எனக்கு நீண்ட காலமாகவே சங்கேதி மொழி சவாலாக இருந்து வருகிறது. என்னதான் தென்னக (திராவிட) குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதை பன்மொழிகள் அறியாமல் புரிந்துகொள்வது சவால்தான். சமயத்தில் அதுவும் புரியாது. நம் கொங்கு மண்டலத்தில் இம்மொழி பேசுகிறார்கள். மதுரையில்கூட நிரம்பியுள்ளனராம்.
என் முன்னே ஒருவர் ஓட்டலில் யாரிடமோ "அவ்விய சாப்படன வராஹளா?" என்று கேட்டுவிட்டு "ந தோய்சி வரட்டே?" என்பதுபோல் ஏதோ சொன்னார். (அவர் பேசியது 'அவங்க சாப்பிட வராங்களா? நா கை கழுவிட்டு வரட்டா?' என்பது புரிந்தது.) தமிழ் கன்னடம் மலையாளம் கலந்தடித்து, சமயத்தில் தெலுங்கும் தலை நீட்டிவிட்டுப் போகும்போல. தமிழை அடிப்படையாகவும் மற்ற திராவிட மொழிகளின் கலப்போடு சமஸ்கிருத உச்சாடனமும் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. தென் மொழிகளின் கூட்டு அவியலாக உள்ளது.
இந்த மொழியில் நிறைய ஒட்டு அட்சரங்கள் வந்து போகிறது. நிஜமாகவே பரிபாசை சங்கேத மொழிபோல்தான் இருந்தது. அம்மொழியும் கேட்க இனிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இலக்கணமும் சொற்றொடர்களும் கடினமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். பன்மொழிகள் அறிந்திருந்தாலும், சங்கேதியில் எந்த சொல்லுக்கு எந்த மொழியின் இணையை பிரயோகம் செய்கிறார்கள் என்பதை சற்றும் யூகிக்க இயலாது. எழுத்து வடிவம் இல்லாத மொழியைக் கற்பதும் கடினம்தான். சந்கேதிகளிடம் பேச்சு மொழியாக கற்றுக்கொண்டால்தான் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக