன் எதிர்க்கவில்லை? தினமும் சூரியன் உதிப்பதை ஏன் மறைக்கவில்லை? இவை எல்லாமே விதிமீறல்கள்தானே?

இந்துக்கள் பொறுமைசாலிகள் என்பதால் ஆணையத்தில் பணிபுரியும் முற்போக்கு கழகவாதிகள் இதையே சாக்காக வைத்து விதிமீறல் என்னும் சொந்த ஆட்டத்தை விளையாடினர் போலும். கோயிலுக்குள் தேர்தல் ஆணையம் நுழையும்போது ஆணையத்திற்குள் இந்து சமய கர்த்தாக்கள் நுழையக் கூடாதா?

No photo description available.

புதன், 17 ஏப்ரல், 2019

வழக்கொழிந்து...

தமிழில் பல நல்ல சொற்கள் இன்றைக்கு வழக்கொழிந்து போயின. அதுவாகவே ஒழிந்து போகவில்லை. பிற மொழிகளின் தலியீடு இல்லாமல் நாமே ஒழித்தோம். நம்முடைய தமிழ் எண்களின் பெயரும் அவ்வாறே.
தொல்காப்பியனார் காலம் முதலே 9 என்ற எண் ‘தொண்டு’ என்றுதான் வழங்கப்பட்டது. 90 = தொண்டு x பத்து = தொண்பது, 900 = தொண்டு x நூறு = தொண்ணூறு, 9000 = தொண்டு x ஆயிரம்= தொள்ளாயிரம், 90000 = தொண்ணூறு x ஆயிரம் = தொண்ணூறு ஆயிரம், என்றுதான் இருந்தது. காலப் போக்கில் அது திரிந்து உருமாறி வேறு வடிவம் பெற்று ஒரு தசம ஸ்தானம் நகர்ந்து போனது. பின்னாளில் புலவர்களும் மக்களும் அதை மாற்றிவிட்டு வழக்கொழிந்து போனது என்று சொல்லும் நிலை சாதாரணமாகி விட்டது. ஆங்கில முறையைப் பின்பற்றி உலாவரும் தமிழ் நாள்காட்டி என் கண்ணில் படவே தமிழ் எண்களின் பழைய சுவடுகள் கண்முன் வந்து போயின. இதைப் பயன்பாட்டில் வைத்தால் எப்படி வழக்கு ஒழியும்?
எழுதும்போது இக்காலத்தில் சந்தி இலக்கணம் அறவே தேவையில்லை. “சார், சந்தி மெய்யெழுத்தை எல்லாம் போட்டால் வேர்ட் ஸ்பேசிங் அதிகமாகிறது. நியூஸ் பேபர்லகூட அதை யாரும் இப்போ போடறதில்லை” என்ற நிலை ஆகிவிட்டது. சந்தி இலக்கணம் பின்பற்றாமல் எழுதினால் சொற்கள் அழகின்றி உதிரியாக அந்தரத்தில் தொங்குவதாகவே எனக்குத் தோன்றும். “உங்களோட சில தமிழ் சொற்கள் இப்போதைய ட்ரெண்டுக்கு ஒத்து வல்லை. அதை கொஞ்சம் சிம்பிளா மாத்தி அனுப்புங்க” என்று முன் எப்போதோ ஒரு முன்னணி வார இதழில் சொன்னார்கள். கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை. சந்தியைத் தவிர்த்து எழுதுவது இப்போது எனக்குப் பழகிவிட்டது. இப்பதிவிற்கு மட்டும் விதிவிலக்கு.
சந்தியைத் தீர்க்கமாக குணம் அறிந்து விருத்தி செய்யாது போனால் விரைவில் வழக்கொழியும். நாங்களும் ஒருகாலத்தில் இனிய தமிழில் பேசினோம் என்று சொல்லிக்கொள்ளலாம்.
No photo description available.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வாங்க மாத்துவோம்!

சென்னை சென்ட்ரல் இனி எம்ஜிஆர் ரயில் நிலையம் ஆனாலும் அது என்றென்றும் Chennai Central என்றுதான் அழைக்கப்படும். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் என்றெல்லாம் அழைக்க யாருக்கும் சத்தியமாகப் பொறுமை இல்லை. ஏற்கனவே மருத்துவ பல்கலைக் கழகமும்,  திரைப்பட கல்லூரியும் MGR பெயரில் உள்ளபோது புதிதாய் இது எதற்கோ? பெயரை மாற்றினால் போதுமா? நிலைய உள்கட்டுமான வடிவம் லன்டன் ரயில் நிலையத்தை ஒத்துள்ளது. அந்த விக்டோரியா காலத்து பாணியை இடித்துக் கட்டினால் தமிழ் கலாச்சாரம் வாழும். எம்ஜிஆரின் பெயர் வைத்தபின் இரட்டை இலை சின்னம் அங்கே இல்லாமல் போனால் தலைவர் மன்னிப்பாரா? அதையும் வைத்தால்தான் முழுமையாகும்.

திடீரென அரசியல் காரணங்களுக்காக இதன் பெயரை இவர்கள் மாற்றினால் மற்ற ரயில் நிலையங்களின் பெயர்களை நம் இஷ்டப்படி மாற்றி வைத்தால் ஆச்சு.

சென்னை கடற்கரை வள்ளலார்
சென்னை எழும்பூர் பெரியார்
மாம்பலம் காமராஜர்
தாம்பரம் கலைஞர்
ஆலந்தூர் ஜெயலலிதா
தேனாம்பேட்டை கக்கன்
சின்னமலை நன்னன்
திருவான்மியூர் ருக்மணிதேவி
திருவொற்றியூர் பட்டினத்தார்
திருநின்றவூர் பூசலார்
திருவல்லிக்கேணி உவேசா
ஷெனாய்நகர் பச்சையப்ப முதலியார்
கிரீன்வேஸ் சாலை மாபோசி
அசோக்நகர் ராமசாமி முதலியார்
நந்தனம் பசும்பொன் தேவர்
நடேசன்பார்க் கண்ணதாசன்
பனகல்பார்க் சௌந்தர பாண்டியன் ...

இப்படி நகரத்திலுள்ள (இனி வரவுள்ள நிலையங்களுக்கும்) பல ரயில் நிலையங்களின் பெயர்களை ஆன்மிகம் - அரசியல் - கல்வி -கலை சார்ந்ததாக மாற்றினால் மக்களுக்கும் அரசியலாளர்களுக்கும் பொழுது போகும்.

வியாழன், 4 ஏப்ரல், 2019

ஆச்சாரமும் விஞ்ஞானமும்

ஊரில் எங்கள் தெருவில் தொண்ணூறு வயதைத் தாண்டிய ஒரு தாத்தா இருந்தார். கருத்த தேகத்தில் பளிச்சென நீறுபூசிய நெற்றியோடு கழுத்தில் ஒரு ருத்திராட்சத்துடன் அவர் எப்போதும் ஏதோ மந்திரங்களை மெளனமாக ஜெபிப்பதை நான் பால பருவத்தில் பார்த்துள்ளேன். திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் அவர் தூங்குவார். அவரைச் சுற்றி குழந்தைகள் வந்து உட்கார்ந்தால் விடுகதையும் பின்ன வாய்பாடும் கேட்டு அச்சுறுத்துவார். தவறாகச் சொன்னால் காதைத் திருகுவார். சரியாகச் சொன்னால் ஒரு கல்கண்டு தருவார்.
காவிரியில் குளித்து முடித்து காலையில் அவர் சிவப்பு வஸ்திரம் உடுத்தி தன்னிலை மறந்து பலகையில் உட்கார்ந்து பூசையிலோ ஜெபத்திலோ இருப்பார். அப்போது அவரை யாரும் தொட்டுவிடக் கூடாது. எனக்கு சிறு வயதில் இது வேடிக்கையாக இருக்கும். வேண்டுமென்றே அவர் முதுகில் காற்றை ஊதுவோம். அதைப் பார்த்த அவர் கிழத்தி "பசங்களா.. தாத்தா குளிச்சு முடிச்சு மடியா உக்காந்து ஜெபம் பண்றார். தொடக்கூடாது.. தொட்டா தீட்டாயிடும்" என்பார். இந்த கண்டிஷன் அவருடைய பெயரன் பெயர்த்திகளுக்கும் பொருந்தும். நம் சமுதாயத்தில் தீட்டு என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் பலவுண்டு. இங்கே பாட்டி குறிப்பிட்டது என்னவென்றால் நாங்கள் குளிக்காமல் உடைமாற்றாமல் விளையாடிவிட்டு சுத்தமின்றி அவரைத் தீண்டும்போது கிருமிகள் ஒட்டலாம். அதுபோக இன்னொரு பெரிய விஷயம் மின்காந்த ஆற்றலைப் பற்றியது.
No photo description available.நம் ஒவ்வொருவருக்கும் நம்மைச்சுற்றி ஒளிதேகமாக ஆரா உண்டு. அது ஜெபம் தபம் சக்திமூலம் பன்மடங்கு பெருகி தேகத்தைச் சுற்றி அகண்டு நிற்கும். அப்போது நாம் அவரைத் தொட்டால் அது மாசுபடும் அல்லது நம்மூலம் கடத்தப் பட்டு வீணாகும். இந்த மின்காந்த ஆற்றலை தன்னுள்ளே பெருக்கவும் அது பூமிக்கு கடத்தப்படாமல் இருக்கவும் அவர் பட்டு வஸ்திரம் அணிந்து பலகைமீது உட்காருவார். இந்த விளக்கம் அந்த வயதில் எங்களுக்குப் புரிய நியாயமில்லை. பிற்பாடு எந்நேரமும் அவர் மானசீக ஜெபத்தில் இருக்கவே அவரைத் தொட்டுப் பேசுவதை தவிர்த்தோம். மற்ற நேரங்களில் அங்கே மடி-தீட்டு என்ற கான்செப்டே இருக்காது.
செட்டியார் கவுண்டர் வீட்டு பிள்ளைகள் வந்து விளையாடினால் அவர்களது ஜோபியில் விரலைவிட்டு துழாவி எங்கேடா எனக்கு இலந்தபழம்? என்று வம்பு வளர்ப்பார். அவரே எங்களைக் கூப்பிட்டு தட்டிக்கொடுத்தாலோ காதைத் திருகினாலோதான் உண்டு. எனக்குத் தெரிந்து அவர் கோடி காயத்ரி மந்திரங்களை ஜெபித்து பழுக்க உருவேற்றியவர் என்று பின்னர் அறிந்து கொண்டேன். அவருடைய கண்கள் பளபளவென தகிக்கும், முகத்தில் தேஜஸ் ஒளிரும்.
இப்படியான ஆற்றல்மிகு ஒழுக்கத்தை அவர்கள் கடைப்பிடிக்க, சமுதாயத்தில் ஏனையவர்களும் பிராமணர்களைத் தொட்டுப்பேசுவதை பழகிக் கொள்ளவில்லை. காலப்போக்கில் அவர்கள் கடைப்பிடித்த நல்ல பழக்கமே பிற்பாடு பெரிய அளவில் ‘தீட்டு’ ‘தீண்டாமை’ என்ற பகுத்தறிவு கழகத்தாரின் குற்றப் பட்டியலில் இடம்பெற வழி வகுத்தது. இந்த வர்ணத்தினரை எதிர்க்க அவர்களுடைய கட்டுப்பாடுகளையே ஆயுதமாக எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தது. அந்த அறிவியல் காரணமே பிற்பாடு கிண்டல் கேலிக்குரிய விஷயமாகி அக்குலத்தினரை வெறுக்க ஆரம்பித்தனர்.
அவ்வீட்டிற்கு செட்டியார், கவுண்டர், கோனார், நாடார் என பிராமணர் அல்லாதோரும் வந்து போவதுண்டு. சூத்திரர்கள் எனப்படும் எல்லா வேலையாட்களும் வேண்டியபோது பணி செய்துவிட்டுப் போவார்கள். வீட்டில் மற்ற நபர்கள் எல்லோருமே பணியாட்களுக்கு உண்ண பண்டங்கள் தருவதோ, கொண்டுவரும் காய்கறிகள் வாங்கிக் கொள்வதையோ, வீட்டுக்கு வந்து நெய் காய்ச்சிக் கொடுப்பதையோ தடையின்றி ஏற்றனர். அந்த ஜெபதப பெரியவர் போன்றோர் மட்டும் எந்நேரமும் ஆச்சார சீலகர்கலாக இருந்தார்கள்.
இதெல்லாம்தான் ஒருவகையில் வடக்கைவிட தெற்கில் நம் தமிழகத்தில் ஆரோக்கிய ஒழுக்கத்தை மேம்படுத்தியது. வீட்டில் யாரும் எச்சில்படுத்தி குடிக்கக் கூடாது, பழத்தை வாயால் கடித்து உண்ணாமல் நறுக்கி உண்பது, யாரையும் தொட்டுத் தொட்டு உறவாடாமல் பேசுவது போன்றவை நம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. நாலுபேர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்னும்போது கலயத்தில் சுத்தம் வேண்டும். பழங்கள் உண்ணும்போது அங்கே வருவோருக்குப் பகிர்ந்து கொடுக்க நறுக்கி உண்ண வேண்டும் என்பார்கள். காரணங்களோடு செய்தது பிற்பாடு விதிப்பயனால் வினையாக முடிந்தது.
காலப்போக்கில் பிராமண வர்ணத்தின் நற்பழக்கத்தை சமூகத்தின் பிற உயர்சாதி வகுப்பினர் கைக்கொண்டு மற்ற சமூகத்தினரை சிறுமைப்படுத்த இன்றைக்கு தீண்டாமை, டீக்கடையில் தனி கிளாஸ், மற்றும் சாதிமறுப்பு கொள்கை அரசியலை நடத்துகின்றனர். கிராம சத்துணவு கூடத்தில் கீழ்சாதி பெண் சமைக்கக் கூடாது என்ற அளவுக்கு முற்றிப்போய் விட்டது.

புதன், 3 ஏப்ரல், 2019

சுபிட்சம் பறிபோனது ஏன்?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிராமங்களில் இருந்த அக்ரஹாரங்கள் மெல்ல மறையத் தொடங்கின. இனியும் புரோஹிதம் ஜெபம் தபம் மற்றும் வேள்வி வளர்த்தல் சரிபடாது என்று கருதிய பல பிராமணர்கள் வேறு வேலை தேடிக்கொண்டு இடம் பெயர்ந்து போனார்கள். அதுவரை கட்டுக்கோப்பாக இருந்த ஊர் சிதற ஆரம்பித்தது. விற்கப்பட்ட அக்ரஹாரங்கள் இடிக்கப்பட்டு அங்கே புது கட்டடங்கள் வந்தன. இந்த காலகட்டத்திற்குள் பகுத்தறிவு கழகத்தின் வேதம்- வடமொழி- பிராமண எதிர்ப்பு உச்சக்கட்டத்திற்குப் போனது. தினம் பொழுது விடிந்து பொழுது போனால் அவர்களை இழிவாகப் பேசுவது, கோயில் சிலைகளை களவாடுவது, கோயிலுக்குள் செருப்பு மாலைப் போடுவது என்று பல வினோதங்கள் நடந்தேறியது.
நதிகளின் அருகே பிராமணர்கள் அமர்ந்து ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் சொல்லி, தவறாமல் அக்னிஹோத்ரம் (எ) ஹோமங்கள் செய்து ஊரில் இறைகாந்த அலைகளை உருவேற்றி பஞ்சபூதங்களை இயக்கத்திலும் வைத்திருந்தனர். அவர்களுடைய வர்ணத்தின் கடமையாகவே இதை செய்து வந்தனர். இவற்றை தவறாமல் செய்துவந்த ஊரில் மழை பொழிந்தது, நதிகள் பிரவாகித்தது, பயிர்கள் செழிப்பாக மகசூல் தந்தது, பெண்கள் கண்ணியத்துடன் இருந்தனர். பிற்பாடு கழகங்களின் அவதூறும் பொல்லாப்பும் இவர்களைப் பீடிக்க தங்களுடைய அடுத்த தலைமுறை வேலைக்குப் போகட்டும் என்று ஊக்குவித்து வெற்றி கண்டனர். இதன் காரணமாக அன்றாட அனுஷ்டானங்களை குறைத்துக் கொண்டும், நேரம் இருந்தால் இவற்றை செய்துக்கொண்டால் போதும், செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று அவர்களாகவே தங்கள் கடமைகளை கைவிட, பாவங்களையும் சம்பாத்தித்தனர். காலவோட்டத்தில் அதையும் மறந்துபோய் வேளா பார்ப்பனர்களாக பெயரளவில் உள்ளார்கள்.
ஊர் நலனை பிராமணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மற்ற வர்ணத்தார்கள் நினைத்தனர். முடிந்த போது அவர்களுக்கு பிக்ஷ அரிசியும் தட்சனையும் தந்து போற்றினர். ஆனால் அவர்கள் எல்லோரும் ஊரையே காலிசெய்து போகவும், பிராமண வர்ணம் என்று சொன்னாலே அவமானம் என்ற அளவுக்கு கழகங்கள் விரட்டி அடித்தது. அதன் விளைவுதான் இன்றைக்கு அதர்மங்கள் தலைவிரித்து ஆடுவதும், மழை பொய்த்துப் போவதும், விளைச்சல் இல்லாமல் போவதும், கோயில் களவாடப்படுவதும், நதிகள் வறண்டு கிடப்பதும், சமுதாய கற்பே களவுபோனதும் கண்கூடு. கோயில்களில் ஆதிசைவர்கள் /குருக்கள்/ புரோகிதர்கள் மட்டும் இன்றளவில் இவற்றை கடமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் செய்து வருகிறார்கள். மற்றவர்கள் கைவிட்டுவிட்டனர். இவர்கள் குலத்தொழிலை செய்யத்தவறினால் விளைவுகள் ராஜ்ஜியத்திற்கும் மக்களுக்கும் மிகுந்த கேடு என்பதை திருமூலர், அகத்தியர், திருவள்ளுவர் அன்றே சொல்லிவிட்டனர்.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.” (திருக்குறள்-560)
முருகனின் ஒருமுகம் இவர்கள் செய்யும் ஹோமத்தையும் ஓதும் வேதத்தையும் பார்க்கிறது என்று சங்கநூல் சொல்கிறது. எனக்குத் தெரிந்து இன்றைக்கு இதை எல்லாம் உலகோர் நன்மைக்காக யாரும் செய்வதாகத் தெரியவில்லை. முருகன் கருப்பா/ வெளுப்பா, உமையவளிடம் முளைப் பால் குடித்தானா இல்லையா? அவன் தமிழ் என்றால் சங்கநூல் அவனை வேதமுகன் எனச் சொல்வது பொய் என்று இவ்வாறாக ஆய்வுதான் நடக்கிறது.
கோயிலில் வேதியர்கள் பூசை நிமித்தமாகவோ கட்டளை தாரர்களுக்காகவோ இவற்றை செய்வித்து வைக்கிறார்கள். இவர்களை விரட்டிய பாவமும், இழிபழிக்கு ஆளாக்கிய விதமும் இன்றைய கஷ்ட நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது. இதன் விளைவாக காலவோட்டத்தில் கடமைகளை கைவிட்ட பிரமாணர்களே இன்று செய்யக்கூடாத செயல்களையும், மது குடித்தும் புலால் உண்டும், அதர்மமாக நடந்து கொள்வதை நானே காண்கிறேன்.
அவர்கள் ஆகாம்ய கர்மாவாக பாவத்தை இப்பிறவியில் சம்பாத்திதாலும், அவர்கள் தங்கள் கடமைகளை மறக்கச் செய்ததற்குக் காரணமானோர் மறுபிறவியில் பெருத்த இன்னலை சந்திப்பார்கள். அத்தகையோர் வேதியர்களாக, கோயில் பணிகளை ஏற்றுச் செய்யும் ஆச்சாரிகளாக, மற்றும் கோயிலுக்கு உடலுழைப்பு அளிக்கும் பின்னணிப் பணிகள் செய்யும் ஏதோவொரு விதத்தில் பிறவி எடுத்து பாவத்தை துடைக்க நேரிடும். பசுவையும் பிராமணனையும் துன்புறுத்தினால் அது பிரம்மனைக் கொன்ற பாவமாக ஏழேழு பிறவிகளுக்கும் துரத்தும். பிராமணர்கள் ஒழிந்தால் போதும் என்ற எண்ணமே இன்று மக்கள் மனத்தில் நிலவுகிறது. இப்படியொரு நிலையில் மீண்டும் சுபிட்சம் திரும்புமா? சந்தேகமே!
இனி சமுதாயம் அன்றாக இருக்க வேண்டும் என்று ஒப்புக்காக மனதளவில் நினைப்பது வீண். செய்ய வேண்டிய பணிகளை இனி யார் எடுத்துச் செய்வது? நாமேதான் சுயம் தேடலில் ஈடுபட்டு உயர்நிலையை எட்ட பாடுபட வேண்டும். நாம் நம்பிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் பரப்பிய அவதூறுபடி மற்ற வர்ணத்தார்களை பிராமணர்கள் அடக்கி ஆண்டார்களா? அப்படியே ஒருவேளை நடந்திருந்தால் அதற்கு யார் காரணம்? அப்பழி பிராமணனுக்கா தூண்டியவர்களுக்கா? அடுத்த பதிவில் மற்ற வர்ணத்தார்களின் வாழ்வு நிலையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Image may contain: house, sky and outdoor

திங்கள், 1 ஏப்ரல், 2019

எங்கிருந்தோ வந்த கோரிக்கை...

சென்ற மாதம் Donald Peipe என்ற முகம் தெரியாத நபரிடமிருந்து எனக்கு ஈமெயில் வந்தது.

அதில், "உங்களுடைய ஶ்ரீவீரப்பிரம்மேந்திரர் நூலை ஆழ்ந்து வாசித்தேன்.  அருமை! நீங்கள் ஏன் ஶ்ரீபாத ஶ்ரீவல்லப மகானின் சரிதத்தை தமிழில் படைக்கக் கூடாது? I wish you to do so, by the will of siddhars..!!!" என்று இருந்தது.

கலியுகத்தில் தத்தாத்ரேயரின் முதல் அவதாரமான இந்த மகான் 14ம் நூற்றாண்டில் ஆந்திரத்தின் பீத்திகாபுரம் ஊரில் அவதரித்து இளம் பிராயத்திலேயே கிருஷ்ணா நதியில் ஜலசமாதி அடைந்து இன்றும் தேஜோ ரூபமாக இருப்பவர்.

இம்மகானைப் பற்றி ஆழமாக எழுத எனக்கு தற்போது சாத்தியப்படாது என்பதால் அதை எடுத்துச் செய்யும் எண்ணமில்லை.  இதுவரை எழுதியது போதும் என்று நான் நினைக்கும்போது நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத யார் மூலமாகவோ தகவல் வருகிறது. எல்லாம் போகர் சித்தம்! ஒருவேளை எழுதாமல் காலந்தாழ்த்த நேரிட்டால் போகரே என் ஆய்வுக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து, 'ஹும்... ஆரம்பி' என்று உள்மனதில் அழுத்தம் தந்திடுவார். மீண்டும் என்னை சோதிக்கிறாரோ?

Image may contain: 1 person, sitting

மோதல்கள் ஏன்?

காலங்காலமாகவே பல விஷயங்கள் தவறான கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ளபட்டு அது வர்ணத்தார்களிடையே தீராப் பகையை விளைத்து விட்டது என்பதே உண்மை. நான் இங்கே தெளிவு படுத்தியதால் இதைப் படித்துவிட்டு உடனே தாங்கள் கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொண்டு விடுவார்கள் என்றும் கருத முடியாது. ஏன்? சிறுவயது முதலே ஆழ்மனதில் விதைத்து வளர்க்கப்பட்ட எண்ணங்கள் நன்கு வேரூன்றி வளர்ந்து விட்டதால் உடனே இவற்றை ஏற்பது கடினம்தான். அதுபோக அவரவர் வாழ்க்கையில் ஒவ்வொரு வர்ணத்தாரோடு தனக்கு ஏற்பட்ட மேன்மையான/ மோசமான அனுபவத்தைப் பொறுத்தும் இது அமையும்.
எல்லோருமே மனித ஜாதிதானே பிறகு ஏன் ஒருவர்மேல் ஒருவருக்கு அபிமானம் இல்லை? வெறுப்போரும் வெறுக்கப்படுவோரும் இருக்கிறார்களே. அது ஏன்? ஒரு வர்ணத்தின் நெறி முறை நமக்கு ஒவ்வாதபோது அதிலிருந்து சற்று விலகி விடுகிறோம். வணக்கம் / நலம் விசாரிப்பு என்ற அளவோடு நிறுத்திக் கொள்கிறோம். அவரவர் பழக்கங்கள், உணவு முறைகள், குணங்கள், வர்ண இயல்பு மற்றும் வேறுபட்ட விதிகள் எல்லாமே நமக்கு சற்றும் ஏற்புடையதாக இருக்காது. சன்மார்க்க மதத்தின் வர்ணங்களுக்குள்ளேயே ஒத்துப்போவது இல்லை என்னும்போது முஸ்லிம்-கிறிஸ்து மதத்தாரை நம் மக்கள் ஏற்பது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. தமிழ் சித்தர்களில் அநேக ஜாதியினர் இருந்தனர். இருந்தும் அவர்கள் பொதுவான சித்த மரபின்கீழ் வந்திடுவதால் பேதம் எழவில்லை. அதுபோல் நம்மிடையே வாழ்க்கை நெறிமுறைகளில் பேதம் உள்ளதால் அது ஏற்றுக்கொள்ளும் போக்கை உண்டாக்குவதில்லை.
ஆனால் நண்பர்கள் காதலர்கள் மற்றும் குடும்பங்களுக்கிடையே ஈர்ப்பும் ஏற்றுக்கொள்ளும் போக்கும் எப்போது ஏற்படுகிறது? இருவருடைய செயல்களில் பழக்கங்களில் எண்ணங்களில் அணுகுமுறையில் அலைவரிசை ஒற்றுமை நிலவும்போது ஏற்படுகிறது. அப்போது வர்ணமும் ஜாதியும் கண்முன் வந்து நிற்பதில்லை. இப்படித்தான் நாடுகளும் அதன் தலைவர்களும் ஒற்றுமை-வேற்றுமைப் படுகிறார்கள். ஆன்மிகத்தில் ‘தான் அவனாக வேண்டும்’ என்று சொல்லும்போது, நாம் அந்த சிவனாக மாறவேண்டும் என்றால் பிறப்பால் நாம் எந்த வர்ணமாக இருந்தாலும் அதனதன் இயல்பினை விடுத்து முதல் வர்ண இயல்புக்கு மாற்றிக் கொண்டால்தான் இறுதியில் அது வசப்படும். இது எப்போது அமையும்? உண்மையான ஆன்மிக சத்சங்கம் அதை அமைத்துக் கொடுக்கும். அதுவரை சமூகத்தில் அந்த ஜாதி அப்படி, இது இப்படி என்ற பேச்சுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அரசியல் கழகங்களும் ஊடகங்களும் தங்கள் பங்களிப்பைத் தரும்.
‘சீனா உயர்வான தேசம். சீனர்களைப்போல் உன்னதமான மக்களை மேருவின் தட்சிணத்திலும் காணமுடியாது’ என்று சித்தர் போகர் சொன்னார். இன்று அது நேர் எதிர்மாறாக உள்ளது. சுதந்திரம் முதலே பாகிஸ்தான் அராஜகமாக இருந்து வருகிறது. நாளையே அது இந்தியாவைவிட உன்னத நீதிநெறிகள் தவறாத தேசமாக மாறலாம். ஆனால் இதைப் படித்ததுமே ‘ஆமா.. மாறிட கீறிட போகுது..’ என்று நக்கலாக உங்கள் மனவோசை எழுகிறது, அல்லவா? ஏன்? நாம் இதுவரை அதன் தீய செயல்களையே பார்த்து விட்டதால் அது உண்மையாக மாறினாலும் நம்பி ஏற்கத் தயாராக இல்லை.
ஜாதிகள் வெவ்வேறாயினும் காதலர்கள் மட்டும் கைகோர்த்து நிற்க முடிகிறது. ஆனால் கனவுகளோடு அவர்களை வளர்த்த பெற்றோர்களுக்கு அதில் பேதம் உண்டு. ஏன்? மேற்கூறிய வர்ணங்களுக்கிடையே நிலவும் பல ஒத்துபோகாத நெறிமுறைகள்தான் காரணம். இரு குடும்பங்களிலுமே சொல்லி வைத்தாற்போல எல்லா அம்சங்களும் ஒத்துபோனால், அங்கே ஜாதி மறுப்பு என்று எதுவும் தலை தூக்குவதில்லை. அதற்குள் புகுந்த வீட்டில் கைக்கொள்ளும் பழக்கவழக்கங்கள், பக்தி நெறி, சமையல் பாங்கு, வீட்டை சுத்தமாக பராமரிக்கும் விதம், என எல்லாவற்றையும் அப்பெண் கற்றுக்கொண்டு விடுவாள்.
ஆனால் சாதியின் பெயரில் பேதம் காட்டுவது எப்போது வருகிறது? பெற்றோர் தம் மகனை நம்பி இருக்கும்போதும், அவனுடைய காதலி தம் குடும்பத்திற்கு சரிப்பட மாட்டாள் என்பதை பெண்ணின் குடும்பத்தின் போக்கையும் முறைகளையும் அறிந்தபின் முடிவுக்கு வந்திடுவார்கள். அதுபோக பொருளாதார நிலையும் எட்டிப் பார்க்கும். ஆகவே, ‘சமத்துவமாக இருங்கள்’ என்று வாயளவில் சொன்னாலும் அது மெய்யாக வேண்டுமானால் பல மாறுதல்களை அடிமட்டத்திலேயே உண்டாக்க வேண்டும். அரசு வெளியிடும் ஜாதிப் பட்டியல் பல பக்கங்களுக்குப் போகிறது. சாதிகளற்ற சமுதாயம் என்பது வராது.
மனம் ஒத்துப்போனால் காதலில் நான்கு வர்ணங்கள் அடிபட்டுப் போகும். ஆனால் அங்கே இருவரில் ஒருவர் தன் உணவு-உடை-வழிபாடு கலாச்சார இயல்புகளை இன்னொரு குடும்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு ஆகவேண்டும். அது சரிபடாதபோது தினம் ஒரு பிரச்சனை எழுந்து குடும்ப நிம்மதியே குலையும், ஜாதியின் பெயரால் பிரிவினையில் போய் முடியும். இன்னாருக்கு இன்னார் என்ற விதியின் விளையாட்டில் விளக்கங்கள் தரப்படுவதில்லை.
No photo description available.

மறுக்கப்பட்டதா?

நேற்றைய பதிவில் வர்ணங்கள் பற்றியும் ஜாதிகளின் பின்னலைப் பற்றியும் ஓரளவுக்கு விஸ்தாரமாகப் பார்த்தோம். அதில் ஒவ்வொரு வர்ணங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் மிளிர்ந்தனர் என்றும் அதில் சூத்திரனே சமூகத்தின் அச்சாணியாக உள்ளான் என்பதையும் பார்த்தோம். சூத்திரன் பிரிவில் யாரெல்லாம் வருவார்கள்? மற்ற மூன்று வர்ணத்தவர்களில் வராத ஏனைய தொழிலோரும் சமுதாய ஓட்டத்தில் வெவ்வேறு பணியில் ஈடுபடும் எல்லா பணியினரும் சூத்திரர்கள்தான். இன்றைக்கு நாம் செய்யும் தொழிலை வைத்து நாம் பிறந்த வர்ணத்தை யூகிக்க முடியாது.
வேதங்களின் தாயாக கருதப்படுபவள் காயத்திரி @ விஸ்வகர்மணி. மந்திரங்களின் உயர்வான காயத்ரி மந்திரம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது பிராமணர்களுக்கு மட்டும்தானா? இல்லை. மற்ற வர்ணங்களுக்கும் உண்டு ஆனால் காலப்போக்கில் தேய்ந்துபோய் இன்றைக்கு பிராமணர் வைசியர் ஷத்ரியர் கம்மாள ஆச்சாரிகள் மட்டுமே ஜெபிக்கின்றனர். மூத்த சித்தர்களான அகத்தியர் திருமூலர் காலாங்கி போகர் என நிறைமொழி மாந்தர்கள் அனைவரும் நுண் சிகை/ பூணூல்/ வேதம்/ ஹோமம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நிறையவே சொல்லிவிட்டனர்.
ஆன்மிகம் எல்லோருக்கும் பொதுதானே? பிறகு ஏன் சூத்திரர்களுக்கு வேதம் ஓதுவதும் காயத்ரி ஜெபித்தலும் கட்டாயமாக்கப் படவில்லை? அது மறுக்கப்பட்டது என்று சிலர் குற்றம் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சூரியனை மறைத்து வைப்பது என்பது அறியாமை. மறுக்கப்பட்டது என்பது காரணமல்ல! வேதம் ஓதுவதும், காயத்ரி மந்திரம் ஜெபிப்பதும் உடலிலும் மனதிலும் யோக நிலையிலும் நிறைய மாற்றங்களை விளைவிக்கும். பிராமணர்கள் உடல் உழைப்பு என்பதை அளவோடுதான் செய்தார்கள். கடுமையாக எதையும் மேற்கொள்ளவில்லை. ஏன்? வேதம் ஒதவும் மந்திரம் ஜெபிக்கவும் யோகசக்கர ஆற்றல் செயல்பட உடல் என்னும் வாகனத்தை அழற்சிக்கு உட்படுத்தவில்லை. ஆகவே அதிகப்படியான கொழுப்பு உணவுகள் அவசியப்படவில்லை. சாத்வ குணங்களை ஒத்த உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றினர். ஆனால் ஏனைய வர்ணங்கள் அப்படி இருக்க முடியாது. அதிகப்படியான கொழுப்பும் ஆற்றல் சக்தியும் தேவைப்பட்டது.
பண்டைய ரிஷிகள் குறைவாக உண்டு அதிகநேரம் அந்த உடல்சக்தி விரயம் ஆகாதவகையில் தவம் செய்து வாசியில் நிலைத்தனர். உடலுழைப்போ அதிக நடமாட்டமோ இருக்கவில்லை. காயத்ரி மந்திரம் லட்சம் உரு, கோடி உரு ஏற்றும்போது உடலில் வெப்பம் அதிகமாகும். அகத்தீயைப் பெருக்கும் அறிவொளியாம் சூரியனை மையமாக வைத்து ஜெபிக்கபடுவதால் இந்த வெப்பவினை ஏற்படுகிறது.
சரி.. சூத்திரர்கள் வேதம் ஓதுவதோ /காயத்ரி ஜெபிப்பதோ ஏன் கூடாது? அவர்களுடைய உடலுழைப்புக்கு இது நல்லதல்ல. இதில் அதிக கவனம் மேற்கொண்டால் அது அவர்களுடைய சரீர சக்திக்கு பின்னடைவுதான். அதனால் வேதம் ஓதுவதில் சப்தகோஷ நிலைகள் மாறும்போது ஆறாதார சக்கரங்களில் மாற்றங்கள் உண்டாக்குகிறது. பெண்கள் பொதுவாகவே வேதம் ஓதுவதோ, காயத்ரி ஜெபிப்பதோ, விஷ்ணு சஹஸ்ரநாமம் வாய்விட்டு பாராயணம் செய்வதோ கூடாது என்று வைத்திருந்தனர். ஏன்? பெண்ணடிமையா? இல்லை. அவர்களுடைய உடலமைப்புக்கு எதிர்மறை விளைவுகளை அதிகம் ஏற்படுத்தும் என்று அப்போதே விஞ்ஞான ரீதியில் கண்டு உரைத்தனர். மந்திர சப்த அதிர்வுகளால் கருப்பை, மூலாதாரம், மற்றும் சுரப்பிகள் பாதிப்பு உள்ளாகும் என்பதே உண்மை. விலக்கான பெண்கள் வில்வம், துளசி, கறிவேப்பிலை செடிக்கு அருகே சென்றாலே சுத்தமாகப் பட்டுபோய் விடுகிறதே. அதுபோல்தான்!
மாமிச உணவில் கொழுப்பு இருப்பதால் அது உடலை அதிக நேரம் உழைக்க ஈடுதரும். ஆனால் அவை எல்லாம் யோகசக்கர ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும். ஆகவே, இவர்களுக்கு ஜெபமும் மந்திரம் உரு ஏற்றுதலும் பயன் தராமல் போகும். அதனால் அவர்களுக்கு பலவீனம்தான் வரும். சூத்திர வேலைகள் செய்யும் நாம் இதை எல்லாம் கனம் மாறாமல் பாராயணம் செய்தால் உடலுழைப்புக்கு சக்தி இல்லாமல் போகும். மற்றபடி கடவுளை துதிக்கவோ, பதிகம் பாடவோ, பண் இசைக்கவோ எந்தத் தடையுமில்லை.
மேற்படி செயல்களை எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து செய்யும்படி ஆகிவிட்டது. ஜெபத்தில் கண்கள் மூடியே இருக்கும், மூச்சு சீராக இருக்கும், வாய் பேசாது, உடல் ஆசனமிட்டு இருக்கும், நடமாட்டமில்லை. ஆகவே உடலுக்கு அதிகப்படியாக பளு சுமத்தவில்லை. நாம் அறிந்த ரிஷிகள் அநேகரும் பிறப்பால் பிராமணர் அல்ல. வைசியர், ஷத்ரியர், சூத்திரர்களாக பிறந்து வளர்ந்து பிறகு ஒரு கட்டத்தில் அதை விடுத்து மேற்படி பிராமணத்துவ சாதகத்தில் ஈடுபட்டு, தம் ஆன்ம சக்தியையும் யோக சித்தியையும் மேல்நிலைக்கு உயர்த்திக் கொண்டனர். பிராமணர்கள் ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தை உரைத்த விஸ்வாமித்திரர் பிராமணரா?
ஆகவே, வேதமும் /மந்திரமும் மற்ற வர்ணத்தார்களுக்கு மறுக்கப்பட்டது என்ற கோட்பாடே தவறு. ஜெபம் செய்து வேள்விகள் வளர்த்து தபஸ்வியாக வேண்டும் என்றால் தன்னை மனத்தால் உடலால் அதற்கு தயார்படுத்திக் கொண்டு முயன்றால் யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம். ஆனால் அந்த வரணத்தின் அனுஷ்டானத்தைப் பின்பற்ற வேண்டிய கடமையும் உள்ளதே!
காஞ்சிபுரம் வட்டம் ஓரிக்கையில் மகாசுவாமி மணிமண்டபத்திற்குப் போகும் வழியில் வேத அத்யயன பள்ளியைப் பார்த்தேன். சொகுசு வாழ்க்கை நாம் வாழும் இக்காலத்தில் அந்தச் சிறார்கள் வேதம் படித்து உயர்வதில் நிறையவே ஆசைகளை தியாகம் செய்துள்ளார்கள் என்பதைப் உணர்ந்தேன். வேதம் கற்பதோடு மற்ற பள்ளிப் பாடங்களும் உண்டு. அங்கு தமிழை புறக்கணித்து விட்டார்களோ என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வேதம் stream ல் specialise செய்வது போக, விருப்பப் பாடங்களாக திருமுறைகள்/பிரபந்தங்களும் உண்டு.
ஆகவே, எந்த வர்ணமாக இருந்தாலும் ஓர் ஆன்மா அந்த பிரம்மத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் அது நிச்சயம் நடக்கும். குரு தேடி வந்து உபதேசம் செய்வார்! இப்பிறவியில் நடக்காமல் போனால் மறுபிறவியில் விட்ட இடத்திலிருந்து தொடரும்.