About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 11 மார்ச், 2017

பிறவியை அறுக்கவேண்டும்

என்னுடைய கடந்த பதிவில் போகரின் ஜெனனங்கள் பற்றி சொல்லி இருந்தேன். ஒரு நண்பர் “அப்படியெல்லாம் மறுபிறப்பு என்ற கான்சப்ட் இல்லவே இல்லை” என்று சிவவாக்கியரை மேற்கோள் காட்டியிருந்தார்... பதினெண் சித்தர்களில் போகர் சிவவாக்கியர் போன்றவர்கள் சற்று முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்கள் என்பதை ஏற்கனவே நம் பதிவில் பார்த்துள்ளோம். ஆனால் சிவவாக்கியர் மட்டும் மறு பிறவி கூற்றை மறுத்துள்ளார். இன்று அதைப்பற்றிய ஒரு பதிவுதான் இது.
“கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே”. சிவவாக்கியருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்பதை சிவவாக்கியத்தில் சொல்லிவிட்டார். அதற்கு தம்முடைய நோக்கில் பல உதாரணங்களையும் முன் வைக்கிறார்.  

'இறந்தவர் உயிர்ப்பதில்லை' என்று சொல்லாமல் 'இறந்தவர் பிறப்பதில்லை' என்று பொதுவாக சொல்லியுள்ளார். அதனால் மறுபிறப்பு பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எப்படிப்பட்டவர் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை என்பதை பாடலில் ஆய்ந்துதான் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது,  உயர்  நிலையை அடைந்த பால், முழுமை பெற்ற  வெண் சங்கு, பூத்திட்ட பூ, முற்றிய காய் போன்ற முதிர் நிலையை எட்டிய எதுவும் மறு பிறப்பு அடைவதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். ஆனால் மேம்போக்காக இதில் பொருள் விளங்காது. ஆக, இவர் சொன்னது முற்றுபெற்ற ஞானிகளை குறிக்கலாம்.
“இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை” “இனிப்பிறவா நெறி எனக்களித்து அருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே' என்று வள்ளலார் திரு அருட்பாவில் தீர்க்கமாய் சொல்கிறார். சாதல்-பிறத்தல் என்னும் சுழற்சியில் பிறந்த உயிர்களாகிய நாம் இருக்கிறோமே என்பதே வள்ளலாரின் வேதனையும் வாதமும்.
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.” அதாவது சாக்காடும் பிறப்பும், உறங்குவதும் விழித்தலும் போல இயல்பாய் மாறிமாறி வரும் என்பதும்;
 “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்“.. பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது என்கிறார் வள்ளுவர். பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் அடியை சேர வேண்டும் என்று ஒரு குறளில் உணர்த்தியுள்ளார்.
குருநாதர் போகர் தன் சப்தகாண்டத்தில் மறுபிறவி பற்றி:
“தானான கோபத்தால் வந்தமுறையாலே தாக்கான ஜெனனமும் பலவுமாகும், மானென்ற ஜெனனமாய் ஜெனிப்பதெல்லாம் முன்செய்த பலாபலத்தின் குறையால்..” என்று சொல்லியுள்ளார்.
மானிடர்கள் தங்கள் கோபத்தில் கண்மூடித்தனமாக பல பாவங்களை செய்துவிடுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஜெனிப்பதேல்லாம் கோபத்தாலும் கொடும் பாவத்தாலும் மானிடனாக ஜெனித்து விட்டால் வீடுபெற சொர்கத்திற்கு செல்லும் வழியை கண்டறியவேண்டும் அதற்காக உழைக்கவேண்டும். முற்பிறவியில் செய்த பலா பலத்தினாலே இந்தப் பிறவி வாய்த்துள்ளது என்ற சூட்சுமத்தை அறிந்து பண்புடன் நடந்துகொண்டால், இந்த பூமி சொர்க்கம்தான் என்று சொல்கிறார்... ஈசனின் ஆக்ஞைபடி போகர் பல ஜெனன அவதாரங்கள் எடுத்தார். உடல் அழியக்கூடியது தான், ஆனால் பிறவிப்பணி இப்பூமியில் முடியும் வரை இவ்வுடலை கற்பம் உண்டு கல்ப காலத்திற்கும் நிலைக்கச் செய்யமுடியும். அதன்பின் ஈசனுடன் இரண்டறக் கலந்திட வேண்டும் என்று போகர் உணர்த்தியுள்ளார்.
“புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்”? என்று பத்திரகிரியார் தன் மெய்ஞ்ஞானப்புலம்பலில் கூறுகிறார்.
நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தன்னுடைய உருக்கமான திருவாசகம் நூலில் சிவபுராணம் பாடலில்,
“கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்” என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது, கறந்த பாலோடு கரும்புச்சாறு, நெய்யைக் கலந்ததுபோல, தேன்போல அடியவர்களின் சிந்தனைக்குள் ஊறி நிற்கிறவனே, நாங்கள் எடுத்த பிறப்பைக் கெடுத்து மோட்சம் பெறச்செய்யும் எங்கள் பெருமானே என்கிறார்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம் பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!”
ஆக இப்படி எல்லாவிதமான பிறப்புகளையும் எடுத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன், மெய்யான உன்னுடைய பொன்னடிகளைக் கண்டு, இன்று நான் வீடுபேறு அடைந்தேன்! (இனி இப்படிப்பட்ட பல பிறவிகள் எனக்கு இல்லை!" என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
மணிவாசகர் பிரசங்கம் செய்ய அவ்விறைவனே படி எடுத்து நூல் வடித்தார் என்றும் தெரிகிறது.. மறுபிறவி கூற்று தவறு எனும் பட்சத்தில் ஈசனே இவ்வரியை திருத்தி எழுதியிருப்பாரே.. ஆனால் திருத்தம் செய்யவில்லை.
மறுபிறவி, ஊழ்வினை, பாவபுண்ணியம் என்று எதுவும் இல்லையென்றால் ஆன்மா என்ற அழுக்குபடிந்த வஸ்திரம் துவைக்கப்படாது. ஈசன் என்னும் வண்ணான் அழுக்கு போக துவைத்து வெளுத்திடுவார். அதுவரை துவைப்பவனுக்கும் துணிக்கும் உள்ள பிடிமானம் விட்டுப் போவதில்லையே! மறுபிறவி மூலம் சலவை செய்து ஆன்மாவை சுத்தம் செய்து இறுதியில் தன்னுள் இணைத்துக் கொள்கிறான் ஈசன். அதற்கு சுழற்சியில் இன்னல்கள் தந்து பாடம்புகட்டி தக்க தண்டனை தந்து அந்த ஆன்மா அனுபவித்த பலாபலன் ஏற்ப அதற்கு முக்தி (அ) வீடுபேறு கிட்டும்.
சிவவாக்கியர் ஒருவர் மறுத்துள்ளதால் ஒட்டுமொத்த சித்தர்களும் மறுபிறவியே இல்லை என மறுக்கவில்லை. சிவவாக்கியரைப் புரிந்துகொள்ள நாம் அவர் கண்ணோட்ட நிலைக்கு உயரவேண்டும்.. மெய்யாகவே முற்போக்காகத்தான் சொன்னாரா என்று அப்போது தான் விளங்கும்.. அது அவர் மறைப்பு வார்த்தை ஜாலங்களை காட்டுகிறது.. மறுபிறவி தத்துவம் பொய் என்றால் திதி, தர்ப்பணம், திவசம், போன்ற தென்புலத்தார் சடங்குகள் அறவே வேண்டாமே!

வியாழன், 9 மார்ச், 2017

சுழற்சியில் வரும் அதே ஜெனன உறவுகள்

என்னுடைய ஆய்வில் சித்தர் போகரின் இன்னபிற ஜெனன அவதாரங்களை கண்டுகொண்டேன். சித்தர்கள் எல்லோருமே நினைத்த மாத்திரத்தில் சமாதியில் இருந்துகொண்டே மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தோ, ஒரே நேரத்தில் பலராகவும் ஜனித்துள்ளனர் என்பதற்கு மூலர், காலங்கி, போகர், அசுவனி போன்றோர் உதாரணம். போகர் கூட தன் ஆத்மார்த்த சீடனோடு அநேகமாக எல்லா பிறவிகளிலுமே 'குரு-சீஷ்யன்' உறவு முறையிலேயே வந்துள்ளார்.
முஹம்மது-அபுபக்கர், போகர்-புலிப்பாணி, லாவோட்சு -யின்ஸி, ஹாங்வு (மிங்)-ஜியான்வென், வீரப்பிரம்மேந்திரர் -சித்தையா, என்று போகருடைய ஜெனன சாகரங்கள் முடிவின்றி போய்க்கொண்டே இருக்கிறது. இவைகளை அவர் ஜெனன சாகரம் நூலில் சொன்னதில்லை. சித்தர் போகரைப்பற்றி முதல் முறையாக இங்கே படிப்பவர்களுக்கு இதெல்லாம் சற்றும் நம்பமுடியாத கட்டுகதையாகவே இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை.
ஆதியில் நந்தியாக, பிரம்மா, திருமால், முருகன், இந்திரன், ராமன் கிருஷ்ணன், என்று அவதாரங்கள் எடுத்த பிறகு மேற்கண்ட இன்னபிற ஜெனனங்களை எடுத்தார். உங்களுக்கு மேலே குறிப்பிட்ட பெயர்களில் சீனாவில் மிங் பேரரசின் மன்னர் ஹாங்வு பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆனால் இதை கோரக்கர் தன்னுடைய சந்திரரேகை நூலில் ஒரு இழையாக முக்கிய குறிப்பு தந்துள்ளார். 'தன் நாட்டு பிரஜைகளை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக சீனாவில் போய் சில காலங்கள் சமாதி கொண்டு தக்க சமயத்தில் அங்கு மன்னராகப் பிறந்து அரசாளப் போகிறார்' என்ற செய்தி தான் அது.
மங்கோலியர் குப்லைகான் சீனா மீது படையெடுத்து தாக்கி கைப்பற்றி 'யுவான் பேரரசை' நிலைநாட்டினான். அதை தோற்கடித்து மீண்டும் தாவோ கொள்கைகளை நிலைநாட்டிய பெருமை 'மிங் பேரரசின்' மன்னர் ஹாங்வு வையே சேரும். பிரஜைகள் மகிழ்ச்சியோடு இருந்தனர் என்று சீன வரலாறு சொல்கிறது. அவருடைய உன்னத அடிசுவாட்டில் வந்த ஆத்மார்த்த சீடர் (மன்னர்) தான் ஜியான்வென். 
எல்லா பிறவிகளிலும் மூத்த பதவியை தலைமையேற்று அலங்கரித்தார் போகர். ஆனால் அவர் வழி பின்பற்றி வந்த சீடர் எல்லா பிறவிகளிலும் ராஜாங்க / குருவம்ச எதிர்ப்புக்கும், பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமலும், உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தங்களுமே ஏற்பட்ட வந்துள்ளது... இது அபுபகர், புலிப்பாணி, யின்ஸி, ஜியானவேன், சித்தையா வரை பொருந்தி நடந்துள்ளது என்பது எனது ஆய்வில் அறியச்செய்தார். தற்போது, வீரபோகராக பிறந்து தர்ம பரிபாலனம் செய்யும் போகருக்கு, சீடராக யார் உள்ளார் என்பது வெளியுலகிற்கு இன்னும் அவர் காட்டவில்லை.
இப்படித்தான் அவ்வப்போது சித்தர் போகர் பல ஆய்வு செய்திகளை எனக்கு சிரமம் இல்லாமல் திடீரென என் கண்ணில் காட்டுவார். அதை குறிப்பெடுத்து என் நூலில் விளக்கியும், உங்களுக்கு இங்கே பதிவாகவும் இடுகிறேன். எல்லாம் அவர் சித்தம்!
-எஸ்.சந்திரசேகர்

வியாழன், 2 மார்ச், 2017

தோபா சுவாமி வழிபட்ட கோயில்

ராமலிங்கம் என்ற மகான் ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார சித்த புருஷர். தோபா சுவாமிகள் என்ற சிறப்புத் திருநாமம் பெற்ற இவர் திருவொற்றியூரில் தெரு ஓரமாக அமர்ந்து, அவ்வழியே செல்பவர்களின் குணத்தைக் குறிப்பது போல நாய் போகிறது, நரி வருகிறது, கழுதை கத்துகிறது, பேய் திரிகிறது என்றெல்லாம் சொல்லுவாராம்.
அந்த 19ம் நூற்றாண்டில், வடலூர் ராமலிங்க அடிகளார், இவர் இருந்த அந்தத்தெரு வழியே வர முதல் முறையாக மனிதர் வருகிறார் என்றாராம். இவரை நோக்கிய வடலூர் ராமலிங்க அடிகள், தன்னைப் போல் இவரும் மகான் என்பதை உணர்ந்து அதனை அங்குள்ளோரிடமும் தெரிவித்தார். எப்போதும் 'தோ.. தோ' என்று உரக்க சொல்லுவாராம். அதனால்தான் அப்பெயர் பெற்றார். 'தோடுடைய செவியன்' பாடிய திருஞானசம்பதர்தான் இவருடைய மானசீக குரு. No automatic alt text available.
தோபா சுவாமிகள் ஒரு நாள் இல்லத்தின் வாயிலில் நின்று பிச்சை கேட்டார். அப்பெண்மணியோ மிகுந்த பக்தியுடன் பாதி வெந்துகொண்டிருந்த சாதத்தை அவசரமாக அளித்துவிட்டார். உடனே உள்ளே சென்று பானை சாதத்தைக் கிளற முயல, சாதம் கணநேரத்தில் முழுமையாக வெந்திருந்ததாம். இது மகான் செய்த அற்புதம். இவருடைய ஜீவ சமாதி மடம் வேலூர் (CMC அருகில்) சைதாபேட்டையில் உள்ளது.
Image may contain: sky and outdoor  No automatic alt text available.
சென்னை அசோக்பில்லர் ரயில் நிலையம் பின்னேயுள்ள சிவன் கோயிலில் பூஜை செய்து சில நாட்கள் தங்கியதால் ஸ்ரீ தோபா சுவாமி @ ஸ்ரீ மல்லிகேஸ்வரர் ஆலயம் என்று பெயர் பெற்றது.  சற்றுமுன், ஸ்ரீ மகேஸ்வரி சமேத ஸ்ரீ மல்லிகேஸ்வரரை தரிசிக்கும் பேறு கிட்டியது... ஓம் நமசிவாய!

சனி, 25 பிப்ரவரி, 2017

உடல்நலம் பேண தூய தமிழ் படியுங்கள்

உயர்வான திருப்புகழில் சரவணனே அருணகிரிநாதருக்கு எல்லாமாகவும் இருக்கிறார், ‘முத்தைத்தரு’ என்ற சொல்லை முருகன் உபதேசித்து, பின்னாளில் ‘வாக்குக்கோர் அருணகிரி’ என்று பெயரும் புகழும் நிலை பெறச் செய்தான். "முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு..." படித்தாலே நரம்பு மண்டலம் சக்தி சக்கரங்கள் வலுப்பெறும்.
சமீபகாலமாக தமிழ் உச்சரிப்பை வேண்டுமென்று மாற்றி உச்சரிப்பதாலும், பள்ளியில் பயிற்றுவித்தல் சரியில்லாது போவதாலும், மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு வரும். சொற்களின் உச்சரிப்பை மாற்றிச் சொல்லும்போது, ஏற்கனவே அணுவில் பதிவான சொற்களின் சப்தங்களின் phonetics மாறும் போது, மூளையில் சில சமச்சீரற்ற அதிர்வலைகள் நிகழ்கிறது. கடந்த ஏழு பிறவிகளில் நாம் பிறப்பெடுத்த போதேல்லாம் நாம் என்ன மொழிகள் பேசினோமோ அந்த சப்தங்கள் கேட்டலாகிட்டு பதிவாகி உள்ளது. இந்த சப்தப்பதிவு பற்றி பலர் அறிவதில்லை. அதனால்தான் 12 வயதுக்குள் அநேகமாக பன்மொழிகள் கற்பது எளிமையாகுது. ஏன் எதற்கு என்று நீட்டி முழக்காமல், "இளமையில் கல்" "வைகறைத் துயில் எழு" போன்ற விஞ்ஞான நுண் விஷயங்களை நறுக்கென சொன்னார் சித்தர் ஔவை.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
 குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

வாரியார் சுவாமி சொற்பொழிவில் முருகனின் தோற்றம் குறித்து சொல்வார். 'உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய் குழந்தைப் பெறுவாள், அப்பா பெயர் வைப்பார். ஆனால், அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைப்பது ஒரு புரட்சி. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை சிருஷ்டி செய்கின்றார். அருணகிரிநாதர் இதைத்தான் திருப்புகழில் 'முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்' என்கிறார். அப்படி ஒன்றுமில்லை என்று மறுக்கும் பகுத்தறிவாளர்கள் உண்டு. வெறும் பகுத்தறிவு கொண்டு தமிழையும் முருகனையும் ஆராய முடியாது. ஐம்பூதத்தானான ஈசனின் வெளிப்பாடே முருகன்.

முருகன் வேறு சிவன்வேறு அல்ல என்று கந்தபுராணம் பாடுகின்றது. ஈசனின் ஆக்ஞேயத்தின் ஒளிப்பிழம்புதான் முருகபெருமான். அதனைத் தெளிவு படுத்தும் பாடல்: 

'அருவமும் உருவு மாகி 
அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் 
பிரமமாய் நின்ற சோதிப் 
பிழம்பதோர் மேனி யாகிக் 
கருணைகூர் முகங்கள் ஆறும் 
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே 
ஒருதிரு முருகன் வந்துஆங்(கு) 

உதித்தனன் உலகம் உய்ய.'
தமிழ் அருளிய முருகனைப் போற்றும் காவியங்களான திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர்சஷ்டி கவசம், ஷண்முக கவசம், குமாரஸ்தவம், போன்றவற்றை பாராயணம் செய்தாலே சாலச்சிறந்தது. சித்தர் போகர், தன் நூலில் அகஸ்தியரையும் மூலரையும் தமிழ்சாகரங்களாகவும்; பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரை தமிழ் மகுடமாகவும் வைத்து ஆராதித்தது தெரிகிறது. என் குருநாதர்களுக்குப் போற்றி!

பேய்பிசாசுகளும் மந்திரங்களும்

இன்றளவும் பேய்பிசாசுகள் உள்ளதா? செய்வினை சூனியம் போன்றவைகள் ஜோராக நடக்கிறதா? பலர் இதை நம்புகின்றனர்.. சிலர் நம்பமாட்டார்கள். ஆ..ஊ.. என்றால் மன அழுத்தம், உளவியல் பிரச்சனை என்று இக்கால மருத்துவர்கள் அடித்துச் சொல்லிடுவார்கள். அவையெல்லாம் உளவியல் சோதனையில் சரியாகுமா?
மனநோய்க்கும் பேய் பிடித்ததற்கும் பல தெளிவான வேறுபாடுகள் உள்ளன. அக்காலத்தில் 'மணி-மந்திரம்- மருத்துவம்' என்று வைத்தியர்கள் இதற்காக பிரயோகம் செய்தார்கள். இன்று மனநல மருத்துவர்கள் என்ன செய்வார்களோ? இதோடு பகுத்தறிவு வைத்தியமும் உண்டு.
அப்படிப்பார்த்தால் அகஸ்தியர், போகர், கோரக்கர், ஔவையார், அருணகிரிநாதர், பாம்பன் ஸ்வாமிகள்... அனைவரும் பேய் பிசாசுகள் அண்டாமல் இருக்க, செய்வினைகள் ஓடிட, பல உபாயங்களைப் பாடலில் சொல்லியுள்ளனர். இக்கால மருத்துவர்கள் இவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பார்கள்? இவர்களுக்கு mental disorders, obsessions, irrational moods, mystic behaviour, என்று காரணம் சொல்லிககாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ஆண்டவா!

படத்தில் நான் போட்டுள்ள பாடல்களின் சுருக்கமான பொருள்.
“மாடனின் மந்திரத்தை ஓதினால் எப்பேர்பட்ட பேய், பிசாசுகளையும் விரட்டிடும். பிரணவத்தின் ஒலிகேட்டால் அவை ஓடும்.” - போகர்.
“ஒலியுடன் சப்தம் எழுப்பி துரத்தும் பேய் பிசாசு கணங்கள், என்னை அண்டாது இருக்க, கெட்டவர்கள் ஏவும் வலிமையான சூனியம் மந்திர தந்திரம் எல்லாம் என்னை வருத்திடாமல் இருக்க உன் வேல் காக்கட்டும்.” – பாம்பன் சுவாமிகள்.
மண்டபத்தில் படுத்திருந்த ஔவையாரைப் அச்சமூட்ட வந்த பெண் பேயைப் பார்த்து, “பெண் பேயே! வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை “ –ஔவையார்
பூத வேதாளங்களும் வணங்கி சாப விமோசனம் பெற்ற வேலனான, கூதள மாலையை அணிந்து வேடர்குல வள்ளியை மணந்த சேயூர் கந்தசாமியே, மிகவும் தீய குணமுடைய அடியேனை ஆட்கொண்டு அருளிய நின் கருணையே கருணை. - அருணகிரியார். 

(இங்கு அருணகிரிக்கு சேய் வடிவில் முருகன் காட்சி தந்தான். இங்கு  வணங்கினால், கிரக தோஷங்கள் நீங்கி. பேய் பிசாசம்  தீவினைகள் அண்டாது ஓடிவிடும். வரும் பங்குனி மாதம் இங்கு தேரோட்டம் நடக்கும்.தலத்திற்கு சென்று வணங்கி தீவினை அகலப் பெறுங்கள். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில் கல்பாக்கத்தை தாண்டி உள்ளது. அதுபோல், மேல்மருவத்தூரிலிருந்தும் சேயூர்  செல்லலாம்.)
“பஞ்சாக்ஷர் மந்திரம் சொல்லி, கோழி பன்றி ஆடு காவு கொடுத்த பின், அஇஅரிஓம் மந்திரத்தை நூறு முறை உருபோட்டு, காரிஈயம்-செப்பு-தங்கம் இதில் எதிலாவது இந்த மந்திரத்தை கீறி எழுதி, அதை தாயத்தாக கழுத்தில் அணிய, எப்பேர்பட்ட பிசாசு பிரம்மராட்சசனும் அணுகாது.” - அகஸ்தியர்
"ஓம் உம் லம்.... ஹரிங்கே’ என்ற மந்திரத்தை ஜெபித்து (படத்தில் சிவப்பு குறியீடுக்குள் காட்டியுள்ளேன்) உருவேற்றி, ஒரு செப்பு தகட்டில் முக்கோணம் வரைந்து, ஓங்காரத்தை முக்கோணத்தின் சுற்றுபுறமும் எழுதி, அதன் மையத்தில் வட்டம் போட்டு அதில் ‘அஉஇ’ என்று நாட்டி, மந்திரம் ஜெபிக்க, பேய் பில்லி சூனியங்கள் அண்டாது." - கோரக்கர்.
(இங்கு சொல்லப்பட்ட தகுடு தாயத்து தக்க உபாசகர் மூலமே செய்து அணிய வேண்டும்..இப்பதிவை கருத்து பரிமாற்றம் அளவில்தான் சொன்னேன்.)

தன்னடக்கம் மிகுந்த போகர்


'போகர் ஏழாயிரம்' நூல் இயற்றியதற்கு அருள்புரிந்த அத்தனை சித்த ரிஷிகளுக்கும்   சித்தர் போகர் சரணம் சொல்கிறார். அவர்கள்:
அகஸ்தியர், வரரிஷி, சிவவாக்கியர், நந்தீசர், ரோமரிஷி, மச்சமுனி, தன்வந்திரி, ராமரிஷி, கௌபாலர், சுந்தரானந்தர், தேரையர், பூதனானந்தா, புண்ணாக்கீசர், இடைக்காடர், டமரகானந்தர், தட்சணாயர், அகப்பேய் சித்தர், யாக்கோபு, குறும்பர், ஜோதிமுனி, ஊர்வசியாள், வியாசமுனி, கௌதமர், திருமூலர், காலாங்கி, பாம்பாட்டி, கடுவெளியார், கமலர், கைலாசமுனி, நவகண்டரிஷி, ஜமதக்னி, திரணாக்கியர், அசுவினி தேவர், புஜண்டமகரிஷி, சுகபிரம்மர், கும்பீசர், கருவூரார், கொங்கணர், ஜெயகண்டி, வாலையானந்தர், புலஸ்தியர், சுப்ரமணியர், காலதூதர், இப்படி நவகோடி ரிஷிகளுக்கும் , பதினெண் சித்தருக்கும், நாற்பத்தெட்டு முனிவருக்கும், சரணம் சொல்லியுள்ளார்.
"அத்துணை ரிஷியார்கள் முன்னே பாடிவைத்த நூல் சப்த காண்டமானது பசுங்கிளி முன்னே காக்கை கரையும் சத்தம் போல் இருந்தாலும், புன்னகையுடன் அனேகரும் இந்நூலை படித்து அதில் சினமேதும் கொள்ளாமல், எந்நூலை குற்றம் குறை சொல்லாமல் என்மீது அன்பு கூர்ந்து ஆசிர்வதித்ததற்கு நன்றி. அதனால், என் உடல்-பொருள்-ஆவி எல்லாம் ஒப்பிவித்து கலியுக மக்கள் பிழைக்கவேண்டி நான் சொன்ன பல ரகசியங்கள் வெட்ட வெளிச்சமாச்சு. காலாங்கி கடாட்சத்தினால் பாடிய என் நூலுக்கு சாபமில்லை" என்று சொல்கிறார்.
சாகரத்திற்கு இணையான ஒரு நூலை முதலில் ஏழு லட்சம் பாடல்களோடு எழுதி, அதன் பிறகு அதன் பிரம்மாண்டம் கருதி ஒரு பங்காக சுருக்கி 7000 பாடல்களை ஏழு காண்டகளாக இயற்றினார். இத்தனை மாபெரும் பிரம்மிக்கவைக்கும் பணியை செய்துமுடித்த குருநாதர் போகர், மிகவும் சாதாரண நபராக தன்னை வெளிக்காட்டிய விதம் தெய்வீகமானது... திருமூலர், காலாங்கி மெச்சும் உன்னத பவ்யமான மாணாக்கராகவே இங்கு பரிமளிக்கிறார். அவருக்கு வாய்த்த சீடர் புலிப்பாணியும் ஆசான் மெச்சும் மாணவராகவே திகழ்ந்தார் என்பது பாடல்களில் புலப்படுகிறது.
சீன தத்துவஞானி கன்பூசியஸின் சீடராக லாவோசு என்ற பெயரோடு கிமு4 ல் அவர் இயற்றிய 'தவோதேசிங் 81' Tao te ching பற்றி இன்னொரு பதிவில் காண்போம். இங்கு படத்தில் பார்க்கும் சீன முதியவர் போல் உள்ளார். அரைதூக்கக் கண்களோடு நிர்விகல்ப சமாதி நிலை எப்படி இருக்கும் என்று காண்பித்தார். அவரைப் பார்த்து தரிசித்த அதே முகத்தை இங்கே ஓரளவுக்கு வரைந்துள்ளேன்.
எந்நேரமும் சிந்தையில் வைத்து அவர் பாதங்களை வணங்கி. சித்தர் போகருக்கு சரணம் சொல்லி அமைகிறேன்.

லாவோட்சு (எ) போயாங்


மூத்த சித்தர் (கமலர்) காலாங்கியின் அழைப்பின் பேரில் போகர் சீனம் சென்று அஷ்ட சித்திகளை மேற்கொண்டு உலகம் முழுதும் பயணித்தும் பல காலங்கள் தங்கியும் தன் பணிகளை மேற்கொண்டார் என்பதை கடந்தபோன பதிவுகளில் விரிவாகக்கண்டோம். அங்கு அவர் கூடுவிட்டு கூடுபாய்ந்து ஒரு முதியவ் உடலில் பிரவேசித்தார். திடீரென்று தத்துவம் பேசும் ஒரு முதியவர் யாரென அங்குள்ளோர், அறியாததால் அவரை ‘மூதறிஞர்’ (Laotsu லாவோட்சு) என்று அழைத்தனர். கூடுவிட்டு கூடுபாய்ந்த வேற்று தேகத்தோடு அவர் அங்கு இருந்ததை பரங்கியர் தேசத்தில் பன்னீராயிரம் வருடங்கள் இருந்தேனே என்று கூறியுள்ளார். ஆனால் கூடுவிட்டு பாய்ந்த ரகசியத்தை அவர் எங்கும் நூலில்  வெளிப்படுத்தியதில்லை. சீன வரலாற்றின்படி லாவோட்சு பதிமூன்று பிறவிகள் எடுத்தார் என்றும், ஒவ்வொரு பிறவியும் சுமார் 900 முதல் 1000 வருடங்கள் வரை நீடித்ததாகவும் அறியப்படுகிறது.

அதன்படி பார்த்தால் வேற்று தேசமாம் சீனத்தில் பன்னிரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததை உறுதி செய்கிறார். ஆனால் இப்படி திடீரென அந்த மூப்பு எய்தும் உடலுக்குள் பாய்ந்து சக்தி சக்கரங்களை இயக்கி குண்டலினி தட்டி எழுப்பி சச்சிதானந்தத்தில் லயித்தார். அதனால் தனக்குத்தானே ‘போயாங்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். திடீரென தோன்றியவரை (போகரை) அங்கு பெரிதும் மதித்தனர், லாவோட்சு என்று அழைத்தனர். ஒருபுறம் போகர் ஏழாயிரம் பன்னீராயிரம், ஜெனன சாகரம், கற்பம், என்று பல்வேறு நூல்களை இயற்றினார். இன்னொரு பக்கம், ‘டேங்’ Tang பேரரசில் ஆவணங்கள்  காப்பாளராக பதவி வகித்தும், பல ரசவாத வைத்திய முறைகளையும் இயற்றினார். அவர் காலத்தில் பாதரச உபயோகம் அதிக அளவில் இருந்தது. ஆட்சியின் போக்கு பிடிக்காததால், சுமார் கிமு.5 ல் அவர் சீனம் விட்டு வெளியேறி சீனப்பெருஞ்சுவர் கடந்து மேருமலை நோக்கி பயணித்தார். அங்கு கோட்டை வாயில்காப்பாளர் கேட்டுக்கொண்டபடி இவர் Tao-te ching என்ற 81 தத்துவங்கள் கொண்ட திருக்குறளை சீனமொழியில் வழங்கினார். இதன் பொருள் ‘மார்க்கமும் சக்தியும்’. சீனாவில் Taoism தாவோயிசம் என்ற சமயத்தை நிறுவினார். அதாவது, யின்-யான் என்ற இருவஸ்துக்களான சிவ-சக்தி சுழற்சி தத்துவத்தை இதன் வடிவமாக்கினார்.
Image may contain: 1 person, text 
அவருக்கு குருவாக இருந்தவர் குவாங்கி (எ) குங்ஃபூசு. இவருடைய பெயரைத்தான் கன்பூசியஸ் (Confucius) என்று மேற்கத்திய மக்கள் அழைத்துள்ளனர். சீனாவில் இன்றும் கன்பூசியஸ்- லாவோட்சு கோயில்கள் நிலைத்துள்ளது. சீனாவில் போகர் இருந்த போது போயாங் என்ற பெயரை சூட்டிக்கொண்டத்தை பின்னர் அகஸ்தியர் பூமிதனில் கணநேரம் தங்கா பாலகா, பரங்கியர்தேசத்தில் போகர் என பெயர்க் கொண்டாயே என்று பாராட்டும்போது தை கோடிட்டுக் காட்டியுள்ளார். பிற்காலத்தில் கிபி.2ல் போகர்-அகத்தியரின் சீடரான மகாவதார் பாபாஜி, "தன் குரு போகர் தான் லாவோட்சு" என்று உறுதி செய்தார். சீன வரலாற்றையும், போகர் ச்பத்காண்டத்தையும் ஒப்பிடும்போது லாவோட்சுவின் குரு கன்பூசியசின் வாழ்க்கையும், போகரின் குரு காலங்கியின் வாழ்க்கையும் ஒத்துப்போகிறது. ‘அதிசய சித்தர் போகர்’ மற்றும் ‘போகர் 7௦௦௦: சப்தகாண்டம் ஒரு பார்வை என்ற என் விளக்கவுரை நூல்களில் முன்கதைச் சுருக்கமாக இதைச் சொல்லியுள்ளேன். இனி, போகர் (எ) லாவோட்சு இயற்றிய தாவோதேஜிங் நூலின் குறள் பாடல்களை இங்கே காண்போம்.


- எஸ்.சந்திரசேகர் 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

2-Dimensional Shiva

இரு பரிமாணத்தில் சிவபெருமான்.. 2D closeup.. முன்னும் பின்னும் ஒன்றிலே.. செந்நிறத்தில் சூலத்தை நோக்கி உள்ள ஒரு பரிமாணம், மஞ்சள் நிறத்தில் நம்மை நோக்கி ஒன்று... தோளில் உள்ள பாம்பின் இரு கண்களும் தெளிவாக உள்ளது.. முழு தோற்றத்தில் சிவனின் இடது பாதத்திலிருந்து தலைமுடி பறக்க பார்வதி மெள்ள எழும்புகிறாள்.. ஈசனின் பிரம்மாண்ட சுவரூபத்தின் அடியும் முடியும், உமையாள் சமேதமாய் ஒருங்கே இங்கே கண்டு தரிசித்து விட்டோம். ஓம் நமசிவாய! 


விழித்துள்ள பரம்பொருள்!

இன்று மகாசிவராத்திரி. சிவபெருமானை வணங்கி, இரவு முழுக்க அவரை மனதில் நினைத்து பாடி மகிழ்ந்து ஆசிகள் பெரும் அற்புதமான சக்திமிக்க ராத்திரி. நம்மகி கடந்து சிவனே செல்லலாம், நம் அருகினில் கூட இருக்கலாம். இரவில் உண்ணாமல் ஒரு பொழுது மட்டும் விரதம் இருந்து, இரவு தோறும் தூங்காமல் கண்விழித்து ஈசனை தியானிக்கும் நல்ல சமயம் இது.

நவராத்திரி ஊரெல்லாம் கொண்டாடியது
Image result for mahashivratriநாயகிகள் மூவரின் திருவிழாகண்டது;
சிவராத்திரி ஊரெல்லாம் கண்விழிக்குது
சிவனேன்னு தூக்கம் கண்ணிழுக்குது;
ஒருராத்திரி சிவபுராணம் பாடவிரும்புது
ஒரு ஜாமம் முழிச்சாலே கண் எரியுது;
நடுராத்திரி உன் எண்ணம் வந்தெழுப்பும்
நாயகனே நீயின்றி எனக்கு தனிதுவமேது?
ராத்திரி பகலென ஐந்தொழில் புரிகிறாய்
ரட்சிப்பாய் கண்ணுறங்கும் உன் பக்தனை!