About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 15 ஆகஸ்ட், 2018

பாபர் முதல் டாபர் வரை

நான் பள்ளி மெட்ரிகுலேஷன் படிக்கும்போது வரலாறு பாடத்தை ஆழ்ந்து படிக்காமல் தேர்ச்சிபெற வேண்டும் என்ற அளவில்தான் படித்தேன். எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் Dr.Eswari Prasad அவர்களின் History Of Medieval India from 1526 AD to 1947. இது சற்றும் எனக்கு இலயிக்கவில்லை.

அப்புத்தகத்தில் முந்தய மன்னர்கள் கதையில் மௌரியர், குப்தர் அறிமுகம் தந்த பின், முகலாயர் பிரதாபம் விளக்கி அவன் இவன் என பொழுதுபோகாத வடநாட்டு அரச வம்ச கதைகளும், அவனுடைய மற்ற மனைவியரின் குழந்தைகள் யார், சூழ்ச்சிகள் செய்தது, போர் தொடுத்தது, யாரை யார் அடித்துக்கொண்டு இறந்தது என்று மனப்பாடம் செய்ய வேண்டி இருந்தது. சத்ரபதி சிவாஜி கதையும் அப்படித்தான். அவனுடைய சிற்றன்னையின் மகன்களின் கதை தஞ்சாவூர்வரை வந்து சேரவே கொஞ்சம் சுவாரசியம் ஓங்கியது. வகுப்புத்தேர்வில் ஒரு வினாவுக்கு 'Shajahan killed Kanjan khan' என்று வேண்டுமென்று எழுதினேன். 'கஞ்சன் இல்லை கான்ஜஹான்' என்று என் ஆசிரியர் திருத்திவிட்டு வாய்விட்டுச் சிரித்தார். இப்படி அந்த முகலாயர்கள் என் வெறுப்பை சம்பாதித்தனர். முகலாயர்கள் பட்டியலில் Babur, Dabur என்று எதுகை மோனை குறையாமல் சேர்த்து விடுவேன்.

தமிழ் உரைநடை நூலில்தான் மூவேந்தர்கள் பற்றிய பாடம் வரும். வரலாறு போல் இதில் முகலாயர் வரமாட்டார்கள். ஏனோ, எனக்கு பல்லவ சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுதான் பிடித்திருந்தது. அதுபோக திப்பு சுல்தான் பிடிக்கும். ஆங்கிலேயர் வரலாறு முகலாயர்போல் சோர்வைத் தரவில்லை. நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே பாரம்பரிய தலங்கள், புகைப்படங்கள் எடுப்பது, அகழ்வாராய்ச்சி, சுவடிகள் சேகரிப்பது போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. அதுவும் தென்னகம் சார்ந்த சங்கதியாக இருக்கும் வரைதான். இன்னும் என்னுடைய பத்தாம் வகுப்பு வரலாறு புத்தகத்தை டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது முழுதுமாகப் படிக்கத்தான்! ஹிஹிஹ்ஹி.


No automatic alt text available.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

சங்கேதி மொழி

எனக்கு நீண்ட காலமாகவே சங்கேதி மொழி சவாலாக இருந்து வருகிறது. என்னதான் தென்னக (திராவிட) குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதை பன்மொழிகள் அறியாமல் புரிந்துகொள்வது சவால்தான். சமயத்தில் அதுவும் புரியாது. நம் கொங்கு மண்டலத்தில் இம்மொழி பேசுகிறார்கள். மதுரையில்கூட நிரம்பியுள்ளனராம்.
என் முன்னே ஒருவர் ஓட்டலில் யாரிடமோ "அவ்விய சாப்படன வராஹளா?" என்று கேட்டுவிட்டு "ந தோய்சி வரட்டே?" என்பதுபோல் ஏதோ சொன்னார். (அவர் பேசியது 'அவங்க சாப்பிட வராங்களா? நா கை கழுவிட்டு வரட்டா?' என்பது புரிந்தது.) தமிழ் கன்னடம் மலையாளம் கலந்தடித்து, சமயத்தில் தெலுங்கும் தலை நீட்டிவிட்டுப் போகும்போல. தமிழை அடிப்படையாகவும் மற்ற திராவிட மொழிகளின் கலப்போடு சமஸ்கிருத உச்சாடனமும் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. தென் மொழிகளின் கூட்டு அவியலாக உள்ளது.
இந்த மொழியில் நிறைய ஒட்டு அட்சரங்கள் வந்து போகிறது. நிஜமாகவே பரிபாசை சங்கேத மொழிபோல்தான் இருந்தது. அம்மொழியும் கேட்க இனிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இலக்கணமும் சொற்றொடர்களும் கடினமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். பன்மொழிகள் அறிந்திருந்தாலும், சங்கேதியில் எந்த சொல்லுக்கு எந்த மொழியின் இணையை பிரயோகம் செய்கிறார்கள் என்பதை சற்றும் யூகிக்க இயலாது. எழுத்து வடிவம் இல்லாத மொழியைக் கற்பதும் கடினம்தான். சந்கேதிகளிடம் பேச்சு மொழியாக கற்றுக்கொண்டால்தான் உண்டு.
No automatic alt text available.

சனி, 11 ஆகஸ்ட், 2018

வேடம் தரித்து...

'தமிழ்த்தாய்' என்று பிரத்தேயகமாக ஒரு சிலையை பலகாலமாகப் போற்றி வணங்குவதும், அதைச் சார்ந்து சர்ச்சைகள் எழுப்புவதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. திராவிட அரசியலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தாய், ஏன் இறை அம்சம் பெற்றவளாகக் காட்டப்படவில்லை? அவளை நாடகத்தில் வேடம் கட்டும் பெண்போல் சித்தரித்ததே உண்மை. நம் ஆசாமிகளைப் பார்த்து அண்டை மாநிலங்களும் கெட்டன. அவர்களும் இதேபோல் காப்பி அடித்து ஆளுக்கொரு தாயை உருவாக்கி வைத்துள்ளனர்.
மொழி என்பது சிவனிடமிருந்து வெளிப்பட்டது. சிவனின் வாசிக்கால் சப்தமே அக்கலைகள். அந்த மொழியை சக்தியின் வடிவாக வழிபடுவது ஆதிகாலம் முதலே மரபு. திருமுறைகளில் தேவி என்ன பெயர்களால் பாடப்பட்டுள்ளாள்? தேன்மொழி அம்மை, மதுரபாஷினி, வாக்குதேவி, ஒசைக்கொடுத்த நாயகி, பன்மொழி அம்மை, மந்திரநலத்தாள், பண்ணுறை நாயகி, இப்படி பல திருப்பெயர்களால் அவள் அழைக்கப்படுகிறாள். சிவசக்தி பெண்மையின் வடிவெய்தி தேசம், நதிகள், மலைகள், என எல்லாமுமாக இருக்கிறாள். 
முப்பெரும்தேவியரின் கைகளிலுள்ள ஆயுதங்கள் ஏன் இவள் கைகளில் வெளிப்படவில்லை? தெய்வீக அடையாளங்கள் வெளிப்படாமல் திராவிடத் தலைவர்கள் சிருஷ்டித்தனர். அவளை சக்தியின் வடிவாக சித்தரித்ததே திராவிட கொள்கைக்கு எதிரானது. இன்னும் எதற்கு கேலிக்காக ஒரு மொழித்தாய்?

Image may contain: 1 person

மழை வெள்ளம்

இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேரளத்தில் நக்கலாக இயற்கை கேட்பதுபோல் இருக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி தந்துள்ளது.

கூடுதல் மொழி, பலம்!

மலையாளி தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்
கன்னடர் தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்
தெலுங்கர் தமிழகத்தின் முதல்வர் ஆகலாம்
ஆனால் தமிழரால் பிற மாநிலத்தில் முதல்வர் ஆக முடியுமா? ஆக முடியாது. ஏன்? தமிழைத் தவிர பிற மொழிகள் வேண்டாம், தமிழனுக்குப் பேராசை இல்லை அதனால் பிற மாநிலத்தை ஆள விருப்பமில்லை. ஆகவே, செந்தமிழ் மட்டும் போதும். போனால் போகிறது என்று ஆங்கிலம் தெரிந்து கொள்ளலாம். மற்றபடி மூத்தகுடிக்கு மற்ற மொழிகள் தேவையில்லை. "தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் முன்னொரு சமயம் சொன்னார். அப்படிப்பார்த்தால் அவருடைய மகன் திரு. மன்னர் மன்னன் அல்லவா ஆளவேண்டும்? வானொலியில் பணிசெய்துவிட்டு ஓய்வூதியம் பெறுகிறார்.
இது மாதிரியான கொள்கைகள் தமிழரல்லாத முதல்வர்கள் வைத்துக் கொள்ளவில்லை. சினிமாவில் ஈடுபட்டாலே பன்மொழிகளும் வந்துவிடும், நாங்கள் விரும்பிக் கற்கவில்லை என்று பூசிமெழுகிச் சொல்லிடுவார்கள். எம்ஜிஆர்-கலைஞர் போட்டுக்கொண்ட 'நீ தமிழனல்ல' என்ற சண்டையில் பல உண்மைகள் பழைய தினமணி-முரசொலி செய்தித்தாள்களில் அம்பலாமாயின. சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் மொழியும் பகுத்தறிவும் சினிமாவும் சேர்ந்து சமூக கட்டமைப்பையே குட்டிச்சுவர் ஆக்கியது. இதை செப்பனிடவே இன்னும் காலம் பிடிக்கும்.
எது எப்படியோ, இனியாவது ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்புவரையாவது பன்மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டும். அதன்பின் தொடர்வதும் விடுவதும் அவரவர் விருப்பம். எதற்கு? ஆட்சியைப் பிடிக்க அல்ல, வேலை வாய்ப்பையும் ஆளுமையையும் உயர்த்திக்கொள்ள!


செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

போய்வா முத்தமிழே!

தவறுகள் பல செய்திருக்கலாம், ஈழத் தமிழர்களுக்கு தீங்கிழைத்திருக்கலாம், இறை நிந்தனை செய்திருக்கலாம், சாதி வன்மம் தூண்டியிருக்கலாம், பிராயச்சித்தமும் ரகசியமாகச் செய்திருக்கலாம், கர்மபலனை தட்ட முடியாமல் வேதனை அனுபவித்திருக்கலாம், இறுதிக்காலத்தில் மனவலியில் துடித்திருக்கலாம்... யார் அறிவார் அதை? நெஞ்சுக்கு நீதியும், போர் வாளும், உடன்பிறப்புகளின் உன்னத தலைவராக முன்னிறுத்தியது. இதுவரை செய்த தர்ம /அதர்ம வினைகளுக்கு, நீர் வணங்கி பராமரித்த கோபாலபுர ஆலயத்தில் குடிகொண்ட ஸ்ரீ வேணுகோபாலரே சாட்சி. செய்தவற்றை கணக்கர் ஈசன் எழுத்தறிநாதராக ஏட்டில் பதித்துள்ளான். முரசொலியின் சப்தம் நின்றது, எழுத்தாளரின் பேனாவும் ஓய்வெடுத்தது! சூரியன் அஸ்தமித்தது என்றால் அது உமக்கு இழுக்கல்லவா? உதய சூரியன் மேற்கே உதித்தது இன்று!

Image may contain: 1 person, sunglasses, night, sky, outdoor, closeup and nature

கண்காணிக்கிறான்

கடைக்காரர் பார்க்காத வண்ணம் கிழிந்த நோட்டை நைசாகத் தள்ளுவது, செலுத்தவேண்டிய மீதம் சில்லறையை பிறகு வந்துத் தருகிறேன் என்று சொல்லி அப்படியே விட்டுவிடுவது, வேண்டாத ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருவது, பணம் போட்டால் வராது என்று தெரிந்தே நண்பனை தவறாக வழிகாட்டுவது,... என இப்படி பல வித செயல்களை அன்றாடம் நாம் எல்லோருமே விளையாட்டாகவோ சாமர்த்தியமாகவோ வெறுப்பிலோ பழிதீர்க்கவோ செய்வோம். ஆனால் பக்தி, தர்மநெறி பற்றி நிறைய பேசுவோம். நாம் எல்லாம் எந்த விதத்தில் தூய்மையானவர்கள்? "இந்த அளவுக்குச் செய்தால் பாதகமில்லை" என்று நாமே ஒரு வரையறை வைத்துக்கொள்வதுதான் தீங்கிழைக்கிறது.
தன்னை வழிபடும் அடியார்களின் வழிபாட்டு நிலையை கணந்தோறும் எழுத்தறிநாதனாக அறிந்து ஏட்டில் குறித்துக் கொள்கிறான். கண்காணியாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் இறைவனின் தன்மையை உணர்ந்தவர்கள் தவறேதும் செய்ய மாட்டார்கள் என்றகிறார் திருமூலர். (திருமந்திரம், 2067)
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.
போகரும் இதையே வலியுறுத்தியுள்ளார். விளைந்த தோட்டத்தில் காவல் காக்க யாருமில்லை எனக் கருதி அங்கு புகுந்து களவாடக் கூடாது என்கிறார். அங்கே மாடன் (சிவன்), சங்கிலி கருப்பு, வன துர்கை, காத்தவராயன் என எல்லாமே அரூபமாக காவல் செய்வார்களாம். உஷார்!
இதெல்லாம் சரி. இறை நிந்தனை செய்து, அவனை வணங்க விடாமல் திசை திருப்புவோரின் நிலையை இன்று கண்கூடாக நாம் காண்கிறோம். படத்தில், அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம். 
Image may contain: sky

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

விபரீத 'ஹீலிங்'

யூடுயூப் பார்த்து சுயமாக அறுவை சிகிச்சை செய்யவோ பிரசவம் கையாளும் அளவுக்கோ நம் நாட்டு ஜனங்கள் இன்னும் முன்னேறவில்லை. திடமான நல்ல ஆரோக்கியமான தாய்க்கே திடீரென பேறுகால விபரீதங்கள் நடக்க வாய்ப்புண்டு. கணவனே பனிக்குடத்தை உடைத்து நேரடியாக பையிலிருந்து ஒரு சிசுவை எடுப்பது மாயாஜாலமா? மருத்துவர்/செவிலியர் மேற்பார்வை இல்லாமல், உடலியல் செயல்பாடு /நாடி பரீட்சை பற்றி எதுவும் தெரியாமல், சுயமாக வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்துதான். காட்டுவாசிகள் சுயமாவே பெத்து நல்லாதான இருக்காங்க, நாம் செய்தா என்ன தவறு? இப்படித்தான் பலபேர் நினைக்கிறார்கள். இப்படி தூண்டி விடுவதற்கு வலைத் தளங்கள்தான் முக்கிய காரணம். எதற்கு என்ன மருத்துவம் வேண்டும் என்பதை பகுத்தறிவுடன் நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

விலங்குகள் எல்லாமே சுயமாகத்தானே பிரசவிக்கிறது என்று புத்திசாலியாய் கேட்போர் பல. அது ஐந்தறிவு என்றாலும் நம்மைவிட அதற்கு நிறையவே சூட்சும அறிவை இறைவன் தந்துள்ளான். நாம் ஆறறிவு, நாம் அது செய்வதுபோல் சிசுவை தொப்பென கீழே போட்டு, பனிக்குடத்தை உடைத்து, காலால் எட்டி உதைத்தும், நக்கியும் அதை உயிரூட்ட சாத்தியப்படாது. சித்தர்கள் இப்படியெல்லாம் செய்யுமாறு சொல்லவில்லை.  கர்ப்ப வைத்திய நிகண்டு, ஜெனன சிகிச்சை நூல்கள் எல்லாமே யாருக்கு? மனிதனுக்கா, விலங்குகளுக்கா? மனிதன் அந்நூல்களை முறையாகப் படித்து நடக்கவேண்டும் என்பதற்கு. இதை அறியாத மூடக்கூட்டத்தினர் சமூகத்தில் கூச்சலிடுவார்கள். 
தொல்காப்பியரின் மண்டையிலிருந்து அகத்தியர் தேரை எடுத்தார், நாம் ஏன் செய்யக்கூடாது? காந்தாரி தன் கருப்பிண்டத்தை பானைகளில் போட்டு நூறு பிள்ளைகளை பெற்றாளாமே? நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது? இவாறு நாம் படிப்பதை எல்லாம் தகவல் அளவில் மட்டுமே கொள்ளவேண்டும்.
பிரசவம் என்பது 'நீங்களும் சமைக்கலாம்' 'நீங்களும் ஜோதிடம் பார்க்கலாம்' வகையைச் சேர்ந்தது அல்ல. மருத்துவ சோதனைக்கே போகாமல் மனைவியின் பிரசவ நிலை அறியாமல் என்னவென்று அவள் கணவன் பிரசவம் பார்ப்பது? சிசுவின் காது மூக்கு வயிற்றிலுள்ள கெட்ட நீரை எப்படி எடுப்பது? தெரியாது. அதிக இரத்தம் போனால் என்ன செய்வது? தெரியாது. திடீரென தாயின் நாடித்துடிப்பு இறங்கினால் என்ன செய்வது? தெரியாது. பிறந்த சிசு நீண்ட நேரமாக அழவில்லை எனில் என்ன செய்வது? தெரியாது. எதையும் கையாளத் தெரியாமல் வீட்டில் என்ன பிரசவம் பார்ப்பான்?
"வீட்டில் மருத்துவச்சி பிரசவம் பார்க்கட்டும்" என்று ஒரு வரியை பாஸ்கர் அவர்கள் சொல்லி இருக்கலாம். மக்களுடைய அடிப்படை மருத்துவ அறிவு பற்றி யோசிக்காமல், ஹீலர் பாஸ்கர் ஏன் இப்படி ஒரு முகாமுக்கு ஏற்பாடு செய்தார் என்று புரியவில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இவருக்கு அவப்பெயரை தந்துள்ளது.
"ஏங்க, விளையாட்டா எங்க கிளம்பிடீங்க?"
"அண்ணே! பொழுது போகலை. போய் யாருக்காவது பிரசவம் பாத்துட்டு வரலாம்னு..."
"பிரசவம் பாக்க தெரியுமா?"
"குழந்தைய புடிச்சி இழுத்து தலைகீழா தொங்கவிட்டு ஓங்கி முதுகுல அடிக்கணும், அவ்ளோதானே? எவ்வளவு சினிமாவுல காட்டியிருக்காங்க"
"ஐயையோ... சிசு என்னத்துக்கு ஆகறது? தாய்க்கு வயிற்றை அழுத்தி அழுக்கை எடுத்து சுத்தம் செய்ய வேண்டாமா?"
"வயித்த சுத்தம் செய்வாங்களா? அப்போ சரி, பேதி மருந்து கொடுத்தா போச்சு. என்ன இப்போ? அண்ணே முந்தி உங்களுக்கு வயித்தால போனதுக்கு, வைத்தியர் கொடுத்த இரண்டுநாள் மருந்தை ஒரே வேளைக்கு கொடுத்தேனே! நியாபகமிருக்கா?"
Image may contain: 1 person, sitting

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ஒரே சிந்தனை

ஒரு வாரமாக நம்மூரின் எல்லா தொலைக்காட்சி செய்திச் சேனல்களிலும் கலைஞரின் உடல்நல சிறப்பு நிகழ்ச்சிதான் ஒளிபரப்பில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. 'காவேரியிலிருந்து நேரலை' என்று சன் டிவியில் ஒரு கேப்ஷன் காட்டினார்கள். நான் ஏதோ ஆடிப்பெருக்கு நாளில் காவேரி நதியைக் காட்டப் போகிறார்கள் என்று நினைத்ததுதான் மிச்சம். அது ஆஸ்பத்திரிக்கு வரும் நடிகர்கள் கூட்டத்தின் பெருக்கைத்தான் காட்டினார்கள். எட்டுவழி சாலையால் நில அபகரிப்புப் பிரச்சனை, காவேரி நீர் கடலுக்குபோய் தண்டமான விஷயம், ப்ளஸ்டூ மதிப்பெண் மறுகூட்டல், நீட் சேர்க்கை நிலவரம், அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு, என்று பல பிரச்சனைகளை கலைஞர் விழுங்கி ஜீரணித்துள்ளார். ஆக, உடல்நலம் தேறிவருகிறார் என்பது கண்கூடு. இவர் உடல்நிலையை விழுங்கும் அளவுக்கு திமுகவினரின் 'பிரியாணி சண்டை' நேற்று வரை பரபரப்பாக இருந்தது. இதன் நடுவே தமிழகத்தில் பூகம்பம் வந்தாலோ, இடுக்கி அணை உடைந்தாலோகூட, இவை பெரிய அளவில் செய்தி ஆகியிருக்காது.

புதன், 1 ஆகஸ்ட், 2018

ஆட்டுவிப்பவன் அவனே!

காஞ்சிபுரம் எகாம்பரேஸ்வவர் கோயிலில் உற்சவர் பஞ்சலோகசிலை மோசடியில் பங்குபெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
'சிலை பழுதுபட்டுள்ளது, மாற்றவேண்டும்' என்று அர்ச்சகர் மனு கொடுப்பது முதல், அதனை சோதித்து அறிக்கை தந்தபின், உலோகங்களை வாங்க அனுமதி தருவது முதல், உலோகங்களை ஸ்தபதியிடம் கொடுத்து சிலை செய்வது வரை, இக்குற்றப் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் என்று பார்த்தால் இது ஒரு சவாலான வழக்காகத்தான் தெரிகிறது. இறைவனே இவர்களை பாவம் செய்ய வைக்கிறான். அவனே சூத்திரதாரி!

No automatic alt text available.