About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 நவம்பர், 2020

நிலத்தடி நீரின் தரம்!

பருவமழை பெய்த காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தாலும் அதிலுள்ள Total Dissolved Solids (TDS ) எனப்படும் நுண் துகள்களான Chromium, Zinc, Lead, Nickel, Iron, Copper ஆகிய கன உலோகங்களின் அளவு ஒவ்வொன்றும் 6mg – 12mg/ litre என்ற நிலையில் கரைந்து கணிசமாக ஏறிவிட்டது. 

கிணறு வெட்டுவது அரிதாகிவிட்ட இக்காலத்தில் தெருவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 150 அடியில் ஆழ்துளை கிணறு போட்டு நீர் எடுப்பதாலும், மாசுபடும் சுற்றுச் சூழலாலும், பெருகிவரும் சிறிய/ பெரிய தொழிற்பேட்டைகளாலும் நிலத்தடி நீர் அதிவேகமாக மாசடைந்து வருவது கண்கூடு. நிலத்தடியில் நல்லநீர் இருக்கும் Aquifiers படுகைகள் சகட்டுமேனிக்குச் சேதமாகி வருவதால் செப்பனிடுவது இயலாது.  சென்னை போன்ற பெருநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் மொத்த TDS அளவு சுமார் 750 mg – 880mg வரை உள்ளது என பரிசோதனைகள் சொல்கின்றன. ஆனால் அதிகபட்சம் 400 mg வரைதான் இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

மாடியில் என்னதான் நீங்கள் Aqua filter cylinder பொருத்தி நீரை வடிகட்டி மேல்தொட்டிக்கு ஏற்றினாலும், அது நீரிலுள்ள எண்ணெய் மற்றும் உலோகங்களை ஓரளவுக்குத்தான் சுத்திகரிக்கும். சிலர் வீடுகளில் இரண்டு cylinderகள் பொருத்துவதுண்டு. தினசரி 1000 லிட்டர்கள் உபயோகித்தால் அதற்கேற்ப இரண்டு நாள்களுக்கு ஒருமுறை backwash செய்ய வேண்டியது அவசியம். பாரம்பரியமான திறந்த நிலை கிணற்றில் நீர் ஊறுவதால் ஆழ்துளை கிணற்றைப்போல் நீர் மோசமாவதில்லை.

கோடை/ மழை காலத்தில் bore well தண்ணீரின் தன்மை மாறும். ஒரு வீட்டிற்கும் அண்டை வீட்டிற்குமே நிலத்தடி நீரின் தன்மை மாறுபடும். குளியலறை பக்கெட்டில் ஒருநாளுக்கு மேல் சுத்தமான அந்த நீரைப் பிடித்து வைத்தால் மறுநாள் அதில் அமிலத் தன்மை வாடை வந்துவிடும். இதைத் தவிர்க்க அன்றன்றைக்கு மட்டும் நீரை உபயோகித்தல் நன்று. சிரமம் பார்க்காமல் தினமும் பக்கெட் உட்புறம் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வது நலம். சுத்திகரித்த இந்த நீரில் துணி தோய்த்தால் நாளடைவில் வெள்ளைத் துணிகளின் நிறம் பழுப்பாகும். சொட்டு நீலம் போட்டாலும் பயன் தராது. கிணற்று நீரில் இப்பிரச்சனைகள் இல்லை.

போகிற போக்கில் Aqua filter cylinder களை backwash செய்து அதில் வெளியேறும் அடர் சிவப்பு நிற சேற்று நீரைத் தொட்டியில் சேமித்து வைத்தால், நாளடைவில் அதிலிருந்து மேற்படி heavy metals உலோகங்கள் பிரித்தெடுத்து வியாபார நிறுவனங்களுக்கு விற்றுவிட வசதியாக இருக்கும். 😃😂 ஆக, அதி ஆழத்தில் துளை கிணறுகள் வரப்பிரசாதமாகத் தெரிந்தாலும் அது பேராபத்தே!

(புள்ளி விவரம்: Times of India)


புதன், 18 நவம்பர், 2020

தன்மானமும் கௌரவமும்!

திங்குஜம் ஷுப்குமார் மெய்தி சிங். மணிப்பூரிலிந்து கல்வி கற்க வந்தவன். என்னுடன் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவன். முன் வரிசை இருக்கையில் அமர்பவன். உயரம் நான்கரை அடி. அவன் விழித்துக்கொண்டு இருக்கிறானா, தூங்குகிறானா என்று தெரியாதபடி ஒரு கோடு கிழித்ததுபோன்ற கண்கள். டீஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு பொறுமையாய் வருவான். நல்ல பலசாலி. யார் வம்புக்கும் போகாதவன்.

அவன் வாய் திறந்து அதிகம் பேசமாட்டான். கொஞ்சம் ஆங்கிலம், ஹிந்தி பேசுவான். தமிழ் தெரியாததால் அவனுக்கு முக்கியமான சில ‘நல்ல’ வார்த்தைகளை எடுத்த எடுப்பிலேயே சக மாணவர்கள் சொல்லிக் கொடுத்து விட்டனர். அவை ஏதோ விவகாரமான சொற்கள் என்பதை யூகித்து ‘ந.. ந’ என்று கை அசைத்து மறுப்பான். வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்தில் ஆசிரியர் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் ஒருமுறைகூட விடை சொல்லி நான் பார்த்ததில்லை. ஆசிரியர்கள் அவனுடன் மல்லுக்கு நின்று போதிக்கப் போராடுவார்கள்.
ஏதேனும் பேசினால் அவன் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவான். அவனுக்கு அப்போதே பால்ய விவாகம் நடந்ததுவிட்டது என்று ஒருமுறை சொன்னது எல்லோருக்கும் வியப்பாய் இருந்தது. ‘உன் பெண்டாட்டி என்ன படிக்கிறாள்?’ என்று கேட்டால், ‘தெரியாது. அஞ்சாவதுனு நினைக்கிறன். பெண்களுக்கு எங்கள் ஊரில் படிப்பு தேவையில்லையாம்’ என்று சொல்வான்.
அவன் ஒரு சமயம் அருணாச்சலம் என்ற இன்னொரு மாணவனைக் கராத்தேயில் புரட்டிப்போட்டு எட்டி உதைத்தான். இடைமறித்து ‘டேய் திங்கு... why டா?’ என்று நான் கேட்க, அதற்கு அவன், ‘he talk bad about me’ என்று சொல்லியபடி அவனைக் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
அடி வாங்கியவன் மௌனமாய் அமர்ந்து கொண்டான். ‘அடிக்கிற அளவுக்கு அவனை நீ என்னடா இங்க்லீஷ்ல சொன்னே?' என்று கேட்டேன். ‘உங்க ஊர்ல படிக்க வழியில்லாம இங்க வந்து படிக்கிற பரதேசி நாயினு கிண்டலுக்கு சொன்னேன்டா, அதுக்கு போய் ...’ என்று அழுது கொண்டிருந்தான். ‘நல்லா வாங்கிக் கட்டிக்கோ. அவன் பறந்து பறந்து அடிக்கிறான். தாங்குவியா? உனக்கு என்ன போச்சு .. நீயா அவனுக்கு பீஸ் கட்டி சோறு போடுற?’ என்று அதட்டினேன். என் உடல் மொழியிலும் கண் அசைவிலும் அருணாச்சலத்தைக் கோபமாகத் திட்டுவதை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட திங்கு உடனே வந்து என் கரத்தைப் பற்றி முத்தம் தந்து தன் நெற்றியில் ஒற்றிக் கொண்டான்.
படிக்கவோ பிழைக்கவோ ஒருவன் தன் சொந்த மாநிலத்தைவிட்டு வெளியேறி தென்னகம் வந்தாலும் தன்மானம் முக்கியம் என்பதை அன்று அவன் உணர வைத்தான். மனிதம் முதன்மையானது. மொழி என்பது இரண்டாம் பட்சம். சுயமரியாதை என்பது நம்மூரில் கருஞ்சட்டை கழகத்தார்க்கு மட்டுமே சொந்தம் என்று இதுகாறும் தோற்றுவித்துள்ளனர். ஹோட்டலில் வடகிழக்கு மாநில பணியாளர்களைக் காணும்போது திங்கு நினைவுக்கு வருவான்.
பள்ளி இறுதித் தேர்வுக்கு முன் அவன் ஊருக்குப் போனான். அதன்பின் அவனைப் பார்க்கவில்லை. ‘சந்து, நீ எங்க ஊருக்கு வா. சுத்தி காட்டுறேன்! என்றான். திங்குஜம் ஷுப்குமார், லமைந்தாங், 5 காச்சிங் பஸார், இம்பால்’ என்ற தன் விலாசத்தைத் தந்துவிட்டுப் போனான். நம் வாழ்வில் ரயில் சிநேகம் போல் வருவோர்கூட தாக்கத்தை ஏற்படுத்துவர்.



வெள்ளி, 13 நவம்பர், 2020

சோதனைச் சுற்று!

தீபாவளி என்றால் நம் எல்லோர் இல்லங்களில் இனிப்பு/காரம் பிரிவுகளில் குறைந்தது மூன்று வகைகளைச் செய்வது வழக்கம். அதுவும் பாரம்பரியமாகவே இருந்து வருவது மரபு. ஆனால் காலம் போகிற போக்கில் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிப் பண்டிகைக்கு மெனக்கெட சிரத்தையுடன் செய்வது என்பது இரண்டாம் பட்சமாகவே பல வீடுகளில் நினைக்கின்றனர்.

இன்று அண்டை வீடுகளிலிருந்து இனிப்பும் காரமும் வந்தன. புதிதாக இப்போதுதான் பலகாரம் செய்யக் கற்றுக்கொள்பவரின் கைவண்ணத்தில் இருந்தன. நீர்த்துப்போன பூரணத்தின் காரணத்தால் சுகியனை எடுக்கும்போதே பிய்த்துக்கொண்டு அறுந்து விழுந்தது. ஜாமூன் ருசியற்றதாய் அதிகமான நீரில் சர்க்கரை இல்லாமல் மிதந்து கொண்டிருந்தன. பிஸ்கட் போல் தூள்தூளாக உடைந்துபோன அதிரசத்தை அழகாக ஜோடனை செய்து தட்டில் வைத்திருந்தனர். உருட்டுப் பதத்தைத் தவறவிட்டு முதிர் பாகில் கிண்டிய கோளாறு! கேழ்வரகு அரிசி கலந்த முறுக்கு என்று எதோவொன்று இருந்தது. சற்றும் மணமில்லாமல் கடகடவென பல்லை உடைக்கும் பாவனையில் கசந்தது. சோதனையில் ஓரீடு சரியாக வரவில்லை என்றால் அதை வீணாக்காமல் அதில் எதைச் சேர்த்தால் வேறென்ன ருசியான பதார்த்தம் செய்யலாம் என்ற சமயோசிதம் இருப்பதில்லை.
அண்டை வீடுகளில் கொடுப்பதை வாங்காமல் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். அதையும் மீறி அன்புடன் கொடுப்பதை நிராகரித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்கள். வாங்காமல் போனாலும் சங்கடம், வாங்கி உண்டாலோ அதைவிட வயிற்றுக்குச் சங்கடம். சிறுதானியப் பலகாரங்கள் என்ற பெயரில் இவர்கள் தானிய பண்டங்களை வீணடிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. ஆர்வம் இருந்தால் நிச்சயம் வீணடிக்க மாட்டார்கள். ஆனால் பலகாரம் செய்வதில் குறைந்து வரும் ஈடுபாடும், பாரம்பரியத்தை விட்டு வெகு தூரம் போய்விட்ட போக்கும், அந்தோ பரிதாபம்!
பறவைகள் அவற்றை ஊறவைத்துச் சாப்பிடும் என்ற நம்பிக்கையில் ரகசியமாகப் பார்சல் செய்துவிட்டு வந்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று வடலூர் அருள்ஜோதி வைத்தியசாலையின் சமூல இளகலை (லேகியம்) விழுங்கி வைத்தேன். நகைச்சுவையான இப்பதிவைப் படித்துவிட்டு வயிறு குலுங்கச் சிரிக்கிறீர்களோ?


வியாழன், 29 அக்டோபர், 2020

கனவில் பார்த்தபடி!

நவபாஷாணன் என்கிற நாவலை பெண்ணாகடம் திரு. பிரதாப் பாண்டியன் எழுதியுள்ளார். அவர் என்னுடைய நூல்களை விரும்பி வாசித்து வருபவர், முகநூல் நட்பில் உள்ளார். ‘அண்ணா, என்னுடைய முந்தைய புத்தகத்திற்கு திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் அணிந்துரை வழங்கினார். இந்த நாவலுக்கு நீங்கள் அணிந்துரை தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘ஆகட்டும்’ என்றேன். தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கும் மன நிலையில் அவர் இருந்தார். மனசுக்குள் மத்தாப்பு ஒளிர தன்னுடைய படைப்பு நல்லபடி வர வேண்டுமே என்ற பதற்றமும் தெரிந்தது.

மின்னஞ்சலில் அவர் அனுப்பிய கதையை வாசித்தபின் அணிந்துரை எழுதினேன். நாவலின் கடைசி பத்தியில் பூமி-செவ்வாய் குறித்த ஒரு பாடல் வந்தால் சிறப்பாக இருக்கும், இல்லாவிட்டால் முழுமை பெறாததுபோல் இருக்கிறதே என எண்ணி ஒரு பாடலையும் அதன் பொருளையும் சேர்த்தேன். பிறகு அதுபற்றி அவரிடம் சொன்னேன்.
தான் முன்தினம் கண்ட கனவைப்பற்றி அச்சமயம் என்னிடம் சொன்னார். அதில், நாவலை நான் வாசித்தபின் ‘இதுல ஒரு பாட்டு சேக்கணும் அப்பத்தான் கம்ப்ளீட் ஆனா மாதிரி இருக்கும். அதனால ஒரு பாட்டு சேர்த்திருக்கேன்’ என்று கனவில் நான் வந்து சொன்னதாக ஆச்சரியத்துடன் கூறினார். கனவு மெய்யானது!

சித்தர் வழிபாட்டிலுள்ள அவர் தன் அடுத்த நாவலைப்பற்றி எந்நேரமும் சிந்தையில் நினைத்ததால் இக்கனவு வந்திருக்கும் என்று சொன்னேன். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தசபாஷாணன் என்ற நாவலும் இடம் பெற்றுள்ளது. அருணா பதிப்பகம் வெளியிடவுள்ள அவருடைய படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள்!
-எஸ்.சந்திரசேகர்

புதன், 21 அக்டோபர், 2020

அருளாசியும் ஜீவ சக்தியும்!

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி மட்டும்தான். அவர்களுக்குக் குழந்தை பாக்கியமில்லை. இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்யும் அப்பெண்மணி மாதம் ஒரு லகரம் ஈட்டுகிறார். தெற்கு பார்த்த சொந்த வீடு என்பதால் மாடித் தோட்டம் போட்டுள்ளனர். எல்லா செடிகளும் சிறப்பாக வளரும் ஆனால் இதுநாள் வரை அதில் எதுவும் காய்த்ததில்லை. அப்படியே பூவிட்டுக் காயத்தாலும் கருகிவிடும். அவர்கள் தினமும் சத்துமயமான உணவு, பழம் காய்கறிகள், பாதாம்/பிஸ்தா, சிறுதானியங்கள்தான் உண்பார்கள். அப்படியும் அந்தம்மாளைப் பார்த்தால் சோற்றுக்கு வழியின்றிப் பஞ்சத்தில் அடிபட்டவராகவே இருப்பார். பின்தூங்கிப் பின்னெழும் பழக்கம் கொண்டவர். வேலைக்காரி வந்து வாசல் தெளித்துக் கோலமிட்டால் உண்டு. என்னதான் உயர்தர பட்டாடை உடுத்தினாலும் அது சோபிக்காது. வீட்டு வேலைகள் செய்ய ஆள் இருக்கிறது.

வடக்கு பார்த்த ஒரு வீட்டில் கணவன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள். நடுத்தர குடும்பம் என்பதால் சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். வருமானம் குறைவு என்பதால் சிக்கனமாகக் குடும்பம் நடத்துவார்கள். மொபெட், கேபிள் டிவி, மொபைல் என்பதைத் தாண்டி ஆடம்பர வாழ்க்கை என்பது கனவிலும் இல்லை. அவர்கள் வீட்டுக் கொல்லையில் உள்ள அனைத்துச் செடிகளும் பூத்துக் காய்த்துச் சிறப்பாக வளர்ந்திருக்கும். அரிசி பருப்பு பண்டங்களை ரேஷனில் வாங்குவார். சோம்பலின்றி அலுப்பின்றி அனைத்தையும் சுத்தமாகப் புடைத்து எடுப்பதைப் பார்த்துள்ளேன். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள். விடியலிலேயே எழுந்து வாசலில் கோலம் போட்டு, தன் வீட்டு வேலைகள் அனைத்தையும் தனியாளாகச் செய்வார்.
இவ்விரு குடும்பங்கள் எல்லா விதத்திலும் முற்றிலும் எதிர்மாறாக உள்ளது, அல்லவா? ஒரு மனையில் வாழும் மனிதர்களோ/ தாவரங்களோ, ஒரே விதமான ஜீவகாந்த சக்தியின் பிடியில் நிலைக்கொண்டுள்ளது என்பது கண்கூடு. அதற்கேற்ப அவர்களது ஜாதக திசாபுக்தியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணத்திற்கு, மூதாதையர் வாழ்ந்த பூர்வீக வீடு அவர்களுடைய சந்ததியினர் எல்லோருக்கும் ராசியைத் தரும் என்று சொல்ல முடியுமா? எல்லாம் சுபமாக இருந்தால் ஏன் மூன்று தலைமுறைகளுக்குமேல் அங்கே வாசம் செய்ய கொடுப்பினை இருப்பதில்லை? இறைவனே மனித வடிவில் வந்திறங்கி வாழ்ந்து ஆசிர்வதித்த வீடு என்னும் பட்சத்தில் சில நூற்றாண்டுகளைக் கடந்து இருக்கும். நமக்குத் தெரிந்து கிராமத்து வீடுகள் எல்லாமே நீளமாக இருக்கும். காற்றோட்டம் நாலா பக்கத்திலிருந்து வராது. அதிக ஜன்னல்கள் இல்லை அதனால் வெளிச்சம் என்பது குறைவுதான். ஓடுகளின் மத்தியில் கூரை வெளிச்சம் இருக்கும். சேம்புகூட பழுத்துவிடும் ஒரு புழுக்கமான சூழலில் வாழ்ந்தனர். பாட்டன் பூட்டன் வாழ்ந்த வீடு என்பதைத்தாண்டி அவ்வீட்டில் மனநிறைவு இருந்தது. அவர்கள் விட்டுச்சென்ற அரூப சக்தி மற்றும் இறைபக்தி உணர்வுகள் அங்கு வசிக்கும் சந்ததிக்கு ஆன்ம பலத்தை அருளியது. பொருளாதார அளவில் குறைகள் இருந்தாலும் அது பெரிதாக வெளிப்படவில்லை.
ஆகவே, என்னதான் தொப்புளுக்குமேல் கஞ்சி வழியும் அளவுக்கு நிதி வசதி இருந்தாலும், நாம் வாழும் இடத்தில் இறை ஆற்றலோ மூதாதையரின் ஆசிர்வாதமோ இல்லை என்றால் அவ்வீட்டில் மரம் செடி ஜீவராசிகள் கூட குன்றிப்போகும். சில இடங்களில் புலப்படாத எதிர்மறை கதிர்கள் பூமிக்கடியிலிருந்து தாக்கும். மிதமிஞ்சிய செல்வம் இருந்தும்கூட அங்கே வாழும் மனிதர்களின் மனத்திலும் தேகத்திலும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது!


தொடரும் வம்ச சாபம்!

சிலரது குடும்பங்களில் ஆறேழு தலைமுறைகளாக சாபம் தொன்றுதொட்டு வருவதை அறிந்திருப்பீர்கள். அல்லது உங்கள் வம்சத்திலேயே அவ்வாறு நடப்பதை பார்த்திருப்பீர்கள். வம்சத்து மூதாதையர்களில் பாட்டி/பூட்டி/ஓட்டி யாரேனும் சாபம் விட்டிருப்பார்கள். மருமகளாக வந்தபின் அக்குடும்பத்தில் அல்லல் பட்டு வேதனைகள் அனுபவித்து, கொலை/தற்கொலை என எவ்விதத்திலோ மாண்டு போயிருக்கலாம். அந்த சாபத்தின் தாக்கம் சந்ததிகளில் பிரயாணிக்கிறது.

வம்சத்தினர் தவறாமல் வழிபடும் அவர்களின் குலதெய்வமே இதைத் தடுக்க முடியாதா? அவள் நினைத்தால் துடைத்து நீக்கியிருக்கலாமே என்றும் நினைப்பீர்கள். செய்யலாம், ஆனால் ஏன் செய்யவில்லை? அவள் தர்மத்தையும் கிரகபலனையும் மீறுவதாக ஆகிவிடும். கர்மவினைகளின் வீரியமும் தாக்கமும் அடுத்துவரும் வம்சாவளியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் பாடமாக அமைகிறது.
சாபம் விடுத்த பூட்டி/ஓட்டியே தன் ஊழ்வினையின் தாக்கத்தால்தான் அக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்தாள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தர்மநெறி போதிக்கும் அந்த உண்மையை கணநேரம் சிந்திக்காமல் கோபத்தில் பழிதீர்க்க விடுக்கும் வார்த்தைகளே தன் சந்ததிகளின் துயருக்குக் காரணமாக விளங்குகிறது. அதுபோன்ற உக்கிர ஆன்மாக்கள் சாந்தியடைந்து வம்சத்தை ஆசிர்வதிக்க காசி /இராமேஸ்வரத்தில் திலா ஓமம் செய்வதுதான் ஒரே மார்க்கம் என்கிறது சாத்திரங்கள்.
ஊழ்வினையின் தாக்கமான ‘தீதும் நன்றும் பிறர் தர வாராது’ என்பதை நாம் அறிவோம். ஆனால் இதை மறந்துவிட்டுச் சாபம் விடுத்தால் அதன் தாக்கம் சந்ததிதோறும் துரத்தும். இவ்வாறு அவர்களுடைய கிளைகளின் கீழ் வரும் எல்லா பங்காளிகளின் குடும்பமும் வேதனையை அனுபவிக்கும். ஆக சந்ததியர் தத்தம் சஞ்சித/பிராரப்த கர்ம வினையால்தான் அக்குடும்பத்தில் வந்து பிறக்குமாறு ஈசன் பணிக்கிறான். பழைய கதாபாத்திரம் ஏற்று நடித்தவர்கள் புது தேகம் எடுத்து வந்து விடுபட்ட தங்கள் சொற்பத்தை அரியர்ஸ் பாடம் எழுதுவதுபோல் அனுபவித்துத் தீர்க்கிறார்கள். நாம்தான் அந்த நொந்துபோன பூட்டன் /பூட்டி என்பதை அறியோம். அதனால்தான் அவர்களுடைய பெயர்களை நமக்குத் தொட்டிலில் போடும்போது வைக்கிறார்கள். அதாவது அந்த மூதாதையர் இறந்தபின் நாமாகப் பிறக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் எங்கோ வெவ்வேறு ஜாதியில் பிறந்து பழைய பாக்கியை அனுபவித்து ஈட்டிய கர்மாவையும் சுமந்தபடி வந்து பிறக்கிறோம்.

மூதாதையர்கள் மீது நமக்கே கோபம் வந்து மனம் நொந்து அவர்களையே திட்டி சாபம் விடுக்கும் சூழலும் சில சமயம் ஏற்படும். இச்செயலானது மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரி உமிழ்ந்த கதையாகி விடும். ஆகவே அதை சற்றே பொறுமையுடன் சிந்தித்து அவ்வாறு ஏற்படும் இன்னல்களைத் துடைக்க அந்தந்த குலதெய்வமே காத்தருள வேண்டி விட்டுவிடுவது நலம்! இல்லாவிடில் அச்செயலானது புதிதாகவொரு ஆகாம்ய கர்மாவை ஈட்டித் தரும். ஆதலினால் மூதாதையர் செய்த தவறை நாம் செய்யக் கூடாது! ஒவ்வொரு பிரதோஷம் /மகாசிவராத்திரி வழிபாடு செய்துவந்தால் அது சாபங்களை-பாபங்களைத் துடைக்கும். ஜீவராசிகளுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் தருவதும் பரிகாரமாக அமையும்.


சித்தபூமிக்குள் அத்துமீறி நாம் போவது சரியா?

அண்மைப் பதிவுகளில் காலாங்கிநாதர் அருளிய ஞானவிந்த ரகசியம் பதவுரையை வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். அதில் அவர் குறிப்பிட்ட சுனைகள் அருவிகள் எங்குள்ளது என சிலர் கேட்டிருந்தனர். அங்கே சுனைகளிலுள்ள நீர் நமக்கானதா? அக்கோயில் நாம் வழிபாட்டிற்கா? ஆம் என்று பலரும் அடித்துச் சொல்வார்கள். ஆனால் இல்லை!

திருமூலர் காலாங்கி போகர் கோரக்கர் அனைவருமே அங்குள்ள உதக நீர் பற்றி விளக்கியுள்ளனர். இச்சுனையில் உதகம் எனப்படும் நீர் பார்ப்பதற்குக் குழம்பிய சேற்று நீர்போல் இருக்கும். மூலிகை மரம் செடிகளின் மேல் பட்டு இறங்கிவரும் தண்ணீரே இந்தச் சுனைகளில் தேங்கியுள்ளது. இது மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால் அதைக் கண்டவுடன் அள்ளிப் பருகிவிடக் கூடாது. விபரமறிந்த வைத்தியரை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி அதை எப்படிப் பயன்படுத்துவது எனக் கேட்டறியவேண்டும். அதில் சில பொருட்களைப் போட்டு வைத்தால் அவை கல்லாக மாறும் தன்மையும் உண்டு.
சித்தர்களின் தலைமையகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கே கண்ணில் பட்ட எல்லா இலைகளையும் பறித்தும், தேங்கிய சுனைநீரை பாட்டிலில் அடைத்துக் கொண்டும் போவது வீண். அவர்கள் ஒப்புதல் தந்தாலே அது பயன்தரும். அதைத்தாண்டி ஏதேனும் கல்மிஷமாக நினைத்தால் உயிருக்கே ஆபத்தும் வரும். எல்லையைத் தாண்டிப்போய் மதிமயக்கும் வனத்தில் காலடி வைப்போருண்டு. 64000 ஏக்கர் பரப்பளவுள்ள சதுரகிரியில் ஆபத்தான இடங்கள் பலவுண்டு. உஷார்! சிறப்பு நாட்களில் சுந்தர மகாலிங்கரை பூசித்து வழிபட சித்தர்கள் வருகிறார்கள். வானிலிருந்து நட்சத்திரங்களாய் சித்தர்கள் மலைப்பகுதியில் இறங்குவதை மலையேறும் வைத்தியர்கள்/ பூசாரிகள் இரவில் பார்த்துள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் அங்கே படை எடுப்போரின் எண்ணிக்கை அசாத்தியமாக அதிகமாகியுள்ளது. அதற்கு முன்புவரை சதுரகிரி வனப்பகுதிக்குள் வெகு சிலரைத்தவிர வேறு யாரும் அத்துமீறி பிரவேசித்ததில்லை. அங்கே நடக்க, பச்சிலை பறிக்க, சுனை நீர் சேகரிக்க, சில சித்த வைத்தியர்கள் மட்டுமே அனுமதி/ சாபநிவர்த்தி மந்திரங்கள் ஜெபித்துவிட்டு நுழைந்தனர். அங்குப் போகவேண்டும் என்றால் கட்டுக்கோப்புடன் உபவாசம் விரதம் இருந்தபின் தீட்சை அளித்த குருவோடு மகாலிங்கரை நினைத்தபடி மலையேற வேண்டும்.
மக்கள் முற்றுகை இடுவதால் இன்று மின்சார ஜெனரேடர்கள் இயங்கி விளக்குகள் ஒளிருகின்றது. சித்தர்கள் பொறுமை காத்து வருகின்றனர். அது பொதுவிடம் என்றாகி விட்டது. மாமிசம் உண்டு, மது குடித்து, உடல் சுத்தம் பேணாமலும், அக்கழிவுகளின் தாக்கம் உடலில் இருக்கும்போதே உல்லாசப் பயணமாக ட்ரெக்கிங் போகிறார்கள். அங்கே அதிர்ந்து பேசக்கூடாது, துப்பக் கூடாது, வேகமாக நடக்கக் கூடாது என பல நிபந்தனைகள் உள்ளதை பலரும் அறியார். திருவண்ணாமலை கிரிவலமும் அப்படியே! நாம போகாம வேற யார் போவாங்க என்ற சிந்தனையில் பலர்.
பிராப்தம் இருந்தால் நாம் இருக்கும் இடத்திலிருந்தே சித்தர்கள் நம்மை கணநேரத்தில் கூட்டிக்கொண்டுபோய் தரிசனம் பெறவைத்து மீண்டும் நம் இடத்திலேயே விட்டுவிடுவார்கள் என்பது என் அனுபவத்தில் புரிந்துகொண்ட உண்மை. கயிலாயம்கூட சதுரகிரிக்கு ஈடாகாது என்று நந்தியெம்பெருமான் காலாங்கியிடம் கூறினார். நல்ல வேளையாக கயிலாய மலையின் மேல் இன்றுவரை மனிதர்கள் யாரும் ஏறவில்லை. ஓம் நமசிவாய!




திங்கள், 19 அக்டோபர், 2020

பரமகுரு காலாங்கி சித்தர் பற்றிய தகவல்கள

1.நவநாத சித்தர்களில் மூல மரபில் வந்தவர்...

2.திருமூலரின் உன்னத சீடர்...
3.முழுக்கை /முழுக்கால் சட்டை முதன்முதலில் அறிமுகம் செய்தவர்...
4.பாத்திரம் இல்லாமலே துணி மூட்டையில் சோறு சமைத்தவர்..
5.பூமிப் பகுதியில் நிலம்/நீர் 30:70 விகிதத்தில் உள்ளதென பிரபஞ்ச வெளியில் ஆராய்ந்து பார்த்து உரைத்தவர்...
6.ஷிவாங்மு என்று சீன யோகத்தில் வாலையைப் பூசித்தவர். வாலை ஞான பூஜாவிதி அருளியவர்...
7.ஆதி புத்தரை பல யுகங்களுக்கு முன்னமே தரிசித்தவர்...
8.குமரிக் கண்டம் உருவாக்கியத்தில் மயன் வம்சத்தவராக இருந்தவர்...
9.ஓமம் கற்பம் உண்டு பல சுற்று யுகங்கள் சமாதிக்குப் போய் வந்தவர்...
10.அம்பிகையின் திருவாயால் கமலர் @கமலமுனி என்ற பெயரையும் பெற்றவர்...
11.போகர் என்ற விஞ்ஞான சித்தரை உலகிற்குத் தந்தவர்...
12.சீனாவில் தாவோ மதத்தை நிறுவ சீடனை உருவாக்கியவர்.
13.உன்னத குரு-சீடன் உறவுக்கு இலக்கணமாக இருந்தவர்...
14.பிரளய காலங்கள் வந்து போகும்வரை மலையில் அமர்ந்து பார்த்தவர்...
15.இராவணனின் சுவர்ண கோட்டைகள் பிரளயத்தில் மூழ்கி எழுவதை பார்த்தவர்...
16.திருமாலின் தசாவாதார ரிஷிகளைக் கயிலையில் தரிசித்தவர்...
17.கடந்து போன யுகங்களில் வாழ்ந்து மடிந்த மக்கள் தொகையை அறிந்தவர்..
18.மலையளவு ரசவாதப் பொன் (கஞ்சம்) தந்ததால் கஞ்சமலை சித்தர் என்பர்...
19. சதுரகிரி வனத்தில் தைலக்கிணறு பகுதியில் இன்றும் அருவமாக வாசம் செய்பவர் ...
20.போகருக்கும்/ நூலுக்கும் எவ்வித சாபங்களும் அண்டாமல் காத்தவர்...
இப்படி இன்னும் பலவற்றைச் சொல்லலாம்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

காலாங்கிநாதர் இயற்றி அருளிய ஞானவிந்த ரகசியம் 30

திருமூலரின் மரபில் வந்த சித்தர்கள்தான் புகழ்மிக்கக் காலாங்கி, போகர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் ஆகியோர். அதில் காலாங்கிநாதர் தன் உன்னதமான சீடர் போகருக்கு உரைத்த நூலை இங்கே தொகுத்து அளிக்கவுள்ளேன். சித்தனானவன் எப்படிப்பட்ட ஞானத்தை யோகத்தை கற்பத்தை உண்டு சித்திகள் பெற்றுக் கடைத்தேறுவது என்பதைப் பற்றி காலாங்கி தெளிவாக உரைக்கிறார். இவருக்கு கமலர், கஞ்சமலை சித்தர் என்ற வேறு பெயர்களும் உண்டு. சீன இலக்கியம் குறிப்பிடும் காங்ஸி @ கன்பூசியஸ் என்பவரும் நம் காலாங்கியே! என் முந்தைய பதிவில் காலாங்கி-போகர் பற்றிய தகவல்களைப் பதிவிட்டிருந்தேன்.

காலங்கி /காலாங்கி/ காளாங்கி என்று பலவாறு இவரை அழைப்பார்கள். சித்தர்கள் அனைவரின் பெயருமே வாசி, கலை, யோகம், ஆறாதாரம், சித்தி ஆகியவற்றை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. வாசியோட்டத்தின் இடகலை-பிங்கலை-சுழுமுனை என்பதே கால் எனப்படுகின்றது. அந்தக் கலைகளான வாசிக்காலையே அங்கியாக அணிந்தவர் என்றும் கொள்ளளாம். கால/காள என்பது ஊர்ந்திடும் சர்ப்பத்தையும் குறிக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழி இதிலிருந்து வந்ததுதான்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையானது எத்தனை மேன்மையான சிவதலம் என்பதையும் அங்கே வெளிப்படும் சித்த தரிசனங்களுக்கும் மூலிகை அமானுஷ்யங்களுக்கும் அளவே இல்லை என்பதை இந்நூலில் தெளிவாக்கியுள்ளார். இனிவரும் பதிவுகளில் என் பரமகுரு காலாங்கிநாதர் உரைத்த பாடல்கள் வழியே அனைத்தையும் சுருக்கமாகச் சிந்தித்துத் தெளிவோம்.

பாடல்கள் 1- 5

உயர்வான நான்கு மறைகளை அறிந்துப் போற்றும் சித்தர்களுகளுக்கு வேத ஒளியாகவும், அண்டத்தில் இருக்கும் பஞ்சபூதங்களை உழுது எல்லா உயிர்களின் பிண்டத்திலும் வைத்து, பாரினில் எங்கும் வியாபித்து இருக்கும் ஓங்கார பிரணவத்தின் ஞான ஆற்றலை மெளனமாக இருந்து தியானிக்க, இந்தப் பிரபஞ்சத்தின் வஸ்துவில் சற்குருவாக நின்று நிலைத்துள்ள பரம்பொருளின் பாதவிந்தங்களைத் துதிப்பதே காப்பு. 

சம்சாரியாகக் குடும்பத்தில் இருந்துபடி பெண்களுடன் இல்லறத்தில் விளையாடிக் கொண்டிருந்தால் ஞானம் எப்படி வரும்? நாட்டில் இதை அறியாத பலபேர் அதில் இலயித்துக் கொண்டே ஞானம், வாதம், யோகம் கற்கிறேன் என்று முயல்கிறார்கள். ஏட்டிலே சுரைக்காய் என்று எழுதி வைத்தால் அது கறிக்கு உதவுமா? ஒளி பிரகாசத்துடன் இருக்கும் சகஸ்ரார சக்கர மேருமலையில் குண்டலினி யோக சக்தியை ஏற்றினாலே அதெல்லாம் சித்திக்கும். (காலங்கி நாதர் இல்லறத்தைத் துறந்து தன் மனைவியை விட்டுப்பிரிந்து தன் மகன்களை அவரவர் போக்கில் பிழைத்துக்கொள்ள விட்டுவிட்டார் என்று போகர் தன்னுடைய பெருநூலில் சொல்லியுள்ளார். ஆக, காலாங்கி தன்னுடைய அனுபவம் மூலம் இப்பாடலில் புரிய வைக்கிறார். சீன இலக்கியத்தில் கன்பூஸியஸின் சரிதையிலும் மேற்படி இவ்விஷயம் சொல்லப்பட்டுள்ளது.)

இரு கண்களுக்கும் இடையே புருமத்தி என்கிற லலாட பகுதியின் ஆக்ஞேய சக்கரத்தில் ஊன்றி நிலைத்து தரிசனம் செய்தால் பசி தெரியாது. அடி,முடி,நடுவாக ஜீவ ஒளியில் அயன் மால் ருத்ர தரிசனத்தையும் மயக்கமில்லாமல் அனுபவிக்கலாம். இம்முறையை சாம்பவி சக்தியே எனக்குக் கற்பித்தாள். இதை மறைப்பின்றி எவரும் சொல்வாருண்டோ? இந்நூலில் சொல்கிறேன் கேள்.         

உயிர்குறிலாகிய அஇஉஎஒ எழுத்துக்களான இவை ஐந்தும் நமச்சிவாயத்தின் பிம்பமாகவுள்ள எழுத்துக்கள். இவற்றில் சிவனும் சக்தியும் உறைகின்றனர். நம் தேகத்தில் ஓடுகின்ற நாடியின் கலைகளில் சந்திரகலை 16, சூரியகலை 12, அக்னிகலை 10 என்று இருப்பதும் சிவசக்தியே. நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தின் மேன்மையிலும், நான்கு வேதங்களிலும் ஒருங்கே இருப்பது சக்திசிவன் தான் என்பதை அறியவேண்டும். இடகலை, பிங்கலை, சுழுமுனை வழியோடியே இதில் ஏற்றம் பெறலாம்.

மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற இந்த நான்கும் இறைவன் நமக்கு இறவா நிலை அடைவதற்குரிய கருவிகரணங்களாகப் படைத்துள்ளான். இதுவே அந்தகரணங்கள் ஆகும். இந்த மனதை வாசியால்தான் கட்டிவைக்க முடியும். இதை வைத்துத்தான் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பாதையில் நடக்கவேண்டும். மனம் ஆகாயத் தத்துவம் கொண்டது. மனம் நினைப்பதை புத்தி (எ) மூளை கட்டளைத்தரும். ஆங்காரம் என்பது நம் உடலில் பொருந்தியிருக்கும் ஆற்றல். (ஆனால் இதை தவறாக அகங்காரம் என சொல்வோர் உண்டு. அகங்காரம் என்பது நம் உடலை விட்டு நீக்க வேண்டிய ராக-தத்துவம்.) சிந்திக்கும் இடமே சித்தம். (அதனால்தான் சிந்தித்துச் செயலாற்றும் திறனுள்ளவரை நல்ல சித்த சுவாதீனத்துடன் இருப்பவர் என்கிறோம்.) மனத்தை அறிய வேண்டுமானால் அது உருவான மூலத்தை உணர வேண்டும். காற்றை அடக்க மனம் அடங்கும். அண்டமும் பிண்டமும் பஞ்சபூதங்களின் கூட்டு. ஆகவே அடி-முடி அறிய வாசியால் இயலும். வாசியில் சூரியனும் சந்திரனும் சங்கமிக்கும் சுழுமுனையில் அக்னியே பிரதானம்.

(மேலோட்டமாகச் சொன்ன ஒவ்வொரு பாடலிலும் உட்கருப் பொருளை ஆராய்ந்தால் யோக தத்துவம், ஞானம், தீட்சை, துறவறம், சித்தி, சமாதி என இன்னும் ஆழமாகப் போகும். அதை வெவ்வேறு நூல்களின் துணைக்கொண்டு வாசித்து மகிழுங்கள்.)

பாடல்கள் 6-10

அந்தப் பரவெளிச் சுடரில் எல்லாமே அடங்கும். அதற்குள்ளே ஊன்றிப் பார்த்தால் இந்த அண்டம் எல்லாமுமே உன்னுள்ளே வெளிப்படும். அண்டத்தில் உள்ளவை அனைத்தும் பிண்டத்தில் தனித்தனியே காணலாம். சரம்-அசரம் என ஜெகத்திலுள்ள யாவையும் அந்த இரு கண்களுக்கு மத்தியில் காணலாம்.

வேதங்களும் (ஸ்ருதி), வேத அந்தங்களும் (ஸ்மிருதி) தலையும் காலுமாய் இருந்து மனிதனை தத்துவ பாதையில் நல்வழிப் படுத்துகின்றன. இவற்றைக் கைக்கொண்டால் சித்தி வாய்க்கும். அதை ஏற்காதவர்களுக்கு அருளப்பட்ட மெய்யான உறையும் பொய்யாகத் தெரியும். குருத்துக்குள் இலை பூ காய் பழமெனப் பொதிந்திருப்பதை அறியார். அதை அறிந்தவர்க்கு ஞானமெனும் குலை தள்ளும்.

மேன்மையான சதுரகிரியின் மகத்துவத்தைச் சொல்கிறேன். கேட்டு அதன்படி மனத்தில் நிறுத்தி கடைத்தேறும் வழியைப்பார். நந்தியெம்பெருமான் எனதையன் திருமூலருக்குச் சொன்னதை இப்போது உனக்குச் சொல்வேன். சதுரகிரியில் எண்ணற்ற குகைகளும் அதற்கான வழிகளும் கண்டுத்தெளிந்து போனால் தவசிகளுக்கு அருமையான இடமாகும். அங்கே அடர்ந்த தோப்புகளும் விருட்சங்களும் ஆங்காங்கே தனித்து ஓடும் நீரோடைகளும் மெத்தவுண்டு.

நான்கு வேதங்களும் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு இடமே சதுரகிரி. விண்ணவர் தேவர்களும் பண்ணிசைத்து அங்கே மகாலிங்கரின் பொன்னடிக் கமலங்களைத் தரிசித்து யோக நிஷ்டையில் இருப்பார்கள். ஈசனின் உத்தரவின் பேரில் மீண்டும் பிறந்து உடலெடுத்து முனிவராக உயர்ந்த பின் சித்தர்களாக ஏற்றம் பெறும் தலமே சதுரகிரி. (இல்லறத்தில் இருந்து உயர்வோர் ரிஷிகள், இல்லறத்தில் புகாமல் தனித்தே உயர்வோர் முனிவர்கள்.) 

பெயருக்கு ஏற்றாற்போல் நான்கு பக்கங்களிலும் மலைச் சிகரங்களுடன் விளங்கும் சதுரகிரிக்குச் செல்லும் பாதை கடினமாகத் தெரியும். குழப்பும் வழிகள் நிறையவுண்டு. மூன்று பக்கங்களிலும் வனப்பாதைகள் பிரியும் கானகத்தில் வழி அறிவது மிகவும் சிரமம். சிவனின் துணையால் தெற்குத் திசையில் மலையடிவாரதிற்குச் செல்லும் பாதையைப்பற்றிச் சொல்கிறேன். நீர் நிறைந்த ஓடையுள்ள தோணிப்பாறை இருக்கும். அவ்வோடை செல்லும் வழியே செல்! (அம்மலையின் தோற்றம் காண்பதற்குத் தோணி வடிவில் இருக்கும். பிற்பாடு அது தாணிப்பாறை என்று இக்காலத்தில் மருவியது.) 

பாடல்கள் 11-15 

அந்த ஆற்று வழியோரம் சென்றால் அது சேரும் இடத்தில் சிறு மலைக்குன்றுகள் நிறைய உண்டு. அங்கே சாய்வாகச் செல்லும் பாதையை நீ பற்றிக்கொண்டு சென்றால் நவசித்தர்கள் குகை தென்படும். அங்கே நின்று அவர்களை மனத்தில் எண்ணி தண்டமிட்டபின் இன்னும் மேற்கொண்டு போகவேண்டும். சற்றுத் தொலைவில் அவ்வழி வடக்கே இட்டுச் செல்லும் இடத்தில் உயர்ந்து நிற்கும் மலையருகில் ஒரு குகையும் தென்படும். 

அந்தக் குகையினுள்ளே சென்றால் பாம்பாட்டிச் சித்தர் தவத்தில் இருப்பார். அவரை வணங்கிக் கொண்டு நேரே மேற்காகப் போனால் அத்திரி ரிஷியாரின் குகையுண்டு. அப்படியே ஆற்றோரமாகச் சென்றால் அங்கே அத்திமரத்தடி நீரூற்றும் தென்படும். அங்கிருந்து ஏற்றத்தில் நெடும் காடு தொடங்கும். கற்பாதைகள் நிறைந்த அதைக் கடக்க யாரும் அறியார்.     

அப்பாதையிலேயே போனால் நாதாந்த சித்தர்கள் தவமியற்றும் குகைப்பகுதி வரும். அங்கே அமானுஷ்ய வேதைகள் ஏதாவது நடக்கும் அதில் மயங்காமல் உள்ளே சென்றால் குதம்பைச் சித்தரின் குகை தெரியும். சச்சிதானந்த போதையில் லயித்து இருக்கும் ஞான சித்தரை வணங்கிக் கொண்டு அங்கே வாதை மார்க்கதிற்குப் போகாமல் தவம் செய்யும்     மிருகண்டேய ரிஷியாராய் நீ வணங்கினால் அகச்சுத்தியடையும் பேற்றைப் பெற ஆசிகள் நல்குவார்.

அவ்விடத்தைவிட்டுப் போனால் சுகமான வரரிஷியார் குகையும் வரும். காத தூரத்தில் இருவழிகள் தோன்றும். மாதவம் செய்த யோக சித்தரகளாம் பதஞ்சலி வியாக்கிராமர் மற்றும் அகப்பேய் சித்தர்களும், வியாசரிஷியும் தெளிவாய்த் தெரிவார்கள்.   

அதைத் தாண்டிப்போனால் உயர்வான கோரக்கர் குண்டா தென்படும். கஞ்சா மூலிகையைக் கற்பமாகக் கடைந்து உட்கொண்ட கோரக்கர் சித்தர் அதை எல்லோருக்குமே ஈய்வார். அவர் அக்குகையில் யோகத்தில் நிலைத்திருப்பார். அவரைக் கண்டுகொண்டால் ஞான அமிர்தமும் கிட்டும். 

பாடல்கள் 16-20 

கோரக்கர் குண்டா சுனையில் தீர்த்தமாடினால் எப்படிப்பட்ட பிணியும் அகன்றுபோகும். குனிந்து இரு கரங்களையும் குவித்து அச்சுனையிலிருந்து நீரை அள்ளி மூன்று முறை குடித்தால் ஊழ்வினைகள் நீங்கும், பருகியவர் ஜென்மம் சாபல்யமாகும். சித்தரை தியானித்தால் நல்வாழ்வு கிட்டும், ஞான அமிர்தம் பருகக் கிடைப்பதோடு உயர் குணத்தைப் பெறுவார்கள்.

அக்குகையில் முனிவர்களும் சித்தர்களும் யோகிகளும் ஒன்றாய்க்கூடி கற்பம் உண்பார்கள். அங்கே பலவிதமான வைத்திய முறைகளையும் வாத தயில முறைகளையும் ஆகாய மார்க்கமாகப் பறக்க உதவும் கெவுன குளிகையையும் செய்து, பாதரசத்தை இறுக்கி உருட்டி மணியாய்க் கட்டி எந்தக் கவலையுமின்றி அங்கே இருந்து வாழ்கிறார்கள். சம்சாரத்தில் இருந்த ரிஷிகளும் அச்சங்கமத்தில் போய் இருந்தால் பெருமையைத் தரும்.

பெருமை வாய்ந்த கோரக்கர் குண்டா ஓரமாகவுள்ள சுனையில் நீராடி அதன் நீரைப் பருகினால் இதுவரை செய்த பாவங்கள் எல்லாமே அகன்றுபோகும். கோரக்கரை உளமாரத் துதி செய்தால் நற்பெரும் வாழ்வு உண்டாகும். வெறுமனே அவர் யார் கண்களுக்கும் புலப்பட மாட்டார், அவரைப் போய்ப்பார்க்க மூல மந்திரம் ஜெபித்துத் தியானித்து வேண்டிக் கொண்டாலே தரிசனம் தருவார். 

செம்பாறையின் ஏற்றத்தில் உள்ள ஒரு வழியானது மீன்கள் நிறைந்த சுனைக்கு இட்டுச்செல்லும். தெற்கே ஒரு குகையுண்டு அங்கு மச்சமுனி வாசம் செய்வதைக் காணலாம். (மச்சமுனி/ மச்சேந்திர நாதர்/ மச்சேந்திரா என்றும் அழைக்கப்படுகிறார். இவருடைய வாசஸ்தலங்களாக திருப்பரங்குன்றம், நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி, கொல்லிமலை, நேபாளத்தில் பாக்மதி, ஆகிய இடங்களும் நூல்களில் சொல்லப்படுகின்றன.) காத தூரம் (1 காதம் = 10 மைல்) கீழே சென்றால் கயிலாயச் சட்டைமுனி வெகுகாகலமாய் நிஷ்டையில் இருக்கும் இடமும் தென்படும்.

தொடர்ந்து தென்கிழக்குத் திசை நோக்கிச் சென்றால் ராமரிஷி வாசம் செய்யும் இடமுண்டு. அதைத்தாண்டிப் போனால் கருநெல்லி வனம் வரும். அங்கே இடைக்காடர் தன்னிலை மறந்து வெட்டவெளி தியானத்தில் ஈடுபட்டிருப்பார். 

பாடல்கள் 21-25

அங்கே எண்ணிலடங்காத பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பாலூட்டி நிற்கும். ஆண் எருது குகையிலேயே இருக்க, மேய்ச்சல் முடிந்து திரும்பும் பசுக்களுடன் ஒன்று சேரும். அவ்விடத்திற்கு மகாலிங்கர் தினமும் வந்து அமுது உண்டுவிட்டுப் போவார். அப்பசுக்கள் தவத்திலுள்ள யோகிகளுக்கும் எனக்கும் பாலமுதை வழங்குகிறது.  

அது வழங்கும் அமுதத்தை உண்ட நான் கிழங்கு கீரை காய் கனிகள் உண்டு வடக்கு ஈசான கீழ்பாகத்திலொரு குகையில் சில காலம் இருந்தேன். அங்கே கெவுன சித்தர்களுடன் கூடிப் பேசி, அவ்விடத்தில் வகார, ரசவாத தயிலங்கள் காய்ச்சியும் பலவிதமான கற்பங்கள் செய்து உண்டு சித்தர்களுக்கும் தந்தேன். (ஆகாய மார்க்கமாகப் பறந்த சித்தர்களுள் காலாங்கி போகர் அகத்தியர் திருமூலர் பிரசித்தி பெற்றவர்கள்.) எல்லோருக்கும் கொடுத்தது போக மிச்சமிருந்த தயிலத்தை அங்கே ஓரிடத்தில் ஸ்தாபித்து வைத்தேன்.    

உயிர்காக்கும் சஞ்சீவியாக உயர்வான அத்தயிலங்களும் தேக சித்திக்கு வழிவகுக்கும் கற்பங்கள் இருக்குமிடத்தை நான் உனக்குச் சொல்கிறேன். குறுக்காகப் பாறை ஒன்று எதிர்படும். தயங்காமல் நீ நேராகப் போனால் கரைகளே இல்லையோ என்று நினைக்கும் அளவில் பெரிய மூன்று சுனைகள் சூழ்ந்த பகுதி வரும். முனிவர்களும் சித்தர்களும் அங்கே வாசம் செய்து வருகின்றார்கள். அந்தத் தயிலத்தை எந்தப் பாவிகளுக்கும் பெறாமல் இருக்க பலா மரத்தடியில் பாறையை ஒன்றை தூக்கி நிறுத்தினேன்.

பாறையைத் தூக்கியபின் அங்கே குழிதோண்டினேன். போகர் உள்ளிட்ட சித்தர்களுக்குக் கற்பித்து அளித்தது போக எஞ்சிய (கற்பம், ரசவாத) தயிலத்தை வெளியே தெரியாதபடி அங்கு ஆழமாய் அக்குழியில் கொட்டி வைத்து அது மேலும் பொங்கி வழியாமல் இருக்க கற்பாறையால் மூடிவைத்துச் சீலைமண் பூசி வைத்தேன். (பிரியாணி பாத்திர வாயை மாவு கொண்டு அழுத்திப்பூசி ‘தம்’ கட்டுவது போல்). அதற்குக் காவலாக பேச்சியம்மன், வனதுர்க்கை மற்றும் பலாமரத்தடி (பிலாவடி) கருப்பரையும் நியமித்தேன்.

தயிலத்தின் தேவையறிந்து அங்கே பகலிரவாய்க் குழுமிடும் சித்தர்/ முனி/ முத்தர்கள் அனேகம்பேர். சிகரமாம் கபால பீடத்தில் வாலை ஜோதியை அறிந்த சித்தர்களாக இருந்தால் மட்டும் கிணற்றைத் திறந்து தயிலம் எடுத்துக்கொடுங்கள் என்று துர்க்கைக்கும்/கருப்பருக்கும் கட்டளை இட்டுள்ளேன். சிவனையும் சக்தியையும் அறியாத மூடர்களுக்கும் கருமிகளுக்கும் இது கிட்டாது. பேராசைப் பிடித்தவர்க்கும் வீணர்களிடமும் போய்ச் சேரக்கூடாது. பிரம்மானந்தத்தை அடைந்து, மூப்பைக் கடந்து, மாயையை வென்ற முத்தர்களுக்காக இத்தைலத்தைச் செய்து சேமித்து வைத்தேன். எம் உண்மையான சீடன் போகருக்காக 'ஞான விந்த ரகசியம்' என்ற இந்நூலை உரைத்தேன்.

(சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அருகிலே உள்ள அக்கிணறு இப்போது இரும்புச் சட்டங்களால் மூடப்பட்டுள்ளது என்பது தகவல். காலாங்கிநாதர் குறிப்பிடும் சித்தர், முத்தர், ஞானியர் என்போர் யார் என்பதை கோரக்கர் அருளிய ‘பிரம்ம ஞான தரிசனம்’ நூலில் ஒரு பாடல் விளக்குகிறது. அரும்பு -சரியை, மொட்டு -கிரியை, காய்-யோகம், கனி-ஞானம், போன்ற நிலைகளை இது ஒத்தது. அதாவது அவர்களது உயர்வு நிலைகளில் வேறுபாடுண்டு.

சதுரகிரியில் தயிலக் கிணறு இருப்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். வனாந்தர அடுவியில் அதைத் தேடி பூமியை அங்குலமாய்ச் சல்லித்தக் கூட்டமும் உண்டு. அதனால் கிணறு நம் கண்களுக்குப் புலப்படவேண்டும் என்றால் அவர் விதித்த உயர் தகுதியைப் பெற்றாலே சாத்தியம். அவ்விதம் எதுவுமின்றி பூர்வஜென்ம விட்டகுறையாக அதெல்லாம் கண்களுக்குப் புலப்பட்டும், தயிலம் நமக்கு வாய்க்கப் பெறவேண்டும் என்றால் அதை குருவும்-பரமகுருவுமே தீர்மானிப்பர் என்பது என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்ட உண்மை.)

பாடல்கள் 26-30

நூல் உரைத்த அவ்விடத்தில் ஈடுயிணையின்றி ஒப்புவமை இல்லாத அளவுக்குப் பல வினோதங்கள் நடக்கும். விரிந்த சதுரகிரி வனமெங்கும் கோடிக்கணக்கான மூலிகைகள் உள்ளன. மகாலிங்கரின் மகத்துவைத்தை அழுத்தமாகச் சொல்லும் சதுரகிரியின் மேன்மைக்குக் கயிலாய மலையே ஈடாகாது என்று நந்தியெம்பெருமான் எனக்கு உண்மையை உரைத்தார்.   

நான் சொன்ன பிலாவடி கருப்பனை வணங்கிகொண்டு கீழ் திசை நோக்கிச் செல்வாய். அங்கே சுயம்புவாய் உதித்த மகாலிங்கர் கோயிலுண்டு. பூலோகக் கற்பகத்தருவும் உண்டு. நலம் தரவேண்டிச் சுந்தரமகாலிங்கரை வணங்கியபின் இன்னும் கிழக்கே போனால் பல குகைகள் சூழக் குளிராட்டித் தோப்பும் அருவியிலிருந்து வரும் கருநீலச் சுனைத் தீர்த்தமும் உண்டு.  

அங்கே குகையில் (சப்த) கன்னியர்களுண்டு, நிறம் மாறுகின்ற பச்சிலைகளுமுண்டு. சுந்தர மகாலிங்கர் கோயிலுக்கு மேற்கே போனால் என் குருநாதரும் உன் பாட்டனாருமான திருமூலரின் குகைத் தென்படும். அவரையும் தண்டமிட்டுக்கொண்டு அப்பால் போனால் ஜனகரின் குகையை அடைவாய். (பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.)

அப்பகுதியில் கொங்கணர் இராமதேவர் கருவூரார் பிரம்மமுனி கூர்மானந்தர் ஆகிய சித்தர்களை குகையில் தரிசித்தால் அபூர்வமான சோதி விருட்சங்களும் மூலிகைகளும் கணங்களுக்குத் தெரியும். சிவனின் முடித்த சடையைப்போல் காணும் கல்தாமரை மூலிகையின் இலையை உண்டால் ரசவாதம் நம்முடலில் வேதிக்கும். (கல்தாமரை என்பது சித்தர் விருட்சம். செம்பை பொன்னாக்கும் ரசவாத மூலிகையாகும்.)

அழுகணி சித்தரைத் தொழுதால் கண்ணிமூலி என்ற சிறப்பைப் பெற்ற கருநொச்சி மூலிகையும் தென்படும். (நம் வீட்டுப் பகுதியில் அதிகம் பார்ப்பது வெண்ணொச்சி.) நரை திரை போக்கி கற்பமாக காக்கும் வல்லமையுடையது. அங்கே மஞ்சள் நீரோடையும் அதனருகே சுனையையும் காண்பாய். அந்த நீரைப் பருகிடு. இதுபோல் பல இடங்கள் அப்பகுதியில் உண்டு, இந்த ஆச்சரியங்கள் பலருக்கும் தெரிய வாய்க்காதப்பா. இத்தகைய மேன்மையான சதுரகிரியைத்தான் சஞ்சீவி மருந்துமலை என்று பெரியோர்கள் உரைத்தனர்.

(பதவுரை முற்றும்)




வெள்ளி, 9 அக்டோபர், 2020

மந்திர சப்த பிரபஞ்ச தகவல் பரிமாற்றம்

பண்டைய காலத்தில் சித்தரிஷிகள் வேற்று கிரகத்தினருடன் தொடர்பில் இருந்ததையும், ஆகாய வெளியில் பறக்கும்போது பூமியிலிருந்து தகவல் பரிமாறியதையும் பழைய பதிவுகளில் விளக்கமாகப் பார்த்தோம். இதெல்லாம் செயல்பட நம் ஆலயங்களே தகவல் ஒலிபரப்பு நிலையங்களாக இருந்தன. சிவலிங்கம், மேரு பீடம், துவஜஸ்தம்பம், மற்றும் ஏனைய விக்ரகங்கள் மின்காந்த அலைகளைப் பரப்பும் ஆற்றலைப் பெற்றிருந்தன. இப்போதும்தான்!

அதற்கு எந்த மொழி பயன்பட்டது? சமஸ்கிருதம்! கணினி மின்மொழிக்கு பைனரி முறை எப்படி உதவுகிறதோ அப்படித்தான் வடமொழி மந்திரங்களும் கச்சிதமாகச் செயல்பட்டது. மின்காந்த தகவலுக்குத் தமிழ் பயன்படவில்லையா? இல்லை. ஏன்? பீஜாக்ஷர சப்தங்களும், ஒலித்திறன் கற்றைகளை மாற்றவல்ல மந்திர கணித பிரயோகங்களும் தமிழில் இல்லை. தமிழ் மொழியானது பண்ணிசைத்துத் துதிக்க ஏற்புடையதாகும். சிவதலங்களில் கனம் பாடி வேதம் ஒதும்போதும், ஆவளி மந்திரங்களை உச்சரிக்கும் போதும், பூமியின் காந்தசக்தியாலும் மாறுபடும் சிவதலங்களின் பூகோள பாகையின் நுட்பமான தாக்கத்தாலும் இவை ஆகாசத்தில் தெறிக்கும். அங்கே சஞ்சரிப்போர் இதை அறிந்துகொண்டு அத்தலத்தில் இறங்க இவை ‘கலங்கரை விளக்கம்’ வழிகாட்டியாக உதவியது.

சோழனின் கோயில் கட்டடக்கலையில் பெரும்பாலும் திருதூங்கானை மாடம் இருக்கும். இது ஒலி/ஒளி அலைகளை பன்மடங்கு பெரிதுபடுத்தும் ஆற்றல் வாய்ந்தது. ஒருமுறை மந்திரங்கள் சொல்லும்போது மட்டும் இவை பிரபஞ்சத்தில் எதிரொலிக்குமா? இல்லை. எப்போதுமே திருவுண்ணாழியில் மந்திர அலைகளின் வீரியம் குறையாமல் உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருக்கும். இதை குறையவிடாமல் சக்தி பாய்ச்சுவது எது? மூலவர் சிலையின் கீழுள்ள ஸ்படிக மற்றும் நவரத்ன மணிகளும், யந்திர தகடுகளும் மின்னணு சர்கியுட் போர்ட் போல் செயல் படுகிறது. துவஜஸ்தம்ப கொடிமரம், விமானத்தின் கலசம் என இவை மின்னலைகளை வாங்கும்/அனுப்பும் கோபுரங்களாகப் பயன்படுகிறது. கோயிலில் சிவலிங்கமே ஸ்படிகத்தில் இருந்தால் அதைவிட மேலான வேறு உபகர்ணம் இல்லை. மந்திர சப்த அலைகளின் எதிரொலி தொடர்ச்சியாக வாழும். அதன் சக்தி நிலை damped signal ஆகிப் போகாமல் இருக்கத்தான் அடியில் பதித்த மணிகள் பீஸோ எலெக்ட்ரிக் கிரிஸ்டல் போல் சக்தியைப் பெருக்குகிறது. மணி அடிக்கும்போது எழும் ஓங்கார சப்தம் அவ்வப்போது pulse signal போல் சக்தியைத் தூண்டிடும். விக்ரகங்களுக்கு நவமணிகள் பதித்த ஆபரணங்கள் சூட்டுவதற்கும் இதுதான் காரணம்.

அதனால்தான் மூன்று காலமும் பூசைகள் நடந்தன. மந்திர அதிர்வுகள் தொடர்ந்து ஓதப்பட்டது. ஆகாசம்-பூமி இடையேயான ஆகர்ஷணம் நிலைத்திருக்க மின்னலைகள் கடத்தப்பட்டு வந்தன. அதனால்தான் வேதமொழி தேவமொழி என்ற சிறப்பைப் பெற்றது. இதை நிராகரிப்போர் உண்டு. கருவறையில் மூலவர் முன்னிலையில் மந்திரங்களும் வேண்டுதல் சங்கல்பமும் தவிர வேறு உரையாடல்கள் யாரும் பேசுவதில்லை. ஏன்? அதுவும் பிரபஞ்சத்தில் எதிரொலிக்கும், மின்னியல் இடர்பாடுகள் தோன்றும். மிஞ்சிப்போனால் உடல்மொழியில் சைகையாக கையசைத்து உரையாடலாம். கருவறையை விட்டு வெளியே வந்து பேசினால் பாதகமில்லை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் குஹகர்ப்ப ஆகர்ஷண, சப்த ஆகர்ஷண யந்திரங்கள், விஸ்வகிரியா, ரௌத்ரீ தர்ப்பன சூத்திரங்கள் மற்றும் முன்னேறிய பல காந்த மின்னியல் யந்திரங்களை வடிவமைத்தனர். அது காலா காலத்திற்கும் மந்திர ஒலியில் உயிர்ப்புடன் இருக்கும் யுத்தியை ரிஷிகள் அன்றே நிறுவினர். அதனால்தான் குழுவாக அமர்ந்து மந்திர கோஷங்களை வேதியர்கள் ஓதியதற்கு இதுவே காரணம்.

சப்தபேத உச்சாடனமோ, கனமான புருஷ பீஜங்களோ தமிழில் இல்லை. புருஷ சப்த அதிர்வுகளுக்கு எதிர்வினையுண்டு என்பதால் வேத மந்திரங்களை ஆண்கள் மட்டுமே ஓதவேண்டும் பெண்கள் ஓதக்கூடாது என்பது விதி. ஆனால் தமிழில் அப்படி எதுவும் இல்லை. நால்வர் போற்றியதுபோல் பக்திக்கான மென்மையான பண்ணிசை மொழியே தமிழ்.

- எஸ்.சந்திரசேகர்



வியாழன், 24 செப்டம்பர், 2020

பகுத்தறிவாளர்கள் கொண்டாடும் வள்ளலார்

திராவிட கழகத்தின் சைவ -ஆரியர் மறுப்பு என்ற கட்டுரையின் கீழ் என் கண்ணில் பட்டதை இங்கே பதிக்கிறேன் ...

பெரியார் நினைவு நாளில், திருமூலர்- வள்ளலார், பெரியார் வழியில் - வேத மரபு மறுப்பு மாநாட்டை நடத்தியது. பெரியாரே அங்கீகரித்துப் பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் பாடல்கள் இருந்துள்ளது.

வள்ளலார் வருகைக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவ சன்மார்க்கம் என்ற அளவில் இருந்தது. அவர் வந்தபின் தான் சுத்த சன்மார்க்கம் என மாறியது. அவர் ஒரு புரட்சியாளர். உருவ வழிபாட்டை வெறுத்தார், காவி அணியாமல் வெள்ளாடை உடுத்தினார், கோவிலை சபை என்றார், ஒளியே வழிபாட்டுக்குப் போதும் என்றார். ஆரிய மொழி ஆரவாரம் மிக்கது, அதை கற்கப் பிரயாசப்பட வேண்டும் என்று கூறியவர். ஆறுமுக நாவலரையே அவருக்கு எதிராக ஏவி விட்ட தீய சமூகம் இது. ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் வெவ்வேறு பிரிவினர்கள் சைவ சமய மடாதிபதிகளாக கோலோச்சிய காலம். வள்ளலாரை ஆதிக்கம் செய்ய விடவில்லை.

“வேதநெறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே”

என்பது வள்ளலாரின் கூற்று.  

வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் ஆகிய அனைத்திலும் சொல்லப்பட்டவை எல்லாமே சூதும் சூழ்ச்சியும் நிறைந்தது, அதை நம்ப வேண்டாம் என்று அவரே சொன்னார். அதுமட்டுமல்லாமல் மக்களில் ஒருவர்கூட விடாமல் கல்வியறிவு பெரும் போதுதான் சாதி சமய வேறுபாடுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்றாலும் அவருடைய வேத மறுப்பு சைவ எதிர்ப்பு கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் ...

‘சைவத்தை வேதத்தை எதிர்த்தவர் வள்ளலார்’ என்ற தலைப்பில் பூங்குழலி என்பவரின் உரை இவ்வாறு இருந்தது.

* * * * * * * * * * * * * *

இதை வாசித்தீர்களா? இனி நம்முடைய பகுப்பாய்வுக்கு வருவோம்.

ஐந்தாம் திருமுறை வரை சிவனை சக்தியை முருகனை கணபதியை ஆழமாகப் போற்றி உருகிப் பாடிய பாடல்கள் அதிகம். தன்னுள் அக ஜோதியைக் கண்ட பிறகு முன்சொன்ன அனைத்தும் அவசியமில்லை என்பதை உணர்ந்த பின்தான் ஆறாம் திருமுறையில் ஜோதி தரிசனத்தின் மேன்மையைப் பாடினார். அவர் எங்குமே சிவனையோ வேதத்தையோ ஆரியத்தையோ ஒருபோதும் நிந்தித்ததில்லை. அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். நிழல் விழாத ஒளி தேகம் பெற்றதால் வெண்ணிற ஆடையே உடுத்தினார்.

சைவ சன்மார்க்கம் என்று எங்குமே இல்லை. சன்மார்க்கம் (எ) ஷண்மதம் என்பது சைவத்தையும் உள்ளடக்கியது. சுத்த சன்மார்க்கம் என்பது இதில் எதையும் குறிப்பிட்டுச் சாராமல் ஷண்மதம் உணர்த்திய நெறியின் உச்ச நிலையை வழிபடுவது. தன்னுள் சுயம்பிரகாச ஜோதியைக் காண்பதே இறுதி நிலையாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தினார். அதில் ஆசை மாயை வெறுப்பு போன்ற தீயவற்றை பொசுக்கிட வேண்டும் என்றார். அந்த நிலையில் உருவ வழிபாடும் தேவையில்லை, மந்திரமும் ஜெபிக்க வேண்டாம்.

வேதம் ஓதுவதோ, தேவாரம் பாடுவதோ தேவையில்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே வள்ளல் பெருமான் சொல்லவில்லை. கலியுகதிற்குத் தக்கபடி இறையருள் பெற்று அகத்தீயைக் காணும் வழியை அவர் கூறினார். ஆறாதார சக்கரத்தின் கபாலத்தில் பிரம்மரந்திர வாசலைத் திறந்துகொண்டு போய் அங்கே ஜோதியைக் கண்டுவிட்டால் யாரும் மீண்டும் பிறப்பதில்லை இல்லையே! என்கிறார் சிவவாக்கியர். உச்சபட்ச முதிர்ந்த நிலையில் உணர்த்தப்பட்ட நல்ல விஷயத்தை தவறாகப் புரிந்துகொண்ட மக்கள், சிவனை வேதத்தைத் தூற்ற ஆரம்பித்தனர். இதைத்தான் வெவ்வேறு சைவ மடாதிபதிகள் எதிர்த்தனர்.

‘வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம், இவை அனைத்தும் எடுத்துரைக்கும் உபாயங்கள் மற்றும் மறைப்பு ரகசியங்கள் யாவற்றையும் காட்டி அவற்றில் சொல்லப்பட்டதை உள்ளதை உள்ளபடி உணர வைத்த பரம்பொருளே’ என்றுதான் மேற்படி பாடலில் அவர் சொல்லியுள்ளார். ஓதாமலே எல்லாவற்றையும் ஓதி உணர்ந்த ஆற்றல் வரும். இங்கே சூது-உளவு என்பது சித்த மறைப்புச் சொற்கள். உபாயம் –ரகசியம் என பொருள் கொள்ளவேண்டும். ஆனால் அதை சூது-வாது-சூழ்ச்சி என்று தவறாகப் பொருள்கொண்டு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தினர் பரப்புரை செய்வதை பகுத்தறிவு கழகங்கள் வரவேற்கின்றன. 

கோவில் என்பதை சபை என்று மாற்றினாராம். கோவில் பற்றி: காலங்காலமாகவே சபை என்றால் தில்லை என்றும், அரங்கம் என்றால் திருவரங்கம் என்றும் பொருள் கொள்ளப்பட்டது. பஞ்ச சபை, சபாபதி, சபாநாயகன், சபேசன் என்ற பெயர்கள் தேவாரங்கள் தோறும் சொல்லப்பட்டுள்ளதே! வள்ளலார் வந்தபிறகு அல்ல!

வள்ளலாரின் பாடலை ஈவெரா அவர்களே அங்கீகரித்தாராம். இது எப்படி இருக்கு? குரு தன் சீடரின் பாடலை அங்கீகரித்து ஏற்பது போல் அல்லவா உள்ளது!

வேதங்களை பிரயாசையுடன் ஓதும்போது உள்ள சப்தகோஷ ஆரவாரம் தமிழ் மொழியில் இல்லை என்பதை வள்ளலார் இயல்பாக உணர்த்தினார். உண்மைதானே! ஆனால் அதை கழகத்தினர் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர். மக்கள் அனைவரும் மேம்பட கல்வி அவசியம் என்றார். எல்லோரிடமும் அன்பு காருண்யம் காட்டினால் பேதம் வராது என்றார். வடலூர் சித்தி வளாகத்தில் இயங்கிய பாடசாலையில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என மும்மொழிகளைக் கட்டாயப் பாடமாகக் கற்க வேண்டும் என்று வைத்தார். அது மட்டும் ஏன்? வடமொழியை வெறுத்தவர் அதை பாடசாலையில் கற்பிக்கச் சொல்லக் கூடாதே! 

‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று அவர் நொந்து போய் சொன்னது, இன்று கழகக் கடைகளில் விலை போகிறது. அதற்குக் காரணம் சுத்த சன்மார்க்க சங்கத்தினரே!

“ஜோதி ஜோதி ஜோதி அகத்தில் தெரியுது ஜோதி

ஜோதி ஜோதி ஜோதி இறைவன் அருட்பெரும்ஜோதி“


திங்கள், 14 செப்டம்பர், 2020

ஆளைப் பாத்தா ...

‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது சில சமயங்களில் நிரூபணமாகி உள்ளதை நான் பார்த்துள்ளேன். 

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தபோது ஒரு சமயம் மெஸ்ஸில் என் மேஜைக்கு முன்னே ஒருவர் கலைந்த தலை, பனியன் போடாமல் துண்டு போர்த்தி, கைலி அணிந்தபடி நின்றிருந்தார். அவரைப் பார்த்து ‘கொஞ்சம் சாம்பார் கொண்டுவந்து ஊத்துப்பா’ என்றேன். உடனே கண்கள் விரிய என்னைப் பார்த்து, ‘நான் மியூசிக் காலேஜ்ல படிக்கிற ஹாஸ்டல் ஸ்டூடன்ட்... என்னை பாத்தா சப்ளையர் மாதிரி இருக்கா? சரியா போச்சு!’ என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து உடனே போய் விட்டார். என்னதான் விடுதியில் தங்கிப் படித்தாலும் மாணவிகளும் வந்து உண்ணும் ஒரு பொது கூடத்திற்கு உண்ண வரும்போது இப்படியா வருவது? 

இன்னொரு சமயம் ஒரு கருத்தரங்கிற்கு முன்னமே முதல் ஆளாகப் போய்விட்டேன். ஹோட்டல் மேல் தளத்தின் வாயிலில் விபரங்கள் அடங்கிய பலகையைப் படித்து விட்டு உள்ளே நுழைந்தேன். அரங்க வரவேற்பு மேஜையில் இருந்த கையேடுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே பரிதாப ஆளுமையுடன் தன் மோவாயில் கைவைத்தபடி ஒடிசலான ஒருவர் ஈன சுவரத்தில், ‘உங்க பேரு விலாசம் ஃபோன் நம்பர் எல்லாம் இதுல பூர்த்தி செய்யுங்க’ என்றார். அவரைப் பார்க்கும்போதே, ‘ஐயோ பாவம், இவருக்கு என்ன பெரிசா சம்பளம் தந்துடப் போறாங்க ... கடனேனு இங்க உக்கார வெச்சிருக்காங்க போல’ என்று நினைத்துக் கொண்டேன். ‘சார், பத்து மணிக்குத்தானே? செமினார் நடத்துறவர் வந்தாச்சா?’ என்று கேட்டேன். ‘நான் தாங்க நடத்தப் போறேன்’ என்று ஆங்கிலத்தில் அவர் சொன்னதும் நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். ‘ஓ.. ஈசிட்? ஹஹஹா... குட்’ என்று சமாளித்தபடி போய் உட்கார்ந்தேன். 😂

இருபது ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் அறுவை சிகிச்சை ஆன உறவுக்காரரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கே ICU கூடத்தின் மைய மேஜையில் இருந்த மூத்த மருத்துவரையும் பார்த்தேன். அவரிடம், ‘இவருக்கு பைபாஸ் மாற்றாக ஸ்டென்ட் வைக்கலியா?’ என்று கேட்டேன். 'இப்போது ஸ்டென்ட் விலை அதிகம். என்பதால் நாங்கள் பரிந்துரை செய்வதில்லை' என்றார். நான் புறப்படும்போது அவர் என்னிடம் ‘சார், நீங்க எந்த ஹாஸ்பிடல்ல டாக்டரா இருக்கீங்க?’ என்று கேட்டார். ‘நோ.. நான் டாக்டர் இல்லை... பார்வையாளர்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.  

இப்படியாக, நாம் பிறரையும், பிறர் நம்மையும் எடைப் போடுவது நகைச்சுவையாக அமைந்துவிடும்.

சனி, 5 செப்டம்பர், 2020

நாம் வாழ்வது நமக்காக அல்ல!

ஒருவன் பாவங்கள் செய்யாது தவ நிலையில் பக்தியில் இலயிக்க வேண்டும் என்றும், எந்த பழிபாவ வம்புக்கும் போகக்கூடாது என்றும் நம் சித்தர்கள் தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர். அதுபோல் என்னென்ன செயல்கள் எல்லாம் பாவங்களில் வரும் என்ற ஒரு நீண்ட பட்டியலை போகர், கோரக்கர் முதலான சித்தர்கள் சொல்லியுள்ளார்கள்.

உங்கள் வளர்ச்சியில் யாரேனும் குறுக்கீடு செய்து உங்களைத் தாழ்த்த நினைப்பது, மேலதிகாரி உங்களை ஏய்ப்பது, உங்களுடைய உழைப்பை வேறு ஒருவர் தன்னுடையது என்பது, புறம் பேசுவது, உங்களுடைய பொருளை அபகரிக்க நினைப்பது, உங்களை வசியப்படுத்தி அடிமையாக்குவது, வேண்டுமென்றே மாந்திரீகம் வைப்பது, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் குடும்பத்தைக் குலைக்க நினைப்பது, கீழ்த்தரமாக மனம் புண்படக் கடிந்து பேசுவது, என்று பல தினுசான பாவங்கள் நீண்ட வரிசையில் உள்ளது.

இதெல்லாம் ஒருவருக்கு ஊழ்வினைப் பயனாகவே ஒவ்வொரு பிறவியிலும் ஏதோ ரூபத்தில் துரத்துகிறது என்பதற்காக நடக்கும் அநீதிகளை பேசாமல் பார்த்துக் கொண்டு இருக்க இயலுமா? பதிலுக்கு நாம் நேர்முகமாக/மறைமுகமாக போராடி அவர்களை துவம்சம் செய்வது எந்த வகை பாவத்தைச் சேர்ந்ததாக இருக்கும்? ஒருவர் நமக்கு தீங்கு தராதவரை யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சித்தர்கள் கருதொழில் காண்டங்களில் சிறப்புறச் சொல்லியுள்ளனர். அப்படியும் மீறி செய்பவர்களை என்ன வகையில் எல்லாம் தாக்கி செயலிழக்க வைக்கலாம் என்பதையும் தகடு மந்திரம் இத்யாதி வழிகளை உபாயமாக சொல்லியுள்ளனர். அவர்கள் சொல்வதையும் நம்பாதோர் பலருண்டு.

'செய்வினையாவது செயப்பாட்டுவினையாவது... இதெல்லாம் போயி நம்பிகிட்டு..' என்று சிலருக்கு முற்போக்காக மூளைச்சலவை செய்துவிட்டு, பிற்பாடு அவர்களே அந்த அப்பிராணி நபர்களுக்கு கருதொழில் மூலம் நசுக்க முற்படுவதையும் பார்த்துள்ளேன். இது என்ன பிழைப்பு? இது போன்றவர்களை, ஸ்தம்பனம் மாரணம் பேதனம் ஆக்ரூஷணம் வித்வேடனம் உச்சாடனம் மூலம் தாக்கி படுக்க வைக்கமுடியும் என்பது பாடல்களில் தெளிவாக உரைத்துள்ளார்கள். ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் தாக்கீடு செயக்கூடாது. எதிர் தாக்குதல் தரும்போது எந்த சேதாரமும் நிகழாமலா இருக்கும்?

ஆக, அது மீண்டும் ஒரு பாவச்சுற்றுக்குள் ஒருவனை தள்ளிவிடும்... இப்படியாக பழிதீர்க்கும் பிறவிப் பயணங்கள் ஜோராக ஓடுகிறது... வீடுபேறு அடையும் வரை. எத்தனை தொல்லைகள் வந்தாலும் இறைவனின் பாதங்களைப் பற்றியபடி 'அபயம் தா' என்று சொல்லிக் கொண்டே இருப்பதும் ஒரு அளவுக்குமேல் முடுயுமா? எதிராளியை ஒரு கைபார்க்க மனம் கடுங்கோபத்தில் விழையும். இப்படி நிலை மறந்து பாவம் செய்வோமா என்பதும் ஈசனின் சோதனையாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஆசை, பொறாமை, கோபம், வெறி எல்லாம் கடந்து இறுதியில் 'தன்வினை பிறவினை எதிர்வினை' என்று எல்லா வினை வகைகளும் பாவ இலக்கணம் நடத்தும். 

இன்னும் சிலர் மறுபிறப்பு என்ற கான்செப்ட் இல்லை என்று வாதாடுவார்கள். அப்படி என்றால் நாம் பிறக்க வேண்டாமே! காரணமின்றி அல்லல்பட வேண்டாமே! மறு ஜென்மம் இல்லை என்றால் ஊழ்வினை, இம்மை மறுமை, வீடுபேறு என்று ஔவை, வள்ளுவர் மற்றும் பலர் சொன்னது அப்பட்டமான பொய் என ஆகுமே... தவறு செய்த அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கிறோம்... அதையே ஆன்மாவுக்கு ஈசன் கொடுத்தால் அதை ஏற்க முடிவதில்லை. அவனையே திட்டுகிறோம். 

அந்த ஜென்மத்தின் பாவச்செயல்களுக்கான தீர்க்கப்படாத எஞ்சிய தண்டனை அடுத்த பிறவிக்குப் போய் சேருவதுதான் இத்தனைக்கும் காரணம். ஆன்மாவுக்கான தண்டனை எல்லாவற்றையும் பைசல் பண்ணிக்கொண்டு உடலை போக்க வேண்டியதுதானே, அதற்குள் தர்ம தேவனுக்கு என்ன அவசரம்... எதற்கு மறுபிறப்பில் சொல்லொண்ணா வேதனை தரவேண்டும்? நம்மை யாரும் துன்புறுத்தாமல், நமக்குக் கேடு தராமலும் இருக்கவேண்டும். மீண்டும் ஒவ்வொரு சுற்றிலும் நாம் பழிதீர்க்காதவாறு நமக்குச் சுற்றமும் நட்பும் வாய்க்க வேண்டும். இரு கைகள் தட்டினால்தானே ஓசை வரும்? நம்மை இம்சிக்காத துரோகம் செய்யாத தக்க சுற்றங்களையும் சகவாசங்களையும் அணைக்கவேண்டும். அது ஈசனின் பொறுப்பு! நாம் கலங்கிய ஓடையில் தெளிந்த நீர்போல் இருக்க முடியாதுதான், ஆனால் அப்படி இருக்க அவனருளும், அப்படி தொல்லையில்லாதொரு பிறவி பிராப்தமும் வாய்க்கவேண்டும். கலியுகத்தில் பெரிய யாகமோ பூசைகளோ வேண்டாம், 'நாம ஜெபம்' செய்தாலே நற்கதி கிட்டும். மகான்கள் அருளிய மந்திரங்களை எப்போதும் சொல்லிக்கொண்டே உரு ஏற்றி நம் ஆன்ம பலத்தை வலிமையாக்கிட வேண்டும்.

போன பிறவியில் தவறு இழைத்து தீங்கு செய்தது இந்த உடல் இல்லைதான், ஆனால் அதனுள் இருந்த ஆன்ம லேசுப்பட்டது இல்லை அதனால் அதற்குத்தான் தண்டனை... இதன் காரணமாக அந்த ஆன்மா குடியிருக்கும் தற்போதைய தேகத்திற்கு இன்னல்கள் வருகிறது. இதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமறிந்து இப்பிறவியில் பழி- பாவம் செய்யாத நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் விருப்பபடியா ஆன்மாவிற்கு புது தேகம் கிடைக்கிறது? நடக்கும் எல்லாவற்றையும் ஈசன்தான் தீர்மானிக்கிறான். மனதால் உடலால் நாம் செய்யும் பாவங்கள் ஆன்மாவையே பற்றும். இவ்வான்மா பல லட்ச தேகங்களில் குடியிருந்தபின் அவை புதைந்தும் எரிந்தும் அழிந்ததைப் பார்த்த ஒரே சாட்சி. வீடுபேறு கிட்டும்வரை அதற்கு அலுப்பில்லை போல. தேகத்தை அதன் கருவியாக  இயங்கவைத்து அது செய்யும் அக்கப்போர் கொஞ்சமில்லை! ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் 3ம் விதியின் படி, 'தீதும் நன்றும் பிறர்தர வாராது' என்பதால் காரணமின்றி துன்பமோ இன்பமோ வருவதில்லை. எல்லாம் நம் கர்மாவின் பிரதி பிம்பம்தான்.

ஆக, தெரிந்தோ தெரியாமலோ கலியுகத்தில் ஒரு சதவிகிதம் கூட பாவம் செய்யாமல் இருக்கமுடியும் என்றால் அவர் மனிதப் பிறவியே அல்ல. அப்படியே ஒரு மனிதன் இத்தனையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்கமுடியும் என்றால் அவன் தெய்வத்திற்கு சமம்... வையத்துள் போற்றப்படுவார்!

எல்லோருள்ளும் அந்த சதாசிவம் பரப்பிரம்மமாக இருக்கிறார் என்பதை எப்போதும் நினைக்காமல் செயல்படுவதே பாவங்களுக்கு வழிவகுக்கும். ஆகவே முடிந்தவரை தர்மநெறி கடைபிடிக்க முயற்சிப்போம்!

"பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
வேத விதிப்படி நில்லு நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு"

பாவங்கள் செய்வதால் அல்லல்பட்டு இறக்க நேரிடும், அந்த ஊழ்வினைக்கேற்ப பிறவிகள் துரத்தும், யமன் துரத்துவான். இப்படியே இந்த ஓட்டம் தொடரும். கோபத்தையும் அதன் காரணிகளையும் விட்டொழித்தால் பிறப்பு-இறப்பு அறுபடும். வேதம் உரைத்த தர்மநெறிப்படி வாழ்ந்தால் மேன்மையான இடத்தை அடையலாம் என்ற கடுவெளி சித்தர் பாடல் என் நினைவுக்கு வந்தது. சொர்க்க-நரக பதியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்த குருநாதர் போகரும் இதைத்தான் வலியுறுத்தியுள்ளார்.

நம்மால் பிறருடைய பாவங்கள் போக வாய்ப்புண்டா? உண்டு என்கிறார்கள் சித்த பெருமக்கள். நாம் சாலையில் நடந்து போகும்போது, நம் எதிரே முகம் தெரியாத யாரோ எதிர்படுகிறார்கள். எதிர்ப்படுவோரை எல்லாம் நாம் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாக நாம் போய்க்கொண்டு இருப்போம்.

பலபேரில் தனிப்பட்ட யாரோ ஒரு நபரை  குறிப்பிட்டு நாம் உற்றுப் பார்ப்பதில்லை. ஆனால், அவர் நம்மை ஒருமுறை பார்க்கலாம், மீண்டும் இரண்டாவது முறையாக ஏதோ ஈர்ப்பின் காரணமாகவோ நம்மைப் பார்க்கவேண்டும் என்ற நினைப்பில் நம்மைத் தாண்டிப்போகும்வரை நம்மையே பார்க்கவும் வாய்ப்புண்டு. இதை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். அப்படி நம்மை பார்க்கும்போது, பூர்வஜென்ம பந்தத்தினாலோ, ஊழ்வினைப் பயனாகவோ அவர் நம்மை காரணத்தோடுதான் காண நேரிடுகிறது. நாம் போகும் வழியில் அவரை வரவைத்துக் காணச்செய்கிறது. இதெல்லாம் புரியாத மர்மம்தான்!

இப்படிச் செய்யும்போது, நம்முடைய பார்வையோ, அல்லது அவர் நம் முகத்தைக் காண நேரிடும்போதோ, தன்னிடமிருக்கும் சில பாவங்கள் அடிபட்டுப் போகிறது என்பதை சித்தர்கள் என்னிடம் சொன்னார்கள். நாம் என்ன புனிதனா? நம்மைப் பார்த்து ஒருவனின் பாவங்கள் விலகுமா? என்று உள்மனம் உடனே நினைக்கும். அல்லவா? நாம் அடுத்தவரின் பாவங்களைப் போக்கும்போது நாமே நம் பாவங்களை களையமுடியாதா? என்று எண்ணவும் தோன்றும். நம்மால் சமூகம் மேம்படுவதற்கே நாம் பிறக்கிறோம், நம் அடிச்சுவட்டை விட்டுச்செல்கிறோம். நாம் வாழ்வது நமக்காக அல்ல! ஆனால் இப்படி நடப்பது உண்மை. காரணத்தோடுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்மைக் கடந்து போவோர்களின் முக்கியத்துவம் அமைகிறது. அப்படித்தான் அவர்கள் வாழ்க்கையிலும் நாம் வந்து போகிறோம். நண்பனாக, சொந்தமாக, ஆசானாக, மாணாக்கராக, இப்படி பல வேடங்கள் ஏற்கிறோம்.

இப்படித்தான் ஒருமுறை என் நண்பரோடு வழக்கமாகச் செல்லாத ஒரு தெரு வழியே நான் செல்ல நேர்ந்தது. நண்பர் ஒரு கடைக்குள்ளே சென்றார். நான் கடை முன்னே நிழலில் நின்றிருந்தேன். அப்போது என் கண் எதிரே ஒருவர் கண் மூடிய நிலையில் சுவரில் சாய்ந்து தெருவில் கால் மடித்து அமர்ந்திருந்தார். "இவர் கோலத்தைப் பார்த்தால் சித்தரா பிச்சைக்காரரா என்று தெரியவில்லையே" என்று என் மனதில் நினைத்தேன். அக்கணமே அவர் திடீரென கண் திறந்து வேறெங்கும் பார்க்காமல் நேராக என்னைப் பார்த்து மெல்லச் சிரித்துவிட்டு மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டார். நான் நினைத்ததை அவர் அறிந்ததால் தன் புன்சிரிப்பு மூலம் பதிலளித்தார். நான் வரும் வழியில் அவர் வந்து அமரந்து என்னைக் காணவேண்டும் என்று மேல் நிலையில் கட்டளை வந்திருக்கலாம். அதேபோல், இவரை தரிசனம் செய்ய என்றுமே போகாத அத்தெரு வழியே அப்போது போகவேண்டி இருந்திருக்கும். அதுபோல் வேறு எவரோ என்னைக் காணும்படி அவர் எதிரே நான் பயணப்படவேண்டி இருக்கும்.

நம்மைச்சுற்றி இருக்கும் இப்படியான சித்த வலைப்பின்னல் மூலம் நம்முடைய ஆன்மாவின் நிலை அறியப்படுகிறது.