இக்காலத்தில் வேதங்கள் அச்சு நூல்களாகவும் இன்டர்நெட்டில் மின்நூலாகவும் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் அதை சுயமாகப் படித்து மனனம் செய்து ஒப்பிக்க இன்றைக்கு சாத்தியப்படாது. ஏன்? நாம் ஏதோவொரு கல்வி கற்று அவரவர்க்குக் கிடைத்த உத்தியோகத்தைப் பார்த்து வருகிறோம். அதில் சமஸ்கிருதம் கற்று, அதன்பின் ஒவ்வொரு வேதத்தையும் அத்தியயனம் செய்து, அதை முறையாக ஓதுவதற்குள் சில ஆண்டுகள் போயிருக்கும். ஆகவே இது சரிபடாது. வேதம் பயின்று வாத்தியாராகத்தான் போகவேண்டும் என்று சிறுவயதிலேயே இலக்கு கொண்டோர் மட்டும் வேத பாடசாலையில் சேர்ந்து பயிலலாம். தன் பாலகன் எந்தத் துறையில் போகவேண்டும் என்பதை பெற்றோர் தான் முடிவுசெய்து அவனை பாடசாலையில் சேர்பிக்க வேண்டும்.
வேதம் பயிலும் குழந்தைகளுக்கு நாவிற்கு ருசியாக எல்லா பலகாரங்களும் உண்ணத் தந்து, தூக்கலாக மசாலா போட்டு குர்மா பிரியாணி தரலாமா? கூடாது. ஏன்? அத்தகைய வாசம் மூளையை ஸ்தம்பித்து, கிரகிப்புத் திறனை குறைத்து, தூக்கத்தை அதிகப்படுத்தி, உணர்ச்சியைத் தூண்டி, நினைவாற்றலை மழுங்கடிக்கும். பன்னிரண்டு வயதில் உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்போய் அவனை பிரகாசிக்க விடாமல் செய்யும். ஆகவே சாதாரண சைவ உணவை மட்டுமே தர வேண்டும். வேதம் படிக்கும்போதே புலன் அடக்குதலையும் சேர்ந்து பயிற்சி எடுப்பார்கள். ஆகவே அந்த வயதுக்குள் பிரம்ம தண்டியாக தன்னை உருவாக்கிக் கொள்கிறான். பாடசாலையில் குருவிடம் விடைபெற்று இல்லம் வந்தபின் அவனுடைய ஒழுக்கத்தை யார் கண்காணிப்பது? பெற்றோர் தான்.
இது எப்போதும் சாத்தியப்படாது என்பதால் அவனுடைய தமக்கையாக அந்த காயத்ரிதான் அவனை கண்காணிப்பாள். அந்த வயதுக்கேற்ற விளையாட்டு புத்தி இருக்கும், அதை தடுக்க முடியாது. அதனால் வேதம் ஓதும்போது சப்த கோஷம் மாறலாம், அக்ஷரங்களின் ஸ்வரம் தவறலாம். ஒரு அக்ஷரம் மாறினாலே அங்கே அனர்த்தம் வந்திடும் அது பாவத்தைச் சேர்க்கும். இந்த தோஷத்திற்குப் பிராயசித்தமாக ஏற்படுத்தப்பட்டதே 1008 முறை உருவேற்றும் ‘காயத்ரி ஜெபம்’. அதோடு ‘காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நமஹ’ என்று பொதுவாக எல்லோரும் சொல்வதுண்டு. எதற்கு? உடலால் மனத்தால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும் மனித்தருள்க என்று வேண்டுவதாகும்.
காயத்ரி மந்திரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக உச்சரிப்பதுண்டு. வளர்க்கப்பட்ட முற்போக்கு சூழலுக்கேற்ப சமஸ்கிருதத்தை எதிர்க்கும் பௌருஷேய/அபௌருஷேய பிராமணர்களைப் பார்த்துள்ளேன். அவர்கள் மந்திரத்தை ஏனோதானோவென்று சொல்வார்கள். pa என்பதற்கு ba, cha என்பதற்கு sa, tha என்பதற்கு dha என்று தாறுமாறாகச் சொல்வதுண்டு. Padhma என்பதை Bathma, Badhma என்றும், Roopa என்பதை Rooba என்றும் அலங்கோலமாக உச்சரிப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
ஆகவே மந்திரமோ, அபிவாதயே சொல்வதோ, எதுவாயினும் அதனை எப்படி தீர்க்கமாக உச்சரிக்க வேண்டும் என்பதை பெரியவர்களிடம் பயிற்சி பெறுங்கள். வேதம் ஓதுவதற்கு வயது தடையாக இருக்குமா? ஆமாம். முதுமையில் முன்வரிசைப் பற்கள் விழத் தொடங்கும்போது உச்சாடனத்தை சப்தமாகச் சொல்லக் கூடாது. மானசீகமாக உருவேற்ற வேண்டும். ‘பல்லு போனா சொல்லு போச்சு’ என்பது மந்திரத்திற்குப் பொருந்தும். அதனால்தான் பல் இல்லாத உபாத்யாயர்களை வேதமந்திர கோஷத்தில் உட்கார வைக்காமல் அவர்களை மேற்பார்வைக்கு அமர்த்துவார்கள். நம்முடைய முற்பிறவியில் வடமொழியோ வேதமோ பயின்று அந்த விட்டகுறை இருக்கும்போது மறுபிறவியில் சிறு வயதிலேயே அதைக் கற்பதும் ஓதுவதும் எளிமையாக வந்துவிடும். இந்த ரகசியத்தை பலரும் அறியார். இன்னும் சிலர் காயத்ரி என்பதை காய் (cow) + அத்திரி (rishi) என்று அழுத்திப் பிடித்தபடி புது தினுசாக உச்சரிப்பார்கள். தமாஷ் தான்!
தன் காயத்தை திரியாக்கி ராஜரிஷி விஸ்வாமித்திரர் அருளிய காயத்ரி மந்திரத்தை தினமும் குறைந்தது 54 முறையேனும் உருவேற்றி மேன்மை அடையுங்கள். எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் அவற்றைவிட காயத்ரியே உயர்வானது. இதை ஜெபிக்காமல் மற்ற மந்திரங்கள் பலன் தராது.
இக்குழு பக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போது பதிவிட்டேன். இன்னொரு பதிவில் மீண்டும் சிந்திப்போம்.