About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

பளிங்குக்கல்லில் ஷிர்டி சாயிநாதர்!

அக்டோபர் 1918 ல் மகாசமாதி அடைந்தார் ஷிர்டி சாயிநாதர். 1954 வரை இப்போதுள்ள ஸ்தலத்தில் சிலை வழிபடு எதுவும் இருக்கவில்லை. தென்னகத்தில் நம் ஆகம விதிகள்படி பளிங்குக்கல்லில் கோயில் சிலைகளை நாம் செதுக்குவதில்லை. ஆனால் வடக்கே பெரும்பாலும் நம்முடைய ஆகம வழிமுறை பின்பற்றப்படுவதில்லை. மகான் சமாதியாகி 36 வருடங்கள் கழித்தே இக்கோயிலில் விக்ரகம் நிறுவப்பட்டது. ஆனால் இது உருவான வரலாறு மெய்சிலிரிக்க வைக்கும்.
இத்தாலியிலிருந்து வந்திறங்கிய ஒரு பளிங்குக்கல் மும்பாய் துறைமுகத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது. அதை யாரும் உரிமைக் கோராததால் சில மாதங்களுக்குப்பிறகு அதை ஏலம் விட்டனர். பளிங்குக்கல்லின் உயர் தரத்தால் கவரப்பட்ட ஒரு செல்வந்தர் அதை ஏலத்தில் எடுத்து ஷிர்டி சமஸ்தான கோயிலுக்கு அர்ப்பணித்தார். கோயில் நிர்வாகம் அதில் சிலை வடிக்க முடிவு செய்தபின் சிற்பி திரு.பாலாஜி வசந்த் அவர்களிடம் ஒப்படைத்தது.
ஷிர்டி மகானின் பழைய கருப்புவெள்ளைப் படத்தைப் பார்த்து வடித்தால் ஓரளவுக்குத்தான் ஒற்றுமை நிலவும். அதுவே மகானை நேரடியாக பார்த்துக்கொண்டே வடித்தால் துல்லியமாக இருக்கும் என்று நினைத்தார். தான் வடிக்கப் போகும் மகானின் உருவம் சரியாக வரவேண்டுமே என்ற கவலையும் இருந்தது. மகானை மனமுருகி வேண்டிக்கொண்டார். ஒரு நல்ல நாளில் காலையில் தன்னுடைய சிற்பகலா ஸ்டுடியோவுக்குள் கதவைத் திறந்து விளக்கைப் போடும் முன்பாக அரங்கில் வெளிச்சம் கூடியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அங்கே ஷிர்டி மகான் இவருக்காக ஒளிவெள்ளத்தில் தரிசனம் தர காத்திருந்தார்.
வணங்கிக்கொண்டு உடனே தன்னுடைய உளியையும் சுத்தியையும் எடுத்து ஆனந்தப் பிரவாகத்தில் செயல்பட ஆரம்பித்தார். முழு உருவத்தையும் எல்லா திசைகளிலும் பார்த்துக்கொள்ள ஏதுவாக மகான் சுழன்று தன் முகத்தின் நெளிவுகளையும் கிட்டத்தில் காட்டினார். முழங்கால் அருகே கல்லில் சிறு வெற்றிடம் இருந்ததைக் கண்டு சிற்பி திடுக்கிட்டார். அதைத் தட்டினால் கீழ்பகுதி சிற்பம் உடைந்து விடும் அபாயம் இருப்பதால் மேற்கொண்டு செய்வதறியாது கலக்கத்தில் சும்மா இருந்துவிட்டார். ‘தொடர்ந்து செதுக்கு ஒன்றும் ஆகாது’ என்று கனவில் அவருக்கு அசரீரி ஒலிக்க நம்பிக்கையுடன் செய்து முடித்தார். அவருடைய ஆசிகளுடன் 5 அடி 5 அங்குல விக்ரகம் உருவானது. 1954 அக்டோபர் மாதம் விஜயதசமி நன்னாளில் அது கோயிலில் நிறுவப்பட்டது. இந்து சமய விதிமுறைகள்படியே இங்கு பூஜைகள் செய்யப்படுகிறது. அதிகாலை முதல் இரவு வரை அவருக்கு நான்கு காலமும் அலங்காரம் நடக்கிறது. ஆரத்தியில் நிவேதன அமுது படைக்கப்படுகிறது.
நம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் சிவலிங்கம் தான் இருக்கும். அங்கு தத்தாத்ரேயர் என்று கருவறைக்குள் தனியாக விக்ரகம் இல்லை. லிங்க வடிவில் மும்மூர்த்தியும் அங்கே சங்கமித்துள்ளனர். ஷிர்டியில் இந்தப் பளிங்கு விக்ரகம் நிறுவப்பட்டபிறகுதான் நாடெங்கும் ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதார உருவங்கள் பளிங்கில் வடிக்கப்பட ஆரம்பமானது. மகானின் சிலை வழிபாட்டு விக்ரகமாக மாறிய அற்புத லீலை இதுதான்.
அந்தப் பளிங்குக்கல் எங்கே போக வேண்டுமோ அங்கே போய்ச் சேந்தது. சிற்பி பாலாஜியின் வேண்டுதலுக்கிணங்க மகானே வந்தமர்ந்து தரிசனம் தந்து தான் விருப்பப்பட்ட சிலையை உருவாக்க அருள் புரிந்தார். பரத்வாஜ கோத்திர இஸ்லாமிய சுஃபி மகானாக அவதரித்த ஸ்ரீதத்தரின் லீலைகளை யாராலும் கணிக்க இயலாது. ஷீரடியில் இது தானுகந்தத் திருமேனியாக இன்றும் அருள் பொழிகின்றது. எப்போதும்போல் இவரைப் பழித்துத் தூற்றுவோர் இவரைத்தொழ இன்னொரு பிறவி எடுக்ககும்வரை காத்திருக்க நேரும்.

சனி, 11 ஜனவரி, 2020

தூங்கா நகரம்

மதுரை, சங்ககாலம் முதல் இன்று வரை இயங்கி வரும் ‘தூங்கா’ நகரம். இரவு நேர இட்லிக் கடைகள், கையேந்தி பவன்கள் என்று நள்ளிரவு தாண்டியும் இயங்கும் நகரம் என்று சொன்னாலும் மதுரைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் இன்னும் உள்ளன.

போகர் தன்னுடைய பெருநூலில் செழிப்பான ‘பாண்டிவள மெத்தநாடு’ என்றும் ‘மானான மகாதேவர் மதுரையைத்தான் மகத்தான் ஸ்தலமென்று மதிப்பிட்டாரே’ என்று ஏழாம் காண்டத்தில் சொல்லியுள்ளார். மதுரைக்குள்ளே பஞ்சபூதத்தலங்கள் உண்டு. வானவர் போற்றும் மூதூர் மாநகர் மதுரை என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகிறது.

சங்கம் கூடிய மதுரையில் எல்லா புலவர்களும் குழுமி இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். இறந்தமொழி எனத் தூற்றி, சமஸ்கிருதமா? தமிழா? என்று மக்கள் அடித்துக் கொள்வதுபோல் அன்றைக்கு எந்தப் புலவரும் ஈசனை இழித்துப் பேசத் துணியவில்லை. சொல்லப்போனால் நாம் யாரையெல்லாம் சம்ஸ்கிருத ரிஷி/புலவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்கள் அனைவரும் இரண்டாம் சங்கத்தில் வீற்றிருந்தனர் என்று தெரிகிறது.

வால்மீகி இயற்றிய இராமாயணம்தான் இன்றளவும் முதன்மையான மூலநூலாகத் திகழ்கிறது. அந்த வால்மீகியும் சங்கத்தில் இருந்தார். ஆறாம் காண்டத்தில் அவரைப்பற்றி விவரிக்கும்போது, ‘மராமரா உபதேசம் பெற்ற வேடர்குல ஞானசித்தன், துய்ய தமிழ்ப் பண்டிதன் வேதாந்த வால்மீகி சமாதிமுகம் சென்றதில்லை. காயாதி கற்பமுண்டு வாழ்ந்த நேர்மை எழுநூற்று சொச்சம் வருடங்கள்’ என்கிறார்.

பழைய மதுரையைப் பற்றிய விவரங்களை சுக்ரீவன் வாயிலாகச் சொல்வதுபோல் இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம்-41, ஸ்லோகம் 18-19, 'ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஷிதம், யுக்தம் கவாடம் பாண்டியானாம் கதா த்ரக்ஷ்யத வானரஹ' என்கிறார் வால்மீகி. வானர வீரர்களே! இலங்கை நோக்கிப் போகும்போது பாண்டியர்கள் ஆட்சி செய்யும் கவாடபுரம் வரும். இரத்தின மணிகள் மின்னும் தங்கமயமான நகரம்தான் பாண்டிய தேசம்' என்கிறது இந்த வரிகள். அந்த நிலப்பரப்பு எதுவரை மேற்குத் தொடர்ச்சியில் இருந்தது? “தாம்ரபரணீம் க்ராஹ ஜுஷ்டாம் தரிஷ்யத மகாநதீம், த்ரஷ்யத ஆதித்ய ஸம்காஷம் அகஸ்த்யம் ரிஷீம் சத்மம்” என்கிறார். அதாவது அன்றைய பிரதேசமானது அகத்தியர் வழிபட்ட குற்றாலநாதர் பாபநாசம் பகுதிவரை நீண்டிருந்ததாம். அவர் குறிப்பிட்ட தாமிரபரணி நதி இன்றும் பாய்கிறது.

இன்று விமானத்தில் நேராகத் தெற்கு நோக்கிப் பயணித்தால் இலங்கை வந்திடும். ஆனால் அன்று கவாடபுரம் வழியாகப் பறந்துபோக என்ன அவசியம் இருந்தது? அப்படி என்றால் பழைய மதுரை தென் மேற்கே குமரிப்பரப்பில் இருந்துள்ளது. ஏன்? தனகோடிக்குத் தென் மேற்கே உள்ள தீவுகளில் ஸ்ரீராமர் தவமியற்றினர் என்று போகர் குறிப்பிடுகிறார்.

அந்த நிலபரப்புப் படத்தை ஓரளவுக்குத்தான் கற்பனை செய்து பார்க்க முடியும். காலவோட்டத்தில் பூமித்தட்டு இடம்பெயர்ந்து மாறியிருக்கும். கடல்கோள் வந்தபின் பாண்டிய தேசம் சுருங்கிபோய் இன்றைய மதுரையைத் தலைநகராகக் கொண்டது. ஆக மொத்தம், கலியுகம் தொடக்கத்திலிருந்தே இயங்கும் ஒரு தூங்கா நகரம் என்றால் அது கூடல்மாநகர் மதுரையே!

சோழன் ஆக்கிய கட்டுமானங்களைப் பார்த்து இன்று வியக்கும் நாம் அன்றைக்கு இதைவிட பன்மடங்கு பிரம்மாண்டங்கள் பாண்டியர்களின் பழைய மதுரையில் மிஞ்சும் அளவில் இருந்திருக்கும் என்பது சந்தேகமில்லை.


புதன், 8 ஜனவரி, 2020

கரிநாள்

தமிழ் நாள்காட்டியிலும் பஞ்சாங்கத்திலும் கரிநாள் பற்றிய குறிப்பு உள்ளதை நாம் காண்கிறோம். மேழ சித்திரை முதல் பங்குனி மீனம் வரை அதை நம் முன்னோர்கள் 'உதவாத' நாட்கள் என்று நிரந்தரமாக வைத்தனர். அன்றைய நாளில் எந்த சுப நிகழ்ச்சியையும் தென்னகத்தில் துணிந்து யாரும் செய்வதில்லை. அன்றைக்கு வழிபாடு பூசைகள் என்ற அளவில்தான் இருக்கும். கூட்டிப்பார்த்தால் வருடத்தில் கரிநாள் மொத்தம் 35 வரும். அன்றைய தினத்தில் வில்லங்கம் எதுவுமில்லாத சுத்த நாளாக இருந்தாலும் இந்த குறிப்பிட்ட தினங்களை முத்திரை குத்தி வைத்துள்ளனர். அந்த நாளில் ஏதோவொரு சோக நிகழ்ச்சி நடந்திருக்கும் அதனால் முன்னோர்கள் புறக்கணித்ததை அறிகிறோம்.
‘பூமி அதிர அட்டதிசையும் நடுங்கலாச்சு, சடுதியில் சப்த சாகரங்களும் பொங்கியெழ மாடமாளிகைகளும் மலைகளும் பகலிரவாக முழுகலாச்சு, நாடாண்ட ராஜாதி ராஜர்களும் மாண்டனர்’ என்று போகர் தன்னுடைய பெருநூலில் நிறைய முறை சொல்லியுள்ளார். திரேதா யுகம், துவாபரம், முதல் கலி பிரதமபாதம் வரை கடல்கோள்கள் வந்ததை போகர் உறுதி செய்கிறார். மாதங்கள் வாரியாக அதை விளக்காமல் துவாபர/ கலியுகத்தின் லட்சத்து இத்தனையாவது வருடங்களில் என்று விவரித்துள்ளார்.
கரிநாள் என்பது அந்தந்த கண்டங்கள் தோறும் (காரணம் தெரியாமல்) பின்பற்றப்படுகிறது. கலியுகத்தில் சங்கம் கூடிய பிற்பகுதியில் கடல்கோள் சமயத்தில் இனி தேவையில்லாத நூல்கள் என்று ஈசனே கருதியவை அழிந்துபோக, எஞ்சிய நிறைய நல்ல நூல்கள் தங்கிற்று. அதுபோன்ற நூல்களில் ‘ஜோதிட கிரக சிந்தாமணி’யும் ஒன்று. வரும் தை மாதம் முதல் மூன்று நாளும் கரிநாள் என்பதால் அதை வழிபாடுக்கு ஒதுக்கினர். அன்று வீடு மாற்றுவதோ, கிருஹப்பிரவேசம் செய்வதோ, திருமண முஹூர்த்தம் வைப்பதோ இல்லை. நம் தென்னகம் நீங்கலாக வடக்கே இதை யாரும் பார்ப்பதில்லை. திருமணம்கூட நடக்கிறது.
“இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம் ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம் அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும் ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில் முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம் முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள். உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும் சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும் பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம் பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே”,
அந்த நூலில் தை 1,2,3,10,17 கரிநாள் என்று உள்ளது.

ஆகவே, இந்த கரிநாள் கான்செப்ட் குமரிக்கண்டப் பகுதிகளில் நிலவிய சம்பிரதாயம் என்பது நிரூபணமாகிறது. அதை ஏன் எதற்கு என்று வினவாமல் நாமும் கடைப்பிடிப்போம். அதுபோல் சில குடும்பங்களில் நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த சந்ததியில் ஒரு பண்டிகை நாளில் தீய நிகழ்வு நடந்திருக்கும். அதனால் பின்வரும் சந்ததியினர் அதை முன்னிட்டு அந்தப் பண்டிகை நாளை கரிநாளாக பாவித்து மறுநாள் கொண்டாடும் வழக்கம் இன்றுமுள்ளது.

சனி, 4 ஜனவரி, 2020

சரித்திரம் படைக்கும் குறிப்பேடுகள்!

இன்றைக்கு அச்சுத் தொழில்நிட்பம் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் முன்னேற்றத்தை அடைந்துவிட்டது. கைப்பிரதியின் சங்கதியை தட்டச்சு செய்து, அதை புத்தக அளவுக்கு மின்னூல் வடிவாக்கம் தந்து, படங்களை ஆங்காங்கே சேர்த்து, மெய்த் திருத்தம முடித்து, ஒளிநகல் எடுத்தபின், அச்சுக் கூடத்தில் தரமான தாளில் அச்சாகி, பாரங்கள் எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டு, வண்ணமய முகப்பு அட்டைக்குள் அவை அடுக்கி பைண்டிங் செய்யப்பட்டு, காய்ந்தபின் பதிப்பாளரின் கடைக்கு வந்து சேர்ந்து விடுகிறது. அவ்வளவு ஏன்... நூல் வெளியீடு விழாவிற்கு சுமார் 10 பிரதிகள் மட்டும் போதும் என்றால், அவசரத்திற்கு மட்டும் தேவையானதை POD (Print on Demand) என்ற முறையில் செய்துகொள்ளவும் இன்று வசதி உள்ளது.

ஆனால் 250 ஆண்டுகளுக்கு முன் இப்படி எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்தில், பிரெஞ்ச்/பிரிட்டிஷ் ஆட்சியில் ஆளுநருக்கு 'துபாஷ்' @ மொழி பெயர்ப்பாளர் பணியில் இருந்தவர்களுக்கு ஆவணங்களை எழுதி கோர்வையாக தைத்து வைப்பது என்பது கை ஒடியும் வேலைதான். அப்படியான பிரம்மாண்ட வடிவில் ஆவணங்கள் எழுதி வைத்தவர்தான் 18 ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியில் கவர்னர் டியூப்ளே கீழ் பணிசெய்த துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை.

இத்தனையையும் தமிழில் Diary யாக எழுதி வைத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. அதில் அக்காலத்தில் 1736-1761 வரை நிலவிய அரசியல், சமூகம், வரலாறு, மற்றும் தன் சொந்த விஷயங்களையும் பல பகுதிகளாக டைரி எழுதி பராமரித்தார். இத்தனைக்கும் அவர் 52 வயது வரைதான் வாழ்ந்தார். மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சினார் என்று தெரிந்தது. பிற்பாடு அத்தனையும் 1900 களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல வால்யூம்களாக வெளிவந்தன. இன்றும் அவை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆவணக் களஞ்சியம் துறையில் பாதுகாக்கபடுகின்றது. அவற்றில் சில பக்கங்களை நான் படித்துள்ளேன். அந்நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்த விதம் ஆச்சரியமாக இருந்தது.

இப்போது எதற்கு இதைப்பற்றிச் சொல்கிறேன்? வரும் வாரம் ஆனந்தரங்கம் பிள்ளையின் தமிழ் அச்சுப்பிரதிகள் புதுவையில் வெளியாக உள்ளது என்ற செய்தியைப் பார்த்தேன். அவருடைய சந்ததியில் வரும் பேரப்பிள்ளை திரு.ஆனந்தரங்க ரவிச்சந்தர் இதை முனைந்து செய்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது. பல வீடுகளில் எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்காமல் எங்கெங்கோ முறையின்றி வைப்பார்கள். சில வீடுகளில் குடும்ப ஆவணங்களை டிரங்கு பெட்டியில் சர்வ ஜாக்கிரதையாக பாதுகாத்தவர்களும் உண்டு.

"ஆமா, சொத்து பத்து விட்டுட்டு போயிருந்தா பாதுகாக்கலாம்... மூதாதையரோட மக்கிப்போன புஸ்தகம் காகிதத்தை வெச்சிகிட்டு என்ன செய்ய? தூக்கி வெந்நீர் அடுப்புல போடு!" என்று அன்றைக்குச் சொன்னவர்கள் இப்பொக்கிஷம் எதிர்காலத்தில்  பணம் சம்பாதித்துத் தரும் என்பதை நினைத்துப் பார்த்ததில்லை.


சனி, 28 டிசம்பர், 2019

வாசுகியின் உலகம்

பாதாள உலகம் எப்படி இருந்தது என்பதைப்பற்றி பழைய பதிவு ஒன்றில் போட்டிருந்தேன். மண் மரம் செடி கொடி கடல்போன்ற ஏறி, சுறா மீன்கள், என பலவற்றை நான் அங்கு கனவில் கண்டதையும் அங்கு நிலவிய சூழலைப்பற்றியும் சொல்லியிருந்தேன். அது நாகலோகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அங்கே அது ஏழு உலகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அங்கு நாகரிஷிகள் ஆட்சி செய்கிறார்கள். அதல விதல நிதல தலாதல மகாதல ரசாதல பாதாள என்பனவாகும். வாசுகி தலைமை வகிக்க அங்கே எப்போதும் வேத மந்திரங்கள் முழங்கிக்கொண்டே இருக்குமாம். ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட இந்த லோகத்து ஜீவராசிதான். அப்படி என்றால் புராணம்படி இந்த பாதாள உலகிற்கு யாரேனும் போய் வந்தனரா? ஆம். இராமபிரானின் மோதிரத்தைக் கண்டெடுக்க ஹனுமான் இந்த நாகலோகத்திற்கு வந்தபோதுதான் இதற்குமுன் பல யுகங்களில் பல இராமர்கள் அவதரித்த விஷயமே அனுமனுக்கு வாசுகி மூலம் தெரிய வந்தது. அந்த நாகலோலகம் அசாத்தியமானது. சொர்க்கத்திற்கு நிகராக எல்லா கட்டுமானங்கள் கொண்ட நகரங்களும் உண்டு என்று சிவபுராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம் என எல்லாமே விவரிக்கின்றது.
அந்த நாகரிஷிகள் எப்படியான சக்தியைப் பெற்றவர்கள்? அவர்கள் தாம் நினைத்த மாத்திரத்தில் எந்த ரூபத்தையும் எடுக்கவல்ல ரிஷிகள். பாதாள லோகத்திற்கும் கீழாக உள்ளதுதான் நரகம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பதற்கு இணங்க அதே உலகங்கள் நம் உடலில் சக்கரங்களாக உள்ளன. மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை ஏழு, மூலாதாரத்திற்குக் கீழேயுள்ள அதல முதல் பாதாளம் வரை ஏழு. ஆக ஈரேழு பதினாலு உலகங்கள்.
மூலாதாரம் மண். அதனடியில் பாதாள உலகங்கள் தொடங்கும். அதனால்தான் குண்டலினி என்ற பாம்பு மூலத்தில் தலையை கீழுலகம் நோக்கிப் பார்க்கச் சுருண்டு படுத்துக் கிடக்கும். ஆறாதார சக்கரங்களான மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யோக சாதனைக்குப் பயனுள்ளது. மற்றவை கணக்கில் கொள்வதில்லை. மலம் /சிறுநீர் கழித்துவிட்டு வந்தால் உங்கள் தொடை கெண்டைக்கால் வெலவெலத்து பலவீனமாகத் தெரிவது ஏன்? மலம் நிறைந்த மூலம் காலியானதும் அங்கே கனமில்லாமல் போகும்போது சக்தியோட்டம் தெளிவாகும்போது இந்த பலவீனம் தெரியும். அது அதல-பாதாளம் வரை பத்து நிமிடங்களுக்குச் சோர்வைக் காட்டும். ‘மலம் போனால் பலம் போகும்’ என்பது பழமொழி. ஆனால் அதுதான் ஆதாரமாக உடலுக்கு வலு தந்து தாங்கிப் பிடிக்கும்.
யோக நிலையிலும், உண்மையாக பூகோள நிலையிலும் இந்த உலகங்கள் இருக்கின்றன. அங்கே ஸ்தூல உடலுடன் சென்றாலும் சூட்சும ரூபத்தில் இருக்கும் பல விஷயங்கள் நம் கண்களுக்குத் தெரியாது.
அந்த நாகலோக ரிஷிகளில் பலர் ஈசனின் கட்டளைகள் ஏற்று பூமிக்கு வந்து அவதாரங்கள் எடுத்துவிட்டு மீண்டும் நாகலோகம் சென்றடைந்து பணிகளை மேற்கொள்வார்கள். அப்படியான வேதம் ஓதும் நாகரிஷிகளில் சிலர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், வடலூர் இராமலிங்க அடிகள், சந்த் ஞானேஸ்வர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் நினைத்த மாத்திரத்தில் இன்றும் அரூபமாக தினமும் தாங்கள் ஸ்தாபித்த கோயில்களில் உலாவந்து ஈசனை பூசித்துச் செல்வது வழக்கம். அத்தி வரதர் எழுந்தருளியபோது பாதாள லோகம் பற்றி மேலோட்டமாகச் சொன்னேன்.
அதுபோல் சித்தர் பாடல்களில் மேரு மலையில் ஏறிப்போய் பல அதிசயங்களைக் கண்டதை போகர் உரைத்தார். ‘உண்மையில் அதெல்லாம் இல்லை. யோக மார்க்கத்தில் சஞ்சரித்து முதுகுத்தண்டு வழியே நிலைகளில் உயரந்து கடைசியில் மேரு/பொதிகை/கயிலாயம் என்ற சகஸ்ரார சக்கரத்தில் குண்டலியை நிலைக்கச் செய்து சச்சிதானந்த நிலையை அடைவதைத்தான் குறிக்கின்றார். வேறொன்றுமில்லை!’ என்று சிலர் கூறுகின்றனர். இது யோக மார்க்கத்தில் சரி. ஆனால் உண்மையில் ககன குளிகையை அடக்கிக் கொண்டு அங்கே ஸ்தூல தேகத்துடன் பறந்துபோன போகரை என்ன சொல்வார்களோ?
“பாலகா! நீர் யார்? ஏன் இங்கு வந்தீர்? ஸ்தூல தேகத்துடன் மேருவில் யாரும் பிரவேசிக்க விதியில்லை. சித்தர்முனி கூட்டத்தினரின் சாபம் கிட்டும்” என்று சொன்னபோது. “நான் திருமூலரின் மரபில் வந்த காலங்கிநாதரின் சீடன் போகர். நீங்கள் எனக்கு அருள் புரியுங்கள். மேருவின் ரகசியங்களை அறியச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொள்கிறார். “அய்யன் காலாங்கியின் சீடரா? வருக!” என்று சொல்லி வேண்டிய ரகசியங்களையும் சமாதியிலுள்ள நூல்களையும் காட்டுகின்றார்கள். சித்தர் அவருடைய தேகத்திலுள்ள ஆறாதார சக்தி சக்கரங்களில் ஏறி தெய்வத்தைக் காண ககன குளிகை எதற்குக் கொள்ளவேண்டும்? சுவரூப, சந்தான, மாலினி, கமலினி, போன்ற மற்ற ரசமணி குளிகைகள் போதுமே! ஆகாய மார்க்கமாகப் பறக்க உதவுவது ககன குளிகை. அப்படித்தான் சப்த சாகரங்களைச் சுற்றி வந்தார்.
ஆகவே, அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. அந்த இரண்டையுமே சித்தர்கள் அடைந்து சாதித்தார்கள் என்று சொல்லவே இந்தப் பதிவு. நம் யோக நிலைகள் வழியே உயர்ந்து சொர்க்கத்தை அடைவதும் நரகத்தை அடைவதும் அவரவர் செயல்களையும் ஆன்ம பலத்தையும் ஜெபத்தையும் பொறுத்தது என்பதை வருகின்ற வைகுண்ட ஏகாதசியில் ஆடும் பரமபதம் விளக்கும்.
No photo description available.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாவக் கணக்கு!

நான் சொல்லப்போவது ஓர் உண்மைச் சம்பவம்.
1968. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் நண்பனின் அப்பா திரு.ராமன் மும்பையில் வேலையில் இருந்தார். தன்னுடைய சென்னை அலுவலக சகாவின் பிள்ளைக்கு மும்பையில் அணுசக்தி நிலையத்தில் பொறியியலாளர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. அங்கு அந்தப் பிள்ளை வந்ததும் ரயில் நிலையம் சென்று கூட்டிக்கொண்டு போனது முதல் தங்க வைத்து அணுசக்தி நகருக்கு அழைத்துச் சென்று வந்து, வண்டி ஏற்றி சென்னைக்கு அனுப்பியது வரை ஒருநாள் விடுப்பு போட்டுவிட்டு பொறுப்பேற்று உதவினார்.
மும்பையில் வேலை செய்த தன்னுடைய மேலதிகாரியிடம் (தமிழர்) சென்னை கிளையில் உள்ள நண்பரின் மகன் இண்டர்வியுவுக்கு வந்தது பற்றியும் தான் விடுப்பு போட்டுவிட்டு போனதன் காரணத்தைச் சொல்லியுள்ளார். இரண்டு மாதங்கள் கழித்து அந்தப் பிள்ளை தேர்வில் செலெக்ட் ஆகி வேலையும் மும்பையில் கிடைத்தது. பிற்பாடு நண்பரின் அப்பா ஓராண்டில் கொல்கத்தாவுக்கு மாற்றலாகிப் போனார். காலங்கள் ஓடியது.
1989. என் நண்பரின் மூத்த அண்ணன் முதுகலை ரசாயனம் முடித்த வருடம். அவருடைய அப்பா அவருக்குத் தீவிரமாக நல்ல வேலைக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மும்பையில் வேலை செய்த அந்தப் பிள்ளை சென்னையில் நண்பருடைய அப்பாவை எதேச்சையாக சந்தித்தார். அப்போது என் நண்பரின் அப்பா தன்னுடைய மகனுக்கு வேலை சிபாரிசு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், 'அப்படியா? அப்போ இதுக்கு முன்னாடி நீங்க உங்க பையனுக்கு வேலை கேட்டீங்களே அது மூத்த மகனா?' என்றுள்ளார்.
'இல்லையே பா... இவன்தான் என் மூத்தமகன்' என்றார்.
'ஒ.. அப்போ 7 வருஷத்துக்கு முன்னாடி கண்ணாடி போட்டுகிட்டு ஒருத்தர் என்னிடம் வந்து "நான்தான் இராமன், அடையாளம் தெரியுதா? உன்னை மும்பயில இண்டர்வியுவுக்கு கூட்டிகிட்டு போனபோது பார்த்தது.." என்றாரே.
"அது நான் இல்லையே... இத்தனை வருஷம் கழித்து இப்போதான் உங்களை பாக்குறேன் தம்பி" என்று இவர் சொன்னார்.
"உங்களோடு வேலை செய்தவங்க யாருடைய மகனாவது Atomic Power ல வேலை செய்யறாங்களா?" என்று கேட்டுள்ளார்.
சற்று யோசித்துவிட்டு, "ஆமா.. மும்பையில என்னுடைய மேலதிகாரியோட பையன் ஒருத்தன் அங்க அணுசக்தில வேலையில இருக்கான்" என்றார்.
"ஐயோ.. ஏமாந்துட்டேன் சார்... அப்போ அந்த ஆள்தான் என்கிட்டே 'நான்தான் ராமன்னு' பொய் சொல்லி என்னை சிபாரிசு பண்ணச் சொன்னார். நானும் நன்றிக்கடனுக்கு செய்தேன். உங்களைப் பார்த்து 30 வருசம் ஆச்சில்ல உங்க முகம் சரியா நியாபகம் இருக்கலை.. மோசம் போயிட்டேனே" என்று மனம் வருந்தினார்.
"பரவாயில்ல விடுப்பா.. யாருக்கு என்ன வரணும்னு இருக்கோ அதுதான் அமையும். It's okay" என்று என் நண்பரின் அப்பா சொன்னார்.
2018 ஆண்டு இறுதியில் விழுப்புரம் அருகே ஒரு விபத்து. "ஓட்டுனர் உள்பட காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலி" என்று பத்திரிக்கையில் செய்தி வந்தது.
தன் பெயர் ராமன் என்று எந்த மேலதிகாரி பொய் சொல்லி தன் மகனுக்கு வேலை வாங்கினாரோ, அந்த மகன்தான் விபத்தில் மாண்டார். தந்தை செய்த பாவம், மகனையும் மருமகளையும், பேத்தியையும் சுவடின்றி துடைத்து அழித்தது. பொய் சொல்லி வாங்கிய அரசு வேலையில் வாழ்ந்தும் வளர்ந்தும் என்ன பயன்? இறந்தவரின் Benefits எல்லாம் claim செய்ய குடும்பத்தில் Nominee, Successor இல்லாமல் ஈட்டிய பாவத் தொகை பல லட்சங்கள் ரொக்கமாக பாவம் செய்த 94 வயது தந்தையிடமே வந்து சேர்ந்து விட்டது. தன் மகனுடைய குடும்பம் கூண்டோடு அழிந்ததற்கு அழுவாரா, கையில் சுளையாக அரை கோடி வந்தததற்கு சந்தோஷப்படுவாரா?
இதை என் நண்பர்தான் அண்மையில் சொன்னார். மக்களே! நீங்கள் நேர்மையாக முடிந்தவரை இருக்க முயலுங்கள். இக்காலத்தில் இதுபோன்ற பொய்கள் சொல்வது சாதாரணம். இது ஒரு பாவமா இதற்கு மரண தண்டனையா? என்று நீங்கள் நினைக்கலாம். தண்டனை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஈசன் நம் ஒவ்வொருவரின் அறக் கணக்கையும் வைத்துள்ளான்!

வியாழன், 14 நவம்பர், 2019

தமிழும் சன்மார்க்கமும்

"தமிழனுக்கு கடவுள் இல்லை..."
"வழிபாடு இல்லை.."
"மதம் இல்லை."
"தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்.

சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...

பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...

கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...

பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய்.  அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...

இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய்.  அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...

இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...

இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமந்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.

மொத்தத்தில் இந்து சமயமும்,  இந்துக் கடவுள்களும்,  இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?

உடனே..........
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!

இந்து என்பது நமது எல்லா சன்மார்க்க தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..இ

சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு...
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..

ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.!!

வெள்ளி, 8 நவம்பர், 2019

கோமியம் தங்கமயம்

நம் இந்து சம்பிரதாயப்படி சுத்தி செய்யும் எல்லா சடங்குகளிலும் பசு கோமியம் இடம்பெறும். வீடு முழுதும் புரோட்சணம் செய்ய, அடிபட்ட சிராய்ப்புகளைச் சுத்தம் செய்ய, மருந்தாக உட்கொள்ள, தீயசக்திகளை விரட்ட, மண்வளம் கூட்டும் பஞ்சகவியமாக என்று அநேக பயன்பாடு உண்டு.
பசுவின் ஐந்து பொருட்களான பால் தயிர் நெய் சாணம் கோமியம் ஆகியவற்றின் கலவையே பஞ்சகவ்வியம். இது மனிதனுக்கு கால்நடைகளுக்கு தாவரங்களுக்கு உற்ற மருந்தாக வயிற்றில்/குடலில் தேங்கிய ஆமத்தை நீக்க அருமருந்தாகப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் ரசவாதம் செய்யும்போது புடம் போட வரட்டியும், மூலிகைத் திருநீறு தயாரிக்கவும் பயன்படுகிறது.
வடக்கே அதிக விலைக்குப் போகும் பசுமாடு என்றால் அது கீர் இனம். எடை கனமானதும், தட்ப வெட்பத்தைத் தாங்கிக் கொள்ளும் திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும், அதிக பாலும் தரவல்லது. இதனுடைய ஒரு லிட்டர் கோமியத்தில் சுமார் 3-10 மில்லிகிராம் அளவுக்கு தங்கத் துகள்களின் கூறுகள் கரைந்துள்ளதாகப பல்லாண்டுகளுக்கு முன்பே பரிசோதனை முடிவு வெளியானது. இது எப்படியும் மேற்கத்திய நாட்டு ஆய்வாளர்களையும் கார்பரேட் மருந்து நிறுவனங்களையும் கோபப்படச் செய்யும்.
'ஐய்யயே! அந்த பசு எப்படியோ போகட்டும் அது தமிழ்நாட்டு பசு இல்லை' என்ற அளவில் சிந்திக்கும் மாசடைந்த தமிழர்களே அதிகம் உள்ளனர். சாணம் முதல் கோமியம் வரை தமிழாக இருந்தால்தான் மதிக்க வேண்டும் என்ற மூடத்தனத்தை முற்போக்குக் கட்சிகள் விதைத்து விட்டன. இனி காலம் போகிற போக்கில் இதன் மதிப்பு தெற்கே தேயும்.
சாணம், கோமியம், நாட்டுச் சர்க்கரை, தண்ணீரில் கலந்து ஒருநாள் நுரைக்க வைத்து வடிகட்டினாலே அமிர்த கரைசல் தயார். இதை தெளிப்பு உரமாகப் பயன்படுத்த நல்ல பலன் கிட்டும். மதுராந்தகம் அருகே ஒரு வைணவர் தனிப்பட்ட அளவில் பசுக்களை பராமரித்து Medicated Komiyam மற்றும் Distilled Komiyam தயார் செய்து பாட்டிலில் அடைத்து வியாபாரம் செய்கிறார். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. முன்பெல்லாம் கிராமத்து வீட்டினுள் மண் தரையில் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் கரைத்துப் பூசுவார்கள். அது நாளடைவில் இறுகிப் போய் தரை பசுமையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் ஜொலிக்கும். வீட்டினுள் கிருமி நாசினியாகவும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்டது. அதுபோல்தான் கோமியத்தின் மருத்துவ பண்பும்.
சுமார் பத்து ஆண்டுகள் இவ்விதம் தெளித்த மண் தரையை சிறிதளவு பெயர்த்து எடுத்து சோதித்தால் அடர்த்தியாக தங்கத் துகள்கள் கெட்டிப் பட்டிருக்கும் என்பது உறுதி. ஊசி போட்டு அதன் மருத்துவ பண்புகளை கெடுக்காதவரை, வடக்கோ /தெற்கோ கோமாதாவின் எல்லா இன கோமியத்திலும் தங்கத்துகள் பரவலாக இருக்கும். புனிதமான கோமியத்தில் திருமகள் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். கிராமத்து வீட்டில் பெரிய அலமாரி கப்போர்டுகள் சுவற்றில் வைத்துக் கட்டுவார்கள். அது நாளடைவில் கரையானால் செல்லரித்துப் போகாமல் இருக்க அதை சுவற்றின்மீது வைத்துக் காரைப் பூசும்முன் ஒரு தாமரை இலையை அகலமாக விரித்து சுவற்றில் வைத்து அதன்மீது மரச்சட்ட அலமாரியைப் பதிப்பார்கள். தாமரையில் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள்.
No photo description available.

திங்கள், 4 நவம்பர், 2019

திருக்குறள் நான்காம் பால்: வீடு

வீடு என்னும் மோட்ச காண்டம் பற்றி தனித்தொகுப்பு உள்ளது. அதை அச்சேற்றாமல் பதிப்பில் முடக்கியதாக திருவள்ளுவரின் வம்சத்தில் குல மடாதிபதி பல வருடங்களுக்குமுன் சொன்னதாக நாம் கேள்விப்பட்ட செய்தி. அறம் கடைபிடித்தால் பொருளும் இன்பமும் இறுதியில் வீடும் கிட்டும், இதற்கென தனியாக ஒரு காண்டம் உண்டா என்ன? உண்டு. இதற்கு என்ன ஆதாரம்?

திருவள்ளுவரின் மருமகன் ஏலேல சிங்கன் வகையறா திருவள்ளுவ நாயனார் மடத்தின் மடாதிபதியாக 1900ல் அலங்கரித்தவர் இதுபற்றிக் கூறியிருந்தார். தனியாக மோட்ச காண்டம் உண்டு என்றும் அதில் வள்ளுவ குலதினற்கு ஏற்ப ஜோதிடமும் சேர்ந்து வரும். இது சமயம் சார்ந்த மூட நம்பிக்கை என்று அக்கால ஆங்கிலேயர்களும் நம் திராவிட எழுச்சிக்கு வித்திட்ட கூட்டமும் சேர்ந்து இதை பதிப்பாக விடாமல் தடை போட்டதாக மடாதிபதி பிற்பாடு 1960 ல் சொன்னதாக அறிகிறோம்.   .

"தமிழ்ச் சங்க நூல்களில் திருக்குறள் என்ற பெயர் மட்டும் தொகை என்ற சங்க நூல் பட்டியலில் பெயர் குறிப்பு மட்டும் இருந்தது. ஆனால் முழு ஓலைச் சுவடியும் எங்கும் கிடைக்கவில்லை.

அன்றைய பிரிக்கப் படாத கோயமுத்தூர் மாவட்டத்தில் ஈரோடு அருகே முடவாண்டி சத்தியமங்கலம் என்ற ஊரில் கள்ள கவுண்டன் பாளையம் என்ற ஊரில் திருவள்ளுவரின் மருமகனும் ஒரே வாரிசுமான ஏலேல சிங்கனின் வாரிசுகள் அரசர்களிடம் பட்டயங்கள் பெற்று மடாதிபதிகளாக உள்ளதாக தமிழ் அறிஞர்களுக்குத் தகவல் கிடைத்தது. இவர்களுக்கு கொங்கு வள்ளுவர், கொங்கு பறையர் உட்பட அப்பகுதியில் வாழும் பல்வேறு ஜாதியினர் குல சீடர்களாக உள்ளதாக தமிழ் அறிஞர்கள் அங்கு சென்ற போது அறிந்து கொண்டனர். மேலும் இந்த மடம் கரூர் பரமத்தி அருகே நடந்தை,அந்தியூர் ,குள்ளவீரம் பாளையம்,பாலக்காடு எல்லை ஆகிய இடங்களில் தங்களைப் போலவே உறவு முறை மடங்களை கொண்டிருந்ததாகவும் அறிந்து கொண்டனர்.

குழந்தை ஆனந்தர் மடம் என்று அழைக்கப்பட்ட இந்த மடங்களில் திருவள்ளுவர் தன் கையால் பூஜை செய்து, பிறகு மருமகன் ஏலேல சிங்கனிடம் அளித்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்கள் பூஜை செய்யப்பட்டு வந்ததாகவும் அறிந்து கொண்டனர். ஏன்? காரணம் திருவள்ளுவரின் பூர்வீக ஊர் மதுரை ஆகும்.

கொங்கு பறையர்களின் புரோகிதர்களான கொங்கு வள்ளுவர்களுக்கே குருவாக விளங்கியதால் திருவள்ளுவர் என்ற பட்டப் பெயர்களையும் கொண்டு இருந்தனர் இம்மடாதிபதிகள். ஜோதிடம் குறித்து இவர்கள் நிமித்தம் பார்ப்பதற்காக, அதாவது ஓலைச் சுவடிக்கட்டில் நடுவில் நூலைப் போட்டுப் பார்த்தால் எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தில் ஒரு திருக்குறளும், ஓரத்தில் ஒரு ஜோதிடக் குறிப்பும் இருக்கும். அந்த ஜோதிடக் குறிப்பை பார்ப்பதற்கான ஒரு புனித நூலாக மட்டுமே திருக்குறளை இம்மடாதிபதிகள் அப்போது பார்த்து வந்தனர்.

தற்போது இந்த சுவடிகள் 3 பிரதிகளாகவும் உள்ளன. ஆனால் இம்மூன்று சுவடியிலும் அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் இவை மட்டுமே இருந்தன. சுவடியில் இருக்கும் ஜோதிட குறிப்பு ஆன்மிக குறிப்பாக இருந்ததால் மோட்சத்துப்பாலாக இருந்தது. இதை பின்னாளில் சம்பந்தப்பட்ட முற்போக்கு கூட்டம் மத மூட நம்பிக்கை என்று நிராகரித்து திருக்குறளில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தனர்.

நமக்குத் தெரிந்து அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு மேலும் ஒன்று உண்டு. 'அப்பாலும் அடி சார்ந்தார்.' கபிலர், பரணர், திருவள்ளுவர் முதலான நாற்பத்து ஒன்பது கடைச்சங்கத் தமிழ் புலவர்கள்தான் 'பொய்யடிமை இல்லாத புலவர்கள்' என்ற நாயன்மார்கள். திருவள்ளுவரும் மேற்கூறிய 49 புலவர்களைப் போல விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சாட்சரம் என்ற நமச்சிவாய மந்திரத்தை ஓதி மதுரை சங்கத் தலைவனான சொக்கநாதரை இரு கையை கூப்பி வணங்கியவாரே அகத்தியம்,தொல்காப்பியம் ஆகிய இலக்கண நூல்களின் வழிகாட்டுதலின் படி சங்க இலக்கியங்கள் பாடியதை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார்.

பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்பட திருவள்ளுவ நாயனார் என்றே, திருவள்ளுவர் பூஜித்த லிங்கத்தை இன்று வரை பூஜித்து வரும் திருவள்ளுவரின் பெண் வழி பேரன்களான இந்த மடாதிபதிகள் கூறி வருகின்றனர். சில புலவர்களின் சூழ்ச்சியால் சேர நாட்டுக்குத் தஞ்சம் போக வேண்டியனாது. இன்றும் கேரளா பக்கம் திருவள்ளுவ நாயனாருக்குக் கோயில்கள் உண்டு. சடையப்ப வள்ளல் ஆதரவுடன் ஏலேல சிங்கன் வாரிசில் ஒருவர்தான் மைலாப்பூரில் இருந்து கரூர் பரமத்தியிலுள்ள நடந்தை, முடவாண்டி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் குடியேறியதாக அறிகிறோம். ஏலேல சிங்கனிடம் இருந்த லிங்கம் இந்திரனுக்கு அறும் பாவம் தீர்த்த லிங்கம், தந்திரத்தில் கொடிய விஷத்தை அறுத்த லிங்கம், சதா சிவானுக்கேற்ற லிங்கம், சொக்கலிங்கம் என்ற குறிப்பும் மடத்தில் உள்ளது.


இக்கட்டுரைக்குச் செய்திகளை வழங்கிய நண்பர் திரு.T. பாலசுப்ரமணிய ஆதித்யன் அவர்களுக்கு நன்றி.

சர்ச்சைக்குள் சித்தர்!

கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் Top 5 இடத்தில் பேசப்பட்டு வருகிறார். அவர் காவியா வெள்ளையா? நீறில்லா நெற்றியா திரிபுண்டரமா? முப்புரி நூல் பூண்டாரா இல்லையா? உருத்திராட்சம் தரித்தாரா இல்லையா? குடும்பஸ்தரா சன்னியாசியா? சந்ததி இருந்ததா இல்லையா? 'அறம் பொருள் இன்பம்' என முப்பால் இருக்க நான்காம் பால் குறிக்கும் 'வீடு' தொகுப்பு அழிக்கப்பட்டதா மறைக்கப்பட்டதா? ஆதிக்க ஆங்கிலேயராலா திராவிடக் கூட்டத்தாலா? 
இங்ஙனம் திருவள்ளுவரே திகைக்கும் அளவில் கலி 5120 ஆண்டில் அவரைப் பற்றி விசாரணைகள் நடக்கின்றது. முதன் முதலில் 1812 ல் F.W.எல்லிஸ் பதிப்பித்ததுதான் முதல் பிரதி. அதன் பிறகு பல 'மூலமும் உரையும்' தொகுப்புகள் அச்சாகி வெளிவந்தது. இங்கே படத்தில் நீங்கள் காண்பது 1885 ஆம் ஆண்டு முருகேச முதலியார்வாள் பதிப்பின் அட்டைப்படம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது திருவள்ளுவர் சிவசத்தியை பூஜித்த நாயன்மாராகக் கருதப்படுபவர். போகர் இவரை 'அறிவான ஞான சித்து' என்கிறார். போகர் கொங்கணர் திருவள்ளுவர் ஔவையார் கோரக்கர் எல்லோரும் சமகாலத்து சித்தர்கள். குரு- சீடர் மரபில் வருவோர். 'சங்கத்து புலவர்களின் நந்நூலேற்ற அகத்தியர்' என்கிறார் போகர். Agathiyar school of syllabus பின்பற்றப்பட்டு 'தேர்வுபெற்ற சித்தர்' என அங்கீகரிக்கப்பட்டவர் திருவள்ளுவர். அப்படியெனில் அவர் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவராகத்தான் இருந்திருக்க வேண்டும். (இது போகர் உரைக்கும் தகுதி அளவுகோல்படி.)
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஓவியர் வேணுகோபால சர்மா பக்திப்பழமாய் வரைந்த திருவள்ளுவரின் படம் நிராகரிக்கப்பட்டது. பிற்பாடு அவரை சமணத் துறவியாக பட்டை கொட்டை இல்லா வெறுமையுடன் வரைந்த படம் ஏற்கப்பட்டது. எப்படி திருமந்திரம் அக்காலத்திலேயே ஶ்ரீமந்த்ரமாலா என்று சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டதோ அவ்வாறே திருக்குறளும் 'ஸ்லோக தோஹே' என்று அந்நாளிலே இயற்றப்பட்டு இன்றும் மறைப்பாக இருக்கலாம். எப்போதும்போல் நடக்கும் கூத்தை நாம் வேடிக்கைப் பார்ப்போம்.
Image may contain: 1 person
No photo description available.