ரயில் நிலையத்தில் வண்டி வரும்வரை அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன். பக்கத்தில் வந்து அமர்ந்திருந்தவர் தான் போகவேண்டிய விலாசத்தைக் காண்பித்து விசாரித்துக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார். தமிழ் நாளிதழில் கட்டுரையாளர் என்றும் அவர் தினமணி தினமலரில் வழக்கமாக எழுதி வருவதாகச் சொன்னார்.
'அப்படியா… நல்லதுங்க' என்றேன்.
'நீங்க என்னைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்களே. முகநூலில்கூட எனக்கு வாசகர் வட்டம் நிறையபேர் இருக்காங்க' என்றார்.
'தெரியாதுங்க. நான் தமிழ் பேப்பர் படிக்கிறதில்லை' என்றேன்.
'நீங்க என்ன படிப்பீங்க?'
'டைம்ஸ்'
'இங்ளீசுதான் படிப்பீங்களா? தமிழ் பேப்பர் வாங்மாட்டீங்களா?'
'நீங்க என்ன படிப்பீங்க?'
'டைம்ஸ்'
'இங்ளீசுதான் படிப்பீங்களா? தமிழ் பேப்பர் வாங்மாட்டீங்களா?'
'ஆமா. தமிழ் வாங்கமாட்டேன். தமிழ் பேப்பர் ரூ.5,7னு விக்கிது. டைம்ஸ் ரூ.3. எல்லாத்துலேயும் ஒரே செய்திதான் வரும். தமிழ்ல கூடுதலா உள்ளூர் சினிமா சரக்கு மசாலா போடுவான். யாருக்கு வேணும்? இதுல எதுவா இருந்தாலும் பழைய பேப்பர் கிலோ ரூ.15 போகும்' என்றேன்.
'அதுல தமிழ் கட்டுரைகள் வரும் அதைப் படிக்கலாமே. அதுக்கு சொன்னேன்' என்றார்.
'சார்.. எல்லா பேப்பர்லேயும் யாரோ எதையோ எழுதிகிட்டுதான் இருப்பாங்க. வாசகர்கள் எல்லா எழுத்தாளர்களையும் தெரிஞ்சு வெச்சுக்க ஒரு அவசியமும் இல்ல' என்றேன்.
'அப்படி இல்ல… எழுத்தாளருக்கு அது பெருமையான விஷயம்' என்றார்.
'சார் நான் சொல்றேனு தப்பா நினைச்சுக்காதீங்க… புத்தகம் படிக்கிற வாசகர்களைவிட எழுத்தாளர்கள் அதிகமாகிட்டாங்க. வெளியுலகம் அறியும் அளவில் எழுத்தாளர் பிரபலமாகிட பல வருடங்கள் ஆகும். நம்மளை எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கணும்னு சொல்றது நியாயமில்லை. நம்மைப்பற்றி நாம் வசிக்கும் பகுதியில் தெருவில் இருப்போர் அடையாளம் தெரிந்து கொண்டாலே பெரிய விஷயம். தொழில்முறை எழுத்தாளரா இருக்கிறவங்க அதுக்கு நிறைய உழைக்கணும். டிவி/ சினிமாவுக்குத் தொடர்பில்லாத எழுத்தாளர் ஒரு கட்டுரைத் தொடரோ, புத்தகமோ எழுதியதுமே பிரபலமாக வேண்டும் என்பது பேராசை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆத்மார்த்தமாக நிறைய எழுதுங்கள். வாசக வட்டம் உங்களைத் தேடி வரும்' என்றேன்.
'உங்களுக்குப் புத்தகம் படிக்கிற ஆர்வம் உண்டா?' என்றார்.
'உண்டு. நானும் எழுத்தாளர்தான். முழுநேர எழுத்தாளரில்லை. சித்தரியல் ஆன்மிகம் சமூகவியல் சுயமுன்னேற்றம் மேலாண்மை புதினம் என 22 புத்தகங்கள் எழுதியிருக்கேன்' என்றேன்.
பேசிக்கொண்டிருக்கையில் ரயில் வந்தது. என்னை வியப்புடன் பார்த்தவாறு அவர் விடை பெற்றுக்கொண்டார். ஐயோ பாவம்! தன்னை யாருக்கும் தெரியவில்லை என்ற கவலையில் மன உளைச்சல் வராமல் இருந்தால் சரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக