About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 20 ஜூன், 2019

தமிழ் வாழ்கனு சொன்னால் போதுமா?

நம் பக்கத்து ஊர் நண்பர் தமிழ் எழுத்தாளர் மற்றும் கவிஞர். சிலகாலம் தமிழாசிரியராகப் பணியாற்றியபின் சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். நாம் பேசும் மொழியில் கொஞ்சமும் பிறமொழிக்கலப்பு இருந்துவிடக் கூடாது. அவ்வளவு சுத்தபத்தம் எதிர்பார்ப்பார். தமிழ் வாழ்கனு கோஷம் போட்டா மட்டும் போதாது அதை வாழ வைக்கவேண்டும் என்பார்.

கால்டாக்ஸி, மொபைல் சார்ஜர், ஏடிஎம், மோட்டார், சம்ப், பீரோ, மிக்ஸி கிரைண்டர், பிரிண்டர் ஸ்கேனர் என சகலத்திற்கும் தமிழில்தான் நிகரான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பார். பள்ளியில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை இலவசமாகக் கற்கலாம் என்ற பேச்சு அண்மையில் எழுந்தபோது இவருக்கு ரத்தக்கொதிப்பே வந்துவிட்டது. எங்கு தன்னுடைய மொழிப்புலமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற மாயக் கவலையில் இருந்தார். அவர் இடதா வலதா, முற்போக்கா பிற்போக்கா, எப்போது எதை ஆதரிப்பார் எதிர்ப்பார் என்று கணிப்பது சிரமம்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று பிளாஸ்டிக் ஒழிக என்றால் எப்படிச் சாத்தியம் இல்லையோ, அப்படித்தான் பேச்சு மொழியில் ஆங்கிலச்சொல் பயன்பாடும். பல துறைகளில் பலவித பொருட்களுக்குப் பொதுவான சர்வதேசப் பெயரை எல்லா மொழிகளிலும் சர்வ சாதாரணமாகப் பயன் படுத்துகிறார்கள். பழந்தமிழர் பயன்பாட்டுமுறை கருவிகரணங்களுக்குக் கடந்த நூற்றாண்டுவரை பாதிப்பு இல்லை. ஆனால் பிற்பாடு கால மாற்றத்தில் பல சாதனங்கள் வந்து விட்டபடியால் எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பது எரிச்சலைக் கிளப்பும்.

ஓலா ஊபர் எல்லாமே 'அழைப்பு இழுனி', கால்கேர்ள் என்பது 'மகிழ் மகள்', கிரைண்டர் என்பது 'மின்னரவை', மொபைல் பவர்பேக் என்பது 'மின்னடங்குப் பெட்டி' என அவரிடம் இன்னும் பட்டியல் நீளும். அதுசரி இதெல்லாம் அன்றாட பேச்சில் எப்படிப் பயன்படும்? 'சார், சும்மாவாவது கழனி சம்பாரவை டேங்குப்பொட்டினு அள்ளி விடாதீங்க. இதையெல்லாம் புதிதாய் கத்துகிட்டு பேச யாருக்கும் பொறுமையில்லை. மெனக்கெட்டு அகராதியைப் புரட்டி மூளையைக் கசக்கி தக்க பெயர் வைத்தாலும் அவை நம் மண்டையில் பதியாது. பள்ளிப் பாடத்தில் படித்தால்தான் உண்டு. ஏற்கனவே உள்ள பல நல்ல தமிழ்ச்சொற்களைக் காலவோட்டத்தில் நாம் பயன்படுத்தாமல் புறக்கணித்துவிட்டு அவை வழக்கொழிந்தது என்கிறோம். அதோடு இந்த சொற்களும் சேர்ந்து மறக்கடிக்கப்படும்' என்றேன்.

பக்கத்து வீட்டில் நேற்று ஆழ்துளைக் கிணறு போர்வெல் போட்டனர். இணைப்பு தருவதைப் பற்றி பணியாட்களுக்குள் பேச்சு போய்க்கொண்டிருந்தது. "த பார், ஆறு இன்சு பழுப்பு இறக்கிட்டு மேலேர்ந்து 30 அடி டீப் இஸ்து, மூணு பெண்டு வெச்சு, 2 ஆர்ஸ்பவரு மோட்டர் போட்டு சின்டக்ஸல வுட்ரு. அதை அக்வா பில்டர்ல பிக்ஸ் பண்ணிட்டா லீவர் வால்வு வெச்சு திருப்பிக்கட்டும்" என்று பேசிக்கொண்டனர். இந்த யதார்த்தத்தை நான் நண்பரிடம் சொன்னால் அவருக்கு ஜன்னி கண்டுவிடும். அந்த பொல்லாப்பு எனக்கு எதற்கு?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக