நம்முடைய மரபணுக்களோடு நாம் ஆழ்மனதில் பேசி அதை மாற்றியமைக்க முடியும் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். “இதெல்லாம் வேலைக்கு ஆவறது இல்லை. அப்படிப் பேசி வழிக்குக் கொண்டுவர எத்தனைக் காலம் ஆகுமோ?” என்று மேலோட்டமாக உங்கள் மனம் நினைக்கும். ஏன்? ஊழ் வினையின் தாக்கமும் அதனால் உடல் அக்கர்மாவின் பலனை அனுபவிப்பதையும் நீங்கள் ஓரளவுக்குப் புரிந்து வைத்துள்ளீர்கள். வினைப் பயன் நிலுவையின்றி தீர்ந்தால்தானே நம் மரபணு உள்ளிருக்கும் சிவனின் பேச்சைக் கேட்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் உண்மை. ஆனால் அது எப்போது நடக்கும்?
நல்ல தசா-புக்தி வரும்காலத்தில் ஞான காரகனும் புத்தி காரகனும் உங்களை நல்வழிப்படுத்த, கரியன் சுற்றில் உங்களைப் பெரிதாக தண்டிக்க எந்த முகாந்திரமும் இல்லாதபோது, இது சாத்தியம். குரு சிறப்பாக நின்று உங்களை ஆன்மிக தர்மநெறியில் நிலைக்கச் செய்யும்போது ஆன்மா மேன்மையுற அதனால் தேகத்தின் மரபணுவும் நன்மாற்றத்திற்கு வசப்படும். இது நடக்க லக்னத்தையோ லக்னாதிபதியையோ குரு பார்த்து, அதே சமயம் 12ல் கேது இருந்து அந்த 12 ஆம் வீட்டுக்குரிய கிரகமும் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகருக்கு மறுபிறவி இல்லை, வீடுபேறுதான் என்கிறது ஜோதிட சாத்திரம். சரி, மேலே ஜோதிடம் சொல்லியபடி கட்டங்களில் கிரகங்களின் பலன்கள் முழுமையாக இல்லாமல் போனால், என்னவாகும்? பிறவா வரம் கிடைக்காதா?
கிரகங்களைத் தாண்டி உங்கள் குலதெய்வம் உள்ளது. அது மனம் வைத்தால் உங்களுக்கு விடுதலைக் கிடைக்க சிபாரிசு செய்யும். நவகிரகங்களின் நாயகியாக நிலைப்பவள் அவளே! அந்தந்த வம்சாவளியின் பாவ-புண்ணிய கணக்கைப் பார்த்து முடிவுசெய்து கொள்ளும் வகையில் அவளை கங்காணியாக ஈசன் அமர்த்தியுள்ளான். அவளிடம் சரணடைந்தால் உங்களிடம் வெகு விரைவில் மாற்றங்களைக் காணலாம். அவளே கனவிலோ நேரிலோ வந்து வழிகாட்டுவாள். எண்ணிய வண்ணமே பாதைப் போகிறது என்பதற்கு என்ன அறிகுறிகள்? பணம் நிறைய சம்பாதித்தும் அதன்மீது ஆசையில்லாமல் இருப்பது, அதை பொதுநலப் பணிக்குத் தர நினைப்பது, விலையுயர்ந்த பொருட்களை யாருக்கேனும் கொடுத்துவிட நினைப்பது, யாரையும் வஞ்சம் தீர்க்கும் எண்ணம் வராமல் இருப்பது, வாழ்க்கையில் நடக்கும் தீமைக்கு சஞ்சித/பிராரப்த ஊழ்வினை கர்மாதான் காரணம் என்று எண்ணி பொறுத்துக் கொள்வது, நல்ல படிப்பும் உத்தியோகமும் இருந்தும் பொருளீட்ட நாட்டமின்றிப் போவது, ஒரு கட்டத்தில் சிவன் கோயிலில் அமர்ந்து பிரசாதம் தருவதை மட்டும் உண்டு வாழவேண்டும் என்று ஆசைப்படுவது, தனிமையை விரும்பவும், யாரையும் புண்படுத்தவோ, புதிதாகப் பாவங்கள் ஈட்டவோ மனமின்றிப் போவது, தனக்கென குடும்பம் இல்லாமல் இருப்பது, இருந்தாலும் ஒட்டுதலின்றி இருப்பது, மணம் செய்ய பிராப்தமின்றிப் போவது.., போன்ற பல அறிகுறிகள் வெளிப்படும்.
ஒவ்வொரு நபரின் 13வது தலைமுறையோடு அந்த குலதெய்வத்தின் ஆதிக்கம் முற்றுபெறும் நிலையை எய்தும். இதைத்தான் ஈரேழு தலைமுறைகள் என்கிறோம். Geneticsகூட ஒருவருடைய மரபணு 13 சந்ததிகளுக்குப்பின் பலவீனப்படுகிறது என்று சொல்கிறது. ஆகவே செய்யும் பாவச்செயல் ராகு-கேது வழியே அத்தனை தூரம் கடந்துபோய் அதன்பின் பாவங்களைக் கடத்த ஆண் வாரிசு இல்லாமல் நின்றுவிடும்.
12 ஆம் வீட்டு கிரகநிலை நூறு சதவிகிதம் மோட்சத்தைக் சொல்லாது போனாலும், குலதெய்வத்தின் தலையீட்டினால் வீடுபேறு கிடைக்கவும் சாத்தியமுண்டு. அவள் மூலம் ஈசனே இதைப் பூர்த்தி செய்வான். இவ்வாறு நடப்பது எப்போது சாத்தியம்? மனமும் எண்ணமும் மரபணுவும் மாறும்போது, உங்கள் கைரேகையும் மாறும். அப்போது விதியே மாறுகிறது. இது சூட்சும சங்கிலி. இந்த சூட்சுமம் புரிய யார் காரணம்? நம் மூதாதையர் தான். அவர்களில் யாரோ சிறப்பாக பக்தி யோகத்தில் உழைத்ததால் நாம் எந்த முனைப்பும் இல்லாமல் ஞானம் பெற்று இதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக