சைவத்தையும் தமிழையும் தன் உயிராகக் கருதி இறைத்தொண்டாற்றியவர், வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார். சைவ மந்திரங்கள் வடமொழியில் ஏன் இருக்கிறது என்ற கேள்விக்கு தன் கருத்தைத் தெரிவிக்கும்போது:
“சிவதீட்சைப் பெற்றவர்கள் ஓதும் மூலமந்திரமும் தனித்தனி அங்கங்களுக்கான மந்திரங்களும் வடச்சொற்களில் உள்ளன. சைவ சமயத்தின் தலைவரான முதல் தமிழ்ச் சங்கம் கண்ட இறைவனார் சிவபெருமானைப் போற்றி வழிபடும் மந்திரச்சொற்கள் வடமொழியில்தான் உருவாயின. மந்திரங்கள் எல்லாமே வடமொழியில் அமைந்தவை. அதை யாரும் இயற்றவில்லை, அவை படைக்கப்பட்டது. எல்லோரும் பொதுவாக வடமொழியில்தான் மந்திரத்தைப் பயின்றார்கள். இதைத்தான் திருஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று திருவாய் அருளினார்.
தமிழில் அத்தகைய மந்திர உச்சாடனங்களுக்குத் தேவையில்லை. ஏன்? இரண்டு மொழிகளும் தனித்தனிப் பாணியைக் கொண்டது. இது வேறு நடை அது வேறு நடை. சைவர்களும் சிவவேதியர்களும் தொன்றுதொட்டு அனுஷ்டான காலத்தில் சம்மிதா மந்திரங்களை ஓதி வருவது மரபு. ஓம் என்ற பிரணவம் சொல்லி அக்னி வளர்த்து இறைவனை ஓதித் துதிப்பதே ஓமம்/ ஹோமம் எனப்படுகிறது இதை திருமந்திரத்தில் திருமூலரும் விளக்கியுள்ளார்.
தமிழைப் படைத்த ஏக இறைவன் முன்னமே இன்னொரு மொழியைச் சிருட்டித்தான் என்பதை தென்னகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதில் வெறுப்புணர்ச்சி காட்டுவதும் ஆராய்ச்சி செய்வதும் நல்லதல்ல” என்று கடுமையாகச் சொல்கிறார்.
பல்லாயிரம் பாடல்களை மனனம் செய்து பதவுரைச் சொன்னவர். கவனகர். வீணை வித்வான். சிறுவயதிலேயே வெண்பாக்கள் இயற்றி சொற்பொழிவுகளும் தந்தவர். செங்குந்த வீரசைவ மரபில் வந்தவர் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்றவர். நால்வர் தமிழ் என்றால் உயிர். அவர்கள் அடியொற்றி இறைப்பணி செய்தவர். தமிழொடு வடமொழியும் கற்று, வேதங்களிலுள்ள சங்கதிகளைப் படித்துத் தெளிய வேண்டும் என்ற ஆசையில் காசிக்குச் சென்றார். அங்கு கேதார் காட் பகுதியில் ஸ்ரீ குமரகுருபரர் நிறுவிய குமாரசுவாமி மடத்தில் தங்கி தன் அவாவைப் பூர்த்தி செய்துகொண்டார். திருப்புகழ் ஜோதியாக விளங்கியவர் வயலூர் முருகனின் அருளாலும், பாம்பன் சுவாமிகளின் அருளாலும் வடமொழியிலும் தேர்ச்சிபெற்று விளங்கினார். ‘வடமொழியும் தமிழும் இரு கண்கள்” என்று அருணகிரிநாதரும், பாம்பன் சுவாமிகளும் உணர்த்தியவர்கள்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்த நேரம். பல தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்து என்ற முறையில் மறைந்து போயின. உயிரெழுத்தில் ஒன்றான ‘ஐ’ என்ற எழுத்திற்கும் சீர்திருத்த ஆபத்து வந்தது. அது போயிருந்தால் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ல் இருந்து 11 ஆகி இருக்கும்.
வாரியார் சுவாமிகள் எம்ஜிஆரிடம் சொன்னார்: “அப்பா! ஒரு ஆர்டர் போட்டு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாயே. அதில் மறைந்து போன ஏனைய எழுத்துக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. போனது போகட்டும் விடு ஆனால் ‘ஐ’ என்பது மிகப் பெரிய சிறப்பெழுத்து. ஐ என்பது தமிழில் ஒர் எழுத்து மட்டுமல்ல; அதுவே ஓரெழுத்தொரு மொழி. அரசன், திருமகள், கடவுள் ….. இப்படி பலபொருள் தரும். அதைப்போய் நீக்கிட்டாயே? இனி ஐ என்பதற்கு சொற்பொழிவில் என்ன பொருள் சொல்வேன்?” என்று கூறிவிட்டு கந்தர் அநுபூதியில் வரும் ஒரு பாடலை விளக்கினார். வாரியாரிடம் வசை வாங்கி கட்டிக்கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர் உடனே தன் தவறை உணர்ந்ததும் ‘ஐ’ எழுத்து மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று மறு ஆணை போட்டார்.
இவ்விதமாக கழக ஆட்சிகள் வந்தபோது தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் குறைந்து கற்பிழக்க, வாரியார் சுவாமிகள் போன்றோர் இயன்றவரை தமிழின் மாண்பைக் காப்பாற்றினார்கள். இன்றைக்கு வடமொழிதான் தெம்மொழிக்கு எதிரி என்று வெட்கமின்றி இரைச்சலாகப் பேசுகிறார்கள்.
விருப்பம் இருந்தால் இவருடைய நூலை வாசித்து மகிழுங்கள்.
"வாரியாரின் காசி யாத்திரை", குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்கம்.176, ரூ.50/-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக