'யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று சொன்ன பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருந்தது? தமிழ் ஆங்கிலம் பிரஞ்ச் சமஸ்கிருதம் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி ஹிந்தி வங்காளம் இலத்தின் கிரேக்கம். இதில் முன்னவை ஏழு மொழிகள் எழுதவும் படிக்கவும், மற்றவை பேச மட்டும், பேசினால் புரிந்துகொள்ள முடியும் அளவில் திறன் பெற்றிருந்தார். ஆக, வேற்று மொழிகளைப் படிக்காமல் எப்படி இவர் இதைச் சொல்லியிருப்பார்?
இருமொழிக் கொள்கையையே திராவிடக்கட்சி விரும்புவதாகவும், மும்மொழிக் கொள்கையே இளைய சமுதாயத்திற்கு சரி என்று மக்கள் நினைப்பதாகவும் தினமும் இங்கே சுவரொட்டிகள் Wall post ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது மொழியாக நான் என்ன படிக்கவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.
காலை நேரம். சிற்றுண்டி உண்பதற்கு ஓட்டலுக்குப் போகிறோம்.
"என்ன இருக்கு?"
"இட்லி பொங்கல் வடை, காபி"
"வேற இல்லையா?"
"இப்போ இந்த மூணுதான் இருக்கு. இதுல எது வேணும்னு சொல்லுங்க"
"என்ன இருக்கு?"
"இட்லி பொங்கல் வடை, காபி"
"வேற இல்லையா?"
"இப்போ இந்த மூணுதான் இருக்கு. இதுல எது வேணும்னு சொல்லுங்க"
இந்த நிலையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள். மூன்றாவது மொழியாக ஹிந்தி பெரும்பாலும் இருக்கும். சமஸ்கிருதம் பிரஞ்ச் ஸ்பானிஷ் மான்டரின் வைக்கப்போவது இல்லை. சில தனியார் பள்ளிகளில் வைப்பதுண்டு. பள்ளியில் நாம் கற்கும் அந்த மூன்றாவது optional மொழி எதிர்காலத்தில் நமக்குப் பயன் தரும். பள்ளிப்படிப்புக்கு பின் அதை தொடர்வதும் விடுவதும் அவரவர் விருப்பம். வடக்கே போகும்போது அத்தியாவசிய இடங்களில் அடிப்படை அளவில் பேச, பஸ்ரூட்/ அறிவிப்புகள்/ பதாகைகள் படிக்க உதவுகிறது. படித்த மொழிகள் என்ன ஊசியா போகும்?
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று திருவள்ளுவர் சொன்னது சரி. போன பிறவியில் நான் கற்ற மலையாளம் பல்லசேனாவில் எனக்கு எப்படிப் பயன்பட்டது என்பதைப்பற்றி முன்னமே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அந்த நிகழ்வுக்குப்பின் மலையாளம் கூட்டிப் படிக்க எழுத வரும் ஆனால் அதை மேற்கொண்டு தொடர இப்போது ஆர்வம் இல்லை.
ஆகவே, கல்விப்புலத்தில் மூன்றாவது விருப்ப மொழி என்பது அரசியல் திணிப்பு இல்லாமல் மாணவன்/பெற்றோர் விருப்பத்தைப் பொறுத்தே அமையவேண்டும். பள்ளியில் பணத்தைக் கொட்டிப் படிக்கும்போது கூடுதல் மொழியை அவர்கள் சொல்லிக் கொடுக்கட்டும். அதைவிட அவர்களுக்கு என்ன வேலை? கேரளா ஆந்திரா கருநாடகா பள்ளிகளில் இதை சர்வ சாதாரணமாகப் பயில்கிறார்கள். அவர்களுடைய தாய்மொழி இன்னும் அழியக் காணோமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக