நம் நண்பரிடம் சன்மார்க்க
சங்கத்தைபற்றி மேலும் பேசிக்கொண்டிருந்தேன்.
சிவம் அடித்தளமாய்
இருக்க அதன்மீது எழும்பியதே சன்மார்க்கப் பிரிவுகள். ஆறுவகை மதங்கள் என்றாலும்
அதன் உட்பிரிவுகள் மேலோட்டமாகத் தெரியாது. பிற்பாடு இந்துமதம் என அழைக்கப்பட்டு இன்றும்
சிதையாமல் இருப்பது அதனுடைய ஆற்றலாலும் ஈசனின் அருளாளும்தான். அந்நிய மதங்கள் பல
வந்தபோதும் ரிஷிகள் சித்தர்கள் மகான்கள் என பலரும் அவ்வப்போது வழிநடத்தி வந்ததாலும்
அதன் பெருமைகளும் சடங்குகளும் காலங்காலமாக தொய்வின்றி பின்பற்றப்படுகிறன. வேதங்கள்
புராணங்கள் இதிகாசங்கள் துணைநூல்கள் எல்லாவற்றிலும் சொல்லப்பட்ட கருத்திலிருந்து வேறுபட்டு
நிற்கும்போது அங்கே புதிய மதம் பிறக்கிறது.
வியாசர் முதல் திருவள்ளுவர்
வரை இந்துமதத்தின் அநேகக் கோட்பாடுகளை வலியுறுத்தி போதித்திருந்தாலும், அதை நிராகரிக்கும்
விதத்தில் பிற்காலத்தில் சில வழிபாட்டு முறைகள் வந்தன. இறைவனே ஆன்மாவே இருக்க அவனே
நம்முடைய ஊழ்வினைக்கேற்ப பாவ புண்ணியங்களை நம் தேகம் மூலம் அனுபவிக்க வைக்கிறான். அ
என்றால் சிவன். அவனே தாயுமானவன். அம்மா என்ற அகாரத்தை மனமுருகச் சொல்லும்போது
அங்கே தாய் வந்து பரிவுடன் உணவு படைக்கிறாள். ஏன்? தன் ஜீவன் பசியால் துடிப்பதை
கருணையோடு பார்ப்பதால் குழந்தைக்கு உணவிடுகிறாள்.
ரிஷிகளும் சித்தர்களும்
எண்ணற்ற மந்திரங்களையும் பூசை கிரமங்களையும் பரிகார முறைகளையும் சொல்லிவைத்துள்ளனர்.
பரிகாரம் என்றாலே அங்கு பூசையும் பரிகாரமும் உண்டு, இறுதியில் ஜீவகாருண்ய செயலில்
உணவு படைத்தலும் உண்டு. முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தை தாயின் விரலை பிடித்துக்கொண்டு
நடந்து பிற்பாடு அது விழாமல் நடக்கத் தொடங்குவது எப்படியோ அப்படித்தான் ஆலய
தரிசனம், சிலை வழிபாடு, பூசைகள், மதம் போதிக்கும் அர்த்தம் என எல்லாமே அமைகிறது. பிற்பாடு
அதில் தனக்குப் பிடித்தது எதுவோ அதை ஏற்கிறான் அல்லது நிராகரிக்கிறான்.
ஆனால் இதுகாறும்
பின்பற்றப்பட்ட பூசை முறைகளும் சடங்குகளும் எவ்விதத்திலும் தேவையில்லை என்று சொன்னால்
நம் ஆன்மாவைச்சுற்றி நிகழும் பல சூட்சும விஷயங்களை உதாசினப்படுத்துவதாய்
இருக்கும். ஷண்மத கோட்பாடு தேவையற்றது, புராணங்கள் எல்லாமே பொய் என்றால், சித்தர்கள்
சிவரகசிய நுட்பங்களைச் சொல்லியிருக்க வேண்டாமே, நாயன்மார்களும் ஆழ்வார்களும் அதை
மையமாக வைத்துப் பதிகங்களையும் பாசுரங்களையும் அருளியிருக்க வேண்டாமே. பிறந்த நட்சத்திரத்தில்
அர்ச்சனை செய்வதோ, இறந்த திதியில் சடங்குகளைச் செய்வதோ தேவையில்லை என்று நீங்கள்
சொன்னால் அதை திருவள்ளுவரே ஒப்புக்கொள்ள மாட்டார். பிறந்தாலும் இறந்தாலும் நம்
ஆன்மா இறைவனையே சுற்றிவரும். இங்கு நீங்கள் செய்யும் ஆன்மிகச் செயல்களின் பலன்
அங்கு அந்த ஆன்மா சம்பந்தப்பட்ட ஜீவனுக்குச் சென்று சேரும். அன்னதானம் வஸ்திரதானம்
வித்யாதானம் சொர்ணதானம் என எல்லாமே காருண்ய நோக்கில்தான் செய்யப்படுகிறது. சைவ
உணவு உண்டால் விகற்பங்கள் வருவதில்லை.
இவை எல்லாமே நீங்கள் கூடாது என்பதால்
உங்களுடைய சன்மார்க்க சங்கத்தில் உயர்வு தாழ்வின்றி எல்லோரையும் பாரபட்சமின்றி
ஏற்கிறீர்களா என்ன? உங்களுடைய சங்கத்தில் உறுப்பினர் கட்டண வசூலில் தில்லுமுல்லு நடந்ததாகவும்
அதனால் உங்களுக்கும் அந்த சூனாபானாவுக்கும் பேச்சுவார்த்தையில்லாமல் ‘லடாய்’ தானே?
என்றேன். அருட்பெருஞ்சோதியை வழிபட்டு அவர் வீட்டு மாடியில் வழிபாடு மன்றமும்
நடத்தினீர்கள். அப்படி இருந்தும் சங்கத்தில் ஆன்மாக்களுக்கு இடையே ஏன் இந்த விகற்பங்களும்
பிரிவினை வேற்றுமையும்? என்றேன்.
ஜீவகாருண்யமும் பிரார்த்தனையும்
போதும், எந்த விதானங்களும் சம்பிரதாய முறைகளும் பின்பற்ற வேண்டியதில்லை என்றால் சைவ
சித்தாந்தப்படி அது மூதாதையர்களின் வம்ச சாபத்தையும், ஊழ்வினைப் பாவத்தையும், கொண்டு
வந்து சேர்க்கும். இதை நீங்கள் எப்படிப் போக்குவீர்கள்? சைவத்துள் எல்லா தாற்பரியமும்
அடங்கியுள்ளது, நீங்கள் சொல்வதும் அடங்கியுள்ளது என்றேன். தொன்றுதொட்டு இருக்கும் சனாதன
மதத்தில் நீங்கள் பின்பற்றும் சமரச சுத்த சன்மார்க்க நெறியும் ஓர் அங்கம். இதை
மட்டும் தனியே பிரித்துப் பின்பற்றுவது அவரவர் விருப்பம். ஆனால் ஷண்மதத்தையும் சமய
கோட்பாடுகளையும் நிந்திக்கக் கூடாது என்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக