About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 18 ஜூலை, 2018

பொருள் விளங்கா அப்பம்

"சந்துரு! இன்னைக்கு நம்ம வீட்ல சிறுதானியம் போட்டு பலகாரம் புதுசா செய்தோம். டிவில செய்து காட்டினாங்க. சேம்பிள் பாரு" என்றார் நண்பரின் தாய். வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, அவல், அரிசி மாவு எல்லாம் அரைத்துப் போட்டு அப்பம் என்ற பெயரில் ஒன்றை நண்பர் வீட்டில் கொடுத்தார்கள். இதை குழிப் பணியாரம் சட்டியில் போட்டு நெய் ஊற்றி எடுத்தாராம். கன்னங்கரேல் என்று காட்சி தந்தது. சரி, கேழ்வரகு போட்டதால அந்த நிறம் என்று நினைத்தேன்.
அதை ஒரு துண்டு பிய்த்து வாயில் போட்டேன். கோணிப்பை வாசனை வீசியது. அது வேகவில்லை, உள்ளே கட்டி தட்டி இருந்தது. வெல்லம் மிகக் குறைவாக இருந்தது, இந்த திட மாவு எங்கிருந்து வேகும்? ஈரமின்றி வரண்ட இந்த மாவை எப்பவும்போல் வாணலியில் ஊற்றி பொறித்து எடுத்திருந்தால் முகத்தில் பட்டாசு வெடித்திருக்கும்.
"பயப்படாதே! அதிகமா நெய் விடலை. தாராளமா சாப்பிடு" என்றார். அதுதான் பிரச்சனை என்று நினைத்துக் கொண்டேன். அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஒரே ஒரு சிறு அப்பம் மட்டும் உண்டேன். "ஆன்ட்டி, ஒரு டம்பளர் வெந்நீர் மட்டும் குடுங்க போதும். வயிறு நிறைவா இருக்கு" என்றேன். என் நண்பர் "நிஜமாவே, நல்லா இருக்கா?" என்றார். "எப்பவும் சாப்பிடும் அப்பத்தைவிட இது ஒரு மாற்றா இருக்கும். ஆனால் இதை அடிக்கடி நம்ம சாப்பிட முடியாது heavyஆ இருக்கும்.. வயித்துக்கு ஒத்துக்காதே " என்றேன்.
அவர்கள் கஷ்டப்பட்டு உண்டதுபோக மீதியை மறுநாள் புறாவும் காக்கையும் நீரில் போட்டு ஊறவைத்து  நிதானமாகக் கொத்திச் சாப்பிடும் என்று நம்புவோம்.
Image may contain: food

ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஸ்ரீ சிவம்மா தாயி (எ) ராஜம்மாள்

1908 ஆம் ஆண்டு ஷிர்டி சாய்பாபா முதன்முதலில் ஒருவருக்கு காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். யாருக்கு? ராஜம்மா என்கிற 15 வயதான தமிழ் பெண்ணுக்கு. காதில் மந்திரம் உபதேசித்து, அதை இப்பெண் படித்து சரியாக உச்சரிக்க ஏதுவாக ஒரு தாளில் இம்மந்திரத்தை பென்சிலால் எழுதித் தந்தார். எந்த மொழியில்? தமிழில்!
உர்து, அராபி, மராத்தி மட்டுமே பேசும் பாபா அன்றுதான் தமிழும் பேசத்தெரியும் என்பதைக் காட்டினார். ராஜம்மாளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால், பாபா தமிழில் உபதேசித்துள்ளார். அதன்பின் யாருக்கும் காயத்ரி உபதேசித்ததில்லை. பிற்பாடு இவருக்கு 'சிவம்மா தாயி' என்று பாபாவே புதிய பெயர் சூட்டினார். துறவிகளுக்கு உண்டான பல இன்னல்களையும் சோதனைகளையும் இவர் சந்தித்தார். கணவர் இவரை விட்டுப் பிரிந்து போய் வேறொரு மணம் செய்துகொண்டார்.
தன் ஒரே மகனோடு பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். மகன் காவல் துறையில் அக்காலத்தில் பணிபுரிந்தது சாலை விபத்தில் மாண்டுபோனார். அதோடு சிவம்மா தாயிக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது. பெங்களூரின் புறநகர் பகுதியான மடிவளாவில் சுடுகாடு ஓரமாக ஒரு மரத்தடியில் தங்கி, யார் உணவு கொடுத்தாலும் வாங்கி உண்டு வந்தார். எப்போதும் தவத்தில் இருந்தார். அவர் நிலைக்கண்டு யாரோ ஒருவர் அப்பகுதியில் தன் கால் கிரவுண்ட் நிலத்தை இவர் பெயருக்கு எழுதிக் கொடுத்தார். முகம் தெரியாத யாரோ இவர் பெயரில் எழுதித்தர அவசியமில்லை. அதற்கு சாயிதான் காரணம். சக்தி குரூப்ஸின் பொள்ளாச்சி மகாலிங்கம் இந்த சிவம்மா தாயிக்கு தூரத்து உறவு என்று பிறகு தெரியவந்தது.
பக்தர்கள் தரும் காசைக்கொண்டு மடிவளாவில் குடில் அமைத்து பிற்பாடு அங்கேயே சாயி ஆலயத்தைக் கட்டினார். ஷிர்டி பாபா சமாதி ஆனபிறகும்கூட சூட்சும ரூபமாக இவருடன் தினமும் அந்த ஆலயத்தில் பேசினார். சாயி சிலைக்கு அடியில் பூமியில் ஒரு குழி தோண்டி, அங்கேயே அமர்ந்து தவம் இருக்கத் தொடங்கினாராம். நவம்பர் 1994 ஆம் ஆண்டு தன்னுடைய 105வது வயதில் சிவம்மா சமாதி ஆனார். அற்புத சாயி லீலைகளுக்கு முடிவில்லை!

திங்கள், 9 ஜூலை, 2018

எத்தனை மனிதர்கள்!

Image may contain: 2 people, text

சிவ வெண்பா மாலை

Image may contain: 2 peopleவடமொழி சிவனின் ரவிகலை வாசியென
திடமொழி உரைத்த சித்தனைத்தூற்றி - உமை
முகத்துத் தீந்தமிழே வாழ்கிறதெனப் பகரும்
யுகத்தினோர் சுமப்பர் பழி

சிவனின் வாசியாம் வடமொழி இறந்ததென 
எவனின் இகழுரை நிலைக்குமோ - அஃதவன்
மறுமை சொல்லொணா தீவினைத் தரும்
வறுமை யகலாப் பிணி  
மந்திரம் வழுவாமல் குரவர்கள் பேணினர்
தந்திரம் நினைத்தனர் பகுத்தறிவாளர் - கடும்
பாபங்கள் ஈட்டத் துணிந்த நாவினால்
சாபங்க ளேற்றார்வினை
எங்கெங்கு காணினும் நிந்தனை நொந்தனை
பங்கனை நித்தம் வசைப்பாடுவார் - பித்தம்
தெளிந்தால் நற்கதி பெறுவார் பெறார்
களிப்பில் மூழ்கியோர் கதி
வேதியரே பிரம்மம் காக்கும் பிராமணரே
வேதிக்குமே ஊழ்வினை பிம்பங்கள் - இறை
கோணாது மறையைக் காத்திட்டு நின்றீறேல்
பேணாமல் போகாது நெறி
*  *   *  *  *
சமஸ்கிருதமா? தமிழா? எது மூத்தமொழி என்று இன்றுவரை முட்டி மோதிக்கொள்ளும் தமிழ் நேசர்கள் நலனுக்காக இப்பதிவு. தமிழ் சித்தர்களின் நூல்கள் பலவற்றை ஆய்வுசெய்தேன். மூத்த சித்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தைத்தான் சொல்லியுள்ளனர். அதில் ஒரு சான்று:
சிவந்தானும் வடமொழியில் வாத மார்க்கம்
சிறப்பாக இருலட்சங் கிரந்தந் தன்னைக்
கவந்ததுமைந் தாம்வேத த்திற் சொன்னார்
கருணைபெற உமையவளும் தமிழாய்ச் செய்து
பவத்தானும் நந்திக்குச் சொன்ன போது
பார்த்தவரும் நந்திதன்வந் திக்குச் சொன்னார்
தவந்தானும் தன்வந்திரி அசுவ னிக்குத்
தகைபெறவே அசுவனியும் விசுவனிக்கு
சொன்னதொரு விசுவனியும் அகத்தி யர்க்குச்
...
சிவன் வடமொழியில் எல்லா சூத்திரங்களையும் உமையவளுக்குச் சொல்ல, அதை உமையாள் கருணையோடு அருந்தமிழில் நந்திக்குச் சொல்ல, நந்தி தன்வந்திரிக்கும், தன்வந்திரி அசுவனிக்கு, அசுவனி விசுவனிக்கு, விசுவனி அகத்தியர்க்கு, அகத்தியர் புலத்தியர்க்கு என இப்படியே சித்தமரபில் வைத்திய சூத்திரங்கள் வந்துள்ளது என்று இப்பாடல் சொல்கிறது. சிவனின்றி சக்தி இல்லை. இரு மொழிகளும் ஈசனின் இரு கண்கள். இப்பாடலில் வடமொழிக்கும் தமிழுக்கும் முக்கியத்துவ பேதம் உள்ளதா? சிவனுடைய வாசியின் இரு கலைகளாக உதித்த ஆதி மொழிகள்தான் இவை
தெய்வீக மொழிகளின் அடி-முடி காண தொல்லியல் துறையின் குப்பைமேட்டை கிளறக்கூடாது. சித்த ரிஷிகளும் சமயக் குரவர்களும் பல லட்ச பாடல்களில் உணர்த்தியதை நாம் ஆத்திரமின்றி அக்கறையுடன் செவிமடுத்துக் கேட்கவேண்டும். இரு மொழிகளையும் நிந்தனை செய்தால் அது ஈசனையே பழித்த பெரும்பாவம்!

சனி, 7 ஜூலை, 2018

சித்தநூல் கொடையாளர்கள்

இதற்குமுன் பழைய பதிவில் ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளேன். மேருவில் தான் படித்த பலகோடி வடமொழி/தமிழ் நூல்களில் ஒரு பங்கு கலியுக மனிதர்கள் கைக்குக் கிடைத்தால் அது ஈசனின் உபயம் என்றார் போகர். அப்படியே நூல்கள் இருந்தாலும் அது விதியாளியின் கைக்கு மட்டுமே சென்றடையும் என்கிறார்.
எப்போதோ எழுதிய நூல்களில் என்ன கடினமான மொழியும் எழுத்து வடிவமும் இருந்ததோ, அதை இக்காலத்திற்கேற்ப மாற்றி செப்பனிட்டு நூல்களைக் காத்துவைத்து தக்க நேரத்தில் மாண்பர்கள் பயனுற நூல்களை பொது நோக்கத்திற்காக கொடுப்பவர்கள் யார்? அவர்கள் சித்தர்களாகவோ, சித்த பிரதிநிதிகளாகவோ இருக்க வாய்ப்புண்டு. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் திடீர் திடீரென வைத்திய நூல்கள் வந்து சேர்கிறது. எல்லாமே ஆய்வு செய்து அச்சிடும் தரத்தில் நல்ல முறையில் உள்ளது.
நூலக கேட்டலாகில் இடம்பெறாத முதல்முறை வரும் அதிசய நூல்களும் உண்டு. சிவ சூட்சுமம் விளங்காமல் இருக்கவேண்டி, சில கட்டில் ஓலைகளில் சில சொற்கள் பகுதி சிதைந்து தூளாகி இருக்கும். ஆனால் பொருளில் பெரிதாக பாதிப்பு இல்லாமல் இருக்கும். சிலவற்றில் ஓலைகள் முன்பின் மாறி இருக்கும். பாடல்களின் அந்தம் ஆதி சொற்களை வைத்து ஓலைகளை வரிசைப் படுத்திவிடலாம்.
இவ்வாறு காலத்துக்கு தகுந்தபடி ஈசன் மின்னூல் ஸ்கேனிங் தரத்திற்கு நூல்களை அளிக்கிறான். பகுத்தறிவு பேசும் தமிழர்களுக்கு இதெல்லாம் திகில் விஷயமாகவே இருக்கும். ஆக, எந்த நூலை எப்போது சுற்றில் விடவேண்டும், எதை திடீரென சுற்றிலிருந்து மறைக்கவேண்டும் என்பதை அருளல், மறைத்தல் என்பதாகச் செய்து வருகிறான். இந்நேரம் நூல்கள் எப்படி இக்கால மொழி நடையில் வருகிறது என்ற ரகசியத்தை அறிந்திருப்பீர்கள். ஓம் நமசிவாய.

No automatic alt text available.

வெள்ளி, 6 ஜூலை, 2018

சிவா, வேதம் 'புது எடிஷன்' போடலியா?

Rig Vedic Period (2005 B.C. - 1500 B.C.)
Post Vedic Period (500 B.C. - 1100 A.D.)
Muslim Period (1100 A.D. - 1700 A.D.)
British Period (1700 A.D. - 1947 A.D.)
வேதங்கள் ஆதியிலிருந்தே உள்ளதை சரித்திர ஆய்வாளர்கள் மறந்து விடுவார்கள். ஏன்? சமய நூல்களில் சொல்லப்பட்ட உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் பூமியைத் தோண்டிப்பார்த்து தொல்லியல் சொல்லும் சாட்சியம் இருந்தாலே ஏற்கப்படும். அதுவரை பாரத தேசத்தில் எல்லாமே சிறப்பாக இயங்கியவை ஆங்கிலேயர்கள் வந்தபின் மாறியது. அவர்கள் எழுதுவதே நம் சரித்திரம். 'நாங்கள் சொல்லும் வருடத்திலிருந்து உங்களுடைய வேதகாலத்தை கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்' என்ற சொல்லியுள்ளான். அவன் சொன்னதே Stone/Iron/ Bronze Age காலங்கள். அவன் சொன்னபடியே இதுவரை நாமும் வரலாறு பாடங்கள் படித்து முடித்தோம். நம் தென்னகத்தில் தலைத்தூக்கிய பகுத்தறிவு /நாத்திக பேரலை, ஆங்கிலேயனுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
இன்றைக்கு கலியாண்டு 5119 முடிந்துள்ளது. கலியுகம் தொடங்கி ஆயிரம் வருடங்கள் கழித்தே வேத காலம் தொடங்கியது என்று வரலாறு பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். டிசம்பர் 31 - ஜனவரி 1 தேதிகளுக்கு இடையே ஏதுமில்லாத சூனிய தினம் இருக்கிறதா? இல்லை. அதுபோல்தான் முந்தய யுகத்திற்கும் கலியுகதிற்கும் தொடர்ச்சி வரும். மனித அவதாரமாக வந்த கடவுளும் குருகுலத்தில் வேதம் படித்தனர். 'வேதங்களில் நான் சாம வேதம்' என்கிறார் கிருஷ்ணர், 'வசிஷ்டர் இராமனுக்கு வேதம் கற்பித்தார்' என்று நாம் அறிவோம். இலங்கேஸ்வரன் இராவணன் 'சதுர்வேதி' என்பதும் தெரியும். ஆக, கடந்த யுகங்களிலும் வேதங்கள் இருந்துள்ளது. அவ்வளவு ஏன்? விஷ்ணுவின் முதலாம் மச்சவதாரமே வேதங்களைக் காக்க வந்த அவதாரம். இப்படி இருக்கும்போது, வேதகாலம் தொடங்கியே இன்றைக்கு வெறும் 4000 ஆண்டுகள்தான் ஆகிறதா? நம்முடைய தொன்மையை தனித்துவத்தோடு காட்டமுடியாமல் செய்தது யார்?
Image result for வேத வியாசர்அநேகமாக, உபநிஷத்து, சம்ஹிதை மற்றும் புராணங்களை இந்த ஆசாமிகள் வேதங்கள் என்று நினைத்துக்கொண்டு அப்படிச் சொல்லியிருக்கலாம். ஸ்ம்ருதிகளை யார் எழுதுவார்கள்? ஒவ்வொரு துவாபர யுகம் முடியும்முன் வேத வியாசர் தலைமையில் ரிஷிகளுக்கு நூல்களை தொகுக்கும் பணிகள் கொடுக்கப்படும். இதை யார் முடுக்கி விடுவது? சிவ பெருமான். சென்ற மகாயுகத்தில் வந்த கலியுகத்திலும் இதுபோல் தேதிகளை மாற்றிப் போட்டு குளறுபடிகள் நடந்திருக்குமா? இருக்கலாம். இவ்வாறு நடப்பது கால விதி. நூல் பாடத்திட்டத்தை செப்பனிட்டு சரிசெய்வது வேத வியாசரின் வேலை. இப்போதுள்ள உபநிஷத்து மற்றும் புராணங்கள் அடுத்த மகாயுக சுற்றில் (43 லட்ச வருடங்கள் கழித்து) வரும் துவாபர யுகத்தில் செப்பனிடப்படும். அப்போதும் ஒரு வேத வியாசர் வருவார்.
இத்தனை தொன்மையான பாரம்பரியம் கொண்ட நாம், வடமொழி தென்மொழி என்று அடித்துக் கொள்ள புறப்பட்ட காலம்முதல் எல்லாமே மாறிவிட்டது. கோடி யுகங்கள் வாழ்ந்து மறைகளைப் போற்றிய மூத்த தமிழ் சித்தர்களே கவலைப்படாத மொழி விஷயமானது ஏன் ஒரு நூற்றாண்டாக ஊதி பிரச்சனை ஆனது? சிவபெருமானுக்கும் validity date கொடுக்கும் காலத்தில் உள்ளோம். அதுவும் கலியுக லட்சணத்தில் ஒன்று.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

கறைபடிந்த கரமா?

அரசு வேலையில் சௌகரியமாக இருந்து ஊதியம் பெறுவதால், தனியாக கையூட்டு பெற உங்களுக்கு அவசியமிருக்காது. அதில் விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் துறையில் லஞ்சம்/ கிம்பளம் புரளும் தொகையில் வலுக்கட்டாயமாக ஒரு பங்கு உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். 'நான் நியாயவாதி, யோக்கியஸ்தன்.. வாங்க மாட்டேன்' என்று உங்களால் சொல்ல முடியாத நிலை. ஆனால் பாவப்பணத்தை பெற நிர்பந்திக்கப் படுவீர்கள்.
Image may contain: one or more peopleஅவ்வாறு உங்களுக்கு வரும் பணத்தை தனியே உங்கள் கணவர்/ மனைவி/பிள்ளை பெயரில் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு திறந்து அதில் போட்டு வாருங்கள். அதிலிருந்து ஒரு பைசாகூட அவசரத்திற்கோ சபலப்பட்டோ தொட்டுவிடாதீர்கள். அக்கணக்கில் வரும் வட்டி முதல்கொண்டு அதை எல்லாம் அவ்வப்போது சிவ ஆலயங்களுக்கு, உழவாரப் பணிகளுக்கு, ஏழைகளின் கல்விக்கு மருத்துவத்திற்கு நிதியுதவி செய்துவிடுங்கள். அப்படி செய்து அதன்மூலம் வரும் வருமானவரி விலக்கு 80G சான்றிதழை உங்கள் IT தாக்கலில் பயன்படுத்தி விடாதீர்கள். வங்கிக் கணக்கு திறப்பது விவகாரமான விஷயம் என்று நினைத்தால், அவ்வப்போது வரும் பணத்தை ஒரு ரூபாய் பாக்கியின்றி மேற்கண்ட வழியில் பைசல் செய்யுங்கள்.
காசு வாங்கியும் கறைபடாத கரத்தோடு அச்சமின்றி மனசாட்சிக்கு விரோதமின்றி உலா வரலாம். மேலே சொன்னபடி செய்யாமல் புறம்பாக நடந்தால் உங்கள் மகளின் மணவாழ்க்கை சீரழியும், கரு தங்காது, விதவை ஆகலாம், உடல்நலமே கெடும். உங்கள் மகன் தறுதலையாகி, குடித்து சீரழிந்து, குடும்பச் சொத்தை சூதாடி இழந்து, உங்கள் வம்சமே இல்லாது செய்வான். உங்களுக்கு ஆயுள் முடியும் முன் அத்தனை தொகையும் உங்கள் மருத்துவத்திற்கு செலவு செய்தும் பலன் தராது. கடைசி காலத்தில் பிராயச்சித்தம் செய்தால் எந்த பலனுமிருக்காது.
என்னோடு வாங்கிய இன்னொருவன் நன்றாகத்தான் இருக்கிறான், நான் ஏன் கொடை தரணும்? என்று கேட்கலாம். அவனுடைய கோள் சஞ்சாரம் அவனை தண்டிக்க சமயம் பார்த்து காத்திருக்கும். நேரடியாக அவனுக்கே அடி கிடைக்க வேண்டும் என்றில்லை, அவனை சார்ந்த ரத்த உறவுகளுக்கு தலையில் இடி இறங்கும். இவன் ஊனமாகி நிற்கதியாவான். காசு பணம் இருந்தும் அது அவனுக்கு உதவாது. இவன் கழுத்தை அறுத்து சொத்து-பணம் கொள்ளையடிக்க இன்னொருவன் வருவான். இதுதான் கீதாச்சாரம்! இப்படியே பாவத்தின் தொடர் ஓட்டம் நடக்கும்.
இதை நான் எதோ ஒப்புக்குக் கதை விடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். போகக்கூடாத அதர்ம வழியை பின்பற்றி சொகுசாக வாழ்ந்து வளர்ந்து ஒரு தலைமுறைக்குள் புல்பூண்டு சுவடின்றி என் கண்முன் அழிந்து போன ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்த்தேன், இதைப் பதிவிட்டேன்.

அழிவை நோக்கி

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் கவுத்திமலை, வேடியப்பன்மலை, கஞ்சமலை பகுதிகளில் medium-low கிரேட் Magnetite இரும்பு தாது கனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எல்லா மலைகளையும் சேர்த்து சுமார் 110 கோடி டன் கனிமங்கள் வரும். டிட்கோ-ஜிண்டால் கூட்டு புராஜக்ட்டில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் இரும்பு உருக்காலை வரும் திட்டத்திற்கு அனைத்து நிலங்களையும் 8-வழி சாலைக்காக கையகப்படுத்தும் திட்டம் வீரியத்துடன் போகிறது.
இந்த மலைகளில் குறிப்பாக கஞ்சமலை பற்றி போகர் என்ன சொல்லியுள்ளார்? அனுமதியுடன் தைரியமாகக் களவாட அதில் கைவைத்தால் என்னவாகும்? அஷ்டமச் சனியன் வந்து பீடிக்கும். யாரை? மன்னனை. அதனால் மக்களும் அவதியுறுவர். இரும்பைத் தங்கமாக்கும் ரசவாத மூலிகைகள் நிறைந்தமலைதான் கஞ்சம் (பொன்) நிறைந்த இம்மலை. அக்காலத்தில் சித்தர்கள் வேண்டிய அளவில் தங்கத்தை செய்து சிலை வடிக்க கோயில்களுக்கு அனுப்பினர். "பார்த்திட்டு விழிகொண்டு கஞ்சமலை சித்தர் பத்துயுகம் ஆருடச் சமாதியிலே நின்றார்."
இரும்பு ஏற்றுமதி செய்ய பெரிய கனரக வாகனங்கள் போக ரோடு நல்லா இருக்கணுமே? அதுக்குத்தான் போலிருக்கு. அந்த சித்தேஸ்வரனுக்கே வெளிச்சம்!
கண்ணெதிரே காலங்காலமாய் தங்கள் வயல் நிலங்களில் பயிரிட்டு ஜீவனம் நடத்தி வரும் மக்களை வாட்டி வதைப்பது நல்லதல்ல. புதிதாக வரவுள்ள இரும்பாலையின் தயாரிப்புகள் ஏற்றுமதியாக சிறப்பான 8 வழி பாதை அமைத்திட வேண்டி, உச்சக்கட்ட செயலாக விவசாய ஜீவாதாரம் அழிக்கப்படும் நிலை வந்துவிட்டது. பலகோடி ரூபாய் தருகிறோம், பலவந்தமாக விற்றாக வேண்டும் என்றாலும் பின்னாளில் அந்த நஷ்டயீடை பிடுங்கிக் கொள்ள வங்கியில் புதுவிதமாக உச்சவரம்பும் வருமானவரியும் வரலாம். யாம் அறியோம்!
ஆக, இயற்கை வளத்தை அழித்தே பொருளாதார முன்னேற்றம் வரவேண்டும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. பண்ணை நிலத்திலிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தும் படகாட்சியைப் பார்க்க மனம் கனக்கும். உயர்நிலையில் பொருளியல் பேசி, ஆன்மிகம் வளர்த்து, மக்களைக் காக்கிறோம் என்று சொல்லி கலியுகத்தில் அதர்மத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசின் தலைமையை சபிக்கத்தான் மனம் நினைக்கும்.
மக்களின் விளை நிலங்களும், சித்தர்களின் சமாதி மலைகளும் அழிவை நோக்கிச் செல்கிறது. மக்கள் யாரிடமும் புகார் செய்ய முடியாது. ஆனால் சித்தர்கள் அகத்தியரிடம் புகார் செய்வார்கள். குள்ளமுனி என்ன செய்து விடுவான் என்ற நினைப்பில் மத்திய/ மாநில அரசுகள் உள்ளதோ? அகத்தியர் என்ன செய்வார்? செவி மடுத்துக் கேளாமல் நிஷ்டூரியமாக செயல்படும் இவர்களை கிழித்துப் போடுவார்.
போகர் ஐந்தாம் காண்டத்தில் ஒரு பாடல் (பா:4213).
"முறையான சித்துமுனி ரிஷிகள்தாமும்
மூர்க்கமுடன் ஓடிவந்து அகஸ்தியர்முன்னே
குறையான சித்தர்முனி ரிஷிகள்தாமும்
குடியிருக்க எங்களுக்கு இடமில்லைதாமே
சாமான மலைகளெல்லாந் தங்கமானால்
தாரிணியில் ஒருவருக்கோர் மரிப்போருண்டோ
நாமான வாகவல்லோ கூறிவிட்டோம்
நாதாந்த சித்தொளிவைக் காப்பீர்தாமே
"


நில அளவு எல்லைக்கல் நடும் பணி நடக்கிறது. அரசை எதிர்த்துப் போராட முடியாத விவசாய மக்களின் நிலையைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. நம்பி வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசு. இங்கே உள்ள படம் ஆயிரம் உணர்வுகளைச் சொல்லும். எனக்கு சொந்தமாக ஒரு சதுரடி விளை நிலம்கூட இல்லை என்றாலும், நான் ஜீவிக்கும் நிலங்களே பறிபோவதாக ஆழ்மனதில் பாதிப்பின் வலியை உணர்கிறேன். இது கோபத்தின் கனலை கவிதையாக வெளிப்படுத்துகிறது. எப்போதும் ஒரு நடுநிலை பார்வையாளனாக இருக்கும் நான் இப்படியொரு அசாதாரணமான மனநிலையில் இருந்ததில்லை.
"அயம்தோண்டி வழிதேடி அழிக்கும் நினைப்பை
குயம்தோண்டி அடிபணிய சுருக்கும் வினைப்பை
பயம்தோண்டி மூடும்வழி நினைக்கும் மனப்பை
சுயம்தோண்டி பாராக்கால் வழியழியும் கருப்பை
."

வெள்ளி, 29 ஜூன், 2018

உச்சரிப்பு 'ஸ்பஷ்டம்'

வேதம் ஓதுவதில் வடக்கிந்திய வேதியர்களைவிட தென்னிந்திய வேதியர்களே சிறப்பாக உச்சரிப்பு செய்கிறார்கள். எல்லா பிராந்தியங்களிலும் முதல்கட்ட சங்கல்பம் அவரவர் மொழியில் விளக்கிவிட்டு பிறகு, முழு மந்திரங்களை சமஸ்கிருதத்தில் சொல்வதுதான் பாரதம் முழுக்க வழக்கத்தில் உள்ளது.
நம்மைவிட அவர்களுக்குத்தான் உச்சரிப்பு வரும் என்று நாம் நினைப்போம், ஆனால் தென்னகத்தினர் குறிப்பாக தமிழ் வேதியர்கள் மட்டுமே வேத மந்திரகங்களை கனம் பாடுவதுபோல் சிரத்தையுடன் செய்கிறார்கள். சமஸ்கிருதம் என்பது தென்னகர்களுக்குத்தான் போல என்று அவர்கள் நினைப்பதும், வடமொழி நமக்கானதில்லை என்று நாம் நினைப்பதும் உண்டு. அப்படி என்றால் ஈசன் யாருக்காக இதைப் படைத்தான்? எப்படி இந்த அட்சர சுத்தம் தமிழ் வேதியர்களுக்கு வந்தது?
தமிழும் கூடுதலாக பேசுவதால், எந்த மொழியில் எந்த எழுத்தின் உச்சரிப்பும் நமக்கு வராமல் போகாது. இங்குதான் வடகிந்திய வேதியர்களின் ஓதும் திறன் குறைபடும். இரண்டு கண்களும் தெளிவாக இருந்தால்தானே பூரணத்துவம் கிடைக்கும்? அதுபோல்தான் நம் இருமொழிகளின் கலைகளும், சுவாசமும்.
இருமொழிகளும் படைக்கப்பட்டதன் உன்னத காரணமே இதற்குத்தான். ஆனால் துவேஷம் வெளிப்படுத்திக்கொண்டு சேற்றைவாரி வீசுவதை யாரும் உணர்ந்ததில்லை. அதனால்தான் சமஸ்கிருதம் என்ற மொழிக்கு எழுத்துவடிவம் இருந்தும் அதை அற்ப மனிதர்களுக்கு ஈசன் வெளிப்படுத்தவில்லை. அதை யாருக்குக் காட்டினான்?
அகத்தியர் திருமூலர் போகர் முதலான சித்த ரிஷிகளுக்கு அவனே கற்பித்து அருளினான். ஆனால் மனிதர்களுக்கு அதை காட்டாமல், சப்த மந்திரமே போதும் என்று விட்டுவிட்டான். இதனால்தான் சமஸ்கிருதத்தை அவரவர் மொழியில் இன்றுவரை எழுதி வருகிறோம். இன்னும் எத்தனைக் காலங்கள் ஆனாலும் அசோகர் காலத்து குப்பையைத் தோண்டினாலும் மூல வடிவம் புலப்படாது. குருடர்கள் யானையின் வடிவத்தைக் கண்டுக்கொண்டதைப் போலத்தான் அவரவர் போக்கில் மொழியைப் பற்றி விமர்சனம் எழும்.
இது போதாதென்று ஐரோப்பிய பாதிரிகள் ஆரியர்-திராவிடர் என்று ஒரு கற்பனைக் கதையை எடுத்துக்கொண்டுவந்து "நாங்கள் சொன்னபடி உங்கள் வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனான். ஆரியர் என்ற தனி இனம் கூரியரில் அயல் தேசத்தில்ருந்து வந்ததை இவன் பார்த்தானாம். ஆரியம் / ஆரியன் என்பதன் உண்மைப் பொருளை திருமந்திரம்/ திருவாசகம் உரைக்கிறது. சைவ சமய நூல்களை புறந்தள்ளி வெறும் தொல்லியல் வழியில் தேடினால் நூற்றாண்டுகளானாலும் ஏதும் கிடைக்காது. இத்தோடு லத்தீன், எபிரேயம், அராமி 'தொன் மொழிகள்' பதாகை வைத்துக்கொண்டு கோஷம் போடும்.
அப்படிப் பார்த்தால் வேத ஆரியரே தமிழர்தான்! எகிப்து, ரோம், சிரியா, மெக்சிகோ, சீனா, துவாரகையில் கிடைத்த அதே பானையோடு பிரம்மி எழுத்துக்கள்தான் கீழடியில் கிடைத்தது. ரிஷிப் பிரதேசமாம் ருஷ்யம்தான் ஆரிய வேதபூமி என்றால் அங்கும் அதே தமிழைத்தான் பேசினார்கள். இக்கூற்றை நம்மவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நாம் இன்றைக்கு தமிழ்ப் பேசி சம்ஸ்கிருத மந்திரமும் சொல்வதுபோல் தான் அன்றைக்கு அவர்களும் செய்தனர். பிற்பாடு பல மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்து, சொற்களை கடன்வாங்கி உலகம் முழுக்க எப்படியோ பரவி வளர்ந்தது, நான் பெரியவனா நீ பெரியவனா என்று மோதி நிற்கிறது. ஆரியர் எனப்படும் தமிழர்கள் எல்லோரும் ஆப்கானிஸ்தான், ரஷியா, ஈராக் தேசத்திலிருந்து இங்கே படையெடுத்து வந்திருந்தாலும் ஒரு தவறுமில்லை!
இங்கே மூவேந்தர்கள் போரிடலாம், கங்கையைத் தாண்டி இமயம்வரை சென்று வெற்றிக் கொடி நடலாம். இவன் அவனுடைய ராஜ்ஜியத்தை பேராசைக்கொண்டு அபகரிக்கலாம். ஆனால் ஆரிய தேசத்து தமிழன் இங்கே வந்து படை எடுத்தால் அது ஆரிய படையெடுப்பாம். தமிழனுக்கும் வேதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று இருந்துவிட்டதுதான் இதற்குக் காரணம். சப்த சாகரங்களைக் கடந்து போய் போகர் பலகாலங்கள் அங்கெல்லாம் தங்கி நாகரிகத்தையும் வழிபாடு / பஞ்சாங்க நெறிகளையும் முறைப்படுத்தியவர். நான் சொல்வது பலருக்கு வியப்பாக இருக்கும். கோபம்கூட வரும். மொழி சச்சரவுகள் தீரும்வரை சமஸ்கிருத 'தேவமொழி' வடிவம் மனித கண்களுக்குப் புலப்படாமல் இருக்கட்டும்.

No automatic alt text available.

ஞாயிறு, 24 ஜூன், 2018

அம்மையே!

காரைக்கால் அம்மையாருக்கு ஈசன் மாங்கனி அளித்த நிகழ்வுதான் 'மாங்கனித் திருவிழா'.
நாயன்மாரென பெயர்பெற்ற புனிதவதியே
ஆலங்காட்டில் சிவதாண்டவம் கண்டாயே
திருச்சிற்றம்பலத்தான் விளித்த அம்மையே
அற்புதத் திருவந்தாதி தந்த மணிமாலையே
பேய் உருக்கொண்ட நற்பெரும் தெய்வமே
தலையே பாதமென கயிலை விரைந்தவளே
ஈசன் திருவடியில் நிலைத்து அமர்ந்தவளே
மாங்கனி பெற்ற உன்னடியைத் தொழுதேன்!

Image may contain: 2 people, people smiling, crowd