பஞ்சகிருத்தியம் என்பது பல நிலைகளில் நடக்கிறது. அண்டங்கள் அளவில் இத்தொழிலை சதாசிவம் செய்கிறார். இந்த பிரபஞ்சத்தையும் ஜீவன்களையும் பிரம்மாவின் மூலமாக செய்கிறார். சிருஷ்டியை செய்து அதனை காத்து சமன்படுத்த விஷ்ணுவின் ரூபம் மேற்கொள்கிறார். எப்போது பிரபஞ்சம் பழமையாகி புதுபிக்கப்பட வேண்டுமோ அப்போது ருத்திரனாக இருந்து தன் பாசுபதாஸ்த்திர சக்தியால் சம்வர்தக நெருப்பை உண்டாக்கி பிரளய தாண்டவம் புரிந்து மீண்டும் பிரபஞ்சத்தை மறு ஆக்கத்திற்கு தயாராக்குகிறார். பிறகு மகேஸ்வரராக இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தன்னுடைய மாயைக்குள் கொண்டுவந்து, தன்னிலிருந்து வெளிப்பட்ட அனைத்து ஜீவன்களையும் சதாசிவ வடிவத்திற்குள் வைத்துக்கொள்கிறார். பிறகு ஒரு மகாகல்பம் தொடங்குமுன் பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்கும் பணியை செய்கிறார். இப்படியாக சுழற்சி போய்க்கொண்டிருக்கும்.
சூரிய சந்திரர், பஞ்சபூதங்கள் சிருஷ்டியான பிறகு எண்ணற்ற ஜீவராசிகள் படைக்கப்பட்டன. அவற்றுக்கு பூமிமீது பற்றுதல் வரவும், வாழ்வாதாரத்திற்கும் வழிசெய்யப்பட்டது. அவை எல்லாம் இனப்பெருக்கம் செய்துகொண்டு பூமியில் அழியாமல் வாழ்ந்திட பாதுகாக்கப்பட்டன. இந்தச் செயலை 'அபோவிஷ்ணு' என்றும், காக்கும் தொழிலை செய்பவர் 'விஷ்ணு' என்று யஜூர்வேதம் சொல்கிறது. அதனால் விஷ்ணு 'ஸ்திர கர்த்தா' என்றும் அழைக்கப்படுகிறார். உலகில் எவ்வகை ஜீவராசிகளை அதிகரித்து/குறைத்து சமன்பாடு எய்தவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறார்.
ஈசனின் ஆணைப்படி வெவ்வேறு நிலைகளில் அறிவுநிலைக்கேற்ப பல ஜீவராசிகளையும் மனிதனையும் படைத்தான். ஜீவராசிகள் உயிர்வாழத் தேவையான உணவு நீர் காற்று காப்பகம் என்று அனைத்தையும் அருள்பவர் விஷ்ணு. ஒரு பசுவானது கன்றை ஈன்றெடுத்ததும், அக்கன்று தாயின் மடியை நோக்கிச்சென்று முட்டிப் பால் குடிக்கவேண்டும் என்பதை எப்படி அறியும்? அதற்கு சொன்னது யார்? தெய்வத் தன்மையான அந்த உயிர்வாழும் கலையே 'ஸ்திதி'. இது கீழ்நிலையில் நடக்கும் விஷ்ணுவின் மகிமைகள். எப்போதெல்லாம் இயற்கை சமன்பாடு மாறுமோ அப்போதெல்லாம் விஷ்ணு அதை காத்திட வருகிறார் அல்லது ஓர் அவதாரம் எடுத்து நிலைநாட்டுவார். யஜுர்வேதம் சொல்லியபடி, விஷ்ணு ஸ்தித கிருத்தியம் என்ற காக்கும் பணியை செய்பவர்.
நம் உடலில் இந்த மரபணுக்கள் சேவகர்களாக, வைத்தியர்களாக, ஆலோசகர்களாக, நிர்வாகிகளாகச் செயல்படும் விதம் ஆச்சரியத்தைத் தரும். யோகத்திலும் தியானத்தில் இருந்தபடி நாம் பலவித கட்டளைகளை நமக்குத் தந்து அதன்மூலம் நோய்களை, வரவிருக்கும் ஆபத்துகளை, கண் திருஷ்டிகளை, தடுத்துக் கொள்ளமுடியும். சுயமுன்னேற்ற ஆளுமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஆழ்மனக் கட்டளைகள் மூலம் மரபணுக்களை மாற்றியமைக்க முடியும் என்பது உண்மை. ஜீவனின் தேகத்தில் குடியுள்ள சிவன் உள்ளே சீவனாக வாழும்போது அவனுடைய குணங்கள்தானே நம் திசுக்களிலும் மரபணுவிலும் நீக்கமற நிறைந்திருக்கும்? நம் ஆன்மா ஒவ்வொரு அறிவு நிலையிலும் பிறந்து முன்னேறி மனிதனாக ஜெனித்து பிறகு விடுதலைப் பெறுகிறது. கடந்து வந்த பாதை அவனுள் பூர்வஜென்ம வாசனையாகத் தங்கிவிடும். புல்லாய், பூண்டாய், புழுவாய், பறவையாய், மிருகமாய், மனிதனாய் வளர்கின்ற உயிர்த் தோற்றத்தை அளிக்கிறான்.
அப்படி இருக்கும்போது ஈசனின் மரபணு என்ன? பூலோகத்தில் படைப்பான எல்லாவற்றலும் அவனுடைய மரபணுக்கள் இருந்தே ஆகவேண்டும். அறிவு நிலைக்கேற்பவும் செயல்பாட்டுத் திறனுகேற்பவும் சில மரபணுக்கள் முன்னேற்றம் கண்டிருக்கும். மற்றபடி நாம் எல்லாவற்றுடனும் ஒரே மாதிரியான மரபணு வடிவத்தையே ஒத்துள்ளோம். வாழை, பசு, எலி, பன்றி, நாய், குரங்கு, மனிதன், என எல்லாமே 60% - 80% வரை ஒரேவித அடிப்படை மரபணுக்களை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன்பே Genomic Coding முறையில் இவை ஒப்பீடு செய்யப்பட்டு பதிவாகியுள்ளது. நாம் அன்றாடம் பேசும் ‘வாழையடி வாழையாக’, ‘கோமாதா பால் உயிர் சத்துள்ளது’ ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ போன்ற மூத்தமொழிகள் இதனை நமக்கு நினைவூட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக