About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 11 ஜூன், 2019

மொழி மோகம் மதுமேகம்

ஹிந்தி மொழி திணிக்கப் போகிறார்கள் என்ற மாய பீதியில் உறைந்திருந்தது ஊடகங்கள். ஊரெல்லாம் தமிழொலி அதிகமாக ஒலித்த கடந்த வாரத்தில், தமிழ் மோகன பக்தர்கள் ஒரு படி மேலேபோய் கிறிஸ்துவர்களுக்கு தாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று நீரூபித்தனர்.
ஹிந்துசமய செய்திகள் தொடர்பான தளத்தில் 'நவ கிரகங்களை ஏன் வடமொழிப் பெயர்களால் அழைக்க வேண்டும்? நல்ல தமிழில் பெயர் சொல்லி பூசித்தால்தான் அருள்வார்கள்' என்று போட்டிருந்ததைப் படித்ததும் குபீரென சிரிப்பு வந்தது. இப்படி ஒரு கூட்டம் கிளம்பிட்டாங்க. கிரகம் என்பதை கோள் என்று சொல்லவேண்டும். சூரியன் - கதிரவன், சந்திரன் - நிலவன், அங்காரகன் - நிலமகன், புதன் - அறிவன், குரு/ பிருஹஸ்பதி - சீலன், சுக்கிரன் - கங்கன், சனி - காரி, ராகு - கருநாகன், கேது - செந்நாகன். இவ்வாறு அழைத்து வழிபட்டால்தான் இன்னல்கள் நீங்குமாம்.
ரோஜா மலரை கூஜா என்று மாற்றி அழைத்தால் அதன் மணமும் குணமும் மாறிவிடுமா என்ன? கோள்களை நீங்கள் எம்மொழியில் பெயரிட்டாலும் அதனுடைய பெயர்ச்சியும் தாக்கமும் மாறிவிடுமா என்ன? நம் ஜனன கால நேரத்தில் ஜாதகத்தில் இருக்கும் கோள்களின் நிலைக்கேற்ப யோகமும் தோஷமும் அமையும். இதை நம் ஊழ்வினைதான் நிர்ணயம் செய்யும். அதன்படி சுப/அசுப கிரகங்கள் கூட்டணி அமைவதும் பார்வைப் பார்ப்பதும் அமைகிறது. இது இப்படி இருக்கும் போது ஆங்கில நியூமராலஜி முறையில் நம் பெயரில் எழுத்தை மாற்றுவதாலோ, கோள்களின் பெயரை மொழிமாற்றம் செய்வதாலோ நமது வினைப்பயனை மாற்றிட முடியுமா? A rose by any other name would smell as sweet, and a chilly would taste as hot as ever என்பதுதான் என் நினைவுக்கு வந்தது.
எங்கள் பகுதியிலுள்ள கோயிலில் கோஷா அணிந்த ஒரு பெண் தன் மகனுடன் வந்து நவக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்ததைப் பார்த்தேன். 'சாமி, ராகு பரிகாரம் செய்யணும். அஜ்மல் பாஷா, மகம், சிம்ம ராசி' என்று சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தார். அர்ச்சனை முடியும்போது 'ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு பிரச்சோதயாத்' என்ற மந்திரத்தை அப்பையனையும் திரும்பச் சொல்லுமாறு சொன்னார். அவனும் தவறின்றி இயல்பாய் உச்சரித்தான். பிறகு அந்தப் பையன் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டான். பாருங்கள் இப்படியும் உள்ளனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக