About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

அழிவை நோக்கி

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் கவுத்திமலை, வேடியப்பன்மலை, கஞ்சமலை பகுதிகளில் medium-low கிரேட் Magnetite இரும்பு தாது கனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எல்லா மலைகளையும் சேர்த்து சுமார் 110 கோடி டன் கனிமங்கள் வரும். டிட்கோ-ஜிண்டால் கூட்டு புராஜக்ட்டில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் இரும்பு உருக்காலை வரும் திட்டத்திற்கு அனைத்து நிலங்களையும் 8-வழி சாலைக்காக கையகப்படுத்தும் திட்டம் வீரியத்துடன் போகிறது.
இந்த மலைகளில் குறிப்பாக கஞ்சமலை பற்றி போகர் என்ன சொல்லியுள்ளார்? அனுமதியுடன் தைரியமாகக் களவாட அதில் கைவைத்தால் என்னவாகும்? அஷ்டமச் சனியன் வந்து பீடிக்கும். யாரை? மன்னனை. அதனால் மக்களும் அவதியுறுவர். இரும்பைத் தங்கமாக்கும் ரசவாத மூலிகைகள் நிறைந்தமலைதான் கஞ்சம் (பொன்) நிறைந்த இம்மலை. அக்காலத்தில் சித்தர்கள் வேண்டிய அளவில் தங்கத்தை செய்து சிலை வடிக்க கோயில்களுக்கு அனுப்பினர். "பார்த்திட்டு விழிகொண்டு கஞ்சமலை சித்தர் பத்துயுகம் ஆருடச் சமாதியிலே நின்றார்."
இரும்பு ஏற்றுமதி செய்ய பெரிய கனரக வாகனங்கள் போக ரோடு நல்லா இருக்கணுமே? அதுக்குத்தான் போலிருக்கு. அந்த சித்தேஸ்வரனுக்கே வெளிச்சம்!
கண்ணெதிரே காலங்காலமாய் தங்கள் வயல் நிலங்களில் பயிரிட்டு ஜீவனம் நடத்தி வரும் மக்களை வாட்டி வதைப்பது நல்லதல்ல. புதிதாக வரவுள்ள இரும்பாலையின் தயாரிப்புகள் ஏற்றுமதியாக சிறப்பான 8 வழி பாதை அமைத்திட வேண்டி, உச்சக்கட்ட செயலாக விவசாய ஜீவாதாரம் அழிக்கப்படும் நிலை வந்துவிட்டது. பலகோடி ரூபாய் தருகிறோம், பலவந்தமாக விற்றாக வேண்டும் என்றாலும் பின்னாளில் அந்த நஷ்டயீடை பிடுங்கிக் கொள்ள வங்கியில் புதுவிதமாக உச்சவரம்பும் வருமானவரியும் வரலாம். யாம் அறியோம்!
ஆக, இயற்கை வளத்தை அழித்தே பொருளாதார முன்னேற்றம் வரவேண்டும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. பண்ணை நிலத்திலிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தும் படகாட்சியைப் பார்க்க மனம் கனக்கும். உயர்நிலையில் பொருளியல் பேசி, ஆன்மிகம் வளர்த்து, மக்களைக் காக்கிறோம் என்று சொல்லி கலியுகத்தில் அதர்மத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசின் தலைமையை சபிக்கத்தான் மனம் நினைக்கும்.
மக்களின் விளை நிலங்களும், சித்தர்களின் சமாதி மலைகளும் அழிவை நோக்கிச் செல்கிறது. மக்கள் யாரிடமும் புகார் செய்ய முடியாது. ஆனால் சித்தர்கள் அகத்தியரிடம் புகார் செய்வார்கள். குள்ளமுனி என்ன செய்து விடுவான் என்ற நினைப்பில் மத்திய/ மாநில அரசுகள் உள்ளதோ? அகத்தியர் என்ன செய்வார்? செவி மடுத்துக் கேளாமல் நிஷ்டூரியமாக செயல்படும் இவர்களை கிழித்துப் போடுவார்.
போகர் ஐந்தாம் காண்டத்தில் ஒரு பாடல் (பா:4213).
"முறையான சித்துமுனி ரிஷிகள்தாமும்
மூர்க்கமுடன் ஓடிவந்து அகஸ்தியர்முன்னே
குறையான சித்தர்முனி ரிஷிகள்தாமும்
குடியிருக்க எங்களுக்கு இடமில்லைதாமே
சாமான மலைகளெல்லாந் தங்கமானால்
தாரிணியில் ஒருவருக்கோர் மரிப்போருண்டோ
நாமான வாகவல்லோ கூறிவிட்டோம்
நாதாந்த சித்தொளிவைக் காப்பீர்தாமே
"


நில அளவு எல்லைக்கல் நடும் பணி நடக்கிறது. அரசை எதிர்த்துப் போராட முடியாத விவசாய மக்களின் நிலையைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. நம்பி வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசு. இங்கே உள்ள படம் ஆயிரம் உணர்வுகளைச் சொல்லும். எனக்கு சொந்தமாக ஒரு சதுரடி விளை நிலம்கூட இல்லை என்றாலும், நான் ஜீவிக்கும் நிலங்களே பறிபோவதாக ஆழ்மனதில் பாதிப்பின் வலியை உணர்கிறேன். இது கோபத்தின் கனலை கவிதையாக வெளிப்படுத்துகிறது. எப்போதும் ஒரு நடுநிலை பார்வையாளனாக இருக்கும் நான் இப்படியொரு அசாதாரணமான மனநிலையில் இருந்ததில்லை.
"அயம்தோண்டி வழிதேடி அழிக்கும் நினைப்பை
குயம்தோண்டி அடிபணிய சுருக்கும் வினைப்பை
பயம்தோண்டி மூடும்வழி நினைக்கும் மனப்பை
சுயம்தோண்டி பாராக்கால் வழியழியும் கருப்பை
."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக