அரசு வேலையில் சௌகரியமாக இருந்து ஊதியம் பெறுவதால், தனியாக கையூட்டு பெற உங்களுக்கு அவசியமிருக்காது. அதில் விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் துறையில் லஞ்சம்/ கிம்பளம் புரளும் தொகையில் வலுக்கட்டாயமாக ஒரு பங்கு உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். 'நான் நியாயவாதி, யோக்கியஸ்தன்.. வாங்க மாட்டேன்' என்று உங்களால் சொல்ல முடியாத நிலை. ஆனால் பாவப்பணத்தை பெற நிர்பந்திக்கப் படுவீர்கள்.
அவ்வாறு உங்களுக்கு வரும் பணத்தை தனியே உங்கள் கணவர்/ மனைவி/பிள்ளை பெயரில் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு திறந்து அதில் போட்டு வாருங்கள். அதிலிருந்து ஒரு பைசாகூட அவசரத்திற்கோ சபலப்பட்டோ தொட்டுவிடாதீர்கள். அக்கணக்கில் வரும் வட்டி முதல்கொண்டு அதை எல்லாம் அவ்வப்போது சிவ ஆலயங்களுக்கு, உழவாரப் பணிகளுக்கு, ஏழைகளின் கல்விக்கு மருத்துவத்திற்கு நிதியுதவி செய்துவிடுங்கள். அப்படி செய்து அதன்மூலம் வரும் வருமானவரி விலக்கு 80G சான்றிதழை உங்கள் IT தாக்கலில் பயன்படுத்தி விடாதீர்கள். வங்கிக் கணக்கு திறப்பது விவகாரமான விஷயம் என்று நினைத்தால், அவ்வப்போது வரும் பணத்தை ஒரு ரூபாய் பாக்கியின்றி மேற்கண்ட வழியில் பைசல் செய்யுங்கள்.
காசு வாங்கியும் கறைபடாத கரத்தோடு அச்சமின்றி மனசாட்சிக்கு விரோதமின்றி உலா வரலாம். மேலே சொன்னபடி செய்யாமல் புறம்பாக நடந்தால் உங்கள் மகளின் மணவாழ்க்கை சீரழியும், கரு தங்காது, விதவை ஆகலாம், உடல்நலமே கெடும். உங்கள் மகன் தறுதலையாகி, குடித்து சீரழிந்து, குடும்பச் சொத்தை சூதாடி இழந்து, உங்கள் வம்சமே இல்லாது செய்வான். உங்களுக்கு ஆயுள் முடியும் முன் அத்தனை தொகையும் உங்கள் மருத்துவத்திற்கு செலவு செய்தும் பலன் தராது. கடைசி காலத்தில் பிராயச்சித்தம் செய்தால் எந்த பலனுமிருக்காது.
என்னோடு வாங்கிய இன்னொருவன் நன்றாகத்தான் இருக்கிறான், நான் ஏன் கொடை தரணும்? என்று கேட்கலாம். அவனுடைய கோள் சஞ்சாரம் அவனை தண்டிக்க சமயம் பார்த்து காத்திருக்கும். நேரடியாக அவனுக்கே அடி கிடைக்க வேண்டும் என்றில்லை, அவனை சார்ந்த ரத்த உறவுகளுக்கு தலையில் இடி இறங்கும். இவன் ஊனமாகி நிற்கதியாவான். காசு பணம் இருந்தும் அது அவனுக்கு உதவாது. இவன் கழுத்தை அறுத்து சொத்து-பணம் கொள்ளையடிக்க இன்னொருவன் வருவான். இதுதான் கீதாச்சாரம்! இப்படியே பாவத்தின் தொடர் ஓட்டம் நடக்கும்.
இதை நான் எதோ ஒப்புக்குக் கதை விடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். போகக்கூடாத அதர்ம வழியை பின்பற்றி சொகுசாக வாழ்ந்து வளர்ந்து ஒரு தலைமுறைக்குள் புல்பூண்டு சுவடின்றி என் கண்முன் அழிந்து போன ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்த்தேன், இதைப் பதிவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக