திமுக நிறுவப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் ஆகிறதாம். சந்தோஷம்! அதனால் சமுதாயத்திற்கு விளைந்த நம்மைகள் என்ன? தேடிக்கண்டுபிடித்துச் சொல்லவேண்டும். முன்னேற்றத்தைவிட அழிவுகளே அதிகம். அன்றைக்குப் படிப்பறிவு குறைவு என்பதனால் பாமரர்களை மூளைச்சலவை செய்து தங்களுடைய கருத்து வட்டத்தினுள் இழுத்துக்கொள்ள தோதான காலமாக இருந்தது. மொழிப்போர் இனப்போர் திராவிடப்போர் அறப்போர் என்று எல்லா அக்கப்போர்களும் நடந்து முடிந்தன. பகுத்தறிவு ஆரிய/வடமொழி எதிர்ப்பு எல்லாமே உச்சத்தில் வெளிப்பட்ட காலம். வாசுகி முதல் கண்ணகி வரை, சித்தர் முதல் புத்தர் வரை, எல்லாவற்றையும் விமர்சித்த காலம். சமுதாயத்தில் கீழ்நிலை பொருளாதாரத்தில் இருப்போரை கிளர்ச்சி செய்யவைத்து அதன்மூலம் தங்களுடைய சுயவளர்ச்சிக்கு உறமூட்டினர் அதன் நிறுவனர்கள்.
தமிழை ஆயுதமாகக் கொண்டு மக்களைக் கவரும் சாதுர்யம் அக்குழுவினரிடம் இருந்ததால் நாடகம் பத்திரிகை சினிமா மூலம் பரப்புரை செய்ய அக்காலகட்டம் பெரிதும் உதவியது. தென்னாடு போற்றும் சிவத்தலமான இந்நிலத்தில் காலங்காலமாகப் பிறந்து வளர்ந்த பல ஜாதி தமிழ்க்குடிகளை 'இனி நீங்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்' என்று புதிய அடையாளத்தைத் தந்து 'இனி நீங்கள் இப்படித்தான் வாழ வேண்டும், எதிர்க்க வேண்டும்' என்று அவர்களுக்கு தவறான வழிகாட்டிச் சீரழித்தார்கள். அடிக்கடி முப்பெரும்விழா நடத்தி தொண்டர்களை ஞானம் பெறவிடாமல் களிப்பில் வைத்திருந்து வெற்றியும் கண்டது.
அதன் நிறுவனர்கள் அன்று சொன்னதை எல்லாம் நம்பிக்கொண்டு வாய்மூடி கேட்டுக்கொண்ட மக்கள் அவர்களுடைய தலைமையை ஏற்றுக்கொண்டனர். உலையில் வெதுவெதுப்பான நீர் இதமாக உள்ளது எனக்கருதி மகிழ்ச்சியாய் நீந்தும் ஆமைகளாய், அடியில் தணல் எரிந்துகொண்டிருக்கிறது என்ற ஆபத்தை உணராத தவளைகளாய் தொண்டர்கள் வாழ்ந்து மடிந்தனர். தொண்டர்கள் எல்லோருமே வெற்றிப்படியை ஏறவில்லை. ஜாதிகளைப் பொறுத்து பொருளாதார செல்வாக்கைப் பொறுத்து சிலர் மட்டும் நைச்சியமாக தலைமையிடம் அணுகி காரியம் சாதித்துக் கொண்டனர். மற்றவர்கள் முகம்தெரியாத வேலையாட்களாகப் பணிசெய்து, கால்மிதிக்கும் கல்லாகவே இருந்து தேய்ந்து போனார்கள். நிறுவனர்கள் எல்லோருமே தெலுங்கு நாயுடு, நாயக்கர், செட்டி, ரெட்டி, யாதவா, என வடுகநாட்டு கூட்டணி சேர்ந்தது அனுகூலமானது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பாடலை வெட்டி/ஒட்டி மாற்றியமைத்து இனி கடவுள் வாழ்த்தாக இதையே வைத்துகொள்ள பரிந்துரை செய்தது நாத்திக நிறுவனம்.
ஆனால் இரண்டு தலைமுறைகளைக் கடந்துவிட்ட பல முன்னாள் தொண்டர்களின் சந்ததிகள் அன்று இருந்ததுபோல் இன்று அணுகுமுறையில் இல்லை. எது உண்மை என்று துலாமிட்டு மெய்ஞானப் பகுத்தறிந்து தெளிவடைந்தனர். திமுக கடந்துவந்த பாதையில் காலச்சுவடாகப் பதித்தது என்ன? அக்கட்சியின் தொண்டர்களைத்தவிர பொதுமக்கள் பீற்றிக்கொள்ளும்படி எதுவுமில்லை. நடத்தைகெட்டு, ஊழல் செய்து, வாரிசு அரசியலை உருவாக்கி, ரௌடிகளைப் பெருக்கி, இச்சமுதாயச் சீர்கேட்டினை ஊக்குவித்து இன்புற்று வாழ்ந்ததுதான் மிச்சம். திமுகவிலிருந்து பிரிந்துபோய் தனியாகக் கம்பனி தொடங்கிய இன்னொன்று மட்டும் யோக்கியமா? எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக