About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஆட்டுக்கிடா வாகனம்!

கோவை, சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில் கந்தசஷ்டிப் பெருவிழா இன்று நடந்தது. மடாலயம் பதிவேற்றிய காணொளியைத் தற்சமயம் முகநூலில் பார்க்க நேர்ந்தது. 

உந்துதல் வர ஒரு படம் பிடித்தேன். அது மானோ என நினைக்கத் தோன்றியது. அதை உற்றுப்பார்த்தால் அது மானல்ல, உட்புறம் வளைந்த கொம்புகளுடன் உள்ள முருகனின் வாகனமான ஆட்டுக்கிடா என்பது தெரிந்தது. உங்களுக்குத் தெரிகிறதா?

இது ஆட்டுக்கிடாதான் என்கிறது கந்தர் கலி வெண்பா பாடல்.

"நெருப்பில் உதித்து அங்கண் புவனம் அழித்துலவும்

செங்கட் சிடா அதனை சென்று சென்று கொணர்ந்து

அதன் மீது இவர்ந்து எண்திக்கும் விளையாடும் நாதா!’’

அதாவது, வேள்விக் குண்டத்திலிருந்து  அஞ்சத்தக்கப் பெரிய ஆடு ஒன்று உலகையே அழிக்க உலவுவதுபோல் தோன்றியது. வீரபாகுதேவர் விரைந்து சென்று அந்தச் செங்கண் செம்மறிக்கடாவை அடக்கி இழுத்துக்கொண்டு வந்து முருகனிடன் ஒப்படைக்கிறார். முருகப் பெருமான் அதன்மீது ஏறி அமர்ந்து, அதை எட்டுத் திக்கிலும் செலுத்தி விளையாடினார். இதுவே அப்பாடலின் பொருள். நாமும் கண்டு தரிசித்தோம்.

ஓம் சரவணபவ 🕉️ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

-எஸ்.சந்திரசேகர்




அசைந்தாடும் ஊஞ்சலில் மனம்!

ஆன்மிக முகநூல் பக்கத்தில் என்னுடைய கருத்துரைக்கு முன்பாக ஒரு அம்மையாரின் பதில் இருந்தது. அவருடைய பெயர் பரிச்சயமாய்த் தெரிந்ததால் அவருடைய ப்ரோஃபைல் பக்கத்தைச் சென்று பார்வையிட்டேன். என்ன ஆச்சரியம்! அவர் எனக்கு 10ஆம் வகுப்பு ஆசிரியை.

உடனே அவருக்கு, “மேடம், நான் படித்த பள்ளியில் நீங்கள்தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர். உங்கள் கணவர் திரு.ராஜேந்திரபிரசாத் ஒரு மனநல மருத்துவர் என்று நீங்கள் ஒருமுறை சொன்னது நினைவுள்ளது. வேளச்சேரி விஜயநகரில் வசித்தீர்கள். பத்தாம் வகுப்பு தொடக்கம்வரை எங்களுக்குப் பாடம் நடத்திய திரு.மாணிக்கம் அச்சமயம் திருச்சி நேஷனல் காலேஜுக்கு வேலை கிடைத்துப் போனதால் நீங்கள் வந்தீர்கள். மெட்ரிகுலேஷன் வகுப்பிற்கு ஆங்கிலம் துணைப்பாடம் ‘டிரெஷர் ஐலன்ட்’ இருந்தது. உள்ளூர் திரையரங்கில் அப்பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை அறிந்து மொத்த வகுப்பையும் உங்கள் செலவில் படம் பார்க்க அழைத்துச் சென்றது நினைவிருக்கிறதா? உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ இறையருள் புரியட்டும்” என்று பதிவிட்டேன்.

அதைப் பார்த்துவிட்டு அவர், “ஆமாம்ம்ம்... நன்றாக நினைவுள்ளது. இதைவிட எனக்குப் பெருமையான தருணம் இருக்க முடியுமா?  மிக நீண்ட... பல வருடங்கள் கழித்து என்னை என் பழைய மாணவர் நினைவு வைத்துக்கொண்டு பேசியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி... ஆனந்தம்! ஃபிரென்ட் ரிக்வெஸ்ட் தருகிறேன் எற்றுக்கொள்ளவும்” என்று திருமதி ரமணி பிரசாத் போட்டிருந்தார். 

காலம்தான் எத்தனை வேகமாய்க் கடந்து போய்விட்டது! நம் உடல் மூப்படைந்து போனாலும் மனம் மட்டும் என்றுமே இளமைக்காலத்து நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை. தற்போது கோவை அருகே பாலக்காட்டில் கணவருடன் வசிக்கும் அவருக்கு வயது 74.

-எஸ்.சந்திரசேகர்



அவதாரங்களும் நிலைகளும்!

வேதம்/புராணம் கூறும் எந்த ஒரு கருத்தையும் விளக்கவோ ஒப்பீடு காட்டவோ நம் சித்தர்களின் நூல்கள் பெரிதும் உதவுகின்றன. மேரு மலையில் (கபால சக்கரத்தில் அல்ல) தான் கண்டு தரிசித்த தசாவதார ரிஷிகள் யார் யார் என்பது பற்றி காலாங்கி தன்னுடைய சீடர் போகருக்கு விளக்கியுள்ளார். அதில் மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்பது வரிசை. இனி வரவுள்ள கல்கி எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்பே கூறிவிட்டதால் அதையும் இந்த வரிசையில் முன்கூட்டியே சேர்த்தாயிற்று. 

அழிக்கும் தொழிலைச் செய்வது சக்தி/விஷ்ணு. அதாவது சிவனின் வாமபாகம். உடனே நீங்கள் முருகனைப்பற்றி இக்கணம் நினைப்பீர்கள். சிவனாகிய குகன் அழிப்பதில்லை. தாயும்/ மாமனும் வழங்கும் யோகசக்தியை/ஆயுதத்தைக் கொண்டு அவன் ஆவேசமாகத் தாக்குவான், அதனால் முருகனே சத்ருசம்ஹாரம் செய்தான் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவன் செய்வதில்லை. 

நாம் அறிந்த விஷ்ணுவின் தசவதாரங்கள் எல்லாமே தீயோரைக் கொன்று நல்லவர்களைக் காக்கும் நோக்கில் நடந்ததுவே. கீதையில் “யதாயதா ஹி தர்மஸ்ய...” என்ற ஸ்லோகத்தில் கிருஷ்ணன் சொன்னதுபோல் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வருவது அவதாரம். அவதாரம் என்றால் பரப்பிரம்மமே உருவமேற்று இறங்கி வருதல் என்பதாகும். அது ஜீவராசிகள் வடிவாகவோ, பிராணி- மனிதன் கலந்த வடிவமோ, மனிதனாகவோ இருக்கும். 

மச்சம்/ கூர்மம்/ வராஹம் அவதாரம் எல்லாம் அதனதன் வடிவில் இறை அம்சத்துடன் வந்து செயல் புரிந்தது. வாமனன்/நரசிம்மம்/ பரசுராமன் அவதாரம் எல்லாம் அக்கணம் மட்டும் ஆவேச சக்தி வெளிப்பட்டுப் பணியை முடித்தது. ராமன் கிருஷ்ணன் அவதாரம் எல்லாம் மனிதனாக அவதரித்து வாழ்ந்து தமக்கு இட்ட பணியை முடித்தனர். 

ஆக நம் புரிதலுக்காக அவதாரங்களை அம்சம்/ ஆவேசம் / பூரணம் என்ற நிலைகளாகக் கொள்ளலாம். கோபம் கொண்டு ஷத்ரிய படைகளை அழித்து ஒழிக்கும் வரை பரசுராமனிடம் இறைசக்தி இருந்தது. வந்த நோக்கம் நிறைவேறியதும், பரசுராமனிடம் சக்தி வெளியேறியது. நித்ய சிரஞ்சீவியாக வாழ சிவன் அருள் புரிந்தார். நரசிம்ம அவதாரமும் அப்படியே! ஹிரண்யனை சம்ஹாரம் செய்யும் நேரம் மட்டும் அவதாரமாகப் பிரவேசித்து முடிக்கிறார்.           

‘இராமன், கிருஷ்ணன் எல்லாம் கடவுள் என்றால் ஒரு கட்டத்தில் ஏன் வாழ்க்கை முடிந்து போனது?’ என்று போகர் கேட்பது சரிதானே? அவர்கள் விஷ்ணுவின் பூரணத்துவத்துடன் மனிதர்களாக அவதரித்து வாழ்ந்தனர். அந்தந்த யுகத்தில் வந்த வேலை முடிந்தவுடன் மறைந்தனர். நந்தி, பிரம்மன், விஷ்ணு, இந்திரன், முருகன், இராமன், என தானும் அந்நிலைகளில் ஜெனித்து வாழ்ந்ததைத் தன் நூலில் போகர் சொல்லியுள்ளார். 

காலாங்கி நாதருக்கு அவதாரங்கள் எல்லாமே எப்படி ஒரு சேர காட்சி தரமுடியும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. விஷ்ணுவின் அவதார உருவங்கள் அழிந்தாலும், சூட்சும உருவங்கள் அதே சக்தியுடன் நிலைக்கும் தோன்றும் மறையும். அவ்வண்ணமே அவதார ரிஷிகள் சித்தர்பிரானுக்குத் தரிசனம் தந்தனர். புத்தரிஷியையும் பார்த்துள்ளார். ஆனால் ஆதி புத்தரை நாம் கணக்கிலேயே கொள்வதில்லை. 

தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீபாத வல்லபர், அகல்கோட் மகாராஜ், ஷிர்டிசாயி, சிருங்கேரி நரசிம்ம பாரதி எல்லோரும் வெவ்வேறு காலங்களில் ஜனனம் எடுக்கும் முன்னமே ஒருவரையொருவர் சந்தித்து உரையாடியுள்ளனர். பரசுராமனும் இராமனும் சந்தித்தனர், திருப்பதியில் வாசம் செய்ய வெங்கடாசலபதி ஆதிவராஹ சுவாமியிடம் அனுமதி பெற்றார் என்கிறது தலபுராணம். இவை நமக்கு விந்தையாகத் தெரியும்!  

விஷ்ணுவின் அவதாரப்பட்டியலில் முக்கியமாக தசாவதாரங்கள் மட்டுமே சொல்கிறோம்! ஆனால் அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ ஜனன அவதாரங்கள் உண்டு. அம்சத்துடன் வாழ்ந்து, ஆவேசத்துடன் வெளிப்பட்டு, பூரணத்துவத்துடன் வாழ்ந்ததுண்டு. புராணம் சொன்னாலொழிய நமக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ‘நந்திகள் நால்வருடன் தானும் பயின்றதாகத் திருமூலர் சொல்வாரே, அந்த சனகாதியர் நால்வர் உள்பட நாரதர், அகத்தியர், தத்தர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆதிசேஷன், வியாசர், கோவிந்த பகவத்பாதர் என இன்னும் எத்தனையோ அவதாரங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

பக்தி யோகம் ஞானம் போதித்த அவதார மகான்களில் ஆதிசங்கரர், இராமாநுஜர், இராகவேந்திரர், ஸ்ரீவீரப்பிரம்மம், வள்ளலார், காஞ்சி பரமாச்சார்யார், ஷிர்டிசாயி, என இன்னும் நிறைய பேர் தேசம் முழுக்க இருந்தனர். சமணம், முஸ்லிம், கிறிஸ்து மதங்களில் ஜனனம் எடுத்திருந்தாலும் நம் மனம் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. 🤔

உங்களில் யாரேனும்கூட இறை அம்சத்துடனோ ஆவேச குணத்துடனோ அவதாரம் எடுத்திருக்கலாம். இப்போது அது உணரப்படாமல் இருக்கலாம், ஆனால் காரணமும் காலமும் நெருங்கும்போது வெளிப்படலாம். கல்கியின் கையாளாக சமுதாயத்திலே பிரவேசித்து நெறிமுறைப்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் சாத்தியம் உண்டு. ஓம் நமோ நாராயணாய!

-எஸ்.சந்திரசேகர்



தெய்வீக அஷ்டபந்தனம்!

ஒரு கோவில் எப்படி அமைய வேண்டும், சிலைகள் எப்படி வடிக்கப்பட வேண்டும், எப்படி பிரதிஷ்டாபனம் செய்ய வேண்டும் என்பது வரை ஆகம விதிமுறைகள் பல இருக்கின்றன. ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து அது பீடத்திலிருந்து அகலாமல் இருக்க அடிபாகத்தில் அஷ்ட பந்தன மருந்து சாத்து செய்வார்கள்.

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை. இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இந்த மருந்து கல்போல் இருக்கவும் கூடாது, இளகலாகவும் இருக்கக்கூடாது. 

எல்லா பொருட்களை எந்தெந்த அளவு சேர்த்து எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்கும் கால அளவு உள்ளன. சித்தர் பாடல்களிலும் பதார்த்த செய்பாகமுறை சொல்லப்பட்டுள்ளது.

"கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்"

இது பொதுவான அஷ்டபந்தன முறை என்றாலும் சில தலங்களில் தங்கத்தால் சொர்ண பந்தனமும் செய்யப்படுகிறது. இவை குறிப்பிட்ட காலம் வரையே கெட்டியாக நிற்கும். அபிஷேகம் மற்றும் தினசரி பூசைகளால் காலப்போக்கில் தேய்மானமாகி பலவீனப்பட்டு உதிரும் தன்மை உடையது. ஒவ்வொரு முறையும் குடமுழுக்கின்போது மூலவர் விக்ரகத்தை வெளியில் எடுத்துச் செப்பனிட்டு அதன்கீழே புதிதாய் இந்த சிவப்பு மருந்தை இடுவார்கள்.

ஊர் அரட்டை அடித்துக்கொண்டு மருந்து இடிக்க முடியாது. உரலில் இடிப்பவர்கள் மந்திரங்கள் ஜெபித்தபடி ஆச்சாரமாகச் செயல்பட வேண்டும். அம்மருந்தில் சக்தி அலைகள் உருவேற்றப் பாய்ந்திட தெய்வீகத் தன்மையைப் பெறும். கும்பாலங்காரம் செய்யும்போது வெவ்வேறு பிரமாணங்களில் நூல் சுற்றும்போது மானசீக மந்திர ஜபம் நடப்பது போலவே இம்மருந்தையும் உருவேற்றி இடிக்க வேண்டும்.

ராஜராஜ சோழன் கட்டுவித்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முதல் குடமுழுக்கின்போது கருவூராரை அழைக்காமல் அகம்பாவத்தில் மன்னன் அவமானப்படுத்தியதால் பெருவுடையார் அடிபாகத்தில் மருந்து ஒட்டவில்லை. என்ன செய்வதென அறியாமல் அங்கே அந்தணர்கள் குழம்பினர். சோழன் தன்னுடைய தவறை உணர்ந்தபின் சித்தரைத் தேடிப்போய் அழைக்க, அவர் தன் வாயில் தரித்திருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து 'இதைப் போய் அதில் சாத்து' என்றதும், அதன்பின் அஷ்டபந்தனம் திடப்பட்டு லிங்கத்திருமேனி ஸ்திரமாக நின்றது என்பதும் நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்தான்.

ஆக, ஆகம விதிப்படி கல் தேர்வு, சிலை வடிப்பு, சோதனை முறைகள், வேள்விகள், ஸ்தாபனம், மந்திரங்கள், அஷ்டபந்தன மருந்து சாத்து, சம்ப்ரோக்ஷணம் வரை எல்லாம் நூல் பிடித்தபடி வரிசையாக நடக்கும். தெய்வீக பந்தனம் நமக்கும் காப்பாக இருக்கும்!

-எஸ்.சந்திரசேகர்




இதுதான் சமையல் ரகசியம்!

உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ள மாடவீதிகளில் பல உணவு விடுதிகள் இருப்பதைக் கண்டேன். ஹோட்டல் உரிமையாளர் பெயர்கள் ஸ்ரீனிவாச பட், சுரேஷ் பட் என்ற ரீதியில் இருக்கவே நம்மூரில் உட்லன்டஸ், பட்ஸ் ஹோட்டலை எனக்கு நினைவூட்டியது. காலையில் அங்கே சிற்றுண்டி உண்டபின் கல்லாவில் இருந்த அந்த நபரிடம் என் சந்தேகக் கேள்வியைக் கன்னடத்தில் கேட்டேன். 

“உங்கள் ஊர் முழுக்க பட் ஹோட்டல்கள் நிறைய உள்ளதே, சமையல்தான் இந்த ஊர் மக்களின் பிரதான தொழிலா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “ஹௌது சுவாமி.. குருஷேத்திர யுத்த காலதிந்த அடுகே மாடுவதே நம் சர்வீஸ்” என்றார்.

“குருக்ஷேத்ர யுத்தம்னா... துவாபர யுகம் முதலேவா... ஆச்சரியமா இருக்கு.. மேலே விவரமா சொல்லுங்க” என்றேன். அவர் மகாபாரதக் கதையைக் கூறினார்.

உடுப்பி பகுதியை ஆண்ட அரசன் நரேஷ் குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்குகொள்ள படைகளுடன் சென்றான். அப்போது ஸ்ரீகிருஷ்ணரிடம் கோரிக்கை வைத்தான். கௌரவர்கள்/பாண்டவர்கள் இருதரப்பிற்கும் உணவு சமைத்துப்போட அனுமதி தரவேண்டும் என்று வேண்டினான். “ஆகட்டும் நீயே சமையலைப் பார்” என்று உத்தரவானது. அதன்படி தினமும் ருசியான உணவு படைத்து அது மீதம் ஆகாதவாறு சமைத்தான். தினமும் அதெப்படி முடியும்? உத்தேசமாக சமைக்கலாமே தவிர துல்லியமாக எப்படி? தேர், யானை, குதிரை, காலாட்படை என இருவரின் படைகளும் மொத்தம் 18 அக்குரோணி. ஆக தினமும் இத்துணை தலைகளுக்குச் சமைப்பது என்பது தெய்வத்தின் செயலுக்குச் சமமாகுமே! ஆம் அந்த ரகசியம் பற்றி நரேஷ் விளக்கினான்.      

தினமும் அளிக்கும் உணவில் கிருஷ்ணர் சாப்பிடாமல் மீதம் வைத்த வறுத்த வேர்கடலைகளை எண்ணி அதை ஆயிரத்தால் பெருக்க, வரும் தொகை எண்ணிக்கையே மறுநாள் போரில் மாண்டுபோவோர் எண்ணிக்கை என்பதை வெளிப்படுத்தினான். மொத்த அக்குரோணி சேனைகளின் எண்ணிக்கையில் தினமும் மீதமான வேர்கடலைகளை ஆயிரத்தால் பெருக்கிக் கழிக்க மீதம் உள்ளவர்களுக்கே சமையல் செய்து பரிமாறினான். இதன்படி பதினெட்டு நாள் போரில் முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு வீரர்கள் மாண்டது தெரிந்தது. கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்கள் வென்றனர். அன்றிலிருந்து உடுப்பி தேசம் அன்னம் படைக்கும் தொழிலைச் செய்ய ஸ்ரீகிருஷ்ணர் அருள் புரிந்தார் என்று ஹோட்டல் உரிமையாளர் சொன்னார்.

மகாபாரத யுத்தத்தில் பாரதத்தின் பல பகுதிகளிருந்தும் அரசர்கள் தங்கள் படைகளை அனுப்பி இரு தரப்பினர்க்கும் போரிடவும்/ சமைக்கவும் உதவினார்கள். சேரன் உதியன்கூட சமைத்துள்ளான். இதில் சாரங்கத்வஜ பாண்டியன் அஸ்வத்தாமனால் கொல்லபட்டான், அவன் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். 

மகாபாரதம் தன்னுள் எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டுள்ளது. நாம்தான் இன்னும் முனைந்து அதைப் படிக்கவில்லை என்பதே உண்மை! 

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

புலவனின் பரிதாப நிலை!

கீழ்வரும் இப்பாடலில் பரிசில் பெற வரும் ஓர் ஏழைப் புலவனின் வறுமை நிலையை ஆழமாக விவரிக்கிறார் 'சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை' நூலாசிரியர் வித்துவான் தெய்வசிகாமணிக் கவுண்டர். இவர் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர்.

“மானம் குலம் கல்வி வன்மை அறிவு தானம் தவம் முயற்சி பொறுமை மொழிக்காதல் என்ற பத்தும் பசிவந்தால் பறந்துபோகும் என்று ஔவை பிராட்டி சொல்லியுள்ளார். வறுமைப் பிணியில் வாடும் புலவனானவன் ஒட்டிய வயிறுடன், இருபுறமும் துருத்திக்கொண்டு நிற்கும் விலா எலும்புடனும், பொந்தில் இரையைப் பற்றிக்கொண்டுள்ள உடும்பைப்போல், சதை எல்லாம் வற்றிப்போய் உரித்தெடுத்த உடம்போடும், கந்தல் ஆடையை அணிந்தும், கையில் ஒரு கிழிந்த நூலேடுடன் வருகிறான்.

முத்தமிழில் கரைகண்ட புலவன் மும்மதயானைக்கு இணையான வீரியத்துடன் இருக்கவேண்டியவன் பூனையைப்போல் உள்ளான். வெயிலில் வதங்கிய மென்மையான மலர்போல் வாடியுள்ளான். வருத்தும் அந்த வறுமை மிகக்கொடியது” என்று அப்புலவனின் மெய்நிலையைப் பொருள்படப் பாடியுள்ளார்.             

அதன் பின்வரும் பாடலில், “கடுங்காற்று மழை வெயில் என ஒன்றன்பின் ஒன்றாய் வந்து துயர் தருவதோடு இல்லாமல், ஓட்டைகள் நிறைந்த இல்லத்துக் கூரையோலை கீழே வறுமை என்னும் பேய் ஆட்சி செய்யும் அடையாளமாக, அந்தப்புலவனின் மனைவி தன் தலையில் எண்ணெய் வைக்காமல், முகத்தில் மஞ்சள் பூசாமல், நெற்றியில் திலகமிடாமல், கழுத்தில் மங்கிய கயிறு தெரிய, ஒட்டிய வயிறும், மெலிந்த இடையில் கந்தல் ஆடையுடன் துயர் நிறைந்தவளாக, கணவனுக்கு உப்புநீர் கஞ்சியேனும் தரவேண்டுமே என்ற கவலையில் தோய்ந்தபடி காணப்படுகிறாள்” என்று பாடுகிறார். 

-எஸ்.சந்திரசேகர்



சனி, 27 ஆகஸ்ட், 2022

பொங்கியின் வங்கி!

அம்மா தரும் பத்து காசைப் 

பத்திரமாய்ப் பொத்தி வைப்பாள்

நிறைய நிறைய சேர்க்க எண்ணி

நினைத்துக்கொண்ட சிறுமி ஒருத்தி.


ஒற்றைப் பின்னல் எலிவாலுடன்  

கால்பாவாடையின் மங்கிய ஒளியும்

காது மூக்கு குத்திய இடத்தில்

வேப்பங்குச்சி தோடாய் மின்னி,

ரப்பர் வளையல் மெல்லிய விரல்கள்

சேற்றுப்புண் கால்களோடு வெளிர 

கண்கள் மட்டும் பளிச்சென மிளிரும்

சிறுமியின் நிலை பாவம்தான்!


அவளையே தூக்கும் சுமையொன்றை

இடுப்பில் ஏற்றி வைத்திருக்க

சற்றே தடுமாறி நடக்கும்போது

கனத்த பாவாடை எழுப்பும் ஓசை

அவள் இதயத்துடிப்பின் எதிரொலி.


கோடிவீட்டுப் பாப்பாவின் ஆயாவாக

இவள் மூணு ரூபாய் ஊதியம் பார்த்திட

வாயெல்லாம் பல்...

கசங்கிப்போன காகிதத் தாள்களைப்

பத்திரமாய்ச் சேர்த்து வைத்தாள்.

தீப்பெட்டிதான் டிரங்குபெட்டி!


சேர்த்துவைத்த காசுகளை 

பெட்டியில் வைத்துக் காப்பதை

குடிகாரதந்தையின் கண்ணில்   

போதையை கொஞ்சம் காட்டியது.

முண்டாசுக்குள் பெட்டி நுழைந்தது

வயிற்றுக்குள் சரக்கு இறங்கியது.

பற்றவைத்துப் பீடியை இழுக்க

பெட்டியே நெருப்பையும் தந்தது.


முண்டாசு வியர்வையில் நனைந்தும்

நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி..

இவன் செயல் கண்டு சகிக்காமல்

பெட்டிக்கே வயிற்றெரிச்சல்!

போதையில் அவன் பாதையில் உருள

நசுங்கிப்போனது டிரங்கு பெட்டி!   

தள்ளாடிப் போனவன் வந்தபின்

பொந்துக்குள் பெட்டியை வைத்தான்.


காலையில் விழித்த பொங்கி

பெட்டியைக் காணாது அதிர்ந்தாள்.

பெட்டியைக் கடித்த பெருச்சாளி

எந்தப் பொந்தில் வைத்ததோவென

அதைத் தேடுவதைக் கைவிட்டாள்.


குடிசைக்குள் துள்ளலாய் நுழைந்தாள்.

வீரம் பொங்க வைத்திருந்தாள்

புதிய 'சீட்டாபைட்' டிரங்கு பெட்டி!


-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சித்தாடலை விமர்சிப்போர் கவனத்திற்கு!

நீண்ட இடைவெளிக்குப்பிறகு சித்தர்கள் பற்றி இங்கே பதிவிடுகிறேன். ‘சொர்ண மேரு’ என்ற என் பழைய பதிவைப் படித்த சிலர், போகர் சொல்லிய சங்கதியின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், அது பொய், அது சூரிய ஒளியால் வந்த நிறம், இருளில் மலை மின்னும் கதையைக் கேள்விப்பட்டதில்லை, பொய் சொல்ல அளவேயில்லையா என்ற ரீதியில் விமர்சனங்களைப் பார்த்தேன். நான் இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை.

சித்த புருஷர்களின் அஷ்ட சித்திகள்பற்றி பாம்பாட்டி சித்தரே நீண்ட விளக்கத்தைத் தந்துள்ளார். சித்தர்கள் எப்படிப்பட்டவர்கள், பெற்றுள்ள சக்திகள் என்ன, இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் என்ன, போன்ற விவரங்களைப் பாடல்களில் உரைத்துள்ளார். அதை இங்கே பார்ப்போம்!

“பெரிய தூணையே சிறு துரும்பாகவும், சிறியதைப் பெரியதாகவும் தோன்றச் செய்வோம்; ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவோம். மலைகளையே பந்தாக உருட்டி வீசுவோம், சப்த சாகரங்களையே குடித்து ஏப்பம் விடுவோம், அளவில்லாத மணலையே அளந்திடுவோம். மண்டலத்தையே உள்ளங்கையில் மறைத்து விடுவோம், வானத்தை வில்லாக வளைப்போம், சீடர்களுக்கு அஷ்டகர்ம ரகசியமும் சொல்லித் தருவோம்.

தகிக்கும் அக்னியில் மூழ்கிக்குளித்து இயல்பாய் எழுவோம், நீருக்குள் இருந்து மூச்சை அடக்கி வாழ்வோம், பாயும் புலியையும் தாக்கி வசியப்படுத்துவோம். மூவுலகத்தையும் பொன்னாய் மாற்றுவோம், சுடும் செங்கதிரைக் குளிராக்கிப் பாய்ச்சுவோம், இவ்வுலகே இல்லாமல் நாங்கள் மறைத்து மாற்றிடுவோம்.

வேதியன் செய்த சிருஷ்டியைப்போலவே எல்லாம் படைப்போம், அவனுக்குச் சமமாகத் திகழ்ந்து ஐந்தொழில் புரிந்து அவனாகவே வாழ்வோம். ஆயகலைகள் அனைத்தும் அறிவோம், அதற்கும் மேலான அழிவற்ற நிலையையும் அறிவோம், பற்றற்ற மனமுடன் வாழவும் செய்வோம்.

வேங்கை யானை யாழி சிங்கம் முதலானதைக் கட்டுப்படுத்தி ஏவி விடுவோம், அந்தக் கடவுளையே எங்களுடன் விளையாடச் செய்வோம், ஆதிசேஷன் வாசுகி பத்மன் தக்ஷன் அனந்தன் குளிகன் கார்கோடகன் சங்கபாலன் ஆகிய நாகங்களையே ஆட்டிப்படைப்போம். அஷ்டதிக்குகளில் யந்திர சக்கரங்களை எழுதி நாட்டி, அஷ்ட நாகங்களையே கட்டுவோம். இவை கக்கும் விஷத்தை எடுத்துப் பருகுவோம்” என அதிசயக்கும் வகையில் சித்தர்களின் சக்திகளை விளக்கி இவை அளவிடமுடியாதது அளப்பரியது என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

ஏழுகடலும் வற்றிடக் குடித்த அகத்தியர், மலைகளைப் பெயர்த்துப் போட்ட நந்தீசர், பரமணு ரகசியங்களை விளக்கிய திருமூலர், அண்டங்களைச் சுற்றிவந்த காலங்கி, ஆக்கங்கள் தந்த போகர், பொன்னைச் செம்புக்குள் மறைத்த கருவூரார், விஞ்சை மந்திரத்தால் வேங்கையை வாகனமாக்கிக்கொண்ட புலிப்பாணி, தென்காசியில் மலைக்குப் பச்சிலை அரைத்துப் பூசி துருத்தி கொண்டு ஊதிய தேரையர், நாக விஷத்தை அருந்திய மருதமலை பாம்பாட்டி, பனைமர உயரமாகி மீண்டும் சுருங்கிய கம்பளிச்சித்தர், பல்வேறு சித்துகள் ஆடிய மச்சமுனி கோரக்கர் கொங்கணர், நவகண்டர், என பலரைச் சொல்லலாம். 

கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சித்தர்களும் அப்படியே! உள்ளங்கையில் ரசமணி கட்டிய ஒளிதேகம் பெற்ற வள்ளலார், வெட்டப்பட்ட கரத்தைப் பொருத்திக்கொண்ட சதாசிவ பிரம்மேந்திரர், சமாதிக்கு உள்ளேயும் வெளியேயும் சஞ்சரிக்கும் பாம்பன் சுவாமிகள், எளிய பக்தனின் மறுபிறவிகளை ரத்து செய்து முக்தி தந்த காஞ்சி பரமாச்சாரியார், என பல உதாரணங்களைச் சொல்லலாம். தற்போது தட்டச்சு செய்யும்போது இவ்வளவுதான் என் நினைவுக்கு வந்தது. 

ஆகவே தூண்டுதலின் பேரில் சித்தர்களை/ மகான்களைத் தவறாக விமர்சித்துப் பாவக்கடலில் விழுந்திட வேண்டாம். உங்களுக்குப் பிறக்கும் வாரிசு அடிமைகள் நீங்கள் சேர்த்து வைத்துள்ள சாபத்தையும் பாவத்தையும் சுமக்க வேண்டும். சாமானியனின் புரிதலுக்கும் கற்பனைக்கும் இவை ஆட்படாது. சித்த புருஷர்களைக் கொடிய சொற்களால் தூற்றி இகழ்வோர் செய்யட்டும், அக்கருத்திற்கு நீங்கள் செவி சாய்த்து ஆமோதிக்க வேண்டாம். மீண்டும் இது ஓர் எச்சரிக்கை!

- எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

மறைப்புகள் நீங்கி எல்லாம் வெளிச்சமாகி...!

சித்தர்களின் வெளிப்பாடுகள் மற்றும் அவர்களுடைய ஜெனனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்தான் நடக்கும் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது அப்படியல்ல! மதத்தை, மொழியை, மாகாணத்தை, தேசத்தைத் தாண்டி அயல்நாடுகளிலும் நடக்கும். சில வருடங்களுக்கு முன் வெளிவந்த என் ‘சித்தநூல் ரகசியங்கள்’ (கற்பகம் புத்தகாலயம்) என்ற புத்தகத்தில் இதுபற்றி நான் சொல்லியிருந்தேன். 

ஃபேரடே, எடிசன், டெஸ்லா, ரூதர்ஃபோர்ட் மற்றும் பல மேலைநாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வழங்கிய தொழில்நுட்ப ரகசியங்களும் கருவிகளும் கடந்த நூற்றாண்டுகளில் பெரிதும் பேசப்பட்டன. ஆனால் இந்த நவீனங்களை எல்லாம் மூத்த சித்தர்கள் கடந்த யுகங்களிலே கண்டுபிடித்துச் செயலாக்கிவிட்டனர் என்பதைப்பற்றி நம் பழைய பதிவுகளில் பார்த்துள்ளோம். 
 
ஜெர்மானியர்கள் நம் பண்டைய சமக்ஸ்ருத்த ஏடுகளைத் திருடிக்கொண்டு போனார்கள், சீனம்/திபெத் நூலகங்களில் இன்னும் நம் பொக்கிஷ நூல்கள் உள்ளன என்று நிறையவே இங்கு அங்கலாய்த்தனர். திருடிக்கொண்டு போனதால் மேலைநாட்டினர் கண்டுபிடித்தனர் என்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் அதுகாறும் நம்மிடம் இருந்த நூல்களை வைத்து ஏன் நம்மவர்கள் புதிய ஆக்கங்களைத் தரவில்லை? விஸ்வகர்ம குலத்தினர் தம் குலத்தொழில் முறையில் சிலவற்றைச் சிறப்பாய் வெளிக்கொண்டு வந்தனர். ஆனால் மற்றவர்கள்...? இத்தனைக்கும் வடமொழி கோலோச்சிய காலம் ஆயிற்றே? ஏன் செய்யவில்லை? விடை காணமுடியாத பல கேள்விகள் உண்டு. எல்லாம் சிவசித்தம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.  

அப்படி ஓர் அயல் நாட்டவர்தான் திரு. அலெக்ஸாண்டர் பட்னி. பரவெளி ஆய்வாளர், நூல் ஆசிரியர், சமஸ்க்ருத மொழி ஆர்வலர், பிரபஞ்ச மின்காந்த ஒலி அதிர்வு விஞ்ஞானி, ரசவேதி என இவர் பன்முகங்கள் கொண்டவர். அலெக்ஸிடமிருந்து இன்று ஒரு விரிவான மின்னஞ்சல் எனக்கு வந்தது. இவர் என்னுடைய பழைய ஆங்கில சித்தவியல் கட்டுரைகளையும், பதிப்புகளையும் வாசித்துள்ளார் என்றார். போகருடைய கண்டுபிடுப்புகளை நான் முடிந்தவரையில் திறம்பட வெளிக்காட்டியுள்ளேன் என்று என்னைப் பாராட்டினார்.  என் 'போகர் ஏழாயிரம்: சப்தகாண்டம் ஒரு பார்வை' நூலை மொழிபெயர்த்துப் படித்துள்ளார். அவர் தன் கடிதத்தில் சொல்லிய சாரம் என்ன?

“நண்பா, சித்தர் போகர் உரைத்த மறைப்பு மிகுந்த கண்டுபிடிப்புகளை என் ஆய்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். அவர் உரைத்த ரசவாத வேதியல் ரகசியங்களை உடைத்துப் பிரயோகம் செய்து நூறு சதவிகிதம் வெற்றியும் பெற்றேன். வெவ்வேறு வெப்பங்களில் படிமங்களின் அதிர்வில் வெளிப்படும்   துகள்களின் ஆய்வையும், புவியீர்ப்பு காந்தவிசை சார்ந்த ஒலி ஆய்வையும்  மேற்கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் பரவெளியில் கேட்கும் "ஓங்கார" நாதம் பற்றி வெளியிட்டதும் நானே. 

சித்தரின் பாடல்களில் உறைந்துள்ள மறைப்புகள் அத்தனையும் இரத்தினங்கள் என்பதை உணர்ந்தேன். அவருடைய பாடல்கள் மூலம் நான் செய்த கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாய் உள்ளேன். என் ஆய்வுகளில் அவருடைய மறைப்புகள் எல்லாமே எனக்குப் பரிச்சயமாகி வருவதை சில வருடங்களாகவே உணர்கிறேன். பாடல்களிலுள்ள மறைப்பு விலகிட அந்த விதியாளி நானாகி நானே போகராக மாறி அனைத்தையும் செய்யமுடிகிறது என்பதை நினைத்தால்... நான் போகரின் மறுபிறப்போ என்றும் சிந்திக்க வைக்கிறது. உங்களிடம் மேலும் பல விஷயங்களை விவாதிக்க ஆவலாக உள்ளேன். நன்றி, வாழ்த்துகள் நண்பா!”

இவரைப்பற்றி நான் இன்று அலசி ஆராயும்போதுதான் இவர் எழுதிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் காண நேர்ந்தது. சிலவற்றைக் கூர்ந்து வாசித்தேன். இவர் BBC வானொலிக்குத் தந்த பேட்டியையும் கேட்டேன்... அசந்து போனேன்! இவருடைய புத்தகத்தைப் படிக்கும்போதுதான் இவருக்கும் நிகோலா டெஸ்லாவுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் அவர் சிந்தனை, ஆய்வு, உருவ நிலையில் உள்ளதை அறிந்தேன். போகர் கையாண்ட, மின்காந்தவியல் சூத்திரம் மூலம் செலுத்திய வான்ரதம், பூமியை ஸ்கேன் செய்த படிகமானி கதிர்கள், ஆகாய விமானத்தை இருளாக்கிப் (Stealth) பார்வைக்குப் புலப்படாமல் மறைக்கும் சூத்திரம் என பலதும் நினைவுக்கு வந்தன. பல ரிஷிகள் போதித்த நுட்பங்களை அன்றே போகர் வடிவாக்கினார்.

என் ஆங்கிலக் கட்டுரைகளும் பதிப்புகளும் எங்கோ யாருக்கோ பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவையும் தருகிறது. அலெக்ஸ் அளவுக்கு நான் எதையும் முனைப்பு எடுத்துச் செய்யவில்லை என்றாலும், அவர் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. எல்லாம் சிவசித்தம்!
   
-எஸ்.சந்திரசேகர்



சனி, 11 ஜூன், 2022

ஆவணம் பேசுகிறது!

"கொளநல்லி வழியாக இன்று கொடுமுடி வந்தேன். காவிரிக்கரையில் அமைந்த ஸ்ரீ மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் பாழடைந்து உள்ளது. அதைப் புதுப்பிக்கும் பொருட்டு உள்ளூர் செட்டி வியாபாரிகள் நிதி திரட்டுகிறார்கள். இன்று சிவனுக்கான விசேஷ நாளாம், மக்கள் கூட்டம் அலைமோதியது. சமயப்பணிக்கென இவ்வூரில் பதினொரு பிராமண குடும்பங்கள் உள்ளன. இத்தலம் புராதன வரலாறு உடையது என்பதை அறிந்தேன்" என்று ஆங்கிலேய சர்வேயர் புக்கானன் செப்டம்பர் 5, 1892 தேதியிட்ட தன்னுடைய பயணக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

எங்கள் ஊரின் இக்கோயிலில் அன்று போதுமான அளவில் பணியாளர்கள் வேலை செய்துள்ளனர் என்ற விபரம் அண்மையில் பார்த்த ஒரு பழைய ஆவணத்தில் இருந்தது.

ஸ்தானீகம், பரீச்சாரகம், சுயம்பாகம், அர்ச்சகம், வேதபாராயணம், பஞ்சாங்கம், யக்ஞோபவம், மணியம், சங்கீதம், மெய்க்காவல், மாலைகட்டி, நாதசுரம் முகவீணை, ஒத்துவூதல், தவுல், டவண்டை, கைத்தாளம், திருச்சின்னம், மத்தளம், நட்டுவம், தித்தி, தாசி, மாராயம், திருவலகு.

சுமார் எண்பது ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஊர் சிவாலயத்தில் இருந்துள்ள பணி இடங்களின் பெயர்கள்தான் இவை. 1943 ஜூன் மாதம் கோயில் ஆவண ஊதியப் பட்டியலில் ஏழு தாசிகள் பணியில் இருந்துள்ளனர். அன்று மாத ஊதியமாக தாசிகள் ரூ 4 அணா 8, இசைக் கலைஞர்கள் அதிகபட்சமாய் ரூ 8 அணா 4 வரை பெற்றனர்.

இன்று தாசிகள் இல்லை. ஆனால் மாராய திருவலகு, கூட்டி, எள்ளுக்கிழிகட்டு தீபம் விற்பனை, ஆகிய பணிகளுக்கு Scale of pay range 10000 -31500 plus allowances as per TNHRCE rules என்று உள்ளது. சுயம்பாகம், சைவ/வைணவ முறையில் சமையல்/பிரசாதம் தயாரிக்க மடைப்பள்ளி உதவியாளர் (மடையர்) ஊதிய நிலை 7100-13200 மற்றும் இதர படிகள் என்ற அளவில் உள்ளது.

சம்பளப் பட்டியலில் அன்று இடம்பெற்ற தாசிகளான அங்கமுத்து, சவுந்திரம்,  வெங்கலெட்சுமி, ஆகியோர் சம்பள ரெஜிஸ்தரில் தங்கள் கையொப்பத்தை இட்டுள்ளனர். இவர்கள் குறைந்தபட்ச கல்வி அறிவைப் பெற்றிருந்தனர் என்பது ஆச்சரியத்தைத் தந்தது.

சிவன் கோயிலில் உழவாரப்பணி செய்ய இன்று நல்ல ஊதியம் கிடைக்கிறது. நாமும் சிவனே என அப்பணிக்குப் போய்விடலாம். நம் ஜாதகத்தில் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அதற்கும் சிவசித்தம் அருள் வேண்டுமே! 😀

-எஸ்.சந்திரசேகர்