About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 11 ஜூன், 2019

வம்சாவளியும் வீடுபேறும்

நம்முடைய மரபணுக்களோடு நாம் ஆழ்மனதில் பேசி அதை மாற்றியமைக்க முடியும் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். “இதெல்லாம் வேலைக்கு ஆவறது இல்லை. அப்படிப் பேசி வழிக்குக் கொண்டுவர எத்தனைக் காலம் ஆகுமோ?” என்று மேலோட்டமாக உங்கள் மனம் நினைக்கும். ஏன்? ஊழ் வினையின் தாக்கமும் அதனால் உடல் அக்கர்மாவின் பலனை அனுபவிப்பதையும் நீங்கள் ஓரளவுக்குப் புரிந்து வைத்துள்ளீர்கள். வினைப் பயன் நிலுவையின்றி தீர்ந்தால்தானே நம் மரபணு உள்ளிருக்கும் சிவனின் பேச்சைக் கேட்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் உண்மை. ஆனால் அது எப்போது நடக்கும்?
நல்ல தசா-புக்தி வரும்காலத்தில் ஞான காரகனும் புத்தி காரகனும் உங்களை நல்வழிப்படுத்த, கரியன் சுற்றில் உங்களைப் பெரிதாக தண்டிக்க எந்த முகாந்திரமும் இல்லாதபோது, இது சாத்தியம். குரு சிறப்பாக நின்று உங்களை ஆன்மிக தர்மநெறியில் நிலைக்கச் செய்யும்போது ஆன்மா மேன்மையுற அதனால் தேகத்தின் மரபணுவும் நன்மாற்றத்திற்கு வசப்படும். இது நடக்க லக்னத்தையோ லக்னாதிபதியையோ குரு பார்த்து, அதே சமயம் 12ல் கேது இருந்து அந்த 12 ஆம் வீட்டுக்குரிய கிரகமும் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகருக்கு மறுபிறவி இல்லை, வீடுபேறுதான் என்கிறது ஜோதிட சாத்திரம். சரி, மேலே ஜோதிடம் சொல்லியபடி கட்டங்களில் கிரகங்களின் பலன்கள் முழுமையாக இல்லாமல் போனால், என்னவாகும்? பிறவா வரம் கிடைக்காதா?
கிரகங்களைத் தாண்டி உங்கள் குலதெய்வம் உள்ளது. அது மனம் வைத்தால் உங்களுக்கு விடுதலைக் கிடைக்க சிபாரிசு செய்யும். நவகிரகங்களின் நாயகியாக நிலைப்பவள் அவளே! அந்தந்த வம்சாவளியின் பாவ-புண்ணிய கணக்கைப் பார்த்து முடிவுசெய்து கொள்ளும் வகையில் அவளை கங்காணியாக ஈசன் அமர்த்தியுள்ளான். அவளிடம் சரணடைந்தால் உங்களிடம் வெகு விரைவில் மாற்றங்களைக் காணலாம். அவளே கனவிலோ நேரிலோ வந்து வழிகாட்டுவாள். எண்ணிய வண்ணமே பாதைப் போகிறது என்பதற்கு என்ன அறிகுறிகள்? பணம் நிறைய சம்பாதித்தும் அதன்மீது ஆசையில்லாமல் இருப்பது, அதை பொதுநலப் பணிக்குத் தர நினைப்பது, விலையுயர்ந்த பொருட்களை யாருக்கேனும் கொடுத்துவிட நினைப்பது, யாரையும் வஞ்சம் தீர்க்கும் எண்ணம் வராமல் இருப்பது, வாழ்க்கையில் நடக்கும் தீமைக்கு சஞ்சித/பிராரப்த ஊழ்வினை கர்மாதான் காரணம் என்று எண்ணி பொறுத்துக் கொள்வது, நல்ல படிப்பும் உத்தியோகமும் இருந்தும் பொருளீட்ட நாட்டமின்றிப் போவது, ஒரு கட்டத்தில் சிவன் கோயிலில் அமர்ந்து பிரசாதம் தருவதை மட்டும் உண்டு வாழவேண்டும் என்று ஆசைப்படுவது, தனிமையை விரும்பவும், யாரையும் புண்படுத்தவோ, புதிதாகப் பாவங்கள் ஈட்டவோ மனமின்றிப் போவது, தனக்கென குடும்பம் இல்லாமல் இருப்பது, இருந்தாலும் ஒட்டுதலின்றி இருப்பது, மணம் செய்ய பிராப்தமின்றிப் போவது.., போன்ற பல அறிகுறிகள் வெளிப்படும்.
ஒவ்வொரு நபரின் 13வது தலைமுறையோடு அந்த குலதெய்வத்தின் ஆதிக்கம் முற்றுபெறும் நிலையை எய்தும். இதைத்தான் ஈரேழு தலைமுறைகள் என்கிறோம். Geneticsகூட ஒருவருடைய மரபணு 13 சந்ததிகளுக்குப்பின் பலவீனப்படுகிறது என்று சொல்கிறது. ஆகவே செய்யும் பாவச்செயல் ராகு-கேது வழியே அத்தனை தூரம் கடந்துபோய் அதன்பின் பாவங்களைக் கடத்த ஆண் வாரிசு இல்லாமல் நின்றுவிடும்.
12 ஆம் வீட்டு கிரகநிலை நூறு சதவிகிதம் மோட்சத்தைக் சொல்லாது போனாலும், குலதெய்வத்தின் தலையீட்டினால் வீடுபேறு கிடைக்கவும் சாத்தியமுண்டு. அவள் மூலம் ஈசனே இதைப் பூர்த்தி செய்வான். இவ்வாறு நடப்பது எப்போது சாத்தியம்? மனமும் எண்ணமும் மரபணுவும் மாறும்போது, உங்கள் கைரேகையும் மாறும். அப்போது விதியே மாறுகிறது. இது சூட்சும சங்கிலி. இந்த சூட்சுமம் புரிய யார் காரணம்? நம் மூதாதையர் தான். அவர்களில் யாரோ சிறப்பாக பக்தி யோகத்தில் உழைத்ததால் நாம் எந்த முனைப்பும் இல்லாமல் ஞானம் பெற்று இதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மரபணு சூத்திரம்

பஞ்சகிருத்தியம் என்பது பல நிலைகளில் நடக்கிறது. அண்டங்கள் அளவில் இத்தொழிலை சதாசிவம் செய்கிறார். இந்த பிரபஞ்சத்தையும் ஜீவன்களையும் பிரம்மாவின் மூலமாக செய்கிறார். சிருஷ்டியை செய்து அதனை காத்து சமன்படுத்த விஷ்ணுவின் ரூபம் மேற்கொள்கிறார். எப்போது பிரபஞ்சம் பழமையாகி புதுபிக்கப்பட வேண்டுமோ அப்போது ருத்திரனாக இருந்து தன் பாசுபதாஸ்த்திர சக்தியால் சம்வர்தக நெருப்பை உண்டாக்கி பிரளய தாண்டவம் புரிந்து மீண்டும் பிரபஞ்சத்தை மறு ஆக்கத்திற்கு தயாராக்குகிறார். பிறகு மகேஸ்வரராக இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தன்னுடைய மாயைக்குள் கொண்டுவந்து, தன்னிலிருந்து வெளிப்பட்ட அனைத்து ஜீவன்களையும் சதாசிவ வடிவத்திற்குள் வைத்துக்கொள்கிறார். பிறகு ஒரு மகாகல்பம் தொடங்குமுன் பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்கும் பணியை செய்கிறார். இப்படியாக சுழற்சி போய்க்கொண்டிருக்கும்.
சூரிய சந்திரர், பஞ்சபூதங்கள் சிருஷ்டியான பிறகு எண்ணற்ற ஜீவராசிகள் படைக்கப்பட்டன. அவற்றுக்கு பூமிமீது பற்றுதல் வரவும், வாழ்வாதாரத்திற்கும் வழிசெய்யப்பட்டது. அவை எல்லாம் இனப்பெருக்கம் செய்துகொண்டு பூமியில் அழியாமல் வாழ்ந்திட பாதுகாக்கப்பட்டன. இந்தச் செயலை 'அபோவிஷ்ணு' என்றும், காக்கும் தொழிலை செய்பவர் 'விஷ்ணு' என்று யஜூர்வேதம் சொல்கிறது. அதனால் விஷ்ணு 'ஸ்திர கர்த்தா' என்றும் அழைக்கப்படுகிறார். உலகில் எவ்வகை ஜீவராசிகளை அதிகரித்து/குறைத்து சமன்பாடு எய்தவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறார்.
ஈசனின் ஆணைப்படி வெவ்வேறு நிலைகளில் அறிவுநிலைக்கேற்ப பல ஜீவராசிகளையும் மனிதனையும் படைத்தான். ஜீவராசிகள் உயிர்வாழத் தேவையான உணவு நீர் காற்று காப்பகம் என்று அனைத்தையும் அருள்பவர் விஷ்ணு. ஒரு பசுவானது கன்றை ஈன்றெடுத்ததும், அக்கன்று தாயின் மடியை நோக்கிச்சென்று முட்டிப் பால் குடிக்கவேண்டும் என்பதை எப்படி அறியும்? அதற்கு சொன்னது யார்? தெய்வத் தன்மையான அந்த உயிர்வாழும் கலையே 'ஸ்திதி'. இது கீழ்நிலையில் நடக்கும் விஷ்ணுவின் மகிமைகள். எப்போதெல்லாம் இயற்கை சமன்பாடு மாறுமோ அப்போதெல்லாம் விஷ்ணு அதை காத்திட வருகிறார் அல்லது ஓர் அவதாரம் எடுத்து நிலைநாட்டுவார். யஜுர்வேதம் சொல்லியபடி, விஷ்ணு ஸ்தித கிருத்தியம் என்ற காக்கும் பணியை செய்பவர்.
நம் உடலில் இந்த மரபணுக்கள் சேவகர்களாக, வைத்தியர்களாக, ஆலோசகர்களாக, நிர்வாகிகளாகச் செயல்படும் விதம் ஆச்சரியத்தைத் தரும். யோகத்திலும் தியானத்தில் இருந்தபடி நாம் பலவித கட்டளைகளை நமக்குத் தந்து அதன்மூலம் நோய்களை, வரவிருக்கும் ஆபத்துகளை, கண் திருஷ்டிகளை, தடுத்துக் கொள்ளமுடியும். சுயமுன்னேற்ற ஆளுமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஆழ்மனக் கட்டளைகள் மூலம் மரபணுக்களை மாற்றியமைக்க முடியும் என்பது உண்மை. ஜீவனின் தேகத்தில் குடியுள்ள சிவன் உள்ளே சீவனாக வாழும்போது அவனுடைய குணங்கள்தானே நம் திசுக்களிலும் மரபணுவிலும் நீக்கமற நிறைந்திருக்கும்? நம் ஆன்மா ஒவ்வொரு அறிவு நிலையிலும் பிறந்து முன்னேறி மனிதனாக ஜெனித்து பிறகு விடுதலைப் பெறுகிறது. கடந்து வந்த பாதை அவனுள் பூர்வஜென்ம வாசனையாகத் தங்கிவிடும். புல்லாய், பூண்டாய், புழுவாய், பறவையாய், மிருகமாய், மனிதனாய் வளர்கின்ற உயிர்த் தோற்றத்தை அளிக்கிறான்.
அப்படி இருக்கும்போது ஈசனின் மரபணு என்ன? பூலோகத்தில் படைப்பான எல்லாவற்றலும் அவனுடைய மரபணுக்கள் இருந்தே ஆகவேண்டும். அறிவு நிலைக்கேற்பவும் செயல்பாட்டுத் திறனுகேற்பவும் சில மரபணுக்கள் முன்னேற்றம் கண்டிருக்கும். மற்றபடி நாம் எல்லாவற்றுடனும் ஒரே மாதிரியான மரபணு வடிவத்தையே ஒத்துள்ளோம். வாழை, பசு, எலி, பன்றி, நாய், குரங்கு, மனிதன், என எல்லாமே 60% - 80% வரை ஒரேவித அடிப்படை மரபணுக்களை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன்பே Genomic Coding முறையில் இவை ஒப்பீடு செய்யப்பட்டு பதிவாகியுள்ளது. நாம் அன்றாடம் பேசும் ‘வாழையடி வாழையாக’, ‘கோமாதா பால் உயிர் சத்துள்ளது’ ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ போன்ற மூத்தமொழிகள் இதனை நமக்கு நினைவூட்டும்.

சனி, 8 ஜூன், 2019

தொண்டு

பொதுவாகவே 'தொண்டு' என்றால் சேவை, அர்ப்பணிப்பு, தியாகம், கடமை, பொறுப்பு என்று பல பொருள் கொள்ளலாம். தொண்டு புரிபவர் தொண்டர் எனப்பட்டார். தன்னலமற்ற சேவை செய்வோர் நிமிர்ந்து அதிகார தோரணையில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டா இருப்பார்கள்? இல்லை. தொண்டன் வீரனாகவே இருந்தாலும் இறைவனுக்கு/ சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் மனோபாவத்துடன் வளைந்து குனிந்து பணிவுடன் நிற்பான்.
ஆனால் மிகவும் வயதான முதியவர்களை ஏன் 'தொண்டு' கிழம் என்கிறோம்? அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடமை ஆற்றியபின், தேகம் மெலிந்து வளைந்து கூன் விழுந்து எண் '9' வடிவம்போல் இருப்பதால் அவ்வாறு ஒப்பிட்டுச் சொல்கிறோம். கூன் விழுந்த எண் ஒன்பதுக்கு 'தொண்டு' என்பதுதான் சங்ககாலத்துப் பெயர். தொண்டின் இலக்கங்களைப் பற்றி பழைய பதிவில் முன்னமே ஆழமாகப் பார்த்துள்ளோம்.
Image may contain: one or more people

வெள்ளி, 7 ஜூன், 2019

திராவிடம் சீர்திருத்திய தமிழ்

சைவத்தையும் தமிழையும் தன் உயிராகக் கருதி இறைத்தொண்டாற்றியவர், வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார். சைவ மந்திரங்கள் வடமொழியில் ஏன் இருக்கிறது என்ற கேள்விக்கு தன் கருத்தைத் தெரிவிக்கும்போது:
“சிவதீட்சைப் பெற்றவர்கள் ஓதும் மூலமந்திரமும் தனித்தனி அங்கங்களுக்கான மந்திரங்களும் வடச்சொற்களில் உள்ளன. சைவ சமயத்தின் தலைவரான முதல் தமிழ்ச் சங்கம் கண்ட இறைவனார் சிவபெருமானைப் போற்றி வழிபடும் மந்திரச்சொற்கள் வடமொழியில்தான் உருவாயின. மந்திரங்கள் எல்லாமே வடமொழியில் அமைந்தவை. அதை யாரும் இயற்றவில்லை, அவை படைக்கப்பட்டது. எல்லோரும் பொதுவாக வடமொழியில்தான் மந்திரத்தைப் பயின்றார்கள். இதைத்தான் திருஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று திருவாய் அருளினார்.
தமிழில் அத்தகைய மந்திர உச்சாடனங்களுக்குத் தேவையில்லை. ஏன்? இரண்டு மொழிகளும் தனித்தனிப் பாணியைக் கொண்டது. இது வேறு நடை அது வேறு நடை. சைவர்களும் சிவவேதியர்களும் தொன்றுதொட்டு அனுஷ்டான காலத்தில் சம்மிதா மந்திரங்களை ஓதி வருவது மரபு. ஓம் என்ற பிரணவம் சொல்லி அக்னி வளர்த்து இறைவனை ஓதித் துதிப்பதே ஓமம்/ ஹோமம் எனப்படுகிறது இதை திருமந்திரத்தில் திருமூலரும் விளக்கியுள்ளார்.
தமிழைப் படைத்த ஏக இறைவன் முன்னமே இன்னொரு மொழியைச் சிருட்டித்தான் என்பதை தென்னகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதில் வெறுப்புணர்ச்சி காட்டுவதும் ஆராய்ச்சி செய்வதும் நல்லதல்ல” என்று கடுமையாகச் சொல்கிறார்.
பல்லாயிரம் பாடல்களை மனனம் செய்து பதவுரைச் சொன்னவர். கவனகர். வீணை வித்வான். சிறுவயதிலேயே வெண்பாக்கள் இயற்றி சொற்பொழிவுகளும் தந்தவர். செங்குந்த வீரசைவ மரபில் வந்தவர் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்றவர். நால்வர் தமிழ் என்றால் உயிர். அவர்கள் அடியொற்றி இறைப்பணி செய்தவர். தமிழொடு வடமொழியும் கற்று, வேதங்களிலுள்ள சங்கதிகளைப் படித்துத் தெளிய வேண்டும் என்ற ஆசையில் காசிக்குச் சென்றார். அங்கு கேதார் காட் பகுதியில் ஸ்ரீ குமரகுருபரர் நிறுவிய குமாரசுவாமி மடத்தில் தங்கி தன் அவாவைப் பூர்த்தி செய்துகொண்டார். திருப்புகழ் ஜோதியாக விளங்கியவர் வயலூர் முருகனின் அருளாலும், பாம்பன் சுவாமிகளின் அருளாலும் வடமொழியிலும் தேர்ச்சிபெற்று விளங்கினார். ‘வடமொழியும் தமிழும் இரு கண்கள்” என்று அருணகிரிநாதரும், பாம்பன் சுவாமிகளும் உணர்த்தியவர்கள்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்த நேரம். பல தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்து என்ற முறையில் மறைந்து போயின. உயிரெழுத்தில் ஒன்றான ‘ஐ’ என்ற எழுத்திற்கும் சீர்திருத்த ஆபத்து வந்தது. அது போயிருந்தால் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ல் இருந்து 11 ஆகி இருக்கும்.
வாரியார் சுவாமிகள் எம்ஜிஆரிடம் சொன்னார்: “அப்பா! ஒரு ஆர்டர் போட்டு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாயே. அதில் மறைந்து போன ஏனைய எழுத்துக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. போனது போகட்டும் விடு ஆனால் ‘ஐ’ என்பது மிகப் பெரிய சிறப்பெழுத்து. ஐ என்பது தமிழில் ஒர் எழுத்து மட்டுமல்ல; அதுவே ஓரெழுத்தொரு மொழி. அரசன், திருமகள், கடவுள் ….. இப்படி பலபொருள் தரும். அதைப்போய் நீக்கிட்டாயே? இனி ஐ என்பதற்கு சொற்பொழிவில் என்ன பொருள் சொல்வேன்?” என்று கூறிவிட்டு கந்தர் அநுபூதியில் வரும் ஒரு பாடலை விளக்கினார். வாரியாரிடம் வசை வாங்கி கட்டிக்கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர் உடனே தன் தவறை உணர்ந்ததும் ‘ஐ’ எழுத்து மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று மறு ஆணை போட்டார்.
இவ்விதமாக கழக ஆட்சிகள் வந்தபோது தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் குறைந்து கற்பிழக்க, வாரியார் சுவாமிகள் போன்றோர் இயன்றவரை தமிழின் மாண்பைக் காப்பாற்றினார்கள். இன்றைக்கு வடமொழிதான் தெம்மொழிக்கு எதிரி என்று வெட்கமின்றி இரைச்சலாகப் பேசுகிறார்கள்.
விருப்பம் இருந்தால் இவருடைய நூலை வாசித்து மகிழுங்கள்.
"வாரியாரின் காசி யாத்திரை", குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்கம்.176, ரூ.50/-
Image may contain: 1 person, smiling, outdoor

புதன், 5 ஜூன், 2019

மணியடிக்கிறது இயற்கை

மனித நாகரிகம் சுமார் 2050 ஆம் வருடத்தில் முடிவுக்கு வரும் என்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் சொல்லியுள்ளனர். புவி வெப்பமாவதையும், பனி படர்ந்த எவரெஸ்ட் சிகரமும், ஆர்டிக் பெருங்கடல் உள்ள கண்டம் உருகிக்கொண்டு வருவதையும் வைத்து இவ்வாறு கணித்ததாகத் தெரிகிறது. போன வாரம் எவரெஸ்ட் மலையில் traffic jam இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று உச்சியை அடைவதற்கு நெடு நேரமானது என்று சர்வதேச மலையேறும் குழுவினர் சொன்னார்கள். கோடைக்காலத்தில் இத்தனைப் பேரும் ஒரே இடத்தில் நின்றிருக்க, பிராணவாயு குறைய உயரத்தில் வெப்பம் கூடியது.
பல வருடங்களுக்கு முன் அங்கு மலையேறச் சென்று வழியில் இறந்துபோய் பனிக்கடியில் புதைந்து போனவர்களின் உடல்கள் இப்போது வெளிப்பட்டு வருகிறதாம். அதோடு 11 டன் பிளாஸ்டிக் குப்பைகளும் உருகும் பனியில் அடித்து வருகிறதாம். இப்போது எவரெஸ்ட் மலையானது நாம் சாதாரணமாகப் பார்க்கும் குப்பைமேடு மலையை ஒத்துள்ளது.
ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னாட்டு மகான் ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் தன்னுடைய காலக்ஞான தீர்க்கதரிசன நூலில் ஜனத்தொகையின் அழிவைப்பற்றி சொன்னதென்ன? இன்றைக்கு சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு புது டில்லியில் அணுகுண்டு விழும், பலகோடி மக்கள் மாண்டு போவார்கள். அதன்பின் நாட்டின் தலைநகரம் கருநாடகத்திலுள்ள ஹம்பி பட்டினமாக விளங்கும். அங்கும் அணுகுண்டு விழ, தென்னாட்டில் ஒரே நாளில் சுமார் 7 கோடி மக்கள் இறந்து போவார்கள் என்று எழுதியுள்ளார். அப்போது அதிகபட்ச வெப்பம் நீடிக்க, நீர் வறண்டுபோக, மரம் செடி புல் அனைத்தும் மடியும். இத்தாக்கத்தின் காரணமாக ஊழ்வினையால் பிறப்பெடுத்தவர்கள் தங்கள் பாவக் கழிவுக்கேற்ப அவ்வப்போது மாண்டு போவார்கள். பிறகு பஞ்ச பூதங்களுக்கு ஈசன் புத்துயிர் தர இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொண்டு எழும். இதுவும் பிரளயத்திற்கு சமம்.
ஆனால் நாமோ இங்கு இயற்கையைப் பேணாமல் சுத்தமாக அழித்துவிட்டு மொழிப்போர் புரிந்து வருகிறோம். வாழ்வாதார விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காத அளவுக்கு எல்லோருக்கும் சுபிட்சமாகத் தொப்புளுக்குமேல் கஞ்சி வழிகிறது!

Image may contain: ocean, sky, outdoor, text and nature

திங்கள், 3 ஜூன், 2019

ஐயோ! தமிழ் அழிந்துவிடும்

'யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று சொன்ன பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருந்தது? தமிழ் ஆங்கிலம் பிரஞ்ச் சமஸ்கிருதம் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி ஹிந்தி வங்காளம் இலத்தின் கிரேக்கம். இதில் முன்னவை ஏழு மொழிகள் எழுதவும் படிக்கவும், மற்றவை பேச மட்டும், பேசினால் புரிந்துகொள்ள முடியும் அளவில் திறன் பெற்றிருந்தார். ஆக, வேற்று மொழிகளைப் படிக்காமல் எப்படி இவர் இதைச் சொல்லியிருப்பார்?
இருமொழிக் கொள்கையையே திராவிடக்கட்சி விரும்புவதாகவும், மும்மொழிக் கொள்கையே இளைய சமுதாயத்திற்கு சரி என்று மக்கள் நினைப்பதாகவும் தினமும் இங்கே சுவரொட்டிகள் Wall post ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது மொழியாக நான் என்ன படிக்கவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.
காலை நேரம். சிற்றுண்டி உண்பதற்கு ஓட்டலுக்குப் போகிறோம்.
"என்ன இருக்கு?"
"இட்லி பொங்கல் வடை, காபி"
"வேற இல்லையா?"
"இப்போ இந்த மூணுதான் இருக்கு. இதுல எது வேணும்னு சொல்லுங்க"
இந்த நிலையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள். மூன்றாவது மொழியாக ஹிந்தி பெரும்பாலும் இருக்கும். சமஸ்கிருதம் பிரஞ்ச் ஸ்பானிஷ் மான்டரின் வைக்கப்போவது இல்லை. சில தனியார் பள்ளிகளில் வைப்பதுண்டு. பள்ளியில் நாம் கற்கும் அந்த மூன்றாவது optional மொழி எதிர்காலத்தில் நமக்குப் பயன் தரும். பள்ளிப்படிப்புக்கு பின் அதை தொடர்வதும் விடுவதும் அவரவர் விருப்பம். வடக்கே போகும்போது அத்தியாவசிய இடங்களில் அடிப்படை அளவில் பேச, பஸ்ரூட்/ அறிவிப்புகள்/ பதாகைகள் படிக்க உதவுகிறது. படித்த மொழிகள் என்ன ஊசியா போகும்?
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று திருவள்ளுவர் சொன்னது சரி. போன பிறவியில் நான் கற்ற மலையாளம் பல்லசேனாவில் எனக்கு எப்படிப் பயன்பட்டது என்பதைப்பற்றி முன்னமே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அந்த நிகழ்வுக்குப்பின் மலையாளம் கூட்டிப் படிக்க எழுத வரும் ஆனால் அதை மேற்கொண்டு தொடர இப்போது ஆர்வம் இல்லை.
ஆகவே, கல்விப்புலத்தில் மூன்றாவது விருப்ப மொழி என்பது அரசியல் திணிப்பு இல்லாமல் மாணவன்/பெற்றோர் விருப்பத்தைப் பொறுத்தே அமையவேண்டும். பள்ளியில் பணத்தைக் கொட்டிப் படிக்கும்போது கூடுதல் மொழியை அவர்கள் சொல்லிக் கொடுக்கட்டும். அதைவிட அவர்களுக்கு என்ன வேலை? கேரளா ஆந்திரா கருநாடகா பள்ளிகளில் இதை சர்வ சாதாரணமாகப் பயில்கிறார்கள். அவர்களுடைய தாய்மொழி இன்னும் அழியக் காணோமே!
Image may contain: 1 person, text




திங்கள், 27 மே, 2019

மாற்றம் நல்லதல்ல!

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது மூத்தமொழி. மனிதன் தோன்றி பல காலங்கள் ஆகிவிட்டபடியால் இன்னும் ஏன் குரங்கினம் இருக்கிறது? இப்படி சில கேள்விகள் எழும். ஒரு இனம் மொத்தமாக வேறொரு இனமாக மாறுவது இல்லை என்கிறது பரிணாமத் தத்துவம். அதில் சில அம்சங்கள் அப்படியே தொடர்ந்து நிலவ சிலது மட்டும் ஏற்றம் பெறுகிறது. நமக்குத் தெரிந்து ஆதிமனிதன் இலை தழை கிழங்குகளைத் தின்றுதான் உயிர் வாழ்ந்தான். குமரி நிலத்தில் முருகனும் குமரா (எ) வள்ளிக் கிழங்குகளையே பயிர் செய்து கொடுத்தான். மனிதன் ஒரு கட்டத்தில் வேட்டையாடி மாமிசம் உண்ணும் நிலைக்கு வந்தான். காட்டு மிருகங்கள் நீங்கலாக ஏனையவை எல்லாமே தாவர உண்ணிகள்தான்.
சிம்பன்ஸி எனப்படும் வாலில்லா மனிதக் குரங்குகள் பெரும்பாலும் பழங்கள், வித்துகள், இலைகள், கரையான்கள், சிறு பூச்சிகள் என உண்டு வந்தது. ஆனால் அதனுடைய உணவு முறையும் அண்மைக் காலத்தில் மாறிவிட்டது என்பதை ஜெர்மானிய விலங்கியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அதுவும் மனிதனைப் போலவே எல்லா வகையான மாமிசத்தையும் உண்கிறது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்துள்ளனர். பெரிய ஆமையை இவை புரட்டிபோட்டு, அதன் ஓட்டை பாறையில்/மரத்தில் ஓங்கி அடித்து உடைத்து, உள்ளிருக்கும் மாமிசத்தை உண்ணத் துவங்கியுள்ளது. அதில் புரதம், தாது, கொழுப்பு உள்ளது என்றாலும் இந்த போக்கு புதிதாய் உள்ளதாம். எஞ்சிய மாமிசத்தை மரப் பொந்தில் சேமித்து வைக்கிறதும் ஆச்சரியமே என்கிறார்கள். புவி வெப்ப மாற்றத்தால் இவை நடக்கிறதா அல்லது மரபணு குணங்களே மாறுகிறதா என்பது ஆய்வில் தெரியவில்லை.
மனித பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாமே பல காலங்களுக்குப்பின் அவனுடைய மூதாதையர்களிடம் இப்போது மெள்ள வெளிப்படத் துவங்கியுள்ளது. ஆமை, மான், பன்றி இறைச்சி உண்ணும் இப்போக்கு நல்லதல்ல என்று அக்கட்டுரைத் தெரிவிக்கிறது. பெப்சி, கோக், அருந்தி சுருட்டு, சிகரட் புகைக்கும்போது இவையும் சாத்தியம்தான். அடுத்த நிலையில் இவை நர மாமிசம் உண்டாலும் ஆச்சரியமில்லை.


வியாழன், 23 மே, 2019

நேர்மைக்குக் கிடைத்த வெற்றி

'நரி சின்னத்தை அழுத்தினால் நாய் சின்னம் விழுகிறது' என்று சென்ற வாரம் வரை புகார் சொல்லி வந்தது திமுக. அதனால் எப்படி இருந்தாலும் மத்திய-மாநில அரசுகளின் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று எல்லோரும் பேசி வந்தனர். ஆனால் நேற்றைய முடிவுகள் அதைப் பொய்யாக்கியது. ஊழலில் சிக்கித் தவிக்கும் ராஜா, கனிமொழி, தயாநிதி, கார்த்தி சிதம்பரம், அனைவருமே அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்று வாக்காளப் பெருமக்களே தீர்ப்பளித்தபின் உச்சநீதி மன்றம் நீதி விசாரணை நடத்தி அதில் தண்டனை வந்தாலும் மக்கள் நீதிமன்றத்தில் இவர்கள் பாஸாகி விட்டனரே!

மின்னணு வாக்கு எந்திரம் பற்றி இவர்கள் புகார் எழுப்பியது பொய்யா? அல்லது மேற்படி கனவான்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தியது பொய்யா? இதுவரை மெகா ஊழல் என்று எது நினைக்கப் பட்டதோ அது ஊழலல்ல, வெறும் மாயை என்று தமிழக மக்கள் சித்தம் தெளிவடைந்து விட்டனர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

ஈழம் பிரச்சனை, மீத்தேன், கச்சத்தீவு, காவேரி பிரச்சனை, நியூட்ரினோ, ஜல்லிக்கட்டு, கெயில் குழாய் வாயு ஆகியவற்றுக்கு திமுக தான் முழுமுதற் காரணம் என்று இனி யாரும் திட்ட முடியாது.


செவ்வாய், 21 மே, 2019

அ-சைவம்

மனதின் உந்துதலால் நாவின் தேவைக்கேற்ப வளைத்துக் கொண்டு எதையும் உண்ணலாம். உடல் எதைச் செய்தாலும் ஆன்
பமா கெடுவதில்லையாம். பின் ஏன் கொலை தற்கொலை கற்பழிப்பு செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டும்? உடல் தீண்டப்பட்டும் ஆன்மா நல்லபடியே உள்ளதால் அது குற்றமாகாது என்றால் சட்டம் தண்டிக்கக் கூடாதே?

ஒரு மாசடைந்த ஆன்மா தானிருக்கும் தேகத்தை ஆட்டிப் படைத்திட, அது புத்திக்கெட்டு வேறொரு ஆன்மா குடியிருக்கும் தேகத்தைத் துன்புறுத்துகிறது. ஆக, இது இரு ஆன்மாக்களின் பழி தீர்க்கும் படலமா? அல்லது, இரு உடல்கள் மோதிக்கொள்ளும் களமா? அடிப்படையில் உணவுதான் மனதின் இயல்பைத் தீர்மானிக்கிறது. மனம் ஆசைப்பட உடல் உணவை உண்ண, உணவின் தன்மைக்கேற்ப உடலை தவறாக இயக்கி அது இறுதியில் அவ்வுடல் குடியுள்ள ஆன்மாவுக்குப் பழியைத் தேடித் தருகிறது. உடல்தான் தின்றது ஆனால் உணர்ச்சியின் செயலால் வந்த ஊழ்வினை தண்டனை ஆன்மாவுக்கு. கர்மவினைக் கேற்பத்தான் ஒருவன் சைவம்-அசைவம் உணவை உண்ண நேர்கிறது. கோபத்தால் வந்த பாவத்தால்தான் பிறவிகள் எடுக்கிறான். சைவ உணவே உண்டாலும்கூட அதிக உப்பு காரம் மசாலா பொருட்கள் மனதைக் கெடுக்கும். அதற்கு அடுத்த நிலையில் காரசாரமான புலால் உணவு.

சுட்ட புலால் வேண்டுமா? சுடாத புலால் வேண்டுமா? தொல்லுலகில் முன்னேறிய மூத்தகுடியே புலால் உண்டு கள் குடித்தபோது நாம் மட்டும் உண்ணாமல் இருந்தால் எப்படி? குறிஞ்சிநில முருகனே புலால் உண்டான் என்று ஒரு போடு போட்டால் எவராவது வாயைத் திறப்பாரோ?

புலால் உண்ணக்கூடாது என்பதைச் சித்தர்கள் திருவள்ளுவரும் வள்ளலாரும் உணர்த்தி விட்டனர். உடனே நம் மக்கள், 'குகன் இராமனுக்கு மீன் தந்தான், காளத்திவேடன் சிவனுக்கு மாமிசம் தந்தான்' என்று வாதம் செய்வார்கள். அந்த இரு வேடர்களும் இறைவன்பால் மூடபக்தி கொண்டதால் எது சரி/தவறு என்பதை அறியாமல் தாங்கள் உண்பதையே தந்தனர். ஆனால் அ-சைவம் என்றாலே சீவனற்ற என்ற பொருள் நிலவும். இதை அசைவர்களுக்கு யார் புரிய வைப்பது?

முகநூலில் அவரவர் மனதுக்குப் பட்ட புரட்சிகரமான சொந்தக் கருத்துக்களைப் பரப்புரை செய்து நியாயப்படுத்தி வருகிறார்கள். சைவம்-அசைவம் பேதமில்லை. இறைவனுக்கு நாம் விருப்பமுடன் எதையும் படைக்கலாம். சமய நூல்கள் சொல்லும் எந்த வரம்புகளும் தேவையில்லை. அனைவரும் இனி கருவறையில் மூலவரைத் தீண்டலாம், வங்கியில் பெட்டக அறையில் நிபந்தனையின்றி எல்லோரும் நுழையலாம். கோயிலில் பக்தி செலுத்துகிறோம், வங்கியில் பணம் செலுத்துகிறோம் ஆகவே அனைவரும் சமம்.   தனிமனித சுதந்திரத்தை இனி சமுதாய கோட்பாடு/ பக்தி/நிர்வாக சட்டதிட்டம் என்று சொல்லி யாரும் தடுக்கக் கூடாது என்று சொல்வார்கள்.







புதன், 8 மே, 2019

விந்தையான சமுதாயம்!

முகநூலில் பலர் பதிவேற்றும் படங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தரும். மிகவும் பெருமையுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட செயல்கள் என்று தலைப்பிட்டு குமரன்கள் முதல் கிழடுகள் வரை அலாதியான படங்களைப் போடுவார்கள். அவை:
௧. புறநகர் பகுதியில் வேப்பம் கொட்டைகளை விதைத்தோம், மரக்கன்றுகள் நட்டோம், காய்ந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சினோம் என்பதை பல கோணங்களில் காட்டும் ஒரு செல்ஃபி.
௨. உள்ளூர் கோயிலில் உழவாரப் பணி செய்தோம் என்று விபூதி பூசிக்கொண்டு புதர்மேடு, கிணற்றடியில் வேலை செய்யும் ஒரு போஸ்.
௩. கோடைக் காலத்தில் பந்தல் வைத்து தண்ணீர்-மோர் வழங்கினோம் என்று கேமிராவை நோக்கியபடி குடிக்க வருவோர்க்கு ஊற்றிக் கொடுப்பதாக ஒரு படம்.
௪. சாலையோரம் பிச்சைகார முதியவருக்கு உணவுப் பொட்டலம் தந்து பசியாற்றியதாக ஒரு குணசித்திரப் படம்.
௫. என்றோ ஒருமுறை முதியோர் இல்லத்தில் ஒருவேளை சோறு போட்டதற்கு அக்குடும்பமே கரண்டியுடன் களத்தில் பரிமாற நிற்கும் படம்.
௬. தன்னுடைய மனைவிக்கு-மகளுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவர்களுடைய வண்ணப் படத்தை பதிவிட்டு, முகம் தெரியாத எல்லோரையும் வாழ்த்தச் சொல்லச் சொல்லும் பரிதாபம்.
தகிக்கும் வெயிலில் வந்து குடிக்கப்போகிறவனுக்கு நிற்க இடமின்றி உபயதாரர் அத்தனைப்பேரும் நீர்மோர் பந்தலில் ஆக்கிரமிப்பார்கள். சிறிய மரக்கன்று ஒன்று நட ஆறு பேர் சூழ்ந்து நிற்பார்கள். இதுபோல் எத்தைனையோ நகைச்சுவையான படங்கள் உண்டு.
ஒவ்வொருவரும் அன்றாடம் சர்வ சாதாரணமாகச் செய்யவேண்டிய ஒரு சிறு சேவையை படம் பிடித்துப்போட்டு அதை அதிசயமான நிகழ்வாகக் காட்டிக்கொள்ளும் காலத்தில்தான் வாழ்கிறோம் என்பதை இவை நினைவூட்டுகிறது. மாம்பூ பூத்தாலும், காட்டுத்தீ எரிந்தாலும், கடும் வெயில் சுட்டெரித்தாலும், கால்நடை சாணம் போட்டாலும், உடனே தமிழ்/தமிழர் உணர்வை/ திருவள்ளுவரை அங்கே வலிய இழுத்து எப்படியேனும் இணைத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் அதிகம்.. விந்தை!