About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

விபரீத 'ஹீலிங்'

யூடுயூப் பார்த்து சுயமாக அறுவை சிகிச்சை செய்யவோ பிரசவம் கையாளும் அளவுக்கோ நம் நாட்டு ஜனங்கள் இன்னும் முன்னேறவில்லை. திடமான நல்ல ஆரோக்கியமான தாய்க்கே திடீரென பேறுகால விபரீதங்கள் நடக்க வாய்ப்புண்டு. கணவனே பனிக்குடத்தை உடைத்து நேரடியாக பையிலிருந்து ஒரு சிசுவை எடுப்பது மாயாஜாலமா? மருத்துவர்/செவிலியர் மேற்பார்வை இல்லாமல், உடலியல் செயல்பாடு /நாடி பரீட்சை பற்றி எதுவும் தெரியாமல், சுயமாக வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்துதான். காட்டுவாசிகள் சுயமாவே பெத்து நல்லாதான இருக்காங்க, நாம் செய்தா என்ன தவறு? இப்படித்தான் பலபேர் நினைக்கிறார்கள். இப்படி தூண்டி விடுவதற்கு வலைத் தளங்கள்தான் முக்கிய காரணம். எதற்கு என்ன மருத்துவம் வேண்டும் என்பதை பகுத்தறிவுடன் நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

விலங்குகள் எல்லாமே சுயமாகத்தானே பிரசவிக்கிறது என்று புத்திசாலியாய் கேட்போர் பல. அது ஐந்தறிவு என்றாலும் நம்மைவிட அதற்கு நிறையவே சூட்சும அறிவை இறைவன் தந்துள்ளான். நாம் ஆறறிவு, நாம் அது செய்வதுபோல் சிசுவை தொப்பென கீழே போட்டு, பனிக்குடத்தை உடைத்து, காலால் எட்டி உதைத்தும், நக்கியும் அதை உயிரூட்ட சாத்தியப்படாது. சித்தர்கள் இப்படியெல்லாம் செய்யுமாறு சொல்லவில்லை.  கர்ப்ப வைத்திய நிகண்டு, ஜெனன சிகிச்சை நூல்கள் எல்லாமே யாருக்கு? மனிதனுக்கா, விலங்குகளுக்கா? மனிதன் அந்நூல்களை முறையாகப் படித்து நடக்கவேண்டும் என்பதற்கு. இதை அறியாத மூடக்கூட்டத்தினர் சமூகத்தில் கூச்சலிடுவார்கள். 
தொல்காப்பியரின் மண்டையிலிருந்து அகத்தியர் தேரை எடுத்தார், நாம் ஏன் செய்யக்கூடாது? காந்தாரி தன் கருப்பிண்டத்தை பானைகளில் போட்டு நூறு பிள்ளைகளை பெற்றாளாமே? நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது? இவாறு நாம் படிப்பதை எல்லாம் தகவல் அளவில் மட்டுமே கொள்ளவேண்டும்.
பிரசவம் என்பது 'நீங்களும் சமைக்கலாம்' 'நீங்களும் ஜோதிடம் பார்க்கலாம்' வகையைச் சேர்ந்தது அல்ல. மருத்துவ சோதனைக்கே போகாமல் மனைவியின் பிரசவ நிலை அறியாமல் என்னவென்று அவள் கணவன் பிரசவம் பார்ப்பது? சிசுவின் காது மூக்கு வயிற்றிலுள்ள கெட்ட நீரை எப்படி எடுப்பது? தெரியாது. அதிக இரத்தம் போனால் என்ன செய்வது? தெரியாது. திடீரென தாயின் நாடித்துடிப்பு இறங்கினால் என்ன செய்வது? தெரியாது. பிறந்த சிசு நீண்ட நேரமாக அழவில்லை எனில் என்ன செய்வது? தெரியாது. எதையும் கையாளத் தெரியாமல் வீட்டில் என்ன பிரசவம் பார்ப்பான்?
"வீட்டில் மருத்துவச்சி பிரசவம் பார்க்கட்டும்" என்று ஒரு வரியை பாஸ்கர் அவர்கள் சொல்லி இருக்கலாம். மக்களுடைய அடிப்படை மருத்துவ அறிவு பற்றி யோசிக்காமல், ஹீலர் பாஸ்கர் ஏன் இப்படி ஒரு முகாமுக்கு ஏற்பாடு செய்தார் என்று புரியவில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இவருக்கு அவப்பெயரை தந்துள்ளது.
"ஏங்க, விளையாட்டா எங்க கிளம்பிடீங்க?"
"அண்ணே! பொழுது போகலை. போய் யாருக்காவது பிரசவம் பாத்துட்டு வரலாம்னு..."
"பிரசவம் பாக்க தெரியுமா?"
"குழந்தைய புடிச்சி இழுத்து தலைகீழா தொங்கவிட்டு ஓங்கி முதுகுல அடிக்கணும், அவ்ளோதானே? எவ்வளவு சினிமாவுல காட்டியிருக்காங்க"
"ஐயையோ... சிசு என்னத்துக்கு ஆகறது? தாய்க்கு வயிற்றை அழுத்தி அழுக்கை எடுத்து சுத்தம் செய்ய வேண்டாமா?"
"வயித்த சுத்தம் செய்வாங்களா? அப்போ சரி, பேதி மருந்து கொடுத்தா போச்சு. என்ன இப்போ? அண்ணே முந்தி உங்களுக்கு வயித்தால போனதுக்கு, வைத்தியர் கொடுத்த இரண்டுநாள் மருந்தை ஒரே வேளைக்கு கொடுத்தேனே! நியாபகமிருக்கா?"
Image may contain: 1 person, sitting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக