About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 1 ஜனவரி, 2024

என்னவோர் ஆனந்தம்!

சற்றுமுன் ஐயனார் (சாஸ்தா) கோயிலில் திருக்கல்யாண அலங்காரத்தைக் கண்டு தரிசித்தேன். பொதுவாகவே கோயிலில் தரும் அன்னப்பிரசாதத்தை வரிசையில் நின்று தொன்னையில் வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி... மிக அலாதியானது!👌

பிரதக்ஷணம் முடித்து வெளியே வரும்போது அங்கே ஒருவர் வாழையிலையைக் கையில் தர, அடுத்தவர் பெரிய அண்டாவிலிருந்து பொங்கல் புளியோதரையைக் கிண்டி நீளமான அன்னக்கரண்டியால் எடுத்து இலை நிறையப் பரிமாறினார். அக்கணம் என் கையில் நிறைவான அளவில் பிரசாதம் இருக்கும்போது ஓர் ஐந்து வயது சிறுவனின் மனநிலைக்கு மாறியதை உணர்ந்தேன். என் சுற்று வரும்போது... ஹையா... அண்டாவில் இன்னும் போதிய பிரசாதம் உள்ளது என்பதைக் கண்டதும் இலையை ஏந்தியபடி இரு கைகளை நீட்ட என்னவொரு துள்ளல்! 😀

நியாயமாகப் பார்த்தால் கோயிலில் தரும் அன்னப் பிரசாதத்தை உள்ளங்கையில் வாங்கி அப்படியே உண்ணவேண்டும் என்பது சாஸ்திரம். அது 'பாணி பாத்திர போஜனம்' என்பதாம். ஆனால் கையில் அழுக்கு, நெய் பிசுக்கு, சூடு, பிறகு சாப்பிடலாம் என்ற பல காரணங்களால் தொன்னையில், பாக்குமட்டை/வாழை இலையில் வைத்துத்தருவது பழக்கமாகி விட்டது.

ஆன்மிகப் பதிவு, பிரதோஷம் பாடல்கள், சித்தர் பாடல் உரைகள் என்று ஒரு புறம் முகநூலில் செய்யும் நான் சற்றுமுன் சிறுவயது குதூகல மனநிலையில் இருந்ததை ஆச்சரியமாய் நினைத்துப் பார்த்தேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 29 டிசம்பர், 2023

எல்லாம் அளவோடுதான்!

இப்படியொரு படத்தையும் அதன் கீழே வாசகமும் இருப்பதைப் பார்த்தேன்‌. இது சரியா? மலச்சிக்கல், மூட்டு வலி, நீரிழிவு, கர்ப்பப்பை கோளாறுகளை இது  தீர்க்கும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் இந்தப் பிரச்சனைகள் எதனால் வருகிறது என்று ஆராயாமல் அதிகமாக இக்கிழங்கை உண்ணக்கூடாது. 

சராசரி ஆரோக்கியம் உள்ளவர்கள் பனங்கிழங்கை உண்டால் நன்மையைத் தரும். அவித்த இக்கிழங்கை என் சிறுவயதில் நிறைய சாப்பிட்டுள்ளேன்.

இதயம் சம்பந்தமான நோய், தண்டுவட எலும்புத் தேய்மானத்தால் வருகின்ற ஆஸ்ட்டியோ இடுப்புவலி பிரச்சனையும் மேற்படி சிக்கல்களை உண்டாக்கும். பரிசோதனை செய்து மேற்படி நாள்பட்ட நோய்க்கான காரணம் அறியாமல் மேம்போக்காக மலச்சிக்கல் மூட்டுவலிக்கான மருந்தை உண்டால் வேலை செய்யாது. ஆறாதார சக்கரங்கள் உள்ள பகுதிகளில் சக்தி ஓட்டம் தடைபடுவதால் அது மேலும் சிக்கலைத்தான் உண்டாக்கும். உஷார்!

-எஸ்.சந்திரசேகர்



விதிவிலக்கு உண்டு!

 “கருத்தரிக்காத கன்று ஈன்றாத பசுவுக்குப் பால் சுரக்குமா? குருடாகிப் போன கண்ணில் பார்வையும் வெளிச்சமும் தெரியுமா? பேசாமல் மௌனம் காத்தால் அங்கே உரையாடல் ஏது கேள்விகள் ஏது? குணம்கெட்ட வேசிப்பெண்ணுக்கு வாழ்க்கை ஏது? எவ்வயதிலும் கல்லாமல் வீணாய்க் கழித்தவர்க்குக் கல்வி வாய்க்குமா? எதையும் காணமல் இருப்பவர்க்குக் காட்சிதான் தெரியுமா? மதித்து அண்டிப் பணியாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்குமா? வேடிக்கையாய் வாழ்க்கையைக் கழித்தால் எல்லாம் பாழாகிப்போகும் பார்” என்று  சுப்பிரமணியர் ஞானம் நூலில் முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசிக்கிறான்.

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நமக்குப் பொதுவானது. ஆனால் இதற்கு மாறாகவும் சில சமயம் நடப்பதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கோ ஒரு பத்து வயது பசுவானது கன்று ஈனாமல் தினமும் 4 லிட்டர் பால் கறக்கிறது என்று முன் எப்போதோ செய்தித்தாளில் படித்துள்ளேன். புறக்கண்கள் குருடாகியும் அகக்கண்கள் மூலம் ஞானவொளிச்சுடர் பிரகாசத்தைக் கண்டவர்கள் உண்டு. மௌனம் நிலவினால் அங்கே வார்த்தைகள் இல்லை. ஆனால் பகவான் ரமணர் பேசாமல் இருந்து தன் சீடர்களுக்கு உபதேசித்தார். அவரிடம் இந்த அனுபவத்தை மஹாத்மா காந்தியும், பரமஹம்ச யோகனந்தாவும் பெற்றதாகத் தங்கள் சரிதையில் சொல்லியுள்ளதைப் படித்துள்ளேன். 

முறை தவறிய நடத்தையைக்கொண்ட பெண்ணுக்கு வாழ்க்கை அமைந்தாலும் அது நீண்டகாலம் ஆரோக்கியமாய் நீடிக்காது. கல்வி கல்லாதவனுக்கு ஞானம் கிட்டும். எப்போது? விட்டகுறையாலே எல்லா ஞானமும் ஓதாமலே ஓதப்பெற்றவனுக்கு. எத்தனையோ மஹான்கள் இதற்குச் சான்று. எதையும் நேரடியாகக் காணாதவர்க்கு நடந்தது என்ன என்று தெரியுமா? தெரியும்! தூரதிருஷ்டி சக்தியால் அந்தக் காட்சிகளை உட்கார்ந்த இடத்திலேயே காணலாம். பாண்டவர்- கௌரவர் இடையே நடக்கும் மகாபாரதப்போர்க் கட்சிகளை அரண்மனையில் இருந்தபடியே சஞ்சயன் திருதிராஷ்டிரர்க்கு விளக்கிச் சொன்னது இப்படித்தான். 

பணிவு பக்தி இல்லாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்க மாட்டார். குரு இல்லாத வித்தை பாழ். ஆனால் எந்த குருவையும் நாடிப்போகாமல் அந்த இறைவனே நம்மை நாடி வந்து குருவாக இருந்து போதித்தால் அதைவிட என்ன இருக்க முடியும்? ஒருவன் தன் வாழ்க்கையில் எதைப்பற்றியும் சிந்தியாமல், பந்த பாசம் சொத்து சுகம் எதிலும் நாட்டமின்றி விளையாட்டாய் இருப்பதுபோல் வெளியுலகிற்குத் தெரிந்தாலும், சித்தம் கலங்கிய வெள்ளிப்பாடு இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை வீணாகாமல் பரப்பிரமத்தையே சேரும்.

ஆக, முருகன் உபதேசித்த விதிகளுக்கு மாறாகவும் நடக்கும். அப்படி நடந்தால் அது அவனருளால் நடக்கும் திருவிளையாடலே! ஓம் சரவணபவ. 🙏

-எஸ்.சந்திரசேகர்


சனி, 25 நவம்பர், 2023

கருங்காலி படுத்தும் பாடு!

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலி கட்டையில் செய்த வழு வழுப்பான கொண்டபள்ளி மரப்பாச்சி ஆண்/பெண் பொம்மைகள் சர்வசாதாரணமாக இருக்கும். இப்போதும் உள்ளது. 

தவழும் பிராயத்தில் உள்ள குழந்தைகள் அதை வைத்து விளையாடும், வாயில் வைக்கும், கடிக்க முற்படும். அந்த மூலிகைக் கட்டை, வாய் உமிழ்நீரில் ஊறி மருத்துவ குணம் ஏறுவதால் அதை விழுங்கும்போது தேகம் வலுப்பெறும். பொதுவாகவே இப்பொம்மைகள் நம் வீடுகளில் நவராத்திரி கொலு சமயத்தில் மட்டும் தலையைக் காட்டும். கருங்காலி இலைச் சாறில் பருத்தி நூல் கண்டை நனைத்து உலர்த்திய பின் அதை வைத்து இரும்பை, கண்ணாடியை அறுக்கலாம் என்கிறார் போகர்.

இன்று கருங்காலி பொம்மையை வைத்து எந்தக் குழந்தையும் நவீன நகரங்களில் விளையாடுவதில்லை. சித்த வைத்தியப் பாடல்களில் கருங்காலிக்கு நல்லதொரு மதிப்பு. வியாபாரத்திற்கு வேம்புக் கட்டையில் பொம்மைகளைச் செதுக்கி அதற்குச் சாயம் ஏற்றி அதை வைரம் பாய்ந்த கருங்காலி கட்டையெனச் சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். அந்த மாலையை அணிந்தால் நற்பலன் கிட்டுமா அல்லது உள்ளது அனைத்தும் துடைத்துக்கொண்டு போகுமா என்பது ஜோசியருக்கே தெரியாது. உண்மையான மாலை தண்ணீரில் மூழ்குமா, நீரின் நிறம் மாறுமா என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உடனே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.

திடீரென கடந்த ஓராண்டாக கருங்காலி/ செங்காலி மாலைக்கு நல்ல கிராக்கி வந்துள்ளது. கருங்காலி மரங்களெல்லாம் அழியத் தொடங்கும். ஜாதகத்தில் உள்ள கோள்களின் தசாபுத்தி மோசமாகவே இருந்தாலும் குலதெய்வத்தை வேண்டிட அவரவர் இன்னல்கள் குறையும்.



வனத்திலுள்ள எல்லா மரங்களின் கட்டைகளுக்கும் வேர்களுக்கும் மருத்துவ குணமும் கருதொழில் சக்தியுமுண்டு. நம் சித்தர் பாடல்களில் கணக்கில்லாமல் பல மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது. கருங்காலி மரம் இருக்கும் இடத்தில் இடி தாக்காது, தீய சக்திகள் அண்டாது, மந்திர பீஜ ஒலியை வேகமாய் ஈர்த்துக்கொள்ளும். கோயில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் கருங்காலி கட்டையும் நவதானியத்துடன் இருக்கும். சூரிய வெப்பக்கதிர்களின் தீமையைத் தடுக்கும்.

நம் பங்கிற்கு ஏதையேனும் புதுமையாகச் சொல்லி மக்களின் ஆவலை மேலும் கிளப்பிவிடுவோமே! எருக்கன் மாலை, நெருஞ்சி மூக்குத்தி, தர்ப்பை மோதிரம், வேப்பந்தோடு, ஆமணக்கு ஒட்டியாணம், ஆலம் விழுது வளையல், ஏறு சிங்கி ஊன்றுகோல், என பலதும் பயன்படுத்தி நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள். 😂

-எஸ்.சந்திரசேகர்

வியாழன், 21 செப்டம்பர், 2023

விதிமுறைகள் உண்டு!

இதுபோன்ற ஐம்பொன் கங்கணத்தை நகை கடைகள் விற்கத் தொடங்கிவிட்டன. இதை யார் எல்லாம் அணியலாம் அணியக்கூடாது? சொல்வதில்லை! இதை அணியும் காலத்தே கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? எதுவும் அவர்கள் சொல்வதில்லை. 


பலர் தம் வலது கையில் காசி/ திருப்பதி/ ஷிர்டி தலங்களின் புனிதக்கயிறைக் கட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன். அவர்கள் உண்ணும்போது அதன் நீளமான நுனிப்பகுதியானது எச்சில் இலையில் ரசம்/மோர் குடிக்கும். அதுபோல் நோன்பு சரடு/ விரத தோரம் கட்டிக்கொள்ளும் பெண்கள் சிலர் அதை இறுக்கிட விரலால் பிடித்துக்கொண்டு பல்லால் எச்சில் பட கடித்து இழுப்பதைப் பார்த்துள்ளேன். 🤔 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தபோது மஞ்சள் சரடு அங்கே கூடிய சுமங்கலிகளுக்கு விநியோகமானது. அதில் ஒரு பெண் பல்லால் கடித்துப்படும் பாட்டை டிவியில் நீண்டநேரம் குளோசப் காட்டினர். அதைப் பார்த்த பலரும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள். 😀

மேற்சொன்ன இரண்டிலும் பவித்ரம் பேணுவது என்பது அறவே இல்லை. வீட்டில் பெரியவர்களும் கண்டித்துச் சொல்வதில்லை. சிவலிங்கம்- நந்தி கங்கண காப்போ, கௌரிசங்கரம் ஆபரணமோ அணிந்தால் தீவிர ஆச்சாரமும் உச்சபட்சமான பவித்ர நிலையை வாக்கால்/ மனத்தால்/ செயலால் அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி. 

-எஸ்‌. சந்திரசேகர்

சனி, 2 செப்டம்பர், 2023

ஆதித்யா!

கற்பம் ஒரு மண்டலம் உண்டால் ஜோதிமய சந்திரர்கள் சூரியர்களுக்கு ஒப்பாக தேகவொளி கூடும் என்று ஐந்தாம் காண்டத்தில் போகர் கூறுகிறார். பன்மையில் சொல்வதைப் பார்த்தால் இப்பிரபஞ்சத்தில் பல்லாயிரம் அண்டங்களும் அதில் பல சூரியர்கள் சந்திரர்கள் இருப்பது புரிகிறது. தன் குரு காலாங்கி ஆயிரத்தெட்டு அண்டங்களைப் பார்த்துள்ளதாக ஒரு பாடலில் உரைக்கிறார்.


நம் கண்களுக்குத் தெரிவது என்னமோ ஒரு சூரியன் சந்திரன். ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் இந்தச் சூரிய குடும்பத்தில் இன்னும் எத்தனை சூரியர்கள் உள்ளனர்? விவஸ்வன் ஆர்யமான் துவஷ்டா சவிது பாகா தத்தா மித்ரா வருணா ஹம்ஸா பூஷன் இந்திரா விஷ்ணு என மொத்தம் பன்னிரண்டு. துவாதச ஆதித்யர் என்று புராணங்கள் சொல்கிறது. ஆதித்யா என்ற பொதுவாக அழைக்கப்படும் இவர்கள் சுழற்சி முறையில் யுகம்தோறும் சூரிய பதவி ஏற்பார்கள்.

உதய காலத்தில் சூரியன் வெளிப்படும்முன் அவனுடைய தேர்க்குதிரைகளைச் செலுத்தும் அருணன்தான் முதலில் வெளிப்படுவான். அதனால்தான் அந்தப்பொழுதை அருணோதயம் என்கிறோம். சிவபெருமானின் வலது கண்ணாகச் சூரியனும் இடது கண்ணாகச் சந்திரனும் திகழ்வது நாம் அறிந்ததே. சூரியரிஷியார் மேருவில் கிழக்கு முகமாக யாகம் செய்து கிரண காந்தியைக் கூட்டிச் செந்நிற ஒளியுடன் தன்னைச்சுற்றி அக்னிமண்டலத்தை வியாபிக்கச் செய்துள்ளார். உண்மையில் சூரியன் ஒரு நட்சத்திரம் என்றாலும் அதற்கென ஒரு தனித்துவம் உள்ளது. அது சுழன்றபடி இருக்க அதைச் சுற்றியுள்ள அக்னி மண்டலத்திலிருக்கும் வாயுக்களின் அணுவானது பிளாஸ்மா பிழம்பாக வெளிப்படுகிறது.

சூரிய வனத்தில் அபூர்வ மூலிகைகளும் மலர்களும் உள்ளன என்று போகர் சொல்வது நம்மால் நம்பமுடியாத ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இது ஒரு வேளை சூரியரிஷி மேருவில் அமர்ந்து யாகம் செய்யும் இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம், தகிக்கும் சூரியனில் அல்ல என்றுதான் நான் நினைக்கிறன்.  நம் ஊனக்கண்களுக்கு மேருவில் அரூபமாக நடப்பவை எதுவும் தென்படாது.

சூரியன் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படுத்துகிறது என்றும், அதன் வெளிப்பரப்பில் பல லட்சம் டிகிரி தகித்துக்கொண்டு Corona discharge ஆகிறது என்று அறிவியல் கட்டுரைகளில் நாம் படித்துள்ளோம். தொலைவில் உள்ள பூமிக்கு வந்து சேரும்போது 30° முதல் 45° டிகிரிவரை உத்தராயன/ தக்ஷணாயன பருவகாலத்தைப் பொறுத்து நிலவுகிறது. நம் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வெப்பத்தை இயற்கை பராமரிக்கிறது. இதைப் பற்றி முன்னொரு சமயம் இறையாளரும் மருத்துவருமான டாக்டர் பத்மனாபராவ் அவர்கள் என்னிடம் பேசும்போது சொன்ன விவரங்களை நினைவுபடுத்திப் பார்க்கவும். 

நம் சூரிய குடும்ப கிரகங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சந்திரர்கள் உள்ளதெனத் தெரிகிறது. Parallel Universes எனப்படும் மற்ற அண்டங்களிலுள்ள சந்திராதித்யர்களின் எண்ணிக்கை எத்தனை இருக்குமோ ரிஷிகளுக்கே வெளிச்சம். கீதையில் கிருஷ்ணர் “அர்ஜுனா, அப்பாலில் எத்தனையோ அண்டங்களும் சூரியன்களும் உள்ளன. அவை உன் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால் அவை எதுவும் இல்லை என்று மட்டும் நினைத்துவிடாதே” என்கிறார்.


இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 ராக்கெட் அங்கே சரிசம ஆகர்ஷண Lagrangian விசைப்பகுதியில் இருந்தபடி என்னவெல்லாம் ஆராயும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

“ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத் யுதிகாராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்”

-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

முருகன் பிரம்மச்சாரி!

முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் 500 நூலில் கடைசி பாடல்தான் இது. 

முருகனின் வாய்மொழியில் அஷ்டகர்மம் மெய் என்பது தெரிகிறது. வாலையின் அருளால் திரிகூடத்தில் ஒளிரும் அசையாத செந்நிற தீபமே தெய்வமாக இருந்து வாக்கில் வந்து அமரும் என்பது உண்மை. தான் நித்திய பிரம்மச்சாரி என்பதை முருகன் கூறுகிறான். அதனால் வாசியின் உருவகமாக வள்ளி-தெய்வானை இரு கலைகளான பிங்கலை இடகலையாக (வேட மயில், வேழ மயில்) இருப்பது தெரிகிறது. 

“கொண்டேன் மூன்றெழுத்தைக் குவித்தேன், மகாரம் நகாரம் சிகாரமோடு மூன்றெழுத்தை யானறிந்து முருகனானேன்” என்று சொல்லியுள்ளான். இந்த மூன்றெழுத்தில் மாலவன், ருத்ரன், பிரம்மா சங்கமித்துள்ளனர். அதுவே ரிக் யஜூர் சாம வேதங்களின் ரூபமாகவும் கருதப்படும்.

ஆனால் இதை அறியாத நம் மக்களோ, அந்த சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், கிருஷ்ணன், சாஸ்தா எல்லாருக்கும் ரெண்டு தாரங்கள் இருக்கு, நாம கட்டிகிட்டா தப்பில்லை என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

-எஸ்.சந்திரசேகர்

சனி, 26 ஆகஸ்ட், 2023

ஊனுடம்பு ஆலயம்!

என்று மச்சமுனி 800 நூலில் பாடுகிறார்.

அதாவது, அகரமான சிவமும் உகரமான சக்தியும் நம் தேகத்தில் வாசம் செய்யும்வரை அவ்வுடலுக்கு அழிவில்லை. எட்டுமிரண்டும் சேர்ந்து இந்தப் பாழும் பஞ்சபூத உடலை அழியாத சத்தியசிவமாக மாற்றும். நவகோள்களும் அடிபணிய அந்த தேகத்தவன் சிவனின் உருவையே பெற்றிடுவான் என்று தெளிவாகக் கூறுகிறார்.  இவர் கருத்தையே அபிராமி அந்தாதியில் ‘தெய்வ வடிவம் தரும்’ என்ற வரியும் நினைவூட்டுகிறது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இவ்வுடல் விரைவில் கெட்டு அழியும் வகையில் புகை பிடித்தல், மது அருந்துதல், தகாத உறவில் உடலைக்  கெடுத்துக் கொள்ளுதல், போதை மருந்துக்கு அடிமையாகுதல், முக்குண தோஷங்கள் பெருகும் வகையில் எல்லா வேண்டாத பழக்கங்களும் சிவசக்தியை இந்த தேகத்திலிருந்து விரட்டியடிக்க சதி செய்யும். இது எதுவும் இல்லாமல் இயல்பாக நம் மூச்சை நன்கு உள்வாங்கி விட்டாலே காலனை ஏமாற்றலாம் என்பது சித்தர் விதி. கற்பம் நமக்குத் தேவையில்லை அது சமாதியில் போய் அமர்ந்து மகாநிஷ்டையில் இருக்கும் சித்தயோகிகளுக்கே தேவை. 

மச்சமுனி பாடலுக்கு உதாரணம் என் மூதாதையர் ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தா. நாமக்கல் மாவட்டம் அ.குன்னத்தூர் காவிரிக்கரையில் எம் குலதெய்வ மகாமாரி கோயில் அருகே சமாதியில் இன்றும் அமர்ந்துள்ளார். அவர் கற்பம் உண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் ஆழமான நீண்ட வாசியில் தொடர்ந்து நிலைத்துள்ளார். இவர் எனக்கு 13 தலைமுறைகளுக்கு முந்தையவர். சமாதியில் தற்போது அமர்ந்துள்ள இவருக்கு வயது 460. நடுவிலுள்ள படம் 16ஆம் நூற்றாண்டில் சமாதி பிரவேசம் செய்தபோது இருந்த மத்திம வயதுபோல் தெரிகிறது. அதுவே வலதுபக்க முகத்தில் வயதுக்கேற்ற மூப்பு தெரிகிறது. கடந்த குரு பூர்ணிமா அன்று இவருடைய சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தனர். அச்சமயம் தன் இருவேறு முகங்களைச் சிவலிங்கத்தில் வெளிப்படுத்தினார். அதை நான் படம் பிடித்துக்கொண்டேன்.





ஆகவே நம் தேகத்திலுள்ள சிவனையும் சக்தியையும் எவ்விதத்திலும் நிந்தித்துப் பாழாக்காமல் எந்நேரமும் வாசியில் இருந்தால் ‘தான் அவனாகும்’ நிலையை எட்டலாம்.

-எஸ்.சந்திரசேகர்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வைத்தியர் குண லட்சணங்கள்!

அகத்தியர் கனகமணி நூறு என்ற நூலில் நோய்விதி, நோயாளி பரிட்சை, வைத்திய செய்பாகம், பிரயோகம், அனுகூலங்கள் எல்லாம் விவரிக்கும்போது யாரெல்லாம் மருந்து செய்து கொடுக்கக்கூடாது என்ற பட்டியலையும் (பா:54) சொல்கிறார்.

அம்பட்டர், வண்ணார், எண்ணெய் வியாபாரிகள், வட்டித்தொழில் ஈட்டுவோர், விஸ்வகர்ம கம்மாளர்கள், குயவர்கள், கள் இறக்குவோர், வேடர்கள், துர்க்குணம் கொண்டோர், முன்கோபிகள், சாஸ்திரங்களை மதிக்காதவர்கள், அன்னமிடாதவர்கள், கருமிகள், நீதிநெறி இல்லாதவர்கள், அக்கிரமக்காரர்கள், தற்பெருமை பேசுவோர், கள்வர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள் ஆகியோர் மருந்து செய்து கொடுக்கலாகாதவர்கள் என்கிறார் அகத்தியர்.

அவர் உரைத்தது இன்றைக்கும் பொருந்துமா என்பது எனக்குத் தெரியாது. செயலால் மனத்தால் வாக்கால் களங்கப்பட்டவர்களும், மாசு நிறைந்த தொழிற்பணி செய்பவர்களும் வைத்தியராக இருக்கவோ மருந்து செய்துகொடுக்கவோ கூடாது என்கிறார். அப்படியே அவர்கள் செய்துகொடுத்தாலும் அபய சுவஸ்தம் என்கிற ஹீலிங் டச் அவர்களிடம் இருக்காது என்கிறார். 

மேற்சொன்ன குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் ஜனனகால ஜாதக கோள் சஞ்சாரப்படி வைத்தியம் சார்ந்த தொழில் விதிக்கப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது. எனக்குத் தெரிந்து இந்தப் பட்டியலில் வரும் மருத்துவர்களிடம் கூட்டம் வருகிறதைக் காண்கிறேன்.

அதுபோக வைத்தியரின் லட்சணங்கள் என்னென்ன என்று இன்னொரு பாடலில் சொல்லியுள்ளார். சாந்தகுணமும் சக்தியுள்ளவனாயும், நூல் கற்றவனாய், நன்மைகள் செய்தவனாய், வசீகர சிவப்பு மேனியுள்ளவனாய் இருக்கவேண்டும்; சூரணம் பற்பம் மெழுகு லேகியம் தைலம் ஜெயநீர் சுண்ணம் சரக்குவைப்பு திராவகம் பூநீறுவழலை செய்யத்தெரிந்தவனாய் இருக்கவேண்டும் என்றும்; அஷ்டகர்மம் யோகம் மந்திரப் பிரயோகமும், சக்தி பூஜை செய்பவனாகவும் இருக்கவேண்டும்.  வைத்தியர் அங்கத்தில் எல்லா அவயங்களும் குறைவின்றி இருக்கவேண்டும். குருடு செவிடு முடம், குருத்துரோகி, ஆகாத குணமுடையோன், ஜீவவதை செய்தவன், கல்வி கற்காதவன், தாய்தந்தையின் சாபம் பெற்றவன், லோபி, வைத்தியனாகத் தகுதியற்றவன்  என்கிறார். 

ஆக லட்சணங்கள் பொருந்திய உத்தம வைத்தியரிடம் அணுகி மருந்து வாங்கி உண்டால், கொடுநோயெல்லாம் குணமாகும். அத்தகைய வைத்தியர்களுக்கு நிதி, வஸ்திரம், நெல்லரிசி, பண்டங்கள், தாம்பூலம் வைத்துத்தந்து கௌரவித்து அவர்கள்பால் பக்தி விசுவாசம் கொள்ளவேண்டும் என்று அகத்தியர் உரைக்கிறார்.

எங்கள் ஊரில் மொண்டி வைத்தியர் ராமலிங்கம் என்பவர் இருந்தார். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அவர் கைராசியும், தொழில் சுத்தமும் நிறைந்தவர் என்று என் தாத்தா சொல்லக்கேட்டுளேன்.

ஆக, இதெல்லாம் பொதுவான விதியாகக் கொண்டாலும் அவரவர் கர்ம வினைக்கேற்பத்தான் கைராசி வைத்தியர் அமைவதும் நோய் குணமாவதும் உள்ளது. அகத்தியரின் பாடல்களைத் தோண்டி ஆராய்ந்து இக்காலத்தில் இவ்விதிகள் சரியா? சாதிபேதம் தகுமா? மருத்துவத்தை வியாபாரமாக்குவது சரியா? என்ற போக்கில் அதில் குற்றம் குறை காணாது இருப்பது நலம்.

- எஸ்.சந்திரசேகர்