About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 16 செப்டம்பர், 2019

பதப்படுத்திய பால்

"ஆவின் பால் பாலே இல்ல. கெமிக்கல் கலந்தது. அதைப் போய் எல்லாரும் குடிச்சுகிட்டு..." என்று தெருவில் இருவர் எனக்கு முன்னே பேசிக்கொண்டு நடை போனார்கள். நான் செய்தித்தாள் வாங்கும் கடையின் எதிரேயுள்ள டீ கடையில் இந்த இருவரும் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. அந்த டீ கடை ஆள் காலையில் பெரிய ஒரு லிட்டர் பச்சை பாக்கெட் ஆவினில் 10 வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்துள்ளேன்.

இப்படி விமர்சித்த அவர்களால் 100% தூய்மையான பாலை விநியோகம் செய்ய முடியுமா? இதற்கு என்ன மாற்று? ஆவின் பாலை நம்பித்தான் குடிக்கணும். கறந்த பாலை வீட்டுக்குக் கொண்டுவந்து ஊற்றுவோர் உண்டு. முன்பு வீட்டு வாசலில் மாடு கட்டி கண்ணெதிரில் கறந்து தந்தனர். இப்போது எங்கேயோ கறந்து வீடுவீடாக வந்து சப்ளை செய்கிறார்கள். கொண்டுவந்து ஊற்றும் ஆள் அதில் ஆவின் பால் கலந்தாலும் தண்ணீர் ஊற்றினாலும் நாம் என்ன கண்டோம்?

ஆவின் பாலில் Blue Nice, Green Magic, Magenta Premium என கொழுப்பு % நிலைக்கேற்ப உள்ளது. ஆக Fat மற்றும் Solid Non-Fat ஏற்றியும் குறைத்தும் சமன்பாட்டில் வைக்கிறார்கள். அந்த விவரமும் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது. அது ஊறு விளைவித்ததாக இதுவரை எங்கும் புகார் வரவில்லை.

பட்டணத்தில் சொந்தமாக மாடு இருந்தால் ஆவின் தயவு வேண்டாம். அது முடியுமா? பால்காரர் தன் மாட்டை ஓட்டிவந்து கறந்தாலும் ஊசி போட்டு போட்டு அந்த கெமிக்கலும் கறந்த பாலில் இறங்கி விடுகிறது. சுரப்புப் பிடிக்க அதன் அருகே கம்பத்தில் சாய்த்து வைக்கும் வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டிகே 5 வயது ஆகியிருக்கும். கன்று ஏன் வாலாட்டவில்லை துள்ளவில்லை மடியை முட்டவில்லை என்று ஒருபோதும் சந்தேகப்படாத தாய் மாடு இக்கன்றை நக்கி நக்கி தோல் பொம்மையின் அடிபக்கம் தையல் பிய்ந்து ஆங்காங்கே வைக்கோல் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். இப்படி எல்லாம் செய்பவர் யோக்கியமான பால்காரரா? விற்கும் பால்தான் தூய்மையாக இருக்குமா?

கூட்டுறவு பால் கொள்முதல் மையத்திற்கு வந்து கறந்த பாலை ஊற்றிவிட்டுப் போவோர் ஊசி போட்டு பால் கறக்காமலா இருப்பார்கள்? அங்கே பாலின் அடர்த்திதான் அந்நேரம் அளக்கப்படும். இனி காலம் போகிற போக்கில் ரசாயன வாழ்க்கை என்று ஆனபிறகு எல்லாவற்றையும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் நாம் எதையும் வாங்கிக் குடிக்கவோ உண்ணவோ முடியாது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக