About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 25 ஜூன், 2023

சிறியாநங்கை-சீந்தில் கிருதம்!

சிறியாநங்கை என்ற மூலிகை விஷ ஜந்துக்களை அண்டவிடாது. அதனால் வேலியோரம் நிறைய இருக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பிரச்சனை, காய்ச்சல், சளி, உடலில் வீக்கம், மதுமேகம் (டையாபடிஸ்) போன்றவகைகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. அது யோக மார்க்க உயர்வுக்கும் சின்மயத்தில் ஒளியைத் தரிசிக்கவும் காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை. இதுபோன்ற மூலிகை அஷ்டகர்மத்திலும் பயன்படும். 

எந்த ஒரு பச்சிலை மூலிகையாக இருந்தலும், அதைப் பறித்து உபயோகப்படுத்த நம் உடல்நிலை ஏற்றம் பெறும் அதோடு அதன் ஆன்மா மேன்மை அடையும். விதியாளியின் கர்மவினைக்கேற்ப அம்மருந்து உடலிலும் யோகத்திலும் செயல்படும் என்பது சித்தர் விதி. 

தோட்டத்திற்குப்போய் கீரை பறிப்பதுபோல் மருத்துவ மூலிகைகளை பறித்தேன் எடுத்தேன் என்று வந்திட முடியாது. அதற்கும் உயிர் சக்தி, மந்திர சக்தி உள்ளது, என்பதால் அதனிடம் மந்திரம் ஜெபித்துச் சாப நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். இது சைவ மார்க்கத்தின் சிறப்பு.

சிறியாநங்கையின் அனைத்து பாகங்களும் சமூலமாய் உபயோகித்தல் மருந்தே. அந்தச் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். ராஜக்கனி என்று அழைக்கப்படும் எலுமிச்சையின் சாற்றை ஒரு படி ஊற்றி மூன்று சாமம்வரை அரைத்தபின் அதை வில்லைகளாகத்தட்டி காயவைக்க வேண்டும். அதன்பின் அதன் எடைக்குச் சமமாகச் சீந்தில்கொடி சர்க்கரையை போட்டு பசும்பால்/ நெய் விட்டு நான்கு சாமம்வரை மைய ஆட்டி எடுக்கவேண்டும். இதில் ஒரு வராகன் (4 கிராம்) எடுத்து 'மசி' என சொல்லிவிட்டு அந்தி சந்தி என தினம் இருவேளை ஒரு மண்டலம் உண்டு வந்தால் வாசி திரிகூட பர்வதத்தில் சங்கமிக்க, ஆக்ஞாவில் சுடரொளி அக்னியாய்ப் பிரகாசிக்க, அங்கே பிரம்மரந்திரம் திறக்கும்போது கபாலபீட மேருவில் நாதங்கள் கேட்கும். திரிகூடம் எங்கே உள்ளது? புருவ மத்திதான் அது!

அதனால் சாகாக்கால் வேகாத்தலை போகாப்புனல் என்று சித்த குறியீட்டில் சொல்வதற்கேற்ப வைத்தியம் யோகம் ஞானம் ஆகிய மூன்றுக்கும் இந்த மூலிகைச்சமூலத்தின் கிருதம் ஏற்றம் தரும். எப்போதும்போல் இதற்கும்  பத்தியம் தேவை.

அதென்ன கிருதம்? ஒவ்வொரு நோய்க்குத் தக்கவாறு மூலிகைகளுடன் நெய் சேர்த்துத் தரும் மருந்துதான் கிருதம் என்கிறது ஆயுர்வேதம். முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலிருந்து மேற்படி பாடல்களை இங்கே சிந்தித்தோம்.

-எஸ்.சந்திரசேகர்

திகில் பயணம்!

போன நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆழ்கடலில் மூழ்கிச் சிதிலமடைந்து கூழாகிக் கரைந்துபோன டைட்டானிக் கப்பலை வேடிக்கைப் பார்க்க அப்படி என்னதான் இருக்கும்? The White Star Line என்ற கம்பனிக்குச் சொந்தமான அந்தக் கப்பலின் கட்டுமான உள்ளரங்க வரைபடத்தை ஆதாரமாக வைத்துத்தான் Titanic ஆங்கிலத் திரைப்படத்தில் தத்ரூபமாய் செட் போட்டு நிறைவாகக் காட்டினார்கள்.



ஏப்ரல் 15, 1912 அன்று இரவு நடந்தது ஒரு பயங்கரம். ஆயிரக் கணக்கானோர் ஜல சமாதி ஆன வட அட்லாண்டிக் கடல் பகுதி இன்றும் பீதியைக் கிளப்பும். ஆழ்கடல் கல்லறை தேசத்தில் பல அமானுஷ்ய சம்பவங்கள் எப்போதும் நடப்பதுதான். சில நிகழ்வுகள் செய்தியில் வரும் சில வராது.

கடலில் மட்டுமல்ல பூமியிலும் இதை ஒத்த இடங்கள் இயல்பாகவே இருக்காது. அதுபோன்ற இடங்களுக்குச் சுற்றுலா போக எவருமே தயங்குவார்கள். அங்கே முன்னொரு சமயம் ரோபோவை அனுப்பி அது எடுத்து அனுப்பிய நேரடி காணொளி காட்சியை டிஸ்கவரி சானலில் நள்ளிரவு தாண்டி ஒளிபரப்பினர். நானும் விடிய விடிய பார்த்து வியந்தேன்.

அண்மையில் நடந்த Ocean Gate சப்மரீன் ஆழ்கடல் விபத்து விவாதமாகிவிட்டது. இதற்கு முன் கடந்த காலத்தில் சென்று வந்த வண்டிகள் இவ்வளவு ஆழத்திற்குச் சென்றதில்லையாம். அதனால் அதீத அழுத்தத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. திமிங்கிலங்களேகூட தனக்குத் தோதான குறைந்த அழுத்த எல்லைக்குள்தான் பிரவேசிக்குமாம்.


விஞ்ஞான தொழில்நுட்பம் நவீனமாக முன்னேறினாலும் இயற்கையை அவை எப்போதும் ஏய்த்துவிட முடியாது. புரியாத கணித்து விடை காணமுடியாத புதிர்கள் பல உண்டு. பழவேற்காடு ராயபுரம் பகுதி மீனவர்கள் தங்களுக்கு நடுக்கடலில் ஏற்பட்ட திகிலான அமானுஷ்யங்களை விளக்கும் காணொளியைப் பல வருடங்களுக்கு முன் பார்த்துள்ளேன். அவர்கள் சொன்ன விஷயங்களைப் பலர் நம்பமாட்டார்கள்.

கடல் என்பது மாபெரும் ரகசியத்தைக் தன்னுள் வைத்துள்ள பெட்டகம். ஆழ்கடல் தன்மையறிந்து தண்ணீரின் நிறமறிந்து அதன் பண்புகளையும் கண்ணுக்குத் தெரியாத கொல்லக்கூடிய ஆபத்தையும் நோட்டமிட்டபின்தான் அதில் பயணிக்க, குதிக்க, முத்தெடுக்க, சூத்திரம் வகுக்க வேண்டும் என்கிறார் போகர். கண்ணாடி கை தொலைநோக்கி, புரட்டிப்போடும் நடுக்கடல் டைஃபூன், பாதையில் மறைந்த பாறைகள், மூழ்கியுள்ள நவதாது அக்னி மலைகள் என பலவற்றை ஆய்வுசெய்த பிறகே சாகரத்தில் பயணிக்கவும், கடலடி பொக்கிஷங்கள் சேகரிக்கவும், scuba கவசத்தில் குதிக்கவும் மூச்சடங்கி இருக்கவும் யோசிக்க வேண்டும் என்கிறார்.

அங்கே உஷாராக இருக்கவேண்டும் என்று ஆனானப்பட்ட சித்தரே மிகுந்த எச்சரிக்கையுடன் தன் சாதனைகளைச் செய்தார் என்றால் நம் என்ஜினியர்கள் எம்மாத்திரம்? Adventure tourism முன்பதிவு செய்து 13000 அடி ஆழத்தில் போய் உயிரைவிட தலைக்கு டிக்கட் விலை என்ன? $250000. 🤔

- எஸ்.சந்திரசேகர்

வியாழன், 15 ஜூன், 2023

காலச்சக்கரம் என்னும் ஆசிரியர்!

வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும், சுகமும் துக்கமும், வெற்றியும் தோல்வியும், அவ்வப்போது வந்து போவது இயல்பு. உண்மையில் அவை நிரந்தரமற்ற மாறும் வெளிப்பாடுகள் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. குளிர் வெயில் மழை இரவு பகல் என மாறுகின்ற தன்மையைப் போன்றது.

ஒரு காலத்தில் வாழ்ந்த ஏற்றமிகு வாழ்க்கையை நினைத்தோ, எப்போதோ அடைந்த வெற்றியை நினைத்தோ, அனுபவித்த சுகத்தை நினைத்தோ, நிகழ்காலத்தில் இக்கணம் நினைத்து நினைத்து மனம் வெதும்புதல் கூடாது. அதற்கு மாறாக மனம் குதூகலித்தால் நல்லதே. ஆனால் நம்மில் பலர் செய்வது என்ன? கட்டிய வீடு போச்சு, போட்ட நூறு பவுன் நகை போச்சு, வியாபாரம் போச்சு, நல்ல வாழ்க்கை போச்சு, உடல்நலமும் போச்சு, இனி எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று அங்கலாய்ப்போரே அதிகம். அதனால் மன உளைச்சல்தான் ஏற்படும்.

அதனால் இன்றைய நிலையுடன் ஒப்பீடு செய்துகொண்டு தோல்வி ஏமாற்றம் துக்கம் ஆகியவற்றை நினைத்து மனம் கவலை கொள்ளக்கூடாது. அவற்றை ஒரு படிப்பினையாக மனம் ஏற்கவேண்டுமே தவிர இன்று உட்காந்து புழுங்குவது சரியல்ல. மத்திமமாய் வாழப்பழகினால் நிம்மதி தங்கும்!

சுகம் துக்கம், வெற்றி தோல்வி பற்றியே சதா நினைத்தால் அவை எல்லாம் தன் ஊழ்வினைப்பயனே என்பதையும் மனம் ஒப்புக்கொண்டு ஏற்கவேண்டும். இந்தச் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு மௌனமாய் இருந்தால் அதுவே உத்தமம். 

வாழ்ந்து கெட்டவன் என்றால் வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்பதைப் புரிந்துகொண்டு அனுபவத்தால் மீண்டு எழுந்து விவேகத்துடன் எளிமையாக நிறைவுடன் வாழ்பவன் என்பதே பொருள்.

-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 9 ஜூன், 2023

காற்றுக் கணக்கு!

 


நேற்றைய என் கவிப்பாடலுக்குத் தொடர்புடையதே இந்தப்பதிவு. 

"வேகாக்கால் பற்றிக் காற்றை அடக்கும் கணக்கை அறிவேனோ  ...

பரஞான அருளால் விட்ட குறை தொட்ட குறை முடிப்பேனோ..."

என்று எழுதியிருந்தேன் அல்லவா?

அந்தக் காற்று எது? சதா உள்ளே காற்றை இழுத்து வெளியே விடும் வெந்துபோன மூச்சுதான் அது. சில சித்தர்கள் இதை சாகாக்கால் என்றும் மாற்றிச்சொல்வர். அதைத் தணியவிடாமல் சாகவிடாமல் சுவடே இல்லாமல் எப்படி மூச்சை அளந்து விடுவது? மூச்சை வாங்கி நாசி வழியே சரியாக விடாதது விட்ட குறை. அதைப் பாதியிலேயே திருப்பிச் சுழுமுனையைத் தொட மேல் நோக்கிச் செலுத்துவது தொட்ட குறை. ஆக காற்றை நம் போக்கில்தான் புஸ் புஸ்  என்று கண்டபடி விட்டு வீணாக்குகிறோம். அதனால் நம் ஆயுள் குறையும். இப்படி இருந்தால் மரணமில்லா பெருவாழ்வு எப்படி?

இதைப்பற்றிச் சிவவாக்கியர் அழகான விளக்கத்தைக் தருகிறார்.

'வடிவு கண்டு கொண்ட பெண்ணை

வேறொருவன் நத்தினால் விடுவனோ

அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே

நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்

சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’

                                 (- சிவவாக்கியம் - 006)

அழகான பெண்ணை விரும்பி மணம் செய்தபின், வேறொருவன் அவள்மீது மோகம் கொண்டு விரும்பி அவள் கணவனை அணுகினால் அவனை வெட்டிப்போட வேண்டும் என்று கோபம் வரும் அல்லவா? அப்படித்தான் அழகான நம் தேகத்தை எமன் கொண்டு போக வந்தால் அவனைக் கோபத்துடன் உதைத்துத் தள்ளாமல் அந்த உடலை மயானம்வரை அனுப்பிச் சுட்டெரிக்கக் கொடுப்பதா? என்கிறார் சிவவாக்கியர்.

மிக அழகான உவமை! ஆனால், எமனைத் தடுப்பது எப்படி என்கிற கேள்வி எழும். இதற்குத் திருமூலர் ‘காற்றைப் பிடித்தால் கூற்றை உதைக்கலாம்!’ என்று விடை சொல்கிறார்.

நம் மூச்சுக்காற்றை எப்படிப் பிடிப்பது? எமனை எப்படி உதைத்துத் தள்ளுவது? நம் பிராணனை முறைப்படுத்தி அதை வீணாக்காமல் அளந்து வாசியைப் பற்றி மிகக்குறைவாக நுகர்ந்தால் எமனை ஏமாற்றிவிடலாம், ஆயுளையும் நீட்டிக்க வைக்கலாம். பூரகம்- கும்பம்- ரேச்சகம் ஆழமாக நீண்டு இருந்தால் சாத்தியம். மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்!

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 19 மே, 2023

"அண்ணா, நீங்க தொடர்ந்து படியுங்க!"

நம் வாசக சகோதரர் இன்று காலை 8 மணி அளவில் மூவனூர் நோக்கி முசிறி-துறையூர் பிரதான சாலையில் பேருந்தில் போய்க் கொண்டிருந்தார். கூட்டம் குறைவாக இருந்ததால் இவருக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்துள்ளது. 

என்னுடைய காலாங்கிநாதர் ஞானவிந்த ரகசியம் புத்தகத்தைப் படித்துக்கொண்டே வந்தவர் சற்றே கண் அயர்ந்துவிட்டார். மணச்சநல்லூர் நிறுத்தத்தில் ஒரு பத்து வயது சிறுவன் இவர் பக்கத்தில் வந்து உட்காரும்போது இவருக்கு முழிப்பு வந்து பார்த்துள்ளார்.

அந்தச் சிறுவன், "அண்ணா, இங்கே நான் உட்கார்ந்தது இடைஞ்சலாக இருக்கா? வேணும்னா பின்னாடி வேற இடத்துலே போய் உக்காந்துக்கறேன்... நீங்க அந்த புக்கை தொடர்ந்து படிச்சு முடியுங்க" என்று சொல்லியுள்ளான். அதற்கு இவர் "இல்ல தம்பி இங்கேயே உக்காரு" என்றுள்ளார்.

பொடியன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியான பேச்சு பேசுகிறானே என ஆச்சரியப்பட்டு மேற்கொண்டு புத்தகத்தைத் தொடர்ந்து வாசித்து வந்துள்ளார். எதிர் காற்று அடிக்கவே மீண்டும் தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் விழித்துக் கொண்டபோது அங்கு அந்தச் சிறுவன் இல்லை. இத்தனை வருடங்களாக அத்தடத்தில் பயணிக்கும் இவர் ஒரு நாள்கூட அந்தப் பையனைப் பார்த்ததில்லை என்கிறார். தன்னை எழுப்பிவிட்டு மேற்கொண்டு அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டான். 

நடந்ததை என்னிடம் சொல்லி, "சார், இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவன் யாராக இருக்கும்?" என்று கேட்டார்.

"நேற்றுதான் போகர் ஜெயந்தி நடந்து முடிந்தது. ஒரு வேளை போகரே தன் குருவின் நூலைத் தொடர்ந்து படிக்கும்படி பாலகன் ரூபத்தில் வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. இதுபோன்ற அமானுஷ்யம் எதுவும் நடக்கும்" என்றேன்.

-எஸ்.சந்திரசேகர்



புதன், 5 ஏப்ரல், 2023

மீண்டும் சுற்றி வரும் சங்கதி! 🤔

"கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இயேசு கிறிஸ்து உயிர்தெழுதல் பற்றி முட்டாள் தனமாக பேசிவிட்டு ரமண மஹரிஷி ஒருவர் தான் உண்மையில் உயிர்தெழுந்தார் என்று இசைஞானி கூறினார். அவர் அப்படி பேசுவதற்கு அவர் என்ன வரலாற்று ஆசிரியரா? அல்லது பெரிய ஆராய்ச்சியாளரா? இயேசு கிறிஸ்து நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் கூறுவது காயப்படுத்துவதாக இருக்காதா?" இது இணையத்தில் வந்த செய்தி. ஜேம்ஸ் வசந்தன் பேசிய இச்செய்தி மீண்டும் நேற்று உயிர்த்தெழுந்துள்ளது. 

சித்தர்கள் பலர் சமாதியில் மூச்சடங்கி இருந்தபின் சில காலம் கழித்து வெளியே வந்தது பற்றி நாம் நிறைய அறிவோம். ஏசுவும் அப்படித்தான்! கை வெட்டப்பட்டாலும், முழு உடலும் மண்ணுக்குள் வெகுநாள் மூழ்கி இருந்தாலும் மகான் நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் திடீரென இயல்பு நிலைக்கு வந்து தன் போக்கில் நடந்து போனதும் இவ்விதம்தான். 

ஆணிகள் அடித்தும், ஈட்டியால் குத்தியும் வெளிப்போக்காக இறந்ததுபோல் தெரிந்தாலும் சிலுவையில் ஏசு இறக்காமல் உயர்நிலை சமாதி யோகத்தில் தன்னிலை மறந்து அப்படியே இருந்திருக்கலாம். எல்லா சூட்சும ரகசியங்களும் பைபிளில் வெளிப்பட அவசியமில்லை. சிலுவையிலிருந்து இறக்கிய பின் ஏசுவின் உடல் வைக்கப்பட்ட குகைப்பாறை வெடித்தது, ஒளி ரூபமாய் உடல் மறைந்து போனது. அவர் உயிர்த்தெழுந்ததை அறிவிக்கச் சீடர்கள் முன் தோன்றினார். இதெல்லாம் சித்தர்களின் இயல்பு. 12 முதல் 30 வயது வரை பதினெட்டு ஆண்டுகளில் இங்கே போகரிடம் அவர் என்னென்ன சித்திகள் கற்றார்? அகத்தியரிடம் ஏசு விருது பெற்றாரா? இதெல்லாம் நம்மைப்போன்ற சாமானியர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அது பரம ரகசியம்!

உள்ளதை உள்ளபடி ஏற்பதுவே நன்று. புகழின் உச்சியில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தைக் கையில் எடுத்தும் சர்ச்சைகள் பேசியும் எதற்கு இந்தத் தேவையற்ற கசப்பு? சிவசிவா!

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 28 மார்ச், 2023

இல்லைனாதான் என்ன?

எனக்குத் தெரிந்த ஒரு முதியவர் இன்று என்னிடம் பேசும்போது தன் மனக்குறைகளைச் சொல்லி வருத்தப்பட்டார். “எனக்கு இப்போ வயசு 80க்கு மேலாச்சு. என் வம்சம் தழைக்கணும்னு நினைச்சேன் ஆனா அந்த ஆசை நிராசையாவே போச்சு. என் சம்சாரத்துக்கும் வருத்தம் இல்லாம இல்ல. என்ன செய்ய .. எல்லாம் தலைவிதி. வாங்கி வந்த வரம் அப்படி. என் தம்பிக்கு ஒரு மகனும் ஒரு பேரன் பேத்தியும் இருக்காங்க. அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவேன்” என்றார்.

“ஐயா, உலகத்துல எத்தனையோ கோடி ஜனங்களுக்குக் கல்யாணம் ஆகியும் குழந்தையே இல்லாம இருக்காங்க. எத்தனையோ பேர் கல்யாணமே ஆகாம இருக்காங்க. சிலருக்கு ஆண் வாரிசு இல்லாம மகள் மட்டும் இருந்து அதோட அவரோட கிளை நின்னு போகும். அதுகெல்லாம் அவங்க ஒவ்வொருத்தரும் உக்காந்து வருத்தப்பட்டா வேலைக்கு ஆகுமாங்க? சந்ததி இல்லேனா என்ன? நீங்க ஆசிர்வதிக்கபட்டவர்னு நினைச்சிகோங்க” என்றேன்.

“நான் ஆசிர்வதிக்கபட்டவனா... என்ன சொல்றே... எப்படி?” என்றார்.

“ஆமாங்க. எனக்குத் தெரிஞ்சு நீங்க யாரையும் மோசம் பண்ணினது இல்ல, யார் சொத்தையும் அபகரிக்கலை, சொல்லப்போனா உங்க சேமிப்பிலேந்து அப்பப்போ கஷ்டப்படுறவங்களுக்குக் காசு தந்து உதவுறீங்க. ஏழைங்க கல்யாணத்துக்குத் தாலிகூட தந்தீங்க. இதை நீங்க போன பிறவியின் வினைகளைக் கழிக்கப் பிராயச்சித்தம்னு வெச்சிகிட்டாகூட தப்பில்லை. ஆக மொத்தத்துல தண்டிக்ககூடிய பாவங்கள் இப்ப செய்யலை! 

பாவங்கள் ஏதாவது நீங்க செய்திருந்து, அதையும் உங்க சொத்தையும் அனுபவிக்க உங்க சந்ததியிலே எவனும் வரலைனா அதுக்கு வருத்தப்பட்றது நியாயம். அப்படி எதுவும் இல்லாதபோது நீங்க ஏன் கண்டதையும் மனசுல போட்டுக் குழப்பிக்கறீங்க. எப்படியும் மிஞ்சியிருக்குற உங்க காசுபணம் உங்களுக்கு அப்புறம் உங்க தம்பிக்கும் அவர் மகனுக்கும் போகப்போகுது. ஆக உங்களுக்கு வம்சவிருத்தி அவசியப்படாதுங்கிறது உங்க குலதெய்வ சித்தம்னு நினைச்சிகோங்க. இனி உங்களுக்கு அப்புறம் குலதெய்வ பூஜையை உங்க தம்பியும் வம்சாவளி பேரனும் தொடர்ந்து எடுத்துச் செய்யப்போறாங்க.

வாழையடி வாழையா சந்ததிகள் இருந்தாதான் மூதாதையர்கள் மோட்சம் போவாங்கனு சாஸ்திரம் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. அவங்களே திரும்ப வந்து ஜனனம் எடுத்துப் பாவத்தைக் கழிக்க ஒரு வாய்ப்பு வரும்ங்கிற காரணத்துக்காகச் சொல்லபட்டது. இப்போ சொல்லுங்க உங்களுக்கு என்ன அவசியம் திரும்பி வந்து உங்க வம்சாவளியில பிறக்க? உங்க கிளையில் உங்களோடேயே ராகு-கேது சாபம், பிராரப்த கர்மா எல்லாம் நீர்த்துப் போச்சுங்கிறதுதான் நிஜம்" என்று சொல்லித் தேற்றினேன்.   

“ஓஹோ... இதுல இப்படியொரு சூட்சுமம் இருக்கோ...  இது தெரியாம போச்சே..  நான் எதுக்கு மனச போட்டு உளப்பணும்? எனக்கு இந்த வயசுல உன் மூலமா இது புரியணும்னு இருக்கு. சரிதான்! சந்ததி இல்லைனாதான் என்ன? நல்லா தெளிவா உணர்த்திட்ட. இன்னொருக்கா வரும்போது வீட்டுக்கு வந்துட்டுபோ” என்றார் மகிழ்ச்சிக் குரலில்.

- எஸ்.சந்திரசேகர்



சனி, 18 மார்ச், 2023

கண்ணாடி வளையல்!

இக்காலத்தில் கண்ணாடி வளையல்கள் அணியும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஐம்பது ஆண்டுகள் முன்புவரை என்னதான் பணக்காரர்களாக இருந்தாலும் தங்க/வைர வளையல்கள் அணிந்தாலும் அத்தோடு மரபு மாறாமல் சில கண்ணாடி வளையல்களை அணிந்தனர். முன்பெல்லாம் தோளில் பெரிய கண்ணாடிப்பெட்டி ஒன்றை வார் பட்டியில் தொங்கவிட்டபடி தெருக்களில் வளையல் வியாபாரி வருவார். இன்று அவர்களையும் காணோம். நவராத்திரி சமயம் விடம் வாங்கிக்கொள்ள வீட்டிற்கு வரும் பெண்களுக்கென பிரத்தியேகமாய்த் தர வளையல்காரர் அழைக்கப்படுவார். இன்று எதுவுமில்லை.





திங்கள், 6 மார்ச், 2023

எது சுமை?

வீடு மனைவி மக்கள் செல்வம் என எல்லா உடைமைகளையும் உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது என்கிறது இந்தப்படம். இந்தத் தத்துவம் உண்மை என்றாலும் நிஜவாழ்க்கையில் சாத்தியம் இல்லை. மூட்டைகளை ஏன் சுமக்க வேண்டும்? இந்தச் சுமைகள் வேண்டாம் என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டால், சங்கடங்கள் வராது. ஆனால் சமூகம் அப்படி விடாது, கட்டாயப்படுத்தும். அப்படியான சுமைகளை ஏற்றிவிட்டு இப்படியான ஓர் உபதேசத்தைத் தந்தால் அவன் என்ன செய்வான்? ஐயோ பாவம்! அவன் ஜாதகத்திலே சன்னியாசி யோகம் போன்றதொரு அமைப்பு இருந்தால் தப்பித்தான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்க்காது.

ஒரு நடுத்தர குடும்பஸ்தன் மூட்டைகளை உதறுவது எப்போது?

* வீட்டிற்கான மாத EMI கட்டவேண்டும், அசலை மொத்தமாக அடைத்தபின்... 

* பொருளீட்டி வைத்து மகனை/மகளைக் கரை சேர்த்த பின் ....

* மனைவியை அம்போவென விடாமல் அவளுக்கான மாதவருவாய் ஏற்படுத்தித் தந்தபின்... 

நடுவில் வேலை பறிபோகாமல் இருந்து மாத சம்பாத்தியம் தொடர்ந்து வந்தால் ஒருவாறு சமாளிக்கலாம். இதெல்லாம் நிறைவேறவே அறுபது வயதாகிவிடும். அப்போது மூப்பினால் சர்க்கரை/ ரத்தக்கொதிப்பு/ மூட்டுவலி எல்லாம் படை எடுத்துவந்து மோதும். மருத்துவச் செலவும் பலகீனமும் ஏற்படும். எல்லாம் தீரும்வரை இறைவனைச் சுமக்க வாய்ப்பே அமையாது. அகக்கடல் உறங்கி அமைதி கொள்வது எப்போது? திடீரென விரக்தியில் உதறிவிட்டு ஓடிப்போனால் உண்டு. ஆனால் அதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும்.

எங்களுக்குத் தெரிந்த ஒரு பாட்டியம்மா, வயது 99. அவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார். அவருக்கு ஆறு பெண் பிள்ளைகள். சுமார் 60 வருடங்களுக்கு முன் அவருடைய கணவர் பெரிய தொழில் செய்து நொடிந்து போனார். கடன் தொல்லைகளாலும், பெண்களைக் கரை சேர்க்க முடியாத அச்சத்தாலும் வீட்டைவிட்டு ஓடியே போனார். பிறகு காலவோட்டத்தில் தாயும் மகள்களும் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவாறு காலூன்றி நின்றனர். அந்தக் கிழவர் கடைசிவரை வரவில்லை. நான் பார்க்கும்போது கால்கள் பலமிழந்த நிலையில் அந்தப் பாட்டி தரையில் உட்கார்ந்தே நகர்ந்து போவார். வெளியில் எங்கேனும் செல்ல மட்டும் சக்கர நாற்காலி. 

படத்தில் உள்ள சங்கதிபடி மூலவனைச் சுமக்கவே அக்கிழவர் இப்படிச் செய்தார் என்று அன்று நடந்த உண்மை நிலையை அறியாதோர் நினைக்கலாம் அல்லவா?

போகர் தன்னுடைய குரு காலாங்கியின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கையில், "பெண்ணாசை அறுத்துத் தன் மக்களை வெவ்வேறாய்ப் போய் எங்கோ திரியும் என்று விடுத்தார்" என்கிறார்.

பக்தியோகம் தவிர பெருஞ்சித்தர்கள் செய்ததை எல்லாம் நிஜ வாழ்க்கையில் சாமானியர்கள் பின்பற்ற முடியாது‌ என்பதே நிதர்சனம். ஜெனித்தது முதலே இறைவனை ஆன்மரூபமாய்ச் சுமந்துகொண்டுதான் வாழ்கிறோம். உள்ளே ஒருவன் உள்ளான் என்பதை இளம் பிராயம் முதலே உணர்தல் சிறப்பு. நம்முள் குடியிருப்பதால் நம் பாரத்தை அவன்தான் சுமக்கிறான் நாமல்ல என்று நினைத்தால் எதையும் உதறித்தள்ள அவசியமில்லை.

-எஸ்.சந்திரசேகர்



கோட்டை அதிசயங்கள்!

“இலங்கையில் நான்கு தந்தங்களுடன் பெரிய யானை இனங்கள் Gomphotheres இருந்ததா? இராவணனின் தேசத்தில் என்னனென்ன அதிசயங்கள் இருந்தன?” என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

வால்மீகி இராமயணத்தில் சுந்தர காண்டத்தின் சர்கம் 4, பாடல்கள் 4,5 மற்றும் சர்கம் 9 பாடல்கள் 25,26,27 பகுதியில் இராவணனின் கோட்டையைச் சுற்றி அனுமன் பார்த்த அதிசயங்கள் பற்றி விரிவாகக் காணக்கிடைக்கிறது.


“இராவணின் உள்சுற்றுக் கோட்டையில் வீர அனுமன் நுழைந்தான். அது சொர்க்கத்திற்கு நிகராக இருந்தது. குதிரைகள், யானைகளின் ஒலிகள் எதிரொலித்தன, தேர்களில் பூட்டிய உலோக மணிகளின் சப்தமும், ஆகாய விமானங்கள் எழுப்பும் ஓசையும் காதைப் பிளந்தன. நான்கு தந்தங்கள் (சதுர்தந்த), மூன்று தந்தங்கள் (த்ரிதந்த) கொண்ட யானைகளும் காவலுக்கு இருந்தன. அவனுடைய பிரம்மாண்ட கோட்டையின் வாயில் தோரணங்கள் அழகானதாகவும், கோட்டையைச்சுற்றி வலிமையான ராட்சதர்களும், வெளியே கூர்வேல் ஏந்திய வீரர்களும் எந்நேரமும் காவலுக்கு இருந்தனர். உள்ளே பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது” என்று வால்மீகி இராமாயணம் சொல்கிறது. 

அதை நம் சித்தரின் பாடல்களோடு ஒப்பீடு செய்து பார்ப்பதுதான் சரியாக இருக்கும். திரேதா யுகத்தில் பார்த்ததையெல்லாம் போகர் தன்னுடைய சப்தகாண்டத்தில் உரைக்கிறார். காலாங்கிநாதர் அவருக்கு விளக்கியது போக போகரும் பார்த்த கோட்டை அதிசயத்தை ஆறாம் காண்டத்தில் புலிப்பாணிக்குச் சொல்கிறார். 


“வெகுகோடி காலங்களுக்கு முன் பொன்னிலங்கையின் மன்னன் தசமுக இராவணனின் கோட்டையில் பார்த்த வளமான அதிசயங்கள் மிக்கவுண்டு. தேர் ராஜரின் கோட்டை விண்ணை முட்டும், சண்ட மாருதமும் பிரசண்ட மாருதமும் வீசும் வகையில் கோட்டைக்குள் ஆழியும் வந்து போகும், எழும்பி வடியும் முகத்துவாரமும் உண்டு. அவனுடைய கோட்டையைச் சுற்றி பராகிரம ராட்சதாள் நிறைய பேர் காவலுக்கு இருந்தனர். தூரத்தே வானரர்களும் கண்டேன். தேர்வேந்தனின் அதிசயிக்கும் ரதகஜ தோற்றங்களும் அதன் சப்தங்களும் அதீதமாய் அச்சுறுத்தும் வகையில் இருந்தன” என்று போகர் சொல்கிறார்.

இராமாயணம் அண்மையில்தான் நடந்திருக்கும் என்றோ அது வெறும் கட்டுக்கதை என்றோ பலர் திரித்துச் சொல்லும்போது, வால்மீகியும் போகரும் அது அப்படியல்ல, வெகுகோடி வருடங்களுக்கு முன் திரேதா யுகத்தில் நடந்தது என்று அடித்துச் சொல்வதைக் காட்டிலும் சான்று வேண்டுமோ? தேவபாடையில் இயற்றிய வால்மீகியும், நற்றமிழில் இயற்றிய போகரும் உரைத்த இராவணன் கோட்டையின் அதிசயங்கள் யாவும் பொய்யல்ல மெய்! 

-எஸ்.சந்திரசேகர்