About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மூளைச்சலவை

19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஜமீன்தார் பண்ணையார் மற்றும் செல்வந்தர்கள் மட்டும் மாளிகைகளில் வாழ்ந்தனர். வீட்டின் கொல்லையில் கிணறும் தோட்டமும் இருக்கும். நதி /ஏரி/ குளம் என நீர்நிலைகளில் தான் குளித்தனர். காலைக் கடன்கள் முடிக்க புதர் /தோப்பு/ வனாந்தரம் என வெட்டவெளிக்குச் சென்றனர். அக்காலத்தில் மாளிகையில்கூட கழிவறை இருந்ததில்லை.

ராஜாங்க சமஸ்தான மேட்டுக்குடியினர் மட்டும் காலில் செருப்பு அணிந்தனர். அவர்களைத்தவிர பிராமணன் உட்பட யாரும் செருப்பு அணிந்ததில்லை. வைதீகர்கள் தோலை அணியக்கூடாது என்ற ஆச்சாரம் இருந்ததால் அவர்கள் வெறுங்காலுடன்தான் எங்கும் நடந்தனர். இதுதான் அன்றைய சமுதாய கட்டமைப்பின் நிலை. இக்காலத்தில்தான் எல்லாம் மாறிவிட்டது.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டில் திராவிட கட்சிகளின் அயராத பிரச்சாரத்தால் அருந்ததியர் (எ) சக்கிலியர் குலத்தினரை நன்கு மூளைச்சலவை செய்வதில் வெற்றி பெற்றன. அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் பகுத்தறிவு ஆலையம் கட்ட அருந்ததியினர் பூமிபூஜை போட்டதை நாம் செய்திகளில் படித்தோம்.

சமுதாயத்தின்மீது அவர்களுக்குள்ள கருத்து என்ன என்று தெரிந்தால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் மாற்றப்பட்டனர் என்பது புரியும்.

"ஆயிரக்கணக்கான வருசமா, ஐயனுங்க நம்மள செருப்பு தெக்க வெச்சாங்க, மலம் அள்ள வெச்சாங்க, இப்பவாது கலைஞர் ஐயாவால அரசாங்க சம்பளம் கெடைக்குது, நம்ம பாட்டன் காலத்துல பழைய சோறு வெங்காயம் கெடைச்சா அதுவே பெரிசு" என்று பேசினர்.

நமக்குத் தெரிந்து 60கள் வரை யார் வீட்டிலும் குளியலறை/ கழிவறை பிரத்தியேகமாய் இருந்ததில்லை. மிஞ்சிப்போனல் வசதி படைத்த சிலர் மட்டும் உலர் கழிவறைகள் (Dry latrines) கொல்லையில் வைத்துக் கொண்டனர். மற்ற எல்லோரும் வெட்டவெளியில் போய்தான் அமர்ந்தனர். அது நிலத்திற்கு உரமானது. எஞ்சியதை பன்றியும் காக்கையும் சுத்தம் செய்தது. வீட்டில் கழிவறை என்பது அநாச்சாரம் என்பதால் பிராமணன் வீட்டில் அக்காலத்தில் இருந்ததேயில்லை. மூவேந்தர்களின் அரண்மனையில்கூட இருந்ததில்லை. அரச குலத்திற்கென அது தனியே கட்டப்பட்டிருந்ததென தொல்லியல் படங்களில் தெரிகிறது. ஆக ஊர் மக்களுக்குச் செருப்பு தைக்கவும் ஊராரின் மலம் அள்ளவும் ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் இருந்ததா என்பது கேள்விக்குறி.

முஸ்லீம் படையெடுப்பிற்குப்பின் சின்னாபின்னமான தேசத்தில் பல குலத்தினர் பிழைப்புக்காக ஏதேதோ வேலைகள் செய்தனர். அப்போதும்கூட தமிழகத்தில் மலம் அள்ளும் கலாச்சாரத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். "என்ன… ஜனங்களின் மலத்தை அள்ளுவார்களா? அள்ளி என்ன செய்வார்கள்?" என்றுதான் அன்றைக்கு விசித்திரமாகக் கேள்வி கேட்டிருப்பார்கள். ஆங்கிலேயர் வருகைக்குப்பின் சமுதாயம் மாசுபட்டது. எல்லோரையும் ஜாதிவாரியாக ஆங்கிலேயன் பார்த்தான். ஏன்? செட்டியார்கள் முதலியார்கள் நாயக்கர்கள் அக்காலத்தில் துபாஷாகவும் பெரும் செல்வந்தர்களாகவும் இருந்து கோலோச்சினர். துரையிடம் செல்வாக்கான இவர்கள் ஜாதிப்பிரிவு நிலைக்கேற்ப பணிகளை உண்டாக்கி அன்றே மாற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

உண்மை நிலை இப்படியிருக்க கல்வியறிவு இல்லாத ஒரு பிரிவினரை அரசியல் ஆதாயத்திற்கு மூளைச்சலவை செய்து, ஆயிரம் வருடங்களாக ஐய்யமார்களுக்குத் தோல் காலணிகள் தைத்தும் மலம் அள்ளியும் தாங்கள் இழிவாக வாழ்ந்து வந்தனர் என்பதை உருவேற்றி அருந்ததியர் மனத்தில் துப்புரவாகப் பதிய வைத்ததில் திராவிடக் கட்சிகளின் அசாத்திய உழைப்பு வெளிப்படுகிறது.

"கோயில் கருவறையில் மூலவரையே இடிப்பார்கள்; தீயவர்கள் மூட மக்களை மூளைச்சலவை செய்வார்கள்; மனிதனின் வாக்கு செல்லுபடி ஆகாது காகிதத்தில் எழுதுவதையே நம்புவான்; மலம் மூத்திரம்கூட விலைக்கு விற்கும் காலம் வரும்" என்று காலக்ஞான தீர்க்கதரிசனத்தில் அன்றே ஶ்ரீவீரப்பிரம்மேந்திரர் சொன்னார்.





புதன், 21 ஆகஸ்ட், 2019

மாசற்ற சோதியன்

“ஆரியம் தமிழோடு இசை ஆனவன்” என்று திருமுறையில் அப்பர் சுவாமிகள் பாடியிருப்பார். இந்த ஆரியன்/ஆரியம் குறிப்பதென்ன? சிவபெருமான். மேன்மையான, அழகான, சிவந்த நிறமுடைய, புலமைமிக்க, ஓதுகிற என்று பலவாறு பொருள் கூறலாம். அவனுக்குத் திருவாதிரையன் என்ற பெயரும் உண்டு. சிதம்பரத்தில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் என்பது வெகு விமரிசையாக நடைபெறும். தேவாரப் பதிகங்களில் இவ்விழாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அந்த நாளில்தான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி வியாக்ரமர் முதலிய ரிஷிகளுக்கு நடராஜர் தரிசனம் தந்தார். அதேபோல் பெருமாளுக்குத் திருவோணம் சிறப்பானது.

ஆங்கிலத்தில் இந்த நட்சத்திரம் Orionis எனப்படுகிறது. அதனால்தான் தொன்மையான, தொடக்கம் அறியாத இனம், மொழி, வகையான சங்கதிகளுக்கு Ori என்பது முன்னொட்டாக வருகிறது. அவை எல்லாமே ஆதிரையனிடமிருந்து வெளிப்பட்டதுவே. நம் தென்னகத்தில் மட்டுமல்லாது எகிப்து கிரேகம் தென்னமரிக்க தேசங்களிலும் சிவனுடைய இந்த நட்சத்திரம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இவை எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு பார்த்தால், பல யுகங்களைக்கண்ட விஞ்ஞான சித்தர் போகருடைய பங்களிப்பு இதில் நிச்சயம் இருக்கும். ஏன்? பூமியின் சப்த சாகரங்களைச் சுற்றிவந்து அங்கெல்லாம் பலகாலம் தங்கி பஞ்சாங்கம், பண்டிகை, விழா, பூஜைகள் என பலவற்றை அமைத்துக் கொடுத்தார். அது பிற்காலத்தில் வெவ்வேறு கதைகளுடன் பரிணாமம் பெற்றிருக்கும். உலகத்திலுள்ள எல்லா பிரமிட்களுக்கும் தில்லையிலுள்ள பொன்னாலான பிரமிட்தான் சக்தியூட்டுகிறது. பரவெளி இணைப்பு, காலப்பயணம் முதல் வேற்றுகிரக சஞ்சாரம் வரை சகலமும் அடங்கும்.

ஓசைக் கொடுத்தவனாக தன் டமருகத்தை பதினான்கு (நவபஞ்ச) முறை சிவபிரான் அடித்தபோது அதிலிருந்து வெளிவந்த சப்தங்கள் ‘மகேஸ்வர சூத்திரம்’ எனப்பட்டது. வேதம் சார்ந்த எல்லா பூஜைகளிலும் இம்மந்திரம் இடம்பெறுகிறது. அந்த வடமொழி சப்தங்களில் கனமான புருஷ அம்சம் இருப்பதால் சமஸ்கிருதத்தை ‘ஈசனின் வடமொழி’ என்று சித்தர்கள் போற்றினர். (வட)ஆலமரம் அடியில் அமர்ந்து தெற்கு நோக்கி குரு தட்சிணாமூர்த்தியாக ஈசனே முனிவர்களுக்கு வேதம் அருளியதால் அது வடமொழி எனப்பட்டது. ‘மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறையோதும் எங்கள் பரமன்’ என்கிறார் அருணகிரியார். 

சிவனிடமிருந்து சக்தி வெளிப்பட்டதைப்போல், தன்னிலிருந்து வெளிப்பட்ட ஸ்திரீ அம்ச சப்தம்தான் தமிழ். அது மென்மையான ஓசையைக் கொண்டது. சக்தி தனித்துவமாகத் தெரிந்தாலும் அவளுக்குச் சிவன்தான் சக்தியூட்டுகிறான். ‘சிவனின்றி சக்தி இல்லை’ என்பதுபோல் இரண்டுமே அவனிடத்தில் சங்கமம். தமிழை சமஸ்கிருதமாக மாற்ற முடியாது. ஏன்? அதற்கான புருஷ சப்தங்கள் இதிலில்லை. தமிழில் சமஸ்கிருதத்திற்கு நிகராக சப்த சுத்தம் இல்லையென்றாலும் ஓரளவுக்கு உச்சரித்து எழுதுவது எப்படி என்று தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் உரைக்கிறது. அதனால்தான் ‘ஷ ஸ ஸ்ரீ ஜ ஹ ப்ஹ’ போன்றவை 247 தமிழ் எழுத்துகளில் வராது. ஆனால் இவையும் உயிருள்ள பீஜங்கள்தான்.

தமிழை மட்டும் ஆராயும் நேசர்களும் பகுத்தறிவு மொழியாளர்களும் இவ்விஷயத்தை எற்க முடியாததால் என்றுமே சண்டை ஓயாது. வடமொழி வேதங்களின் தலைவனான அவனே தமிழ்ச்சங்கத்தின் தலைவன். அதனால்தான் தேவாரம் முழுக்க ஆரியன் என்ற சிவனை போற்றுகின்றனர். இங்கே இணைப்பில் மகேஸ்வர சூத்திரம் உள்ளது. முதலில் உச்சரிப்பு தனித்தனியாகவும் பிறகு கோவையாக இசையுடன் ஒலிக்கும். உடுக்கையை கடைசியாகத் தட்டும்போது ஒலிக்கும் ‘சாப்பு’ சப்தம் அலாதி.

‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து’ என்று மனோன்மணியம் சுந்தரனார் பாடினார். அதுவே தவறு. அது இறை மந்திரமொழி என்பதால் என்றுமே அழியாது. 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதி சொன்னதுபோல் தமிழ்தான் உலகத்து முதுமொழியாகப் பேசப்படுவது. சிவன் எப்படி மறையனோ அதுபோல்தான் அம்மொழியும் மறைந்திருக்கும். மரத்தின் ஆதாரமான வேர் மறைந்திருக்க சக்திதான் விருட்சமாக வெளிப்படும். அதை அழிக்கவோ ஒழிக்கவோ ஒருவனால் முடியும் என்றால் அவன் மனிதனல்ல, ஈசன்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

யாரைக் கேட்க வேண்டும்?

நடிகர் மாதவன் நேற்று தன்னுடைய சமூகதளம் பக்கத்தில் ஆவணி அவிட்டம் (எ) உபாகர்மம் முன்னிட்டு பூணூல் அணிந்து முடித்த படத்தை பதிவிட்டிருந்தார்.

பலர் இதை எதிர்த்து விமர்சனம் செய்திருந்தனர். 'பகிரங்கமாக சாதியைக் காட்டுவது கண்டிக்கத் தக்கது', 'ஆரிய கலாச்சாரத்தை பரப்புவது வேதனை', 'வெறுத்து ஒழித்த இந்துமத சடங்குகள் எதற்கு?', 'பின்புறம் காணப்பட்ட ஷோகேஸ்  பொம்மைகளில் சிலுவை உள்ளது ஏன்?', என்ற ரீதியில் எல்லா மதத்தினரும் பலவித விமர்சனங்களை சந்தடி சாக்கில் போட்டிருந்தனர்.

நாமம் தரித்து சடங்கு/ சம்பிரதாயம் பற்றி அவருடைய பக்கத்தில் பதிவிட அவர் யாரைக் கேட்கவேண்டும்? இதனால் யாருக்கு என்ன தீங்கு வந்தது? இதை எதிர்த்துப்பேச மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவனவன் மாடு அடித்துத் தின்றதையும், கோழியின் கழுத்தைத் திருகி வாட்டி எடுப்பதையும், திராவிட மணியின் மகன்/பேரன்கள் அத்திவரதரின் காலில் வெட்கமில்லாமல் சரணாகதி ஆனதையும், தலைவர்கள் ரம்ஜான் நோன்புக் கஞ்சி குடிப்பதையும், நத்தார் விழாவுக்கு பாதிரிகளுடன் கைக்கோர்த்து கேக் உண்பதையும் துணிந்து பதிவிடும்போது, இந்த இவருடைய தனிப்பட்ட பதிவை எதிர்த்து விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. கருப்புச் சட்டை அணிந்து பகுத்தறிவு நாத்திகம் பரப்பி, திருமால் சம்பந்தப்பட்ட பெயர்களை தன் படங்களுக்குச் சூட்டும் அரசியல் நடிகரா இவர்?

போகிறபோக்கைப் பார்த்தால் தான் இந்து என்று வெளிப்படையாகச் சொல்லவே இருமுறையேனும் யோசிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். இது நல்லதல்ல!

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

நறுமணமும் நினைவுச் சுவடுகளும்

சற்றுமுன் சந்தைத்தெருவில் ஒரு கடையின் முன்பாகத் தாண்டிச் செல்லும்போது அலாதியான ஊதுபத்தியின் நறுமணம் என்னை வசீகரித்து நிறுத்தியது. அக்கணமே நான் என்னுடைய 3-5 வயது பால பருவத்திற்குப் போய்விட்டேன். என்னுடன் விளையாடியவர்கள், வாசலில் இராபிச்சை வருவது, பள்ளிக்கூட நாட்கள், அண்ணன்-அக்காளுடன் நிலாச்சோறு உண்டது, காவிரிப் படித்துறையில் பாறைமீது அமர்ந்து தாத்தா நீச்சல் அடிப்பதைப் பார்த்தது, காலில் ஆறும் புண்ணை மீன்கள் கொத்தியது, என மிகப் பழைய நினைவுகள் என் மனத்திரையில் கதைவோட்ட அசைவுகளாக வந்து போயின.
நம்முடைய மூளையில் ஆல்ஃபேக்டரி பகுதியின் செயல்பாட்டினால் சிறுவயது சம்பந்தமாக பதிந்த நினைவுகளை ஆழத்திலிருந்து பல வருடங்களுக்குப் பிறகும் தட்டி எழுப்பும் ஆற்றல் உண்டு. சிறுவயதில் நாம் உணர்வு பூர்வமாக சில சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தொடர்புப்படுத்தி வைத்திருந்ததை நம்மை அறியாமலே மீட்டுக்கொண்டு வந்ததை அதிவேகமாக இன்று நன்றாக உணர்ந்தேன். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றது.
நம் நாசியில் நுழையும் வாசம் நரம்பு மண்டலம் வழியே மூளையின் அடிப்பகுதிவரைச் சென்று உணர்வுகளைத் தூண்டுகிறது. விறகடுப்புப் புகை வெளிப்படுத்தும் வாசம், அதிகாலை காற்றின் வாசம், சில மலர்களின் நறுமணம், அணைந்த திரிஸ்டவ் எழுப்பும் வாசம், சிசுவின் தோல் வாசம், என பலதும் நம் கடந்தகால நினைவுகளை அடியிலிருந்து மீட்டுக்கொண்டு வரும். அது எத்தனை வருடங்களுக்கு முன்னே இருந்தாலும் உடனே வெளிப்படத் தவறுவதில்லை. வயதாகும்போது இதுபோன்ற நறுமணங்களை நுகர்ந்து மூளையின் செயல்பாட்டை பராமரித்து அதிகரிக்க முடியும். முதுமையை நோக்கிப்போகும்போது அல்ஷீமர்ஸ் /பார்கின்சன்ஸ்/ ஸ்கிசோஃப்ரீனியா நோய்கள் நம்மைத் தாக்காமலிருக்க இது அருமையான யுக்தி.
அப்பருவத்தைக் கடந்தபிறகு இதுபோன்ற நறுமணங்களை அனுபவத்துடன் தொடர்பு படுத்துவது அநேகமாக குறைந்தோ/ நின்றோ போய் விடுவதால், நம்முடைய சிறுவயது நினைவுகள் மட்டுமே தங்கி விடுகின்றது. அவ்வப்போது இதுபோன்ற நறுமணங்கள் மூலம் நம்முடைய வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்த்தால் எத்தனை இனிமையாக இருக்கும்! நியாபக மறதி வராமல் தடுக்கலாம். அதனால்தான் அக்காலத்தில் ஆண்களும் பெண்களும் தலையில் கொண்டையைப் போட்டு அதில் நறுமண மலர்களைச் சூடினர். இது வாசனாதி வைத்திய முறை!
No photo description available.

புதன், 7 ஆகஸ்ட், 2019

ழகர 51


ழகர 51 ஆறுமுகன் துதி


அழகொழுகும் அறுமுகமும்
  தழல் திகழும் எழில் அயிலும்
  விழையநட மிடுமயிலும்      புகழாதே    
அழுதுழலும் விழலனிவன்
  பழையவினை முழுதும்அற
  அருள்கமழும் திருவடிகள்     தருவாயே
நிழலில்வளர் தெய்வானை
  தழையில்வளர் குறமாது
  பழகிவளர் திருமுருக        உனைநாளும்
மொழிகுழற மனம்நெகிழ
  கழலடியில் முழுமைபெற
  முனிவன்என புனிதம்எழ     அருள்வாயே
குழையணிகள் செவிகுழைய
  முழுதுமொளிர் உடைதழைய
  மழலையென தவழவரு      எழிலோனே!
எழுபிறவி கழியில் அழி
  பழியனையும் பனிருவிழி
  இழிமழையில் முழுகவரம்   பொழிவாயே!
பொழிலழகும் வயலழகும்
  மதிலழகும் திகழவழி
  பொலிவுபெறு பழநிமலை    விழைவோனே!
பொதியமலை முனி அருண
  கிரி மகிழ இனியதமிழ்
  பொழியும்முழு உலகுதொழு பெருமாளே!

- ‘திருப்புகழ் திலகம்’ திரு.மதிவண்ணன் 


ஐந்துக்கு ஐந்து என இருபத்தைந்து கட்டங்கள் வரைந்து 'நமசிவய' என்ற பஞ்சாட்சரத்தின் பீஜ அட்சரமாக அ, , , , ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களான ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12  என்ற எண்ணையோ 10,18,14,6,3 எண்ணையோ சிதம்பர சக்கரத்தில் நாட்டி மொத்தம் ஐம்பத்தோர் அட்சரம் எழுதுவார்கள். அதைப்போலவே சிவனின் உருவான முருகனின் மொழி அழகைக் குறிக்கும் ழகரம் ஐம்பத்தொரு முறை இப்பாடலில் இடம் பெறுகிறது.

வெள்ளி, 19 ஜூலை, 2019

பயன்தரும் கழிவுகள்!

உணவுக் கழிவுகளிலிருந்து பயோ மீதனஷன் (Biomethanation) முறையில் எரிவாயு தயாரிக்கும் BioUrja என்ற காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் மூலம் எரிவாயு கலனை GPS Renewables Private Limited தயாரித்து வருகிறது. நகரத்திலுள்ள பல கார்பரேட் நிறுவனங்களுக்கும், ஓட்டல்களுக்கும், சமய ஸ்தாபனங்களுக்கும், பள்ளி /கல்லூரி விடுதிகளுக்கு, மாநகராட்சியின் மக்கும் திடக் கழிவு மேலாண்மை மையங்களுக்கும் (OFMSW) இது ஏற்றது. தினசரி உணவு/ சமையலறை திடக்கழிவுகளை கையாளும் வகையில் கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
சுற்றுப்புறச் சூழலையும் சுகாதார சீர்கேடுகளையம் கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டமானது (Solid Waste Management Rules, 2016), வெளியேறும் ஈரமான மக்கும் கழிவுகள் நிறுவனங்களுக்குள்ளேயே கையாளப் படவேண்டும் என்று வலியுறுத்துகிறது. சந்தையில் கிடைக்கும் மாற்று எரிபொருள் கலன்களின் 5 ஆண்டுகளுக்கான முதலீடு மற்றும் இயக்கவிலையொடு ஒப்பிடும்போது இக்கலன் சிக்கனமானது மற்றும் இது வெளியிடும் எரிபொருளின் உற்பத்தி அளவும், மதிப்பும் அதிகம். அதில் இடப்படும் ஒவ்வொரு நூறு கிலோ அளவு உணவுக் கழிவானது ஏழு கிலோ LPG இணையான Biogas எரிவாயுவை உற்பத்தி செய்து வெளியேற்றும். இதனுடைய நீடித்த இயக்கம் கணிசமான எரிபொருளைத் தந்து முதலீட்டின் இலாபத்தை ஈட்டித் தருகிறது. எரிவாயு உற்பத்திக்குப்பின் இதிலிருந்து வெளியேறும் இறுதிநிலை வண்டல் கழிவுகள் உரமாகப் பயன்படுகிறது.

சிறப்பம்சங்கள்
• நிர்மாணம் செய்து இயத்திற்குத் தயாராக உள்ள கலன்
• பிரத்தியேகமான கட்டுமானப் பணிகள் இல்லை
• தினசரி 1000 கிலோ கழிவுகளைக் கையாளும் கலனுக்கு 500 சதுரடி இடம் போதுமானது
• மிகக்குறைந்த அளவில் நீர் தேவை - தினசரி 1000 கிலோ கழிவுகளைக் கையாளும் கலனுக்கு 100-150 லிட்டர் நீர் போதுமானது
• 24x7 முறையில் கலனின் இயக்கத்தை கண்காணிக்கும் ஆன்லைன் Cloud-based monitoring of system health முறை கையாளப்படுகிறது. இயக்க நிலை, எரிவாயு உற்பத்தி அளவுகளின் மாத அறிக்கையும், காலாண்டு செயல் திறன் அறிக்கையும் இதில் அடங்கும்.
வர்த்தகத் தேவைகளுக்குத் தொடர்பு கொள்ள: bala@gpsrenewables.com
  
Image may contain: fire 
Image may contain: sky and outdoor

வர்மமும் அணிகலன்களும்

கிராமத்துக் கிழவிகள் கையாண்ட வர்மம் புள்ளிகளைத் தூண்டும் விதமாக காதில் பலவித அணிகலன்களை மாட்டிக் கொண்டனர். கருவறையில் சிசு தலைக் கவிழ்ந்து இருப்பதுபோல் நம் காதின் அமைப்பு உள்ளது. காதின் சோனை முதல் குரும்பு வரையுள்ள அமைப்பு தலை முதல் பாதம் வரையான பகுதிகளைக் குறிக்கும்.



வியாழன், 11 ஜூலை, 2019

வழி தவறிய இந்துக்கள்!

விளக்கு வைக்கும் அந்தி/சந்தி வேளையில் உட்கார்ந்து மும்முரமாகப் பேன் பார்ப்பது, நிலைப்படியில் அமர்ந்து தலைமுடியைச் சீவிக் கோதுவது, நாரையைப்போல் ஒற்றைக் காலில் தலைவாசலில் நின்றபடி நகம் வெட்டுவது, கண்ணாடி வைத்து மீசையைத் திருத்துவது, என இவையெல்லாம் சமய நெறிக்கு ஒவ்வாத செயல்கள். இதைப் பார்க்கும்போது மூன்றாவது நபரான நமக்கே எரிச்சல் வரும்.

அண்டை வீட்டின் முன்னால் துளசி மாடத்தில் சிறிய அகல் தீபம் எரிந்து கொண்டிருக்க, அதன் பக்கவாட்டில் அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் தன் மூத்த பெண்ணுக்கும் அவள் தன் தங்கைக்கும் பேன் பார்த்துக் கொண்டிருந்தனர். குரங்குகள் வரிசையாகப் பேன் பார்க்கும் மாமல்லபுர சிற்பம் என் நினைவுக்கு வர சிரித்துக் கொண்டேன். பீடையும் தரித்திரமும் அண்டும் அளவுக்கு மேற்சொன்ன அத்தனைவித செயல்களையும் அவர்கள் செய்வார்கள். குடும்பத்தில் சண்டை, பிளவு, நிதி நெருக்கடி, சுகவீனம், நிம்மதியின்மை என எல்லாம் நிலவுகிறது. அவர்கள் சுத்த முற்போக்காக உதய சூரியனில் ஐக்கியமானவர்கள். யாருடைய அறிவுரையினாலோ கடவுளுக்கு விளக்கேற்றும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். பக்தி சிந்தனைகளும் சமய நெறிகளும் அதிகம் பரவியுள்ள இக்காலத்தில் இன்னமும் நெறிதவறிய பழக்கங்கள் நிலவுவதற்கு அவ்வீட்டுப் பெரியவர்களே காரணம்.

ஐம்பது வயதான அவ்வீட்டு மகன் என்னிடம் ஒருசமயம் "நீங்க புக்ஸ் எல்லாம் எழுதற ஆத்தராமே... என்ன மாதிரி புக்ஸ்?" என்றார். "சித்தர்கள் பத்தினது" என்றேன். "அவங்கெல்லாம் யாரு?" என்றார். "அகத்தியர் திருமூலர் போகர் கேள்விப் பட்டிருப்பீங்களே அவங்கல்லாம் சித்தர்கள்" என்றேன். "இவங்க இன்டியன்ஸா... பக்தி லெக்சர் தந்து கச்சேரி செய்றவங்களா?" என்றார். "இல்லீங்க. அவங்க மிஸ்டிக் மென்" என்றேன். அவருக்கு என்ன புரிந்ததோ? ஐயோ பாவம்! இத்தனைக் காலமும் எதைப்பற்றியும் அறியாமல் சுப்ரதீபமாக இருந்துவிட்டார். 😥 ஒரு பள்ளிக்கூட மாணவனைக் கேட்டால்கூட அகத்தியரைப் பற்றி நன்கு சொல்வான். ஆக இவருக்கு என் புத்தகத்தைப் படிக்கத் தந்து கஷ்டப்படுத்தக் கூடாது என்று இருந்துவிட்டேன். 😜

விளக்கேற்றும் நேரத்திலும், நாள்-கிழமைகளிலும் எதைச் செய்வது/ செய்யக்கூடாது என்ற சமய நெறிகளை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நகரவாசிகளுக்கு இது புரியாதது ஏனோ?


சனி, 6 ஜூலை, 2019

மீண்டும் அதே முகம்!

முற்பிறவியிலிருந்த முகச்சாயலே மீண்டும் மறுபிறவியில் தொடர்கிறது என்பதை என்னுடைய அனுபவம் வெளிக்காட்டியதுப்பற்றி முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியமூட்டும் புதிர்தான். ஒவ்வொரு பிறவியில் ஒவ்வொரு வருணத்தில் ஏதோவொரு சாதியில் பிறந்து வாழ்ந்து மறிக்கிறோம். பிறகு வேறொரு இடத்தில் நம் ஊழ்வினைக்கேற்ப ஏதோவொரு குடும்பத்தில் உயர்/தாழ் பொருளாதாரச் சூழலில் பிறந்து வளர்ந்து, படித்து/படிக்காமல், வேலைக்குப் போய்/போகாகாமல், திருமணம் ஆகி/ ஆகாமல், பிள்ளைப் பேறு கிட்டி/கிட்டாமல் போகலாம். நாம் பிறந்த அந்த சந்ததியில் முன்னோரின் உடலமைப்பு முகச்சாயல், நடை, குரல் என்று பலவற்றைப் பெறுகிறோம். ராகு-கேது வழியே இப்பண்புகள் கடத்தப்படுவது நியாயமக உள்ளதுதான். விட்டகுறை தொட்டகுறையாக ஊழ்வினையை அனுபவித்துத் தீர்த்திட அவர்களே நாமாக பிறந்திருப்போம் என்ற காரணம் இருப்பதால் அவர்களுடைய பெயரையும் நமக்கு வைக்கிறார்கள்.
சரி. அவர்கள் எப்போதோ இறந்தபிறகு நேரடியாக இப்போதுதான் நாமாகப் பிறக்கிறார்களா? இல்லை! அவர்கள் இறப்புக்கும் நம் பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இதற்குமுன் அவர் எடுத்த வேறு ஜெனனங்களில் அந்தந்த சந்ததியில் பிறந்து ஊழ்வினையைத் தீர்த்துவிட்டு இறந்தபின், அடுத்து நாமாக இக்குடும்பத்தில் தக்க சமயத்தில் வந்து பிறக்கிறார்கள் என்பது என் மதியில் உணர்ந்த பொருள். சிக்னல் விழுவதற்குத் தக்கபடி ஒரே தண்டவாளத்தை வெவ்வேறு ரயில்களுக்கு மாற்றி வளைத்து வழி செய்வதைபோல்தான் இதுவும். இப்படியிருக்க அதே முகமும் உருவ ஒற்றுமையும் ஒவ்வொரு பிறவியிலும் வருமா என்பது நம்பும்படி இல்லையே என்று நானே நினைத்ததுண்டு. ஆனால் அது அப்படித்தான் என்பது பாலக்காடு பகவதி கோயிலில் தெரிந்தது. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
பல வருடங்களுக்குமுன் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் மகள் திருமதி.அருணா அவர்கள் அளித்த பேட்டியில், ஒரு முற்பிறவியில் தான் அக்பரின் மனைவி ஜோதாபாய் என்பதை டிவி நிகழ்ச்சியில் உறுதியாகச் சொன்னதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். வடநாட்டுப் பெண்ணான இவரை சிறு வயதிலேயே ஆதித்தனார் தன் மகளாக சுவீகாரம் ஏற்றார். அவர் தன் பிறந்த வீட்டு நபர்களுடன் சுற்றுலா போனபோது, ஃபதேபூர் சிக்ரியில் தான் வாழ்ந்ததாகவும் அக்பர் பாதுஷா தனக்காகத்தான் ஜோதா மஹால் கட்டித் தந்தார் என்றும் சொன்னார். அதை அப்போது யாரும் நம்பவில்லை.
பிறகு டிவி குழு இப்பெண்மணியை அங்கு அழைத்துச் சென்றது. அங்கு அரண்மனையில் ஒவ்வொரு இடத்திலும் நின்று தேம்பித் தேம்பி அழுதார். திடீரென டூரிஸ்ட் guide யிடம் ‘நான் அங்கு பிரசவித்த நினைவு வருகிறது, இப்போது அது என்ன இடம்?’ என்று கேட்டறிந்தார். காலவோட்டத்தில் அது கொத்தளம் குளியலறை என்று மாறியதாக ஏதோ ஹிந்தியில் சொன்னார். உள்ளே ஆங்காங்கு வண்ணச் சித்திர வேலைப்பாடுகள் நிறைய இருந்தது.
அருணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்போது மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றாராம். அப்போது அவரது சிறுவயது புகைப்படத்தைக் காட்டினார்கள். அதோடு ஃபதேபூர் சிக்ரி கோட்டையின் சுவற்றிலுள்ள ஓவியத்தையும் காட்டினார்கள். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இவருடைய முகம் அச்சு அசலாக அங்கு ஓவியத்தில் இருந்தது. இப்போது இவருக்கு வயது கூடியுள்ளதே தவிர அதே முகம்தான். இது எப்படி சாத்தியம் என்று அப்போதே என்னுள் கேள்வி எழுந்தது. ரஜபுத்திர ராணி ஜோதா பாய்க்கும், இந்த அருணாக்குவும் ஐந்து நூற்றாண்டுகள் இடைவெளி. ஓர் ஆன்மா தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டு விடுதலையாகும் வரை அந்த முகச்சாயலுடன் தொடர்கிறது என்பது என்னுடைய புரிதல். இக்கருத்தை நிராகரிப்போரும் உண்டு.

புதன், 26 ஜூன், 2019

‘காயம்-திரி’ தான் பிராயச்சித்தம்

இக்காலத்தில் வேதங்கள் அச்சு நூல்களாகவும் இன்டர்நெட்டில் மின்நூலாகவும் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் அதை சுயமாகப் படித்து மனனம் செய்து ஒப்பிக்க இன்றைக்கு சாத்தியப்படாது. ஏன்? நாம் ஏதோவொரு கல்வி கற்று அவரவர்க்குக் கிடைத்த உத்தியோகத்தைப் பார்த்து வருகிறோம். அதில் சமஸ்கிருதம் கற்று, அதன்பின் ஒவ்வொரு வேதத்தையும் அத்தியயனம் செய்து, அதை முறையாக ஓதுவதற்குள் சில ஆண்டுகள் போயிருக்கும். ஆகவே இது சரிபடாது. வேதம் பயின்று வாத்தியாராகத்தான் போகவேண்டும் என்று சிறுவயதிலேயே இலக்கு கொண்டோர் மட்டும் வேத பாடசாலையில் சேர்ந்து பயிலலாம். தன் பாலகன் எந்தத் துறையில் போகவேண்டும் என்பதை பெற்றோர் தான் முடிவுசெய்து அவனை பாடசாலையில் சேர்பிக்க வேண்டும்.
வேதம் பயிலும் குழந்தைகளுக்கு நாவிற்கு ருசியாக எல்லா பலகாரங்களும் உண்ணத் தந்து, தூக்கலாக மசாலா போட்டு குர்மா பிரியாணி தரலாமா? கூடாது. ஏன்? அத்தகைய வாசம் மூளையை ஸ்தம்பித்து, கிரகிப்புத் திறனை குறைத்து, தூக்கத்தை அதிகப்படுத்தி, உணர்ச்சியைத் தூண்டி, நினைவாற்றலை மழுங்கடிக்கும். பன்னிரண்டு வயதில் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்போய் அவனை பிரகாசிக்க விடாமல் செய்யும். ஆகவே சாதாரண சைவ உணவை மட்டுமே தர வேண்டும். வேதம் படிக்கும்போதே புலன் அடக்குதலையும் சேர்ந்து பயிற்சி எடுப்பார்கள். ஆகவே அந்த வயதுக்குள் பிரம்ம தண்டியாக தன்னை உருவாக்கிக் கொள்கிறான். பாடசாலையில் குருவிடம் விடைபெற்று இல்லம் வந்தபின் அவனுடைய ஒழுக்கத்தை யார் கண்காணிப்பது? பெற்றோர் தான்.
இது எப்போதும் சாத்தியப்படாது என்பதால் அவனுடைய தமக்கையாக அந்த காயத்ரிதான் அவனை கண்காணிப்பாள். அந்த வயதுக்கேற்ற விளையாட்டு புத்தி இருக்கும், அதை தடுக்க முடியாது. அதனால் வேதம் ஓதும்போது சப்த கோஷம் மாறலாம், அக்ஷரங்களின் ஸ்வரம் தவறலாம். ஒரு அக்ஷரம் மாறினாலே அங்கே அனர்த்தம் வந்திடும் அது பாவத்தைச் சேர்க்கும். இந்த தோஷத்திற்குப் பிராயசித்தமாக ஏற்படுத்தப்பட்டதே 1008 முறை உருவேற்றும் ‘காயத்ரி ஜெபம்’. அதோடு ‘காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நமஹ’ என்று பொதுவாக எல்லோரும் சொல்வதுண்டு. எதற்கு? உடலால் மனத்தால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும் மனித்தருள்க என்று வேண்டுவதாகும்.
காயத்ரி மந்திரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக உச்சரிப்பதுண்டு. வளர்க்கப்பட்ட முற்போக்கு சூழலுக்கேற்ப சமஸ்கிருதத்தை எதிர்க்கும் பௌருஷேய/அபௌருஷேய பிராமணர்களைப் பார்த்துள்ளேன். அவர்கள் மந்திரத்தை ஏனோதானோவென்று சொல்வார்கள். pa என்பதற்கு ba, cha என்பதற்கு sa, tha என்பதற்கு dha என்று தாறுமாறாகச் சொல்வதுண்டு. Padhma என்பதை Bathma, Badhma என்றும், Roopa என்பதை Rooba என்றும் அலங்கோலமாக உச்சரிப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
ஆகவே மந்திரமோ, அபிவாதயே சொல்வதோ, எதுவாயினும் அதனை எப்படி தீர்க்கமாக உச்சரிக்க வேண்டும் என்பதை பெரியவர்களிடம் பயிற்சி பெறுங்கள். வேதம் ஓதுவதற்கு வயது தடையாக இருக்குமா? ஆமாம். முதுமையில் முன்வரிசைப் பற்கள் விழத் தொடங்கும்போது உச்சாடனத்தை சப்தமாகச் சொல்லக் கூடாது. மானசீகமாக உருவேற்ற வேண்டும். ‘பல்லு போனா சொல்லு போச்சு’ என்பது மந்திரத்திற்குப் பொருந்தும். அதனால்தான் பல் இல்லாத உபாத்யாயர்களை வேதமந்திர கோஷத்தில் உட்கார வைக்காமல் அவர்களை மேற்பார்வைக்கு அமர்த்துவார்கள். நம்முடைய முற்பிறவியில் வடமொழியோ வேதமோ பயின்று அந்த விட்டகுறை இருக்கும்போது மறுபிறவியில் சிறு வயதிலேயே அதைக் கற்பதும் ஓதுவதும் எளிமையாக வந்துவிடும். இந்த ரகசியத்தை பலரும் அறியார். இன்னும் சிலர் காயத்ரி என்பதை காய் (cow) + அத்திரி (rishi) என்று அழுத்திப் பிடித்தபடி புது தினுசாக உச்சரிப்பார்கள். தமாஷ் தான்!
தன் காயத்தை திரியாக்கி ராஜரிஷி விஸ்வாமித்திரர் அருளிய காயத்ரி மந்திரத்தை தினமும் குறைந்தது 54 முறையேனும் உருவேற்றி மேன்மை அடையுங்கள். எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் அவற்றைவிட காயத்ரியே உயர்வானது. இதை ஜெபிக்காமல் மற்ற மந்திரங்கள் பலன் தராது.
இக்குழு பக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போது பதிவிட்டேன். இன்னொரு பதிவில் மீண்டும் சிந்திப்போம்.
Image may contain: one or more people, people standing and fire