About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 ஏப்ரல், 2018

இது போதும்

பணம் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோள் எல்லோர்க்கும் உண்டு. அதன் அளவு என்ன, எத்தனைக் காலத்திற்குள் ஈட்ட என்பது மட்டுமே மாறுபடும். என் நண்பர் ஒருவர் மாதம் ரூபாய் 1.50 லட்சம் வாங்குகிறார், ஆனால் எப்போதும் ஏதோ வேதனையிலேயே இருப்பார். இன்னொருவர் ஒருவர் 9000 வாங்குகிறார் பரம சந்தோஷமாக உள்ளார். இது எதை வைத்து முடிவாகிறது?
வாழும் பாங்கு! குடும்ப பொறுப்புகள், அத்தியாவசிய செலவுகள், வட்டி கட்டுதல், கேளிக்கை, ஆடம்பரம், மற்றும் ஊதாரிச் செலவுகளைப் பொறுத்தே இதன் அளவீடு மாறுகிறது. எது அதிகமாக எது குறைவாக இருக்கவேண்டும் என்பது தனிநபர் விருப்பத்தையும் சூழலையும் சார்ந்தது. அதற்காக எல்லோராலும் வயிற்றையும் வாயையும் கட்டமுடியுமா? குடும்பப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியுமா? ஊரார் மெச்சவேண்டும் என்பதற்காக பகட்டு வாழ்க்கை வாழ முடியுமா? நான் நடுத்தரமா/பணக்காரனா என்பதை சமூகத்திற்குக் காட்டி எனக்கு என்ன ஆக வேண்டும்?  "சார், தேவையான பணம் சம்பாதிச்சிட்டீங்களே இனி எதுக்கு பிசினெஸ் செய்யறீங்க?" என்று கேட்டால் "இனி பணம் வந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பிசினெஸ் பிடிச்சிருக்கு, நாலு பேருக்கு வேலை கொடுக்கிறேன்" என்று சொல்லுவதும் உண்டு.. ருசிகண்ட பூனை உருட்டுமாம் பானை!
பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும்போது நம் புத்தியும் இயல்பும் மாறிவிடுகிறது. 'அவன் முன்ன மாதிரி இல்ல... எப்போ பார்த்தாலும் பணம்பணம்னு அலையறான்' என்று சிலர் சொல்வதை நாம் பார்த்துள்ளோம். இந்த போக்கில் தான/தர்மம் செய்வது சந்தேகம்தான். சிலர் நன்கொடை அளிப்பதற்காக பகுதிநேர வேலைகள் செய்வதும் பார்த்துள்ளேன். சரி, தனக்கென வாழ்வது எப்போது? குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டியதுதான், ஆனால் எப்போதும் அதே சிந்தனையாகவே இருந்தால், நம் இலட்சியம் சிதறும். பணம் வேண்டியதுதான், அதுவே எல்லாம் ஆகாது. ஒருபக்கம் ஆன்மிகம்/தர்மநெறி பாடாய் படுத்தும். இன்னொருபக்கம் எப்படியேனும் பொருளீட்டி செல்வந்தனாக வேண்டும் என்ற எண்ணமும் வரும். இதில் ஏதேனும் ஒன்றில் முழுதுமாக அல்லது இரண்டிலுமே மத்திம நிலையோதான் சரிப்படும். எளிமையாக வாழப் பழகிக்கொள்வோம். சுமை குறைவு!
No automatic alt text available.

என்னை பாதித்த தென்னை

பக்கத்து வீட்டில் இருக்கும் 45 வருட பழமையான தென்னை மரங்கள் எல்லாம் பூச்சி தாக்கியுள்ளதால் குருத்து விடுவதில்லை என்ற காரணத்திற்காக 45 நிமிடங்களில் வேகமாக வெட்டிக் கூறு போட்டனர். வேடிக்கைப் பார்த்த நான் தென்னையின் குரலாக மாறினேன்.
தென்னம்பிள்ளையாக இங்கே வந்தேன்
கைப்பிள்ளையாக மெல்லச் சிரித்தேன்
பெரியபிள்ளையாக நான் வளர்ந்தேன்
கணக்குப்பிள்ளையாக பணம் தந்தேன்
மூத்தபிள்ளையாக நிலைத்து நின்றேன்
நெடும்பிள்ளையாக வளைந்து ஆடினேன்
நோய்ப்பிள்ளையாக படுத்து விட்டேன்
பச்சைக்கிளி காக்கை குயில் அணிலும்
வெட்டுக்கிளி பருந்து மைனா குருவியும்
வெயில் இடிமின்னல் பேய்மழையிலும்
பனி சூறைக்காற்று உதிர் காலத்திலும்
என்னை நேசித்து இளைப்பாறி வந்தவை
இனி எங்கே போகும் எப்படி வாழும்?
So sad to see the axing and falling of mighty trees in no time.😪

மதுரையில் திருக்கல்யாணம்


Image result for மீனாட்சி திருக்கல்யாணம்

சொக்கநாதர் கைபிடிக்க மீனாளும் வாராளே 
சங்கம்தந்த மண்ணுல வாக்கப்பட வாராளே
வைகை நதியோரமாக கள்ளழகர் வாராரே 
வாக்குத்தந்தபடியே தாரைவாத்து தந்தாரே
பரிமேல வந்தாரே அழகர் பைய வந்தாரே
பரமனை ஏற்றுக்கொள்ள பெருமாளும் வந்தாரே
பாரோர் புகழவே மீனா கல்யாணம் நடந்ததே
காஞ்சனை பெத்தமக உலகாளப் போறாளே
ஏழுகடல் கொண்டார புருசனைக் கேட்டாளே
மாமியார் மெச்சும்வண்ணம் சப்தநதி தந்தாரே
மலையனும் கைகூப்பி மருமவனை தொழுதானே
கயிலாய மருமவனும் சொல்படியே செய்தானே
விண்ணதிர வான்புகழ வைபோகம் நடந்ததே
விருந்துண்டு வந்தேனே களிப்போடு வந்தேனே!
அடடே! என்ன விருந்து என்ன விருந்து! தடபுடல்தான் போங்கள்.. அங்கே பார்த்து பார்த்து பரிமாறினார்கள்.. பூத கணங்கள் பம்பரமாய் வேலை செய்தார்கள்... பார் சிறுத்ததோ மதுரை பெருத்ததோ என்று ஆகிவிட்டது... சித்திரை தேரோடும் வீதியெல்லாம் திருவிழாக்கோலம்தான்...  எப்படியோ இனிதே வந்து சேர்ந்தேன்! மாலையில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் புதுப்பெண் மீனாட்சி புஷ்ப பல்லக்கிலும் 'ரிசெப்ஷன்' தர வீதி உலா வருவாங்க. நானும் போவேன்! 🙏🙏😆 சித்திரை 

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

எல்லாம் நேரம்தான்!

'உன் வெற்றி உன் கையில்'... முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் தர இதைத்தான் சொல்வார்கள். நாமும் சில சமயங்களில் சொல்வோம். ஆனால் அது உண்மையல்ல என்பதை நாம் அனுபவத்தில்தான் தெரிந்து கொள்கிறோம். 'பாத்து பாத்து ஆய்வு செய்தபின் திட்டமிட்டு ஆரம்பித்த தொழில்தான், இப்படி அடிவாங்கும்னு நினைக்கலை...பெருத்த நஷ்டம்... எல்லாம் நேரம்தான்' என்று புலம்புவார் சிலர். 'ஏதும் தெரியாமலே ஃபுளுக்ல ஆரம்பிச்சேன்... இப்போ பிசினஸ் பட்டய கிளப்புது... இதை எதிர்பார்கவே இல்லை.. எல்லாம் நேரம்தான்' என்று சொல்லி மகிழ்வோரும் உண்டு.
நாம் செய்யும் முயற்சிகள் எல்லாமே வெற்றி அடைகிறதா? இல்லை. வெறும் அதிர்ஷ்டம் மட்டும் கைகொடுத்தால் போதுமா? போதாது. அப்போது உழைப்பு, தன்னம்பிக்கை, போராடும் சக்தி, விவேகம், புத்தி திறமை எல்லாமே போதிய விகிதாசாரத்தில் இருந்தால் எல்லாமே வெற்றிதான். ஆனால் இதெல்லாம் சரியாக இருந்தால் தோல்வி என்பது வரக்கூடாதே? மேலே உரையாடலில் 'எல்லாம் நேரம்தான்' என்பது எதைக் குறிக்கும்? விதி, ஊழ்வினைப்பயன், கிரக சஞ்சாரம், அதிர்ஷ்டம், என்று பல பெயர்களில் சொல்லலாம்.
ஆக, என்னதான் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல் பட்டாலும், ஒரு செயலில் நாம் வெற்றி பெறுவோமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. 'நாட்டாமை, தீர்ப்ப மாத்தி எழுது' என்று அவன்மீது கோபப் படலாம். அதைத்தாண்டி ஏதும் செய்ய இயலாது. அதற்காக தினமும் டிவியில்/செய்தித்தாளில் ராசிபலன் பார்த்துவிட்டு அதன்படி வேலைசெய்வது முட்டாள்தனம். உழைப்பதில் கடினம் / எளிமை என்றெல்லாம் ஏதுமில்லை. மூளையும் உடலும் இசையும்வரை நன்கு உழையுங்கள். நாம் எவ்வளவு நேரம் உழைத்தோம் என்பது பெரிதல்ல, அது ஆக்கபூர்வமாக இருந்ததா என்பதுதான் முக்கியம். மற்றவரோடு அளவீடு வைத்துக்கொண்டு ஒப்பிட முடியாது.. யானையின் தீனியையும் போடும் லத்தியையும் பார்த்துவிட்டு பூனையும் ஆசைபட்டால் எப்படி? பூனையின் வேகத்தையும் துடிப்பையும் பார்த்துவிட்டு யானையும் அப்படியே செய்ய எண்ணினால் ஆபத்துதான். நாம் எல்லோருமே ஒரு தனித்துவத்தோடுதான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
யதார்த்தமான கேள்வியைக் கேட்கிறேன்... மகாத்மா காந்தியைவிட சிறந்த அஹிம்சாவாதியும் வாய்மை போற்றுவோரும் இல்லையா? கர்நாடக சங்கீத இசையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியைவிட சிறந்த பாடகி இல்லையா? நடிப்பில் சிவாஜி கணேசனைவிட வேறு சிறந்த நடிகர்களே இல்லையா? புகழ்பெற்ற விஞ்ஞானி எடிசனைவிட வேறு சிறந்த கண்டுபிடிப்பாளர்களே இல்லையா?
நிச்சயம் உண்டு! உண்டு! அவர்களின் விதிப்பயன் அவர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யாமல் இருந்து விட்டது. அப்படியே தெரிந்தாலும் பெரிய அளவில் வரவேற்பு கிட்டவில்லை. வரவேற்பு இருந்தாலும் ஏதோவொரு தலையீட்டில் தொடர் ஆதரவு இல்லை. இவர்கள் பட்டை தீட்டாத வைரங்கள். அப்படியே பட்டை தீட்டியிருந்தாலும் அதன்மீது வெளிச்சம் பட்டால்தானே ஒளிர முடியும்? இவர்கள் வாங்கிவந்த வரம் அப்படி.. யாரை நொந்துக்கொள்ள? எல்லாம் நேரம்தான்!

Image may contain: text

சமாதியைவிட்டு வெளிவரும்.

இப்பதிவை நான் எழுதத் தூண்டியது எது? முகநூல் நண்பர் ஒருவரின் கமென்ட் "எங்கள் வீட்டில் மழை காலத்தில் தானாய் உருவாகும் தவளைகள்... ஆச்சரியம் தான்."
நம் சித்தர்கள் எல்லோரும் கற்பம் உண்டபின் வாசியில் நிலைத்து பூமிக்கடியில் சமாதியில் இருந்ததை நாம் அறிவோம். சமாதிவிட்டு வரும்வரை அவர்கள் பலகாலங்கள் அப்படியே நிலைத்திருப்பார்கள். அவர்களைப்போலவே சில வகையான தவளைகள், மீன்கள் இப்படிச் செய்கிறது.
அதிக வெப்பம் அல்லது உறைபனி காலங்களில் பூமிக்கு அடியில் பதுங்கு குழி அமைத்து தவளைகள் தங்கிடும். அதிக நீரை உறிஞ்சிக் கொண்டபின் அங்கேபோய் பதுங்கும். தன் உடலிலுள்ள மேல்தோல் மற்றும் கொழுப்பை அது உணவாகக் கொண்டு உயிர்வாழும். நடமாட்டம் இல்லாததால் சக்தி வீணாகாது.. எப்போது பருவமழை பொழிகிறதோ, பூமிக்குள் நீர் ஊடுருவத் தொடங்குமோ அப்போது அதை உணர்ந்துகொண்டு பூமிக்கு மேலே வந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளும். நாம் எதைச் செய்ய சித்த நிலையில் பிரயத்தனப் படவேண்டுமோ அதை இவை சாதாரண இயல்பாகச் செய்கிறது. சில மாதங்கள் சமாதியில் இருந்துவிட்டு (Hibernation) வருவது எத்தகைய பேறு!
அதுவரை தவளைகள் இல்லாத நிலத்தில், மழை பெய்ததும் இரண்டு சாமத்தில் திடீரென தவளைகள் எப்படி கபகபவென வந்தது என்று ஆச்சரியப் படுவோம். அதுபோல் மீன்களும் குளம் வற்றும்போது கனமாக சேறு பூசிக்கொண்டு உள்ளேபோய் பதுங்கும். அதன் நுரையீரலில் அதிகப்படியான பிராண வாயுவை தேக்கிக்கொண்டு தவளையைப் போலவே செயல்படும். இயற்கையின் சிருஷ்டி அலாதிதான்!
அதுவரை மீனாய் /தவளையாய் இருந்த மச்சமுனி/ மண்டூக ரிஷியார் கூட்டம் சமாதியில் இருந்துவிட்டு பூமிக்கு மேலே வருகிறார்களோ என்னவோ... யார் அறிவார்? பூமிக்குள்ளிருந்து வெளிவரும்போது அதைக் காண்பது சாப-பாவ விமோச்சனமே! 
No automatic alt text available.

சார்.... போஸ்ட்!

தபால்காரரின் 'க்ளிங்...க்ளிங்' சைக்கில் பெல் சப்தம் வீட்டு கேட் அருகே அழுத்தமாகக் கேட்டால் சற்று எட்டிப் பார்ப்போம். 'சார், போஸ்ட்' என்றதுமே நாம் துள்ளி குதித்து ஓடிப்போய் வாங்கியது நினைவிருக்கும்.
போஸ்ட்கார்டு 15 பைசா விலையில் விற்றபோது நாம் எல்லோருமே கடிதம் எழுதியிருப்போம். அது மேலே தொடங்கி பக்கவாதத்தில் கோணிக்கொண்டு எப்படியோ ஒரு தினுசாக எழுதி முடித்திருப்போம். சிலர் சுவாரஸ்யமாக எழுதியெழுதி மேற்கொண்டு இடம் போதாமல் விலாசத்தின் மீது 'புலி' முத்திரைஅருகேயும் கொசுறு எழுதுவது உண்டு. அதெல்லாம் ஒரு தமாஷ் தான்! கோடை விடுமுறையில் நமக்கு பள்ளிக்கூடத்திலிருந்து 'Promotion' கார்டு வரும்.
என் நியாயவாதி சிவில் எஞ்சினியர் தாத்தா எழுதினால் தபால் கார்டின் முன்புறம் கார்டின் மஞ்சள் நிறம் தெரியாத அளவிற்கு அதில் நீல எறும்புகள் ஊருவதுபோல் மேலிருந்து பின்பக்க அடிபாகம்வரை வீணாக்காமல் எழுதி முடிப்பார். அதையே சாதாரணமாக எழுதினால் அது ஒரு இன்லண்டு கவர் அளவுக்கு சங்கதி கொள்ளும். இதையெல்லாம் பொறுமையுடன் அவ்வளவு நிதானமாக எழுத நேரம் ஒதுக்கிக் கொண்டார்கள். அதை ஒரு கலையாகவே பாவித்தனர். நான் கல்லூரி முடித்தபின்னும் நிறைய தபால் கடிதங்கள் எழுதியதுண்டு.
முன்பெல்லாம் அரசு உயர் அதிகாரிகள் வீடுகளில் landline தொலைபேசி இருந்தது, பிறகு நம் எல்லார் வீடுகளிலும் அது நுழைய மெல்ல தபால்களும் குறைந்தது. பிறகு 2003 காலகட்டத்தில் செல்போன் விலையும் ரீசார்ஜ் விலையும் குறைந்ததும் நம் எல்லோர் கைகளிலும் புழங்கியது. இது SMS காலம் என்பதால் தந்தி telegraph சேவை நிறுத்தப்பட்டது. இப்போது நாம் தபால் கடிதம் எழுதுவது அடியோடு நின்றது. வேறு வழியின்றி பதிவுத்தபால் /ஸ்பீட் போஸ்ட் /பார்ஸல்/ சஞ்சிகைகள் மட்டும் உள்ளது.. பொங்கல் வாழ்த்து SMS போய்விடுகிறது.
ஈமெயில் அனுப்புவது வசதிதான். மின்னஞ்சல் வந்தாலும் வந்தது முறையாக கடிதம் எழுதும் முறையும் ஒழிந்தது. இன்று அநேகமாக நாம் எல்லோரும் எழுதும் மின்னஞ்சல் கடித முறை தவறான முறைதான். மேலேதான் Sub இருக்கே அது என்ன உள்ளே டியர் சார், கீழே ஒரு Sub, Ref என்று தெரியாதோர் கேட்பதுண்டு. எழுதி முடிக்கும்போது எல்லோருமே பொத்தம் பொதுவாக Regards என்று போடுவதால், யாருக்கு எப்படிப்பட்ட sign off / farewell phrase சொற்றொடர் போடவேண்டும் என்பதே மறந்துவிட்டது.
'தபால்காரரே, தபால் வந்திருக்கா?' என்ற குரல் கேட்கப்போவதில்லை.

இயற்கையின் பாடம்

சூன்யத்திலிருந்துதான் இந்த பிரபஞ்சமும் ஏனைய ஜீவராசிகளும் சிருஷ்டிக்கபட்டது என்பது உண்மை. ஆனால் சிறு பசுஞ்சாண உருண்டையை பொந்தில் வெறுமனே போட்டுவைத்தாலோ, அதன் மீது கோணி போட்டு மூடி வைத்தாலோ பத்தே நாளில் அதிலிருந்து 'மொயமொய'வென தேள் குடும்பம் வெளிவருவது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். சாணம் / உளுத்துப்போன கட்டை, இதிலிருந்தும் புழு நெளியும் என்பது சரி ஆனால் ஊர்வன பிரசவித்ததுபோல் எப்படி வெளிவரும்? ஈறு பேனாகி பேன் பெருமாள் ஆன கதைதான்.
எங்கள் வீட்டிற்குப் பின்னே ஒரு தரிசு நிலம் உள்ளது. அதில் போன வருடம் சொந்தக்காரர் வந்து சுத்தம் செய்துவிட்டுப் போனதோடு சரி. இப்போது அதில் என் கண்ணுக்குத் தெரிந்து தூங்குமூஞ்சி மரம், அசோகம், தூதுவளை, துளசி, காட்டாமணக்கு, வேம்பு, தேள் கொடுக்கு செடி, சீந்தில் கொடி, குப்பைமேனி, கீழாநெல்லி, அருகம்புல் மற்றும் ஏதேதோ புதர் செடிகள் உள்ளன. இதெல்லாம் வித்தில்லாமல் பதியனில்லாமல் நம் கண்முன் எப்படி முளைத்தது? காற்றில் கண்ணுக்குத்தெரியாத விதைகள் பறந்து இங்கு விழுந்து வளர்ந்ததா? இயற்கையாகவே மண்ணில் இதெல்லாம் பொதித்துப் படைக்கப்பட்டதா? சில வித்துகள் பறவைகள் மூலமும், நாம் சாப்பிட்டு எறிவது மூலமும் வளரும். மற்றவை எல்லாம் எப்படி? ஆச்சரியந்தான்!
The living entities are already injected into the material nature by god, and they develop in proper climatic condition என்பதை எப்போதுமே சூட்சுமமாய் உணர்ந்து பரவசப்படுவேன். இதெல்லாம் பரபிரம்மத்தின் எத்தனைப்பெரிய லீலைகள்! நாமும் அப்படித்தான். தொடக்கத்தில் சூட்சும ஆன்மாவாக சிருஷ்டியாகி, தக்கதொரு ஸ்தூல தேகத்தில் விழுந்து, உருவாகி, வளர்ந்து, பிறகு அதை துறந்துவிட்டு சூட்சுமமாக போவதுபோல்தான். ஆனால் எப்போதுமே நாம் எங்கோ ஏதோவொரு தேகத்தோடு இருக்கிறோம் என்பதை இதுதான் எனக்கு உணர்த்தியது. மற்ற செடிகள் ஏன் இன்னும் அங்கே முளைக்கவில்லை? அங்கே முளைப்பதற்கான அவசியம் எழவில்லை. பிறவிதோறும் நமக்கு (காரண ஊழ்வினை தேகம்) அமைய அவசியம் உள்ளது.
Image may contain: tree, plant, outdoor and nature

சனி, 28 ஏப்ரல், 2018

மணி-மந்திரம்-மருந்து

நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது கோடை விடுமுறையில் ஊருக்குப் போவோம். மிகவும் வயதான எங்கள் கொள்ளுபாட்டி உடல் முடியாமல் இருந்தார். ஆங்கில மருந்து பழக்கமில்லை என்பதால் அப்போது முசிறியைச் சேர்ந்த வயதான வைத்தியர் ஒருவர் வருவார். நான் அவர் பின்னாடியே சென்று அவர் கைப்பெட்டியில் என்ன வைத்துள்ளார் என்று மோப்பம் பிடித்து விடுவேன்.
உள்ளே வந்து உட்கார்ந்து பெட்டியைத் திறப்பார். கோலிகுண்டு போல் கருநீலம்/வெள்ளை நிறத்தில் ரசமணிகள், சிறு வைரக்கற்கள் போல் ஏதோ இருந்தது. அதுபோக சூரணங்கள், மருந்து குளிகைகள் இருந்தது. அதோடு ருத்திராட்ச மாலை, மந்திரிக்க மஞ்சள் துணி, தகடுபோல் ஏதோ இருந்தது.
முதலில் நாடி பரீட்சை செய்துவிட்டு ரசமணி கொண்டு சிகிச்சை தந்தார். பிறகு நாடி பார்த்தார். கொஞ்சம் பொறுத்து மந்திரம் சொல்லிக்கொண்டு துணியில் 'டப்டப்' என்று போட்டு மந்திரித்தார். அதன் பிறகு நாடி பார்த்தார். கடைசியில் ஒரு முடிவுக்குவந்து குளிகை மருந்தும்-சூரணமும் தந்தார். மணி-மருந்து, மந்திரம்-மருந்து, அல்லது ஏதேனும் ஒன்று கூட சிகிச்சையாக இருக்கும்.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு உபாயத்தையும் பிரயோகம் செய்து முடிவில்தான் மருந்து அவசியபட்டால் தந்தார். இன்று ஒருவனுக்கு மன நோய் உள்ளதா, பேய் பிடித்ததா என்று ஆங்கில மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத நிலை. அது காத்துதான் என்று தெரியாமல் மருந்து மாத்திரையை விழுங்குச் சொல்வோர் உண்டு. ஆகவே, பழைய முறைதான் சிறந்தது. உண்மையாகவே இது ஒரு நல்ல holistic approach என்பேன்.
Image may contain: flower, plant and nature
No automatic alt text available.









நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது, தேள்கடி, காணாகடி போன்றவற்றுக்கு என் தாத்தா சில மந்திரங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அப்போது நான் கேட்பேன் "தாத்தா, மந்திரம் போதும்னா அப்போ எதுக்கு மருந்து?" என்றேன். அதற்கு அவர், 'டேய், விஷக்கடிக்கு முதல்ல எது கடிச்சது என்று பார்க்கணும், அதுக்கு மூலிகை முறிவு மருந்து தரணும், அது வேலைசெய்யும்போது மந்திரம் சொல்லணும்' என்பார். முதலில் கடிவாயில் உப்பு, வெங்காயம், நவச்சாரம் போன்றதை வைத்து தேய்க்க சற்று எரிச்சல் வேதனை குறையும். இதுபோல் இன்னும் எவ்வளவோ கை மருந்துகள். விபூதி செய்யும் போது வில்வம் மற்றும் சில மூலிகைகள் கலந்தே செய்வார்கள். திருநீறும் மருந்துதான்! இன்றைக்கு வாசனை கலந்த சாம்பலும் ரசாயன பொடியுமே உள்ளது. நான் விபூதியை வாயில் போட்டுக்கொண்டு பல வருடங்கள் ஆகிறது.

அந்த மந்திரம், "பட்டையில் கிடக்கும் தேள், பரமசிவனைத் தீண்டும் தேள், கொட்டும் தேள், கருந்தேள் செந்தேள்; உடும்பும் தேளுமாய் ஒருபனை ஏற, உடும்பேறிப்போக குருவே நீ சுவாஹா'. அந்த மருந்து எது? வெள்ளாட்டு சிறுநீரில் ஊறவைத்த வெள்ளெருக்கு வேரை காயவைத்தபின் இடித்து வஸ்திரகாயம் செய்து சூரணமாக்குவது. அதை மூன்று வேளை தேனில் குழைத்து நாக்கில் தடவவேண்டும். அதுவே விஷப்பாம்பு கடித்தால் சிரியாநங்கை இலை சூர்ணம் தருவார்கள். கசப்பு சுவை தெரிந்தால் அது விஷப்பாம்பு இல்லை என்று தீர்மானம். கசப்பு சுவை தெரியாதிருந்தால் பாம்புதான். கசப்பு சுவை வரும் வரை மருந்து தரவேண்டும். நான் இன்றுவரை இதை பிரயோகம் செய்ததில்லை.
ஆக, என்னை அறியாமலே என்னுள் சித்தவைத்திய அணுகுமுறைகளில் ஈடுபாடு சிறுவயதிலேயே வந்தது. எல்லாம் அந்த வைத்திய சித்தரின் சித்தம்!

திராவிடம் என்ற விடம்

ஊருக்கு ஊர் பகுத்தறிவு நாத்திகம் குறையாது என்பது மகான்களின் தீர்க்கதரிசனம். நாமும் இதன் ஆதிக்கத்தை தொன்றுதொட்டு பார்த்து வருகிறோம். இங்கே தமிழகத்தில் ஒரு கி.வீரமணி போலவே ஆந்திரத்தில் பாபு கொக்கிநேனி என்பவர் கருப்பு சட்டை கட்சியை சேர்ந்தவர். நாத்திக பிரச்சாரகர், மனித உரிமைக்குழு உறுப்பினர், சமூக ஆர்வலர் என்ற அடையாளங்களைப் பெற்றவர்.
மெய்யாக மகான்கள் யாரும் மகான்கள் இல்லை. சராசரி மனிதனே. கற்பனையில் நினைத்ததை எல்லாம் தீர்க்கதரிசன நூல் என்று எழுதிட அதையே ஊர் உலகம் நம்புகிறது. இதை என்னவென்று சொல்ல? அவர் எதிர்கால நிகழ்வுகளை படம்பிடித்து சொன்னாராம். என்ன அபத்தம்! அப்படிஎன்றால் Nostradamus ஏன் வணங்கப்படும் மகானாகவில்லை? இறைவனையும் இறையருள்பெற்ற மகான்களின் மூளையையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிசங்கரர், ராமானுஜர், வீரப்பிரம்மம், ராகவேந்திரர் எல்லோருமே சராசரி மனிதர்கள். ஏதோ சமூகப்பணி செய்தார்கள் என்று சொல்லலாம். மற்றபடி அவர்கள் போற்றத்தக்க வகையில் ஏதும் செய்யவில்லை. சித்த புருஷர்கள், மகான்கள் என்றெல்லாம் சொல்வது கற்பனையே! இந்த ரீதியில் அங்கே இந்த ஆள் கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் என்ற ஆந்திர மாநில மகானைப்பற்றி அவர் அவதூறு பேசுவது சற்றும் அடுக்காது. இதுவே இந்த லட்சணம் என்றால் நம் சித்தர்களைப் பற்றி அவர் ஏதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இப்படியெல்லாம் ஒரு கான்சப்ட் உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்.
இவர்களுடைய சக்திகள், மகிமைகள் யாவையும் அறிந்த சாட்சிகள் என்னைப்போல் பலருண்டு என்பது கொக்கிநேனி அறியவில்லை. அவ்வப்போது ஆங்கிலம் பேசி தன் நிலையை ஸ்திரப்படுத்தி அதை அறிவியல்தனமாக சித்தரிக்க முயல்கிறார். திராவிட கழகம் தொடங்கிய இயக்கம் ஈவேரா என்ற ஜாபாலி பெரியார்களால் ஆசிர்வதிக்கப்பட்டு இன்று அது விஷமாகப் பரவியுள்ளது. ஆக, பகுத்தறிவு பேசி நாத்திகம் பரப்பியது இன்றுவரை தமிழர்கள் அல்ல என்பதைச் சொல்லவே இப்பதிவு. தெய்வீகத் தமிழை பேசுபவன் நாத்திகனாக இருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு மதத்தின்பால் தெய்வத்தின் மேல் நம்பிக்கை கொள்வான்.
என் நண்பர் ஒருவர் "நாத்திகம் தவறான மூட பழக்கங்கள் களைய உதவியது.  உதாரணம்: உடன் கட்டை ஏறும் வழக்கம், தேவ தாசி முறை ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு... என்னைப் பொறுத்த வரை 50:50 நாத்திகம்:ஆத்திகம் வேணும்" என்றார்.
அதற்கு நான் " உடன்கட்டை, பால விவாகம் ஆகியதை ஒழித்த  ராஜாராம் மோகன் ராய், நாத்திகர் அல்ல. பிரம்ம சமாஜ் நிறுவியவர். ஓமந்தூரார் காலத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வித்திட்டது முத்துலட்சுமி ரெட்டி என்ற ஆத்திக மருத்துவர். Reforms என்ற அளவில் செய்யப்படும் எல்லாவற்றையும் நாத்திகத்தோடு இணைக்கக்கூடாது. பகுத்தறிவு என்பது மெய்ஞானம். இன்றைக்கு அது நாத்திகம் என்ற பொருள்படுகிறது." என்றேன்.
"தென்னகத்தில் நாத்திகம் பெருகும்" என்று காலக்ஞான நூலில் அன்றே மகான் சொன்னார்.
Image may contain: 2 people, people sitting and eyeglasses

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தீர்க்கதரிசனம் கேளு!

காலக்ஞானம் ஒரு தீர்க்கதரிசன நூல். அதன் துளிகள் சில:
"வருங்காலத்தில் பாதரக்ஷை அணிந்துகொண்டு மக்கள் போஜனம் செய்வார்கள்" (ஆம். வீட்டைத்தவிர இன்றைக்கு நாம் ஓட்டலில், விழாக்களில் அப்படித்தான் உண்கிறோம்.)
"வாய்மை நேர்மை சத்தியத்தின்மீது நம்பிகை இல்லாமல் காகிதத்தை நம்பி வாழும் காலம்தான் இனி வரும்" (எல்லாவற்றுக்கும் கையெழுத்திட்ட ஸ்டாம்ப் பேப்பர், அக்ரிமென்ட்தான் பேசுகிறது.)
"தூரவாணியில்தான் இனி மக்கள் பார்த்து பேசிக்கொள்வார்கள்" (ஃபோன், ஸ்கைப் கைகண்ட மார்க்கமாக இருந்து வருகிறது.)
"மலம் மூத்திரம்கூட பொட்டலம் கட்டிவைத்தாலும் விற்றுப்போகும். (இன்று எல்லாவித குப்பை கூளங்களை காசு கொடுத்து வாங்கி உண்கிறோம், பயன்படுத்துகிறோமே!)
"தந்தை-மகன் சொத்துத் தகராறு நடக்கும், கணவன்-மனைவி நம்பிக்கை குறையும், கள்ள உறவுகள் அதிகமாகும் " (அத்தனையும் இன்று கண்கூடாக நடப்பதுவே.)
"காந்தி என்ற வைசிய குல சத்தியவான் தோன்றி நாட்டை வழி நடத்துவார். குடியாட்சி மலரும். (மோகன்தாஸ் காந்தி வந்தார், சத்தியாகிரகம் செய்தார், விடுதலைக்குப் போராடினார். மன்னர் ஆட்சி போய் மக்களாட்சியும் வந்தது.)
"திரை பிம்பங்கள்தான் அரசாட்சி செய்வார்கள்" (எம்ஜிஆர், என்.டிஆர், ஜெயலலிதா, போன்ற நடிகர்கள் அரசியலில் வந்துட அவர்கள் பிடியில் மக்கள் விழுந்தார்கள்.)
"ஏக காலத்தில் 'ராம் ராம் ராம்' என்ற ராம ராஜ்ஜியம் தென்னகத்தில் நடக்கும்.. விதவை பதினாறு ஆண்டுகள் தேசத்தை ஆட்சி செய்வாள்." (1980களில் எம்.ஜி.ராமச்சந்திரன் (தமிழ்நாடு), ராமகிருஷ்ண ஹெக்டே (கர்நாடகா), என்.டி.ராமாராவ் (ஆந்திரா)  சமகாலத்தில் முதலமைச்சராக இருந்தனர். மத்தியில் பிரதமாராக இந்திராகாந்தி இருந்தார்.)
"ஆந்திரத்தில் ஏழு கிராமங்கள் பிரிந்துபோய் தனி நாடாகும்" (ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிந்துபோய் தெலங்கானா மாநிலம் அப்படித்தான் உருவானது.)
"கோயில் சிலைகளை கொள்ளையடிப்பது, நிலத்தை அபகரிப்பது, கோயிலில் லிங்கத்தை அடித்து நொறுக்குவது எல்லாமே நடக்கும்" (சர்வதேச சிலை கடத்தல்பற்றி செய்திகளில் படிக்கிறோம், அதோடு ஆங்காங்கே திராவிட கண்மணிகள் கைவேலையும் தெரிகிறது.)
Image may contain: 3 people, people smiling, sunglasses, beard and closeup
MGR  - Hegde - NTR