‘ஆண்டவர் ஒளி ரூபமானவர். நாங்கள் சிலை வழிபாடு செய்வதில்லை’ என்று பெந்தகோஸ்தே பிரிவினர் சொல்கிறார்கள். இதைத்தான் வள்ளலாரின் சன்மார்க்க சங்கமும் சொல்கிறது. சென்ற ஆண்டு இவர்களும் வீரசைவ லிங்காயத்தாரும் ஆளாளுக்குத் தனி மதமாக பிரகடனப் படுத்தவேண்டும் என்றனர்.
வள்ளலார் வழியைப் பின்பற்றுபவர் எங்கள் பகுதியில் உள்ளார். அவர் சைவத்திலிருந்து சன்மார்க்கதிற்கு மதம் மாறியவர். அவர் சொல்வது, ‘உருவ வழிபாடு என்பது தேவையற்றது ஏனென்றால் புராணங்கள் அத்தனையும் பொய். சிவன் மற்றும் எல்லா கடவுள்களையும் சிலையாக மந்திரமாக வழிபடுவது மிகத்தவறு. அருட்பெரும் ஜோதிதான் ஆண்டவர். அதற்கு உருவம் இல்லை. சிலை வழிபாடு காட்டுமிராண்டித்தனம்தான்’ என்று வாதம் செய்தார். வள்ளலார் சன்மார்க்க சங்க அடியார்கள் பேசும்போது ஈவேரா பேசும் தொனியில் சொற்கள் அமைகிறது. அது எனக்குப் பிடிக்கவில்லை.
நண்பர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு பிறகு பதில் அளித்தேன். ‘சார், வணங்குவது என்பது அவரவர் விருப்பம். இதில் வள்ளலாரை இழுக்கக் கூடாது. அவர் உச்சபட்சதிற்குச் சென்ற சித்தர். சிவபிரானின் பேரொளியைக் சுயம் பிரகாசமாகக் கண்டவர். உமையவள் கரத்தால் அன்னம் உண்டவர். ஜோதியையே அவர் இறைவனாக ஏற்றார். ஆருத்ரா தரிசனத்தை காண தில்லைக்குப் போகவேண்டும் என்றவர்களை நிறுத்தி வடலூரிலேயே திரைப்போட்டு தரிசனம் செய்ய வைத்தார். அஷ்ட சித்தியையும் கைவரப்பெற்ற சித்தர், எப்படி சிவபிரானையும் அவருள்ளிருந்து வெளிப்பட்ட கடவுளர்களை நிந்திக்க முடியும்? சித்தர்களுக்கு உருவ வழிபாடு அவசியமின்றிப் போனது. சிவனே சித்தனாக இருக்க மந்திரம் ஏன் ஜெபிக்க, சிலையை ஏன் வணங்க? அதெல்லாம் நமக்குத்தான். அது அறவே வேண்டாம் என்று நாம் சொல்லமுடியாது.
ஆனால் நாம் இன்னும் அவர் நிலைக்குப் போகமலே ஷண்மத கோட்பாட்டை எதிர்ப்பது சரியில்லை. துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று பிரிவுகள் உள்ளது. இதில் எது சரி? எல்லாமே சரி. நாம் வளரும்போது முதலில் துவைத்தமாகத் தொடங்கி பிறகு ஒருகட்டத்தில் அத்வைத்தமாக புரிதல் முடிகிறது. ஒரு கட்டத்தில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற நிலையை உணர்கிறோம். அப்போது கோயிலுக்குப் போவதில்லை, மந்திரம் ஜெபிப்பதில்லை. ஆக்னேயத்தில் அகத்தீயாம் அருட்பெருஞ்சோதியைப் பார்த்து பரவசப் படுகிறோம். புறத்தேயும் பார்த்து மகிழ்கிறோம்.
அப்படித்தான் வள்ளலார் பாதையும். பல நிலைகளில் வளர்ந்து இறுதியில் ஜோதியே எல்லாம் என்ற நிலைக்கு வருவது. ஷண்மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கும் என்ற காரணத்தால் அது தேவையில்லை, உருவம் தேவையில்லை, மந்திர உச்சாடனம் தேவையில்லை என்றார். ஆனால் நாம் பக்குவப்படாமல் அப்படிச் சொல்வது சரியன்று.
பரப்பிரம்மம் என்பது உருவம், அருவம், அருவுருவமானது. அது ஆணோ பெண்ணோ பாலினமற்றதாகவோ இருக்கலாம். ஆனால் அவ்வஸ்துவில் ஒளியும் அதனுள் சப்தமும் ஆதாரம். வேள்வியில் நான் படம்பிடித்த இறை உருவங்களை ஒருங்கே கோர்வையாக பிரிண்ட் போட்டு வைத்திருந்ததை அவரிடம் காட்டி, ‘சிவன், அம்மன், கணபதி, விஷ்ணு, முருகன், என எல்லாமே செதுக்கியதுபோல் இருக்கு. இதுக்கு என்ன சொல்வீங்க? எல்லாமே அக்னி ரூபமான ஒளிதான் ஆனால் எல்லாத்துலேயும் உருவம் இருக்கா இல்லையா?” என்றேன். மொத்தத்துல இதெல்லாமே ஷண்மதத்தின் வெளிப்பாடுதானே? பரஞ்சோதியை தன்னுள் அகத்தீயாக தரிசிப்பதே சுயம்பிரகாசம். அதைதான் வள்ளலார் சொன்னார். மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் கோயிலுக்கும் போகவேண்டாம். இதுகாறும் பின்பற்றும் சடங்குகள் எல்லாமே அர்த்தமற்றது என்றால் நான் ஏன் ஜோதி வழிபாடு செய்யவேண்டும்? அது உங்களுடைய சிஸ்டம் ஆஃப் வர்ஷிப் தானே?
ரிஷிகளும் சித்தர்களும், ஆறாதார சக்கரங்களில் ஒவ்வொரு நிலையிலும் ஒளியை பீஜாக்ஷர சப்தத்தை அதில் வீற்றுள்ள கடவுளை சூட்சுமமாகக் கண்டுணர்ந்தார்கள். நீங்கள் அதை எல்லாம் பொய் என்பீர்களா? ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் ஒருபடி மேலேபோய் ஆறாதார சக்கரங்களில் நிகழும் இவ்வனைத்தையும் நேரடியாக வெறும் கண்களால் பார்க்க வைத்தார். பிறகு அவை மறைந்துபோய் புரூமத்தியில் சுடராக ஒளிர்ந்தது’ என்றேன்.
நம் நண்பருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தார். நான் வள்ளலாருக்கு எதிரானவன் அல்ல. வடலூரில் தரிசனம் செய்தவன். திருவருட்பா மூலம் அவர் வெளியிட்ட உபதேசங்களை பரப்புபவர்கள் ஷண்மதத்தை நிந்திப்பது போல் இருந்தது.. புரிதல் சரியாக இல்லாதபோது புதிய மதம் பிறந்து விடுகிறது. Genesis 1:3, " And God said, “Let there be light,” and there was light."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக