"இப்படி இரு அப்படி இரு. மும்மலங்களை நீக்கு, நல்ல மனதோடு இரு. கெட்ட குணம் கூடாது, உற்றுப்பார்த்து மெய்ப்பொருள் அறிந்துகொள். உன் குருவை உணர உனக்கு ஞானம் வேண்டும். பற்று இல்லாமல் இரு, அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் குணம் கூடாது. நல்லவனாக இரு."
எத்தனை வேதாந்திகள் எத்தனை உபதேசங்கள்! இப்படி ஆளாளுக்கு சொல்வதை எல்லாம் யார் செவி கொடுத்து கேட்பது? நான் யாரையும் கிண்டல் செய்வதாய் நினைக்கக்கூடாது. மேலே சொன்னவை எல்லாமே எல்லோரும் அறிந்த விஷயங்கள்தான். ஆன்மிகம் என்பது அனைவரிடமும் உள்ளொளியாய் இருப்பதுவே. அதை கர்ம வினையின் பலன்கள்தான் திரையிட்டு மறைத்து அஞ்ஞானியாக வைக்கிறது.
ஆன்மிக அன்பர்கள் உபதேசித்தபடி எல்லாம் நாம் கற்று அதன்படி இருக்கமுடியுமா? நாளை என்ற கவலை எல்லோர் மனதிலும் மேலோட்டமாகவோ ஆழ்மனதிலோ இருக்கும். அதை முதலில் எப்போது களைவது? அந்த அச்சம் போனால்தான் மற்றவை கைக்கூடும். வாழ்க்கையில் இதெல்லாம் சௌகரியமாக இருந்தால் மற்ற நெறிகளும் ஆன்மிக பற்றும் தன்னாலே வரும். அவன் எப்போது சாதிப்பது? ஏதோவொரு பிரச்சனை அவனுக்கு வந்துக்கொண்டே இருக்கும். அகக்கடல் எப்போது அடங்குவது? எல்லோருமே சுயம்புதான்! தக்க நேரம் வந்தால்தான் அவன் தன்னை உணர முடியும். தனக்கும் தன்னை சார்ந்தவர்களின் எதிர்கால தேவைகளை பொருளீட்டி பூர்த்தி செய்யவேண்டி இருப்பதால் விசாரங்கள் வந்து வாட்டும். சொத்து சுகம், நிலம் வீடு எல்லாம் சேர்த்து வைத்து, ஓய்வூதியமும் பெற்று மலையடிவாரத்தில் ஒரு ஆசிரமம் நிறுவி செட்டில் ஆகிவிட்டு, 'வாங்க, கடவுளை உணரலாம்!' என்று சொல்லி காலத்தைக் கழிக்க எல்லோராலும் இயலாது. அங்கு உட்கார்ந்தபடி உபதேசம் செய்வது அனைவருக்கும் எளிதே!
பற்றற்ற நிலையை கைக்கொள்ளவும் குருவை உணரவும் ஞானியாகவும் தக்க சமயம் வரவேண்டும். என்னதான் பக்திமானாக வேதாந்தியாக ஆசிர்வதிக்கப்பட்ட அருளாளராக இருந்தாலும், அவனும் மனிதனே! அவனுடைய ஆழ்மனம் அமைதியுற்று தன் புறச்சூழலில் நடக்கும் எதுவும் தன்னை பாதிக்காமல் இருக்குமாறு வைத்துக்கொண்டு தினமும் இயங்கினால்தான் மனம் தெளிவடையும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையவேண்டும் என்றால் அது தன்போக்கில் எந்த உந்துதலும் இல்லாமல் தானே நடக்கும். அதுவரை மந்திரம் தந்திரம் உபதேசங்கள் எல்லாமே வீண்தான். பக்தி நம்பிக்கை பொறுமை, இவைதான் முக்கியம்!
கோடிக்கரையில் பூங்குழலியின் கானம் பலபொருள் கொண்டு கல்கியின் புதினத்தில் நம் காதுகளில் ஒலிக்கிறது.
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக